இரக்கமில்லாத நகரங்கள்!

ரயில்வே மட்டுமல்ல எந்தவித போக்குவரத்து சாதனங்களும் பயனீட்டாளர்களின் நண்பர்களாக இருப்பதில்லை. பேருந்துகளில் ஏறுவது கஷ்டம் என்றால் பேருந்து நிற்காமலே போவது இன்னும் கொடுமை. நாம் ஏறுவதற்குள் அவசரப்படுத்துவது இல்லையென்றால் ‘நீங்கள்ளாம் ஏம்மா வெளில வரீங்க? வீட்டுக்குள்ள உட்கார வேண்டியது தானே?’ என்று சத்தம் போடுவது. நாம் மட்டும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தால் பேருந்தை நிறுத்தாமலே போவது என்று அராஜகம் தான்.

 

அன்று ஒரு நாள் இரவு சென்னையிலிருந்து திரும்பி வந்து ஒரு வாடகை வண்டி ஏற்பாடு செய்துகொண்டு வீட்டிற்கு வரும் வழியில் அந்த இளம் வயது ஓட்டுனர் வண்டியோட்டிய  வேகத்தைப் பார்த்து நாங்கள் இருவருமே பயந்துவிட்டோம். இரவு என்றால் ஒருவழிப்பாதையிலும் புகுந்து விடுவார்கள். ஓரிடத்தில் தெருவிளக்குகளும் சரியாக இல்லை. இருட்டில் சர்ரென்று வந்த வேகத்தைப் பார்த்து நான் சொன்னேன்: ‘நிதானமாகப் போங்கள். எங்களுக்கு அவசரமாக மேலே போக வேண்டாம்’ என்று. ‘என்னம்மா இப்படிப் பேசுகிறீர்கள்? நீங்கள் என் அப்பா அம்மா மாதிரி. உங்களை பத்திரமாக வீட்டில் கொண்டு போய் சேர்ப்பது என் பொறுப்பு. கவலைப்படாமல் வாருங்கள். நான் அத்தனை வேகமாகப் போகவில்லை. உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது’ என்றார் அந்த வண்டி ஓட்டுனர்.

 

பரவாயில்லை நான் சொன்னதை யதார்த்தமாக எடுத்துக் கொண்டிருக்கிறாரே என்று கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் சொன்னேன்:’சின்ன வயது உங்களுக்கு. எங்களைப் போல அத்தனை பொறுமை இருக்காது. நாங்களும் ஒருகாலத்தில் இப்படி இருந்திருப்போமோ என்னவோ, இப்போது கொஞ்சம் வேகம் என்றாலும் பயம் வந்துவிடுகிறது’ என்றேன். மேலும் ‘எங்கள் வயது வரும்போது உங்களுக்கு புரியும்’ என்றேன்.உடனே அவர்,’ நாங்கள் உங்கள் வயதெல்லாம் இருக்க மாட்டோம்மா, உங்களைப் போன்ற ஆரோக்கியம் எங்களுக்கு இல்லை’ என்றார். நான் சொன்னேன்: ‘அப்படியில்லை. நிச்சயம் நீங்கள் நூறு வயது இருப்பீர்கள். நூறாவது பிறந்தநாளின் போது என்னை நினைத்துக் கொள்வீர்கள்!’ என்றேன்.

 

அவருக்கு ரொம்ப சந்தோஷம். ‘நிம்ம ஆஷீர்வாத நிஜவாகலி’ என்று மகிழ்ச்சியுடன் திரும்பத் திரும்ப சொன்னார். என்னுடைய ஆசீர்வாதம் அவரைக் கொஞ்சம் நிதானமாகப் போக வைத்தது. நாங்கள் வீட்டின் முன் இறங்கியவுடன் எங்கள் பெட்டிகளை லிப்ட் வரைக்கும் கொண்டு வந்து வைத்ததுடன் பேசிய தொகையை வாங்கிக் கொண்டு விடை பெற்றார்.

 

இந்தியாவில் 81 மில்லியன் வயதானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நமது நகரங்களின் கட்டமைப்பு முதியவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. நடைபாதை இருப்பது நாம் நடப்பதற்கே. ஆனால் சிக்னலில் நிற்க பொறுமையில்லாத இளம் வயதுக்காரர்கள் நடைபாதை மேலேயே அவர்கள் வாகனங்களுடன் வருகிறார்கள், என்ன செய்ய? ஏற்கனவே பள்ளம் மேடாக இருக்கும் நடைபாதையில் இருசக்கர வாகனங்களின் தொல்லை வேறு. வயதானவர்கள் மட்டுமல்ல; இளம் சிங்கங்களும் இது மேல் நடக்கத் திண்டாடுவார்கள்.

 

வெளிநாடுகளில் வயதானவர்களுக்கு மட்டுமில்லாமல் பாதசாரிகளுக்கும் மரியாதை உண்டு. ’நடந்து செல்ல உரிமை’ இருப்பதுடன் அவர்களும் கண்ட இடத்திலும் வீதியைத் தாண்ட மாட்டார்கள். வண்டிகள் போகும்வரை காத்திருந்து ஜீப்ரா கிராசிங்கில் மட்டுமே வீதியைக் கடப்பார்கள்.

 

பெங்களூரின் சிலபகுதிகளில் இருக்கும் நடை பாலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் படிகள் நம் முழங்காலைப் பதம் பார்ப்பனவாக இருக்கின்றன. ஆ! சொல்ல மறந்துவிட்டேனே! எங்களூரில் இருந்து சென்னை செல்லும் டபிள் டக்கர் ரயில் வண்டியைப் போல அசௌகரியமான ரயில் வண்டியை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது. மேலே இருக்கும் சீட்டுகளுக்குச் செல்ல ஏறமுடியாமல் ஏறிச் செல்லவேண்டும். கீழே இருக்கும் சீட்டுகளுக்குச் செல்ல இறங்க முடியாமல் இறங்கிச் செல்ல வேண்டும். படிகள் ஒவ்வொன்றும் முழ உயரம். இவற்றின் மேல் ஏறிஇறங்க நம் கையில் ஏணி கொண்டு செல்லவேண்டும். சரி நடுவில் உட்கார்ந்து கொண்டு செல்லலாம் என்றால் கதவைத் திறந்துகொண்டு செல்லும் பயணிகளுடைய அட்டகாசம் சொல்லொணாது. கதவின் மேல் slide என்று போட்டிருக்கும். இவர்கள் தங்கள் முழு சக்தியை பயன்படுத்தி அதை push அல்லது pull செய்யப்பார்ப்பார்கள். ஒருமுறை இந்த சீட்டில் இடம் கிடைத்து, கதவருகில் வருபவர்களுக்கு slide, slide என்று சொல்லியே நொந்து போனேன்.

 

அந்தக்காலத்தில் முன்பதிவு என்பதே கிடையாது. கிடைத்த ரயிலில் கைக்குழந்தைகளுடன் ஏறிக்கொண்டு சென்றோம். இப்போது நமக்கு சௌகரியங்கள் தேவைப்படுகின்றன. எல்லாம் முன்னேறியது போல ரயில்வே நிர்வாகமும் முன்னேற வேண்டும் இல்லையா?

 

தொடரும்…….