சமீபத்தில் புனே சென்றிருந்தபோது உறவினர் வீட்டில் ஒரு இரண்டு வயது, இல்லை இன்னும் கொஞ்சம் பெரியதாகவோ ஒரு குழந்தை. ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கும் அது படுத்திய பாடு! பாவம் அந்தக் குழந்தையின் பின்னால் ஆறு பேர்கள்! குழந்தையின் அப்பா, அம்மா, அம்மாவின் அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா அப்பா! ‘சாப்பிடு! சாப்பிடு!’ என்று சாப்பாட்டு வேளையை வியர்த்து வழிய வழிய ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள். சாப்பிடவே மாட்டேனென்கிறான்’ என்று எல்லோரிடமும் தாத்தா பாட்டிகள் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
‘அப்பளாம், அப்பளாம்’ என்றால் வாயைத் திறக்கும். அப்பளத்தை குழந்தையின் கண்ணில் படும்படியாக வைத்துக் கொண்டு கீழே சாதத்தை மறைத்து ஊட்டுவாள் அந்தப் பெண். இரண்டு முறை அப்படி சாப்பிட்ட அந்தக் குழந்தை மூன்றாவது முறை உஷாராகிவிட்டது. சாப்பிட மறுத்துவிட்டது. இப்போது அதற்கு வேறு ஏதாவது காண்பிக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு என்பது எத்தனை பெரிய மனஅழுத்தம் கொடுக்கும் விஷயமாகிவிட்டது என்று எனக்குத் தோன்றியது. அந்த பெண் வேலைக்குப் போகிறவள். அவளுக்கு அலுவலக நாட்களில் சீக்கிரம் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அதை ப்ளே ஸ்கூலில் விட்டுவிட்டுப் போகவேண்டிய கட்டாயம். இப்போது லீவு தானே நிதானமாக வேலைகளைச் செய்யலாம் என்றால் குழந்தையின் சாப்பாட்டு வேளை நாள் முழுவதும் அவளை உட்காரவிடாமல் செய்கிறது, என்ன செய்ய? இந்தச் சின்னக் குழந்தையை கையாள பெரியவர்களால் முடியவில்லையா?
தட்டு நிறைய சாதத்தை வைத்துக்கொண்டு குழந்தையின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த அவளைக் கூப்பிட்டேன். ‘இதோ பாரும்மா! முதலில் நீ இத்தனை சாதத்தைக் கொண்டு வராதே. நாலே நாலு ஸ்பூன் கொண்டுவா. குழந்தை அதை சாப்பிட்டு முடித்தவுடன் இன்னும் நாலு ஸ்பூன் கொண்டுவா. முதல் நாலு ஸ்பூன் குழந்தையின் வயிற்றினுள் போனாலே உனக்கு சந்தோஷமாக இருக்கும். நீ கொண்டு வந்ததை குழந்தை சாப்பிட்டுவிட்டது என்று சந்தோஷம் கிடைக்கும். நீ இத்தனை சாதத்தை ஒரேயடியாகக் கொண்டு வந்தால் குழந்தையின் வயிற்றில் எத்தனை போயிற்று என்று தெரியாது. தட்டில் இருக்கும் சாதத்தைப் பார்த்து குழந்தை சாப்பிடாததுபோல உனக்குத் தோன்றும்’ என்றேன். நான் சொன்னது அந்தப் பெண்ணுக்கு ரசிக்கவில்லை. ‘எத்தனை முறை மாமி திரும்பத் திரும்ப சாதம் கலப்பது?’ என்று அலுத்துக் கொண்டாள். அவள் அம்மாவிற்கு நான் சொன்னது ரொம்பவும் பிடித்துவிட்டது. ‘சாப்பிடலை சாப்பிடலை என்று நொந்து கொள்வதைவிட நாலு ஸ்பூன் உள்ள போச்சே என்று சந்தோஷப்படலாம் அது அவளுக்குப் புரியவில்லை, பாருங்கோ’ என்றார் என்னிடம்.
‘ரயில் பயணங்கள்’ பாதியில் நிற்கிறது; ஸ்ரீரங்கத்து வீட்டுப் புழக்கடையில் நின்று கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போ என்ன குழந்தைக்கு சாதம் ஊட்டுவது பற்றி பேச்சு?
நான் நான்குபெண்கள் தளத்தில் எழுதிவந்த செல்வ களஞ்சியமே நூறாவது வாரத்துடன் நிறைவடைந்திருக்கிறது. என்னை குழந்தைகள் வளர்ப்புப் பற்றி எழுதச் சொன்னபோது, எனக்கு என்ன தெரியும் குழந்தை வளர்ப்புப் பற்றி என்று ரொம்பவும் யோசித்தேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் என்றவுடன் உற்சாகமாக ஆரம்பித்தேன். என்னுடன் கூட டாக்டர் பெஞ்சமின் ஸ்பாக் சேர்ந்து கொண்டார். படிக்கும் செய்திகள், புத்தகங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டேன்.
