ரயில் பயணங்களில்………. ஒரு சாகசப் பயணம்!

இந்தமுறை பயணம் ஆரம்பிக்கும்போதே சாகசப் பயணமாக அமைந்தது. சாகசம் என்றவுடன் ஓடும் ரயிலில் பாய்ந்து ஏறினேன் என்றோ, வேகமாக வரும் ரயிலை ஒற்றைக்கையால் நிறுத்தினேன் என்றோ நீங்கள் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பு இல்லை!

வீட்டிலிருந்து கிளம்பி சற்று தூரம் போனவுடன் கேட்டேன்: ‘இன்சுலின் எடுத்துக் கொண்டீர்’களா?’ (வீட்டிலேயே கேட்டிருக்கலாம் தான். அவரவர் பொருட்களை அவரவர் எடுத்துக் கொள்வது தான் எப்போதுமே பழக்கம். அதனால் மருந்துகளை எடுத்து வைத்துக் கொண்டவுடன் இன்சுலினையும் எடுத்து வைத்துக் கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.) திடீரென வண்டியில் போகும்போது நினைவிற்கு வருவானேன்? அதைத்தான் விதி என்பார்களோ? ‘இன்சுலின் எடுத்துக்கொள்ளவில்லை’ என்றவுடன் பதறிப்போய்விட்டேன். திரும்பப் போய் எடுத்துக் கொள்ளலாம் என்றேன். ‘அதெல்லாம் வேண்டாம். நான்கு நாட்கள் தானே சமாளித்துக் கொள்ளலாம். இல்லைன்னா அங்கேயே வாங்கிக் கொள்ளலாம். என்னிடம் இருக்கும் மருந்துகளை ‘அட்ஜஸ்ட்’ பண்ணி சாப்பிடுகிறேன்’ என்ற ரீதியில் பதில் சொல்லி என் வாயை மூடியாகி விட்டது.

எனக்கு ஊருக்குப் போகும் மனநிலையே போய்விட்டது. காலில் வேறு காயம். இப்படி செய்கிறாரே என்று பதட்டம் ஆரம்பமாகியது. மறுபடி சொன்னேன். ‘வீட்டிற்குப் போய் எடுத்துக் கொண்டு வரலாம்’. கோபத்துடன் பதில் வரவே சும்மா இருந்தேன். இன்றைக்கு போட்டுக் கொண்டாகிவிட்டது. இனி நாளைக் காலையில் தான்  இன்சுலின். அதற்குள் டாக்டரிடம் போன் செய்து கேட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானம் செய்தேன். வெளியில் சொல்லவில்லை. சொன்னால் அதற்குத் தனியாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

வண்டி வந்தது. எங்கள் பெட்டிக்கு அருகில் போய் பெயர் இருக்கிறதா என்று பார்த்து ஏறி…… ஒரு படியில் காலை வைத்து ஏறி இன்னொரு படியில் காலை வைக்கப் போனேன்… செருப்பு நழுவி கீழே பள்ளத்தில் விழுந்துவிட்டது! அடக்கடவுளே! இது என்ன இப்படி சோதனை மேல் சோதனை! பின்னால் ஏறியவரிடம் எப்படிச் சொல்வது?  சொல்லாமலும் இருக்க முடியாதே! நான் தயங்கித் தயங்கி நிற்பதைப் பார்த்தவரிடம் சொன்னேன்: ‘செருப்பு கீழே விழுந்துடுத்து!’ ‘என்னம்மா, நீ? பார்த்து ஏறக் கூடாதா?’ என்ன பதில் சொல்ல? ஆடு திருடின கள்வன் போல முழித்தேன்.

அங்கிருந்த இரண்டு மூன்று பேரிடம் உதவி கேட்டேன்.  செருப்பு எங்கே என்றே தெரியவில்லையே எப்படி எடுப்பது என்றனர். இப்போதுதான் இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கிய செருப்பு. செருப்பு இல்லாமலேயே இந்தமுறை பயணம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஒரு டீ விற்கிறவர் வந்தார். நானும் இவரும் குனிந்து குனிந்து பார்ப்பதைப் பார்த்து ‘ஏனாயித்து ