இக்கட்டான பயணம்

 

ஒரு பக்கம் மெட்ரோ ரயில்கள் எல்லாப் பெருநகரங்களிலும் ஓட ஆரம்பித்திருக்கின்றன. இதுவரை எங்களூரில் போய்ப் பார்க்கவில்லை. ஒருமுறை டெல்லியில் சும்மா இந்தப் பாயிண்டிலிருந்து அந்தப் பாயின்ட் வரை போய்விட்டு வந்தோம். அப்போது அதிசயமாக இருந்தது. ‘ஃபாரின் மாதிரி இருக்கு’ என்று வியந்தோம். கதவுகள் தாமாகவே திறப்பதும், மூடுவதும், அடுத்த ரயில் நிற்கும் இடம் பற்றிய அறிவிப்பும் குளுகுளு ரயில் கம்பார்ட்மெண்டுகளுமாக சீக்கிரம் நம்மூரில் வந்துவிடும் என்று சந்தோஷமாகப் பேசிக் கொண்டு வெளியே வந்தோம்.

 

ஆனால் நீண்ட தூரம் ஓடும் ரயில்களில் பிரயாணிகளின் தேவைக்கேற்ப வசதிகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவற்றைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

 

இப்போதெல்லாம் ரயில்கள் பொதுவாக சரியான நேரத்திற்கு ஓடிக் கொண்டிருக்கின்றன என்று தோன்றுகிறது. எங்கள் வண்டி சரியான நேரத்திற்குப் போய்விட்டது. வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் ரயில்கள் பரவாயில்லை என்று சொல்லலாம். போனமுறை சென்னையிலிருந்து திரும்பிய போது பயோ டாய்லட்டுகள் பொருத்தப்பட்ட வண்டி என்று போட்டிருந்தது. இந்த வகை டாய்லட்டுகள் எப்படி இயங்குகின்றன என்று சரியாகப் புரியவில்லை. வடமாநிலங்களுக்குப் போகும் ரயில்கள் இன்னும் அழுக்காக இருக்கின்றன என்று தோன்றுகிறது. இப்படி நினைத்துக் கொண்டே பிரயாணம் செய்யும்போது சில பெரிய ரயில் நிறுத்தங்களில் குளிரூட்டப்பட்ட கோச்களின் கண்ணாடி ஜன்னல்களை ஸ்ப்ரே போட்டு துடைத்துவிட்டு விட்டுப் போனார்கள். இத்தனை நேரம் பயணம் செய்யவேண்டிய ஒரு வண்டியில் Pantry வேன் இல்லை. டீ, காபி கூட வெளியிலிருந்துதான் வரவேண்டும். அந்தந்த ரயில் நிலையங்களில் விற்பவர்கள் வந்து விற்றுவிட்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுகிறார்கள். சாப்பாடு சாப்பாடு என்ற ஆர்டர் வாங்கிக் கொண்டு அடுத்த சந்திப்பில் வாங்கி வந்து கொடுக்கிறார்கள். ஏதோ அதுவாவது கிடைக்கிறதே என்று சந்தோஷப்படலாம். டாய்லெட்டில் நீர் வருகிறதே என்று சந்தோஷப்படலாம்.

 

சீனியர் சிடிசன்களுக்கு டிக்கட்டில் கணிசமாக தள்ளுபடி கொடுக்கிறார்கள். அதற்கு மட்டும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படலாம்.

 

இந்தமுறை சாப்பாடு கொண்டு போய்விட்டேன். டீ மட்டும் வாங்கிக் கொண்டோம். காஞ்சீபுரம் இட்லி, தக்காளித் தொக்கு, சப்பாத்தி ஊறுகாய், தயிர், அமுல் பால் என்று ரொம்பவே தயாராகச் சென்றோம். ஒவ்வொரு முறையும் யாராவது ஜெயின் குடும்பத்தவர் வருவார்களா?

 

ரயில் பெட்டிகளில் அடுக்கி வைத்திருக்கும் கம்பளிகள், போர்வைகள் பயன்படுத்தக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கிறது. எங்களுக்குக் கதவைத் திறந்தவுடன் இருக்கும் சைடு லோயர் சீட்டு. அங்கேயே அப்பர் பர்த். அப்பர் பர்த்தில் ஏறுவது பிரம்மப்பிரயத்தனம் தான். அதுவும் கதவைத் திறந்தவுடன் இருக்கும் அப்பர் பர்த்தில் ஏற படிகள் இல்லை. சீட்டுக்கருகில் ஒரு பிளைவுட் தடுப்பு போட்டிருக்கிறார்கள். அதில் ஒரு மெல்லிய கம்பி. அதில் காலை வைத்து ஏறவேண்டும். இவருக்குத்தான் அந்த சீட். எங்கள் பெட்டியில் இருந்த இளம் தம்பதி இவரை அடுத்தாற்போல இருந்த அவர்களது மிடில் சீட்டிற்குப் போக முடியுமா என்று கேட்டார்கள். சந்தோஷமாக விட்டுக் கொடுத்து விட்டோம். ஒவ்வொரு முறை அந்த இளைஞன் ஏறி இறங்கும்போதும் நாங்கள் பயந்துகொண்டே இருந்தோம். அந்த இளைஞரே ஏற ரொம்பவும் சிரமப்பட்டார். இறங்கும்போது தடாலெனக் குதித்தார். ரயில்வே மந்திரியை கூட்டிக் கொண்டு வந்து ஏறி இறங்கச் சொல்லவேண்டும்.

 

என்னுடைய சைடு லோயரில் இருந்த இன்னொரு பெண் தன் கணனியுடன் மேலே ஏறிவிட்டாள். தேவைப்பட்ட போது மட்டுமே கீழே இறங்கினால். அதனால் நாங்கள் இருவரும் காலை வேளையில் சைடு லோயர் சீட்டிலேயே உட்கார்ந்து வந்துவிட்டோம். என்ன ஒரு இக்கட்டான பயணம். இனி இதுபோல நீண்ட தூரப் பயணம் வரவே கூடாது என்று அங்கேயே தீர்மானம் போட்டோம். எத்தனை நாளைக்கு இந்தத் தீர்மானம் செல்லுபடியாகுமோ தெரியாது.

 

சந்தோஷமான செய்தி: இதுவரை அடுத்த பயணத்திற்கு டிக்கட் வாங்கவில்லை!

 

தொடரும்…..