சமீபத்தில் ஒரு வாசகி இந்தத் தொடர் புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். திருமதி ஆதி வெங்கட் ஸ்ரீரங்கத்தில் பார்த்த போது அதையே சொன்னார். முதல் வேலையாக மின்னூல் ஆக்கலாம் என்றிருக்கிறேன். இரண்டு பாகமாக வரும். இந்தத் தொடரைப் படித்து பயனுள்ள கருத்துரைகள் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நான் எழுதுவதை அப்படியே பிரசுரம் செய்த நான்குபெண்கள் ஆசிரியை திருமதி மு.வி. நந்தினிக்கு சொல்லில் அடங்காத நன்றி. நடுவில் என்னால் எழுத முடியாமல் போனபோது மிகுந்த பொறுமையுடன் நான் திரும்பி வரக் காத்திருந்தது மிகப்பெரிய விஷயம்.
உடல் நலக் கட்டுரை ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ அடுத்த இதழிலிருந்து தொடரும்.
எனது இந்த சாதனையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாருடன் பகிர்ந்து கொள்ள முடியும்? இந்தக் கட்டுரையைப் படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, உங்களது தொடர்ந்த ஆதரவை நாடுகிறேன்.
இன்னொரு சந்தோஷச் செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதீதம் இணைய இதழில் எனது தொடர் ‘எமக்குத் தொழில் அசைபோடுதல்’ நாளையிலிருந்து ஆரம்பமாகிறது. எல்லோரும் படித்து இன்புற்று கருத்துரை இடுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
வணக்கம்
அம்மா
யாவருக்கும் பயன்பெறும் விதமாக தங்களின் படைப்புக்கள் ஒளிர்கிறது. அதைப்போன்றுதான் இந்த பதிவும் 100வது வாரத்தை எட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எங்கள் குழந்தைகள் ஒழுங்காய்ச் சாப்பிட்டு விடுவார்கள். என் தங்கையின் குழந்தைகள் இருவரும் இதே போலப் படுத்தல்ஸ்! நிறைய நேரங்களில் எங்கள் வீட்டில்தான் இருப்பார்கள் என்பதால் எங்களுக்கும் அந்தக் கஷ்டம் இருந்தது.
மின் நூல், அதீதம் தொடர் — வாழ்த்துகள்.
அனைத்திற்கும் வாழ்த்துகள் அம்மா…
உங்களின் பதிவை படித்தபோது 30 வருடங்களுக்கு முன்பு என் பெண்ணோடு நான் போராடியது நினைவுக்கு வந்தது. உங்களின் புதிய தொடரை அசைபோட நாங்களும் ஆவலாக இருக்கிறோம். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
TF
vazthukkal. – karunakaran
வாழ்த்துகள். நான்குபெண்கள் தளத்துக்கும் நன்றி. மின்னூல் ஆவதில் மகிழ்ச்சி. பலருக்கும் பயனாகும்.
தங்களின் படைப்புகளுக்கு வாழ்த்துக்கள்
Hearty Congrats Ranjani!
வாழ்த்துகள் ரஞ்ஜனி. முதல்க்குழந்தை, செல்லமா வளரும் குழந்தைகள் சாப்பிட இப்படிதான் படுத்தும் என்று சொல்வார்கள். நல்ல ஆலோசனை. சிறிது சிறிதாகக் கொண்டு வரவேண்டும். மற்றவர்களுக்குச் சொல்கிறேன். மின்பதிவை வரவேற்கிறேன். அன்புடன்
Hearty congratulations Amma!
வாழ்த்துக்கள் அம்மா! செல்வக்களஞ்சியமே தொடர் குழந்தை வளர்ப்பில் சில விஷயங்களை எனக்கு கற்றுத் தந்தது. சில பகுதிகளை தொடர முடியவில்லை! நேரம் கிடைக்கையில் வாசிக்க நினைத்திருந்தேன்! மின்னூலாக வருவதில் மகிழ்ச்சி! தரவிறக்கி அவ்வப்போது படித்துக்கொள்ள வசதியாக இருக்கும்! நன்றி!
Hi Ranjani madam,
உங்கள் எழுத்து பற்றி குறிப்பிட பாராட்ட நிறைய இருக்கிறது. அவற்றை அந்த மடலில்
குறிப்பிடவில்லை. Infact ஒவ்வொரு கட்டுரைக்கும் நான் comment போட்டிருக்க
வேண்டும். ஏதோ ஒரு தயக்கத்தினால் செய்யவில்லை. அந்தக் கடிதம் ‘செல்வக்
களஞ்சியமே’ தொடர் ஒரு மின்னூலாகவோ புத்தகமாகவோ வரவேண்டும் என்ற ஆர்வத்துடன்
உடனே எழுதியது. Instant reply ரகம்.
உங்கள் கட்டுரைகள் நேர்பார்வையுடன் சாதாரண தொனியில் முன்முடிவுகள் இல்லாமல்
எந்தவொரு விஷயத்தையும் அலசுவது அதுவே படிக்கத் தூண்டுகிறது.