என்ன ஊரு இது?

NATIONAL FLAG.jpg4

 

காலைல எழுந்தா தண்ணி வருமா? மின்சாரம் இருக்குமா? ரேஷன் கடைல இன்னிக்காவது சர்க்கரை வந்திருக்குமா? – அன்றாடம் காய்ச்சிகளின் பிரச்னை இது.

என்ன ஊரு இது! வேறெங்காவது பிறந்திருக்கலாம்!

 

குண்டும் குழியுமா இருக்கிற தெருக்களில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு போவது தினசரி சர்க்கஸ். நாம் சாலை விதிகளை கடைபிடித்தாலும், எதிர்பாராத தருணத்தில் சின்ன சந்திலிருந்து வரும் டெம்போ. அதை ஓட்டும் விடலைப் பையனுக்கு தான் பிஎம்டபிள்யு ஓட்டுவதாக நினைப்பு. தடாலென்று இடப்பக்கம் ஒடித்து அங்கு அன்னநடை பயிலும் பாட்டியை எமதர்மனிடமிருந்து அப்போதைக்குக் காப்பாற்றி அந்தப் பெருமிதத்தில் முழு வீச்சில் ஆக்சிலரேட்டரை அழுத்துகிறான். தினமும் நடக்கும் நிகழ்வு என்றாலும் ஒவ்வொருமுறையும் இதயம் அலறுகிறது.

 

தான் ஒரு சுதந்திரத் தியாகி என்று செப்புப்பட்டயத்தை வாங்க படாதபாடு பட்ட ஒருவரின் நிஜ அனுபவங்களை இன்றைக்கு செய்தித்தாளில் படித்தேன். 32 வருடங்களில் அவர் தட்டிய கதவுகள் 321. அவர் ஏறி இறங்கிய படிகள் 60,000. எழுதிய கடிதங்கள் 1043. நீதி மன்ற முறையீடுகள் 2300. இப்படியாவது செப்புப்பட்டயம் தேவையா என்று தோன்றுகிறது. ‘எனக்கு உதவித்தொகை வேண்டுமென்பதற்காக இதைச் செய்யவில்லை. எனக்கு ஒரு அங்கீகாரம், மற்றும் மரியாதை வேண்டும் என்பதற்காக இத்தனை அலைச்சல்கள்’ என்கிறார் 85 வயதான, மும்பையை சேர்ந்த கௌர் ஹரி தாஸ். இவரது இந்த தொடர் முயற்சி திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. திரு அனந்த் மகாதேவனின் இயக்கத்தில். கௌர் ஹரி தாஸ் ஆக திரு விஜய் பாதக் நடித்திருக்கிறார்.

 

இதைப்போல இன்னும் எத்தனை எத்தனை தியாகிகள் தங்கள் ஊண் உறக்கம் மறந்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்களோ, தெரியாது. இவர்களைப் பற்றிய பெருமிதம் இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இந்தத் தலைமுறைக்கு நமது சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார் என்று தெரியாத – இன்றைக்கு ஒரு ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் கேட்ட கேள்விக்கு வந்த பதில்கள் ஏற்படுத்திய – வெட்கக்கேடு ஒரு பக்கம்.

 

ஒவ்வொரு முறையும் என்ன ஊரு இது என்று சலித்துக் கொண்டாலும், வேற எங்கயாவது பிறந்திருக்கலாம் என்று அலுத்துக் கொண்டாலும் சுதந்திர தினம் என்றால் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கிறதே, பட்டொளி வீசிப் பறக்கும் மூவர்ணக் கொடியைப் பார்த்தால் அசாத்திய புத்துணர்வு உண்டாகிறதே, தேசிய கீதம் பாடும் போது கண்கள் பனிக்க எழுந்து நிற்க செய்கிறதே இதற்குப் பெயர் தான் தேசபக்தியோ?

 

குறைகளுக்கு அப்பாற்பட்டவள் நம் அம்மா என்றால் தாய் நாடும் அப்படித்தானே? எல்லா குறை நிறைகளுடன் நான் இந்தியன் என்கிற பெருமையுடன் என் நாட்டைப் போல வருமா என்ற பெருமிதத்துடன் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

8 thoughts on “என்ன ஊரு இது?

  1. தாயை நேசிப்பவர்களாலேயே நாட்டையும் நேசிக்க முடியும். யாவருக்கும் சுதந்திரத் திருநாள் நல் வாழ்த்துகள். அன்புடன்

  2. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! ஆயிரம் குறைகள் இருந்தாலும் அம்மா வீடு சுகம் தானே! குறைகளை பெரிதாக்காமல் நிறைகளாக்க முயல்வோம்!

  3. நம் அம்மாவை நாம் சில சமயம் திட்டினாலும் நேசிக்கத்தானே செய்கின்றோம்…அப்படியே. ஆனால் நம் அம்மா மிக மிக அழகானவள்! ஆனால் என்ன செய்ய அரசியல்வாதிகளால் நாசமாக்கப்பட்டவள். அரசியல்வாதிகளால் தான் நம் அம்மா இப்படி இருக்கின்றாள் எனும் போது நம் அம்மாவை நாம் குறை சொல்ல முடியுமா? நாங்கள் இந்த அர்த்தத்தில் ஒரு கட்டுரை எழுதி வைத்து காத்திருக்கின்றது….இன்னும் வெளியிடாமல் இருக்கின்றோம்…

    நல்ல கருத்து சகோதரி!

Leave a reply to vijikumari Cancel reply