ஸ்ரீரங்கத்து வீடு – கொள்ளுப்பாட்டியும், கொள்ளுத் தாத்தாவும்

ஸ்ரீரங்கத்து வீட்டை மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் இந்த வீட்டின் நாயகி ஸ்ரீரங்கம்மாவைப் பார்த்துவிடலாம். தாத்தா பெயர் திருமஞ்சனம் ராமானுஜம் ஸ்ரீனிவாச ஐய்யங்கார். திருமஞ்சனம் எனும் குடும்பப்பெயரானது உடையவரின் காலத்திலிருந்து வழக்கத்தில் இருக்கிறது. திருமஞ்சனம் என்பது ஸ்ரீரங்கம் கோவில் பெருமாளுக்கு செய்விக்கப்படும் புனித நீராடலைக் குறிக்கிறது. இந்தக் குடும்பத்தின் முன்னோர்களுள் ஒருவரான திருவரங்கவள்ளலார்  என்பவர் எம்பெருமானாரால் பெருமாளின் திருமஞ்சனக் கைங்கர்யம் செய்ய பணிக்கப் பட்டவர். திருக்கரகக்கையார் என்று இவரை கூப்பிடுவது வழக்கம். ஐய்யங்கார் என்பதற்கு ஐந்து அங்கம் கொண்ட ஸம்ஸ்காரம் செய்து கொண்டவர்கள் என்று பொருள்.

 

பாட்டி அவளது பெற்றோருக்கு ஒரே பெண். கூடப்பிறந்தவர்கள் யாரும் கிடையாது. என் அம்மா அடிக்கடி – இப்போது கூட சொல்லும் விஷயம் ஒன்று இங்கு நினைவிற்கு வருகிறது. சிறுவயதில் என் அம்மாவிற்கு ‘மாமா’ என்று ஒரு உறவு முறை இருப்பதே தெரியாதாம். மாமா மாமி எல்லாம் அயலகத்தவர்களை அழைக்கும் சொற்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தாளாம். ஒருமுறை அம்மாவின் சிறுவயதுத் தோழி தன வீட்டிற்கு தனது மாமா வந்திருப்பதாகக் கூறியதை அம்மாவால் புரிந்துகொள்ள முடியவில்லையாம். தன் அம்மாவிடம் வந்து கேட்டபோது தான் தாயின் கூடப் பிறந்தவர்கள் மாமாக்கள் என்று தெரிந்து கொண்டாளாம்.

 

ஸ்ரீரங்கத்து வீடு என் பாட்டிக்கு அவளது பெற்றோர்களால் சீதனமாகக் கொடுக்கப்பட்டது. பாட்டியின் குழந்தைகள் யாருமே இந்த வீட்டில் பிறக்கவில்லை. தாத்தாவிற்கு மாற்றல் வேலையாதலால் குழந்தைகள் வேறு வேறு ஊரில் பிறந்தவர்கள். ஆனால் நாங்கள் – பாட்டியின் பெண் வயிற்றுப் பேரன் பேத்திகள் – இந்த வீட்டில் பிறந்தவர்கள் என்பதில் எனக்குப் பெருமை அதிகம்.

 

என்னைவிட நன்றாக ஸ்ரீரங்கம் பற்றியும், எங்கள் பாட்டி பற்றியும் எழுதக் கூடிய பாட்டியின் மற்ற பேரன்கள், பேத்திகள் இருக்கிறார்கள். ஆனால் ஏனோ அவர்களுக்கெல்லாம் இந்த விஷயங்களைப் பற்றி எழுத முயற்சி இல்லை. எனக்கும் ஸ்ரீரங்கத்திற்குமான தொடர்பு கோடை விடுமுறையின் இரண்டு மாத காலம் மட்டுமே. அப்போது நான் பார்த்த நிகழ்வுகளை மட்டுமே இங்கு பதிவு செய்கிறேன். அவற்றைத் தவிர என் அம்மா அவ்வப்போது எங்களுக்குச் சொன்ன விஷயங்களையும் எழுதுகிறேன்.

 

பாட்டி ஒரே பெண்ணாக இருந்தும் பாட்டிக்கு மக்கள் செல்வத்திற்கு பெருமாள் எந்தக் குறைவும் வைக்கவில்லை. தாத்தாவைப் பற்றி அதிகம் தெரியாது. நிறையப் படித்தவர் – கல்லூரி படிப்பு என்பதைத் தாண்டி புத்தகங்களை நேசித்தவர். தாத்தா பஞ்சக்கச்சம் கட்டிக் கொண்டு கோட் போட்டுக்கொண்டு தலையில் தொப்பியுடன், கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் உட்கார்ந்திருக்கும் போட்டோ ஒன்று எங்கள் குடும்ப ஆல்பத்தில் இருக்கிறது. நெற்றியில் திருமண் ஸ்ரீசூர்ணம் துலங்கும் கம்பீரமான உருவம். நல்ல லட்சணமான முகம். அந்தக் கால வழக்கப்படி கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்திருப்பார்.  பெரியவர்கள் மட்டுமில்லாமல், குழந்தைகள் கூட அந்தக் காலத்தில் தொப்பி போட்டிருப்பார்கள். எங்கள் முன்னோர்கள் சிலரின் புகைப்படங்களில் அவர்கள் தொப்பி அணிந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்த நாளைய Fashion Statement!

 

இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் ஆகவும், மிகச் சிறந்த ஆசிரியராகவும் இருந்தவர் தாத்தா என்று அம்மா, மாமாக்கள் சொல்லுவார்கள். அருணாச்சல கவிராயரின் இராமநாடகப் பாடல்களை இராகத்துடன் தாத்தா பாடுவார் என்று என் அம்மா சொல்வாள். அம்மாவும் அந்தப் பாடல்கள் பலவற்றைப் பாடுவாள். திருமூலரின் திருமந்திரங்கள் புத்தகத்தையும் தாத்தா படித்ததற்கு அடையாளமாக அங்கங்கே கோடிட்டும், பக்கங்களில் எழுதியும் வைத்திருப்பாராம். ஆனால் தாத்தாவின் தொழிலான ஆசிரியர் தொழிலை அவரது பிள்ளைகள் யாரும் பார்க்கவில்லை. பல வருடங்கள் கழித்து நான் ஆங்கிலம் பேசச் சொல்லித் தரும் ஆசிரியை ஆனபோது என் அம்மா சொன்னாள்: ‘என் அப்பாவிற்குப் பிறகு நீதான் நம்மாத்தில் ஆசிரியை ஆகியிருக்கிறாய்’ என்று.

 

தாத்தாவிற்கு நேரம் கிடைக்கும்போது குழந்தைகளை அழைத்துக் கொண்டு நீள நடந்து போவாராம். நடந்து போகும்போது விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிக் கொடுப்பாராம். தாத்தாவின் அம்மா (எங்கள் கொள்ளுப்பாட்டி) நெடுநாட்கள் நீண்ட ஆயுளுடன் எங்கள் பாட்டியுடன் இருந்திருக்கிறார். பளிச்சென்று இருப்பாராம் இந்தப் பாட்டி. ஆனால் இவருக்கு ஸ்ரீரங்கத்தில் கருப்பச்சிப் பாட்டி என்று பெயராம். இந்தப் பாட்டியிடமிருந்துதான் நறுவிசு தங்களுக்கு வந்திருப்பதாக அம்மா சொல்லுவாள். கொள்ளுப்பாட்டி ரொம்பவும் அப்பாவியாம். சூது வாது தெரியாதவர்; புடவையில் ஏதாவது மறைத்து எடுத்துக்கொண்டு போனால் கூட என்னவென்று கேட்க மாட்டார் என்று அம்மா நிறைய சொல்லுவாள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் இந்தப் பாட்டிக்கு நிகர் யாருமில்லை என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பாள் அம்மா. என் அம்மா தன சிறு வயதில் கணவனை இழந்த எங்கள் பாட்டிக்கு ஒரு மிகப்பெரிய பலமாக இந்தப் பாட்டி இருந்திருக்கிறார். மிகச் சிறந்த மாமியாராக இருந்திருக்கிறார்.

 

குழந்தைகளை அப்படிப் பார்த்துக் கொள்வாராம் கொள்ளுப்பாட்டி. நிறைய பாடல்கள், கதைகள் சொல்லி விளையாட்டுக் காண்பிப்பாராம். குழந்தைகளுக்கு இரண்டு மூன்று வயதிற்குள் எண்ணுவதற்கு, கூட்டுவதற்கு, கழிப்பதற்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து விடுவாராம் பாட்டி. தமிழில் ‘அ, ஆ’ தொடங்கி, அ,ம்,மா=அம்மா என்று சொல்லிக் கொடுப்பாராம். அதேபோல க,ஞ, ச,ங வும் சொல்லிக் கொடுத்து விடுவாராம். இந்தப் பாட்டிக்கு இரண்டு பிள்ளைகள். எங்கள் தாத்தா, அவரது அண்ணா. கோர்ட்டில் ஜட்ஜ் ஆக இருந்ததால், கோர்ட் அண்ணா அவர். கணவனை இழந்து, இரண்டு பிள்ளைகளையும் இழந்து ரொம்பவும் துக்கப்பட்டிருக்கிறார் இந்தப் பாட்டி.

 

எங்கள் கொள்ளுத் தாத்தாவைப் பற்றிய ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் நாளை சொல்லுகிறேன்.

 

10 thoughts on “ஸ்ரீரங்கத்து வீடு – கொள்ளுப்பாட்டியும், கொள்ளுத் தாத்தாவும்

 1. முன்னுரையில் கச்சிதமாக கேரக்டர் அறிமுகங்கள்! தங்கள் வீட்டின் அலங்காரங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று.

 2. அந்த காலத்து மனிதர்களின் குணமும் கண்டிப்பான சீர்திருத்த முறைகளும் தனிதான் எனக்கும் நான் ஐந்தாவது படிக்கும்வரை என் கொள்ளுப்பாட்டி [ என் அப்பாவின் பாட்டி ] 96 வயது வரை திடமாக இருந்தார். அந்த வயதிலும் எங்கள் வீட்டிலிருந்த பசுவிடம் பால் கறப்பார். அந்த மாடு உதைத்துத்தான் இரண்டு நாள் படுக்கையில் இருந்து உயிர் துறந்தார். பழைய நினைவுகளை அசைபோடுவது மனதிற்கு ஒரு விதத்தில் உற்சாகமாகத்தான் இருக்கிறது ரஞ்சனி

 3. நினைவுகள்….. அனைத்தையும் இங்கே சேமித்து வைக்க நல்லதோர் வாய்ப்பு.

  தொடர்கிறேன்.

 4. இந்தக் கொ.பா.வை நானும் பார்த்திருக்கேன். அம்மாவின் பாட்டி, அதாவது என் அம்மாவின் அப்பாவுக்கு அம்மா. அதே போல் என் பாட்டிக்கு (அம்மாவின் அம்மா) அப்பாவையும் பார்த்திருக்கேன். ஆனால் கொஞ்சம் மேகப்படலம் மூடினாற்போல் தான் நினைவில் வரும்! 🙂 இப்போது எங்க பேத்திகளுக்குக் கொ.பா.வைத் தெரியும்; புரியும். (என் மாமியார்)

  1. இந்தக்காலத்துக் குடும்பங்களில், சிறு குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டிகளுடன் வசிக்கும் பாக்யம் கூட இல்லை. ஏதோ சுவற்றில் தொங்கும் படங்களில் பார்ப்பதோடு சரி. பெரும்பாலான வீடுகளில் அம்மாவழி, அப்பாவழித் தாத்தா, பாட்டிகளின் படங்கள் கூட இருப்பதில்லை. இப்போதிருக்கும் இளம் தாய், தந்தையர்க்கு, ஏன் நடுத்தரவர்க்கத்துப் பெற்றோருக்கும், அலுவலகம் போய்வருவதற்கும், அரட்டைக்கச்சேரிகள், பாழாய்ப்போன டிவி தொடர்கள் பார்ப்பதற்கும்தான் நேரம் சரியாக இருக்கிறது. நான் யாரையும் குறைகூறுவதற்காகச்சொல்லவில்லை. சமூகவாழ்வு ரொம்பத்தான் மாறிப்போய்விட்டது. நல்ல மாற்றமில்லை இது.

   தொடருங்கள் உங்கள் மூதாதையர் கதையை. நாம் காணாத அந்த சுவாரஸ்ய உலகில் கொஞ்சம் உலாவருவோம்.
   -ஏகாந்தன்

 5. நல்ல மாமியாராக இருந்த பாட்டி, அந்தக்காலத்து மனுஷி. சொந்தபாட்டியே தெரியாமல் வளரும் இந்தக்காலத்து பசங்களுக்கு கொள்ளுபாட்டி என்பது காணக்கிடைக்காத தங்கம்தான். இங்லீஷ் பேசும் பசங்கள் பாட்டி என்ற சொல்லையே பிடிக்காமல் gகிரானி சொல்லத்தான் பிடிக்கும். கொள்ளுப்பாட்டிகளும் ,ஞாபகங்களும் யாவருக்கும் பின்னோக்கி ப் போக வைக்கிறது. அபூர்வபாட்டி இக்காலத்தில். அன்புடன்

 6. ஸ்ரீரங்கத்திற்கு ஒரே முறைதான் வந்திருக்கிறேன்! ஆனாலும் அந்த ஊர் எனக்கு பிடித்து இருக்கிறது! சுவையான நினைவுகள்! பகிர்வுக்கு நன்றி!

 7. அழகாகத் தொடர்பு அருகாமல் எழுதி இருக்கிறீர்கள் ரஞ்சனி.

  எல்லோரையும் பாட்டி தாத்தாவைத் தேடவைக்கும் பதிவு.
  கொள்ளுப்பாட்டியை நானும் பார்த்திருக்கிறேன். தாத்தாவையும் தன். இன்னும்
  அவர் எழுதிவைத்த கண்ணி நுண் சிறுத்தாம்பு பாசுரம் அப்படியே என்னிடம் இருக்கிறது

  மிகுந்த அருமையான பதிவுகள். ஃபாமிலி ட்ரீ குழந்தைகளுக்குத் தெரிய உதவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s