ரயில் பயணங்களில்

இரக்கமில்லாத நகரங்கள்!

ரயில்வே மட்டுமல்ல எந்தவித போக்குவரத்து சாதனங்களும் பயனீட்டாளர்களின் நண்பர்களாக இருப்பதில்லை. பேருந்துகளில் ஏறுவது கஷ்டம் என்றால் பேருந்து நிற்காமலே போவது இன்னும் கொடுமை. நாம் ஏறுவதற்குள் அவசரப்படுத்துவது இல்லையென்றால் ‘நீங்கள்ளாம் ஏம்மா வெளில வரீங்க? வீட்டுக்குள்ள உட்கார வேண்டியது தானே?’ என்று சத்தம் போடுவது. நாம் மட்டும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தால் பேருந்தை நிறுத்தாமலே போவது என்று அராஜகம் தான்.

 

அன்று ஒரு நாள் இரவு சென்னையிலிருந்து திரும்பி வந்து ஒரு வாடகை வண்டி ஏற்பாடு செய்துகொண்டு வீட்டிற்கு வரும் வழியில் அந்த இளம் வயது ஓட்டுனர் வண்டியோட்டிய  வேகத்தைப் பார்த்து நாங்கள் இருவருமே பயந்துவிட்டோம். இரவு என்றால் ஒருவழிப்பாதையிலும் புகுந்து விடுவார்கள். ஓரிடத்தில் தெருவிளக்குகளும் சரியாக இல்லை. இருட்டில் சர்ரென்று வந்த வேகத்தைப் பார்த்து நான் சொன்னேன்: ‘நிதானமாகப் போங்கள். எங்களுக்கு அவசரமாக மேலே போக வேண்டாம்’ என்று. ‘என்னம்மா இப்படிப் பேசுகிறீர்கள்? நீங்கள் என் அப்பா அம்மா மாதிரி. உங்களை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் சேர்ப்பது என் பொறுப்பு. கவலைப்படாமல் வாருங்கள். நான் அத்தனை வேகமாகப் போகவில்லை. உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது’ என்றார் அந்த வண்டி ஓட்டுனர்.

 

பரவாயில்லை நான் சொன்னதை யதார்த்தமாக எடுத்துக் கொண்டிருக்கிறாரே என்று கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் சொன்னேன்:’சின்ன வயது உங்களுக்கு. எங்களைப் போல அத்தனை பொறுமை இருக்காது. நாங்களும் ஒருகாலத்தில் இப்படி இருந்திருப்போமோ என்னவோ, இப்போது கொஞ்சம் வேகம் என்றாலும் பயம் வந்துவிடுகிறது’ என்றேன். மேலும் ‘எங்கள் வயது வரும்போது உங்களுக்கு புரியும்’ என்றேன்.உடனே அவர்,’ நாங்கள் உங்கள் வயதெல்லாம் இருக்க மாட்டோம்மா, உங்களைப் போன்ற ஆரோக்கியம் எங்களுக்கு இல்லை’ என்றார். நான் சொன்னேன்: ‘அப்படியில்லை. நிச்சயம் நீங்கள் நூறு வயது இருப்பீர்கள். நூறாவது பிறந்தநாளின் போது என்னை நினைத்துக் கொள்வீர்கள்!’ என்றேன்.

 

அவருக்கு ரொம்ப சந்தோஷம். ‘நிம்ம ஆஷீர்வாத நிஜவாகலி’ என்று மகிழ்ச்சியுடன் திரும்பத் திரும்ப சொன்னார். என்னுடைய ஆசீர்வாதம் அவரைக் கொஞ்சம் நிதானமாகப் போக வைத்தது. நாங்கள் வீட்டின் முன் இறங்கியவுடன் எங்கள் பெட்டிகளை லிப்ட் வரைக்கும் கொண்டு வந்து வைத்ததுடன் பேசிய தொகையை வாங்கிக் கொண்டு விடை பெற்றார்.

 

இந்தியாவில் 81 மில்லியன் வயதானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நமது நகரங்களின் கட்டமைப்பு முதியவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. நடைபாதை இருப்பது நாம் நடப்பதற்கே. ஆனால் சிக்னலில் நிற்க பொறுமையில்லாத இளம் வயதுக்காரர்கள் நடைபாதை மேலேயே அவர்கள் வாகனங்களுடன் வருகிறார்கள், என்ன செய்ய? ஏற்கனவே பள்ளம் மேடாக இருக்கும் நடைபாதையில் இருசக்கர வாகனங்களின் தொல்லை வேறு. வயதானவர்கள் மட்டுமல்ல; இளம் சிங்கங்களும் இது மேல் நடக்கத் திண்டாடுவார்கள்.

 

வெளிநாடுகளில் வயதானவர்களுக்கு மட்டுமில்லாமல் பாதசாரிகளுக்கும் மரியாதை உண்டு. ’நடந்து செல்ல உரிமை’ இருப்பதுடன் அவர்களும் கண்ட இடத்திலும் வீதியைத் தாண்ட மாட்டார்கள். வண்டிகள் போகும்வரை காத்திருந்து ஜீப்ரா கிராசிங்கில் மட்டுமே வீதியைக் கடப்பார்கள்.

 

பெங்களூரின் சிலபகுதிகளில் இருக்கும் நடை பாலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் படிகள் நம் முழங்காலைப் பதம் பார்ப்பனவாக இருக்கின்றன. ஆ! சொல்ல மறந்துவிட்டேனே! எங்களூரில் இருந்து சென்னை செல்லும் டபிள் டக்கர் ரயில் வண்டியைப் போல அசௌகரியமான ரயில் வண்டியை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது. மேலே இருக்கும் சீட்டுகளுக்குச் செல்ல ஏறமுடியாமல் ஏறிச் செல்லவேண்டும். கீழே இருக்கும் சீட்டுகளுக்குச் செல்ல இறங்க முடியாமல் இறங்கிச் செல்ல வேண்டும். படிகள் ஒவ்வொன்றும் முழ உயரம். இவற்றின் மேல் ஏறிஇறங்க நம் கையில் ஏணி கொண்டு செல்லவேண்டும். சரி நடுவில் உட்கார்ந்து கொண்டு செல்லலாம் என்றால் கதவைத் திறந்துகொண்டு செல்லும் பயணிகளுடைய அட்டகாசம் சொல்லொணாது. கதவின் மேல் slide என்று போட்டிருக்கும். இவர்கள் தங்கள் முழு சக்தியை பயன்படுத்தி அதை push அல்லது pull செய்யப்பார்ப்பார்கள். ஒருமுறை இந்த சீட்டில் இடம் கிடைத்து, கதவருகில் வருபவர்களுக்கு slide, slide என்று சொல்லியே நொந்து போனேன்.

 

அந்தக்காலத்தில் முன்பதிவு என்பதே கிடையாது. கிடைத்த ரயிலில் கைக்குழந்தைகளுடன் ஏறிக்கொண்டு சென்றோம். இப்போது நமக்கு சௌகரியங்கள் தேவைப்படுகின்றன. எல்லாம் முன்னேறியது போல ரயில்வே நிர்வாகமும் முன்னேற வேண்டும் இல்லையா?

 

தொடரும்…….

Advertisements

27 thoughts on “இரக்கமில்லாத நகரங்கள்!

  1. வாங்க ஸ்ரீராம்!
   இந்த உண்மை எத்தனை பேர் காதுகளில் (குறிப்பாக ரயில் அமைச்சகத்தின் காதுகளில்) விழும்? தெரியவில்லை. ஊதுகிற சங்கை ஊதி விடவேண்டியதுதான்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 1. நடைபாதைகள் நடக்க ஏதுவாய் இருப்பதில்லை! இருந்தாலும் அதில் இரு சக்கர வாகனங்களின் தொல்லை. அதிலும் தில்லி போன்ற பெரு நகரங்களில் இவர்கள் தரும் தொல்லை சொல்ல முடியாத அளவு!

  Double Decker Train – கொடுமையான விஷயம். பயணிகளின் வசதி மனதில் கொள்ளப் படுவதே இல்லை! 😦

  1. வாங்க வெங்கட்!
   உங்கள் ஊரிலும் நடைபாதை மேல் இருசக்கர வாகனங்கள் போகுமா? இந்தியா முழுக்க இந்த நிலைதானா? இவர்களை எப்படித் திருத்துவது?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க முரளி!
   அரசு இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று எல்லாவற்றிற்கும் குறை கூறிக்கொண்டு இருப்பவர்களை, குடிமக்களாக தம் கடமையை செய்ய தவறுபவர்களை என்ன செய்வது?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. பயணிகளின் கஷ்டங்களை அனுபவித்ததால் மிக் அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். ஜூலை 3ம் தேதி நாங்கள் விசாகப்பட்டினம் போனபோது எனக்கும் ஏஸியில் கதவருகில் உள்ள லோயர் பர்த் தான். இரவு முழுவதும் எத்தனைபேர் பாத்ரூம் போனார்கள் என்று எண்ணிக்கொண்டு தூங்கமே முடியமல் அவதிபட்டு எப்போது ஊர் வரும் என மனம் நொந்து விட்டேன்.

  1. வாங்க விஜயா!
   இப்போதெல்லாம் பயணங்கள் அதிகரித்துவிட்டன. அதனால் பயண அசௌகரியங்கள் ரொம்பவும் பாதிக்கின்றன. லட்சக்கணக்கானவர்கள் தினமும் பிரயாணிக்கிறார்கள். வருமானமும் இருக்கும்போது அரசு நடவடிக்க எடுக்க வேண்டும். எப்போது இதெல்லாம் நடக்குமோ?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 3. அடிக்கடி பயணம் செய்வதால் ரயில்வே இப்போது கடந்த ஒரு வருஷ காலமாக எவ்வளவோ பரவாயில்லைனு சொல்லலாம். டபுள் டெக்கர் வண்டியில் பயணம் செய்தது (நல்லவேளையாக!!!!!) இல்லை.

  1. வாங்க கீதா!
   தப்பித் தவறிக்கூட போய்விடாதீர்கள். இந்த வண்டியில் எப்போதுமே இடம் இருக்கும். இதற்கு இன்னொரு பெயரும் நான் வைத்திருக்கிறேன். ‘சீனியர் சிடிசன்’ வண்டி என்று. வருபவர்களில் முக்கால்வாசி அவர்கள் தான். படியேறுவதும், இறங்குவதும் பரிதாபமாக இருக்கும். ஒரு முறை சதாப்தி வண்டியில் wi-fi வசதி வேண்டுமா என்று கேட்டு ஒரு படிவம் கொடுத்தார்கள். எனக்கு வந்த கோவத்தில் முதலில் சாப்பாடை ஒழுங்காகக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். பிறகு வை-பை பற்றிச் சொல்லுகிறேன் என்று கொட்டை கொட்டையாக எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன்!

 4. இங்கே ஶ்ரீரங்கத்தில் அரசுப் பேருந்துகளில் நிறுத்தி நிதானமாக ஏற்றிச் செல்வார்கள். ஆனால் தனியார் பேருந்து என்றால் ஒரே அவசரம், போட்டி, ஓட்டம் தான். நான் பேருந்துகளில் ஏறுவதை நிறுத்தியே பல வருடங்கள் ஆகின்றன. அப்படியும் ஒரு முறை தெப்பக்குளம் தானே போகிறோம்னு தனியார் பேருந்தில் ஏறிட்டு, ஏறும்போதே விசில் கொடுத்து, மல்லாக்கக் கீழே விழப் பார்த்தேன். அதுக்கப்புறமா பேருந்துப் பயணம் செய்வதையே விட்டு விட்டேன். :)))

  1. அடடா! படிக்கும்போதே பயமாக இருக்கிறதே!

   இப்போதும் என்னவரிடம் சொல்லிவிடுவேன் – என்னுடன் வந்தால் ஆட்டோ அல்லது கால் டாக்சி என்று. ‘உன்னுடன் வந்தால் செலவு தான்’ என்று முணுமுணுப்பார். கவலையே படமாட்டேன். நான் விழுந்தால் இதைவிட செலவு என்று அவரை பயமுறுத்தி விடுவேன்!

 5. முன்னெல்லாம் குழந்தைகளை ரயிலில் கூட்டிச் செல்கையில் பால் கிடைக்காது. ரொம்பக் கஷ்டமாக இருக்கும். கையில் க்ளாக்ஸோ பவுடர், லாக்டோஜென் பவுடர்னு வைச்சுக்கணும். எங்க பொண்ணு பிறந்தப்போ க்ளாக்ஸோ ஏக டிமான்ட். பதுக்கி வைச்சிருந்து அதிக விலைக்கு விற்பாங்க. தென் மாநிலங்களில் அப்போதெல்லாம் அதிகமாய் அமுலும் கிடைக்காது. பயணங்களின் போது இரண்டு ஃப்ளாஸ்க் வெந்நீர் கொண்டு போவது உண்டு. ஒரு ஃப்ளாஸ்க் தீர்ந்ததுமே நம்ம ரங்க்ஸ் இஞ்சினில் போய் வெந்நீர் வாங்கி வருவார்.இப்போ மாதிரி ரொம்பச் சுத்தமெல்லாம் அப்போது பார்த்தது இல்லை. ஆகவே அதைக் குடித்துத் தான் எங்க பொண்ணு வளர்ந்தாள். ஆரோக்கியமாகவே வளர்ந்தாள். இப்போது தான் யு.எஸ். போனதும் எல்லாப் பிரச்னையும்! :)))))

  1. நானும் உங்களை மாதிரி என் பெண்ணுக்கு 5 மாதமாக இருக்கும்போது டெல்லி, கோட்டா, ஜான்சி எல்லாம் போய்விட்டு வந்திருக்கிறேன். கிராண்ட் ட்ரங் வண்டியில் தான். நானும் ரயிலில் கிடைக்கும் வெந்நீரில் தான் பால், மற்றும் செரலாக் சீரியல் கரைத்துக் கொடுத்திருக்கிறேன். நல்லவேளை என் குழந்தைகள் இரண்டுபேருமே இங்கேயே இருக்கிறார்கள். அமெரிக்க சுத்தம் வரவில்லை!

 6. கஷ்டமோ சுகமோ அனுபவித்துக்கொண்டு,அந்தந்த காலத்தில் வாழ்ந்து வருகிறோமென்பதை மறுக்க முடியாது. நீன்ட பிரயாணங்கள் போது பெட்டிகளை கைதியாக்கி, மெல்லிய சங்கிலி கொண்டு அதுகளை பிணைத்து வருவோம். எந்தகாலத்திலும் திருடர் பயம் இருந்துகொண்டேதானிருக்கும். ஜனத்தொகை கூடிக்கொண்டே போகிறது. வாகனங்களும்,மனிதர்களும் தெருவடைத்தானாகி விட்டார்கள். ஆட்டோ ஓட்டுபவர்கள் ஸ்பீட்பிரேக்கர்களிலும் வேகமாக ஓட்டி தலையை வீங்க வைத்தவர்களும் உண்டு. ஆட்டோவென்றால் சென்னையில்தான் சண்டை போடுபவர்கள் அதிகம். இங்கு மும்பையில் அந்தமாதிரி அதிகம் கேள்விப்படவில்லை. எனக்கு ரயில் பயணங்கள் குறைந்து விட்டது. அதனால் விஷயங்களெல்லாம் விலாவாரியாகப் புரிகிறது. ரஞ்ஜனிக்கு பிரயாணமும் அதிகம். அனுபவமும் அதிகம். எழுத்து வன்மையும் கொஞ்ஜம் அதிகம் போலுள்ளது. உண்மையைத்தானே எழுதுகிறேனென்கிறீர்களா. அதில் ஸந்தேகமில்லை. அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   இப்போதும் பெட்டிகளை சங்கிலியால் பிணைத்துத்தான் கொண்டுவருகிறோம். சென்னைக்குப் போனால் ஆட்டோகாரர்களுடன் சண்டைதான் இப்பவும். மும்பையில் ஆட்டோக்காரர்களுக்கு கோவில் கட்டிக் கும்பிடணும். சரியாக மீட்டர் காட்டும் பணத்தை வாங்கிக் கொள்ளுகிறார்களே! பக்கத்தில் இருக்கும் இடத்திற்குக் கூப்பிட்டாலும் முணுமுணுக்காமல் வருகிறார்களே! ஆனால் மூன்று பேர்தான் ஏற்றுவார்கள். என்ன ஆனாலும் இன்னொரு ஆளை ஏற்றுவதில்லை. எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது அவர்களது அந்தக் கொள்கை.
   ரொம்பவும் காரசாரமாக எழுதிவிட்டேனோ?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 7. எங்க பையர் பிறந்ததும் சென்னையிலிருந்து மூன்று நாள் பயணம் செய்து ராஜஸ்தான் போக வேண்டி இருந்தது. அப்போது க்ரான்ட் ட்ரங்க் வண்டி தான் டில்லி செல்லப் பிரபலமாக இருந்தது. இன்று மாலை சென்னையில் ஏறினால் மறுநாளைக்கு மறுநாள் காலை ஏழு மணி அளவில் ஆக்ரா செல்லும். அதில் போய் ஆக்ராவில் இறங்கி ஒரு நாள் முழுதும் தங்கி இரவு வண்டியில் ராஜஸ்தான் செல்ல வேண்டும். இப்போ நினைச்சால் அதெல்லாம் எப்படிச் செய்தோம்னு மலைப்பா இருக்கு! இப்போதைய குழந்தைகளை அப்படி எல்லாம் கொண்டு போகவும் முடியாது.

  1. உங்கள் அனுபவமே தனிதான், கீதா!
   எத்தனை பயணங்கள் செய்திருக்கிறீர்களோ? கைலாஷ் வரை போய்வந்திருக்கிறீர்களே! கிரேட் கீதா!
   எனக்குத் தெரிந்து இந்தியாவின் வடக்கு என்பது பெங்களூரு வரைதான்! பெங்களூரு வடக்கில் இல்லை! சென்னையைவிட்டு நான் வந்த ஒரே ஊர் பெங்களூரு மட்டுமே!
   நான் எழுதுவதெல்லாம் சிலநாட்கள் மட்டுமே போகும் பயணங்கள் தான்.

 8. மிக மிக உண்மையே சகோதரி!
  பேருந்துகளில் ஏறுவது கஷ்டம் என்றால் பேருந்து நிற்காமலே போவது இன்னும் கொடுமை. நாம் ஏறுவதற்குள் அவசரப்படுத்துவது இல்லையென்றால் ‘நீங்கள்ளாம் ஏம்மா வெளில வரீங்க? வீட்டுக்குள்ள உட்கார வேண்டியது தானே?’ என்று சத்தம் போடுவது. நாம் மட்டும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தால் பேருந்தை நிறுத்தாமலே போவது என்று அராஜகம் தான்.//

  மடுமல்ல நடைபாதையில் வாகனங்கள் ஏறிச் செல்லுவது எல்லாம் பயங்கரம்…அது போன்று சீப்ரா லைன் என்பதே இல்லாதது போல வண்டிகள் அதை மறைத்துக் கொண்டிருக்கும். க்றாஸ் செய்ய பயமாக இருக்கும் எங்கேனும் பச்சை வந்துவிட்டால் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் சீறிப்பாயுமே வண்டிகள் என்று….

  நீங்கள் சொல்லி இருப்பது போல் அனைத்து வெளிநாடுகளிலும் சாலை விதிகள் மிகவும் மதிக்கப்படுகின்றன….

  நீங்கள் அந்த ஓட்டுனரிடம் பேசியது போல்தான் நாங்களும் பேசுவதுண்டு..அது ஆட்டோஓட்டுநராக இருந்தாலும்…நல்ல நேர்மறை எண்ணம்..வின் வின் சிச்சுவேஷன்…

  மிக அருமையான பதிவு

  1. வாங்க துளசிதரன்!
   பயணசீட்டுக்கு இன்னும் கொஞ்சம் அதிகம் கேட்டால் கூடக் கொடுக்கலாம். அதற்குத் தகுந்த வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், இல்லையா? இங்கு பேருந்துக் கட்டணங்கள் மிக அதிகம். ஏசி பேருந்துகளில் முக்கிய பேருந்து நிலையத்திலிருந்து எங்கள் வீட்டிற்கு வர ஒரு டிக்கட் 60 ரூ. என் பெண் சொல்லுவாள்: ‘எங்கள் மூன்று பேருக்கு 180/- ரூ கொடுத்து வந்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்து வரவேண்டும். அதற்கு பதில் ஆட்டோவில் 110/- ரூ கொடுத்து வீட்டு வாசலில் வந்து இறங்கிவிடலாம்’ என்று. நிஜம் தானே?
   இந்தப் பேருந்துகளில் பஸ் பாஸ் செல்லாது. சீனியர் சிடிசன் பாஸ் காண்பித்தால் பத்து ரூபாய் குறைப்பார்கள்.

   எங்கள் ஊரில் நடைபாதைகள் மிக உயரமாக இருக்கும். அதில் ஏறுவதே பிரம்மப்பிரயத்தனம்! கேட்டால் இருசக்கர வாகனங்கள் ஏற முடியாதபடி கட்டுகிறார்களாம்! எங்கு போய் அடித்துக் கொள்வது? எல்லா முக்கிய தெருக்களிலும் மெட்ரோ வேலை நடந்து வருகிறது. சாலைகளை அகலப்படுத்துகிறோம் என்று சொல்லி எல்லா நடைபாதைகளையும் இடித்து விட்டார்கள். சாலைகளும் குண்டும் குழியுமாக இருக்கிறது எப்படி நடந்து செல்வது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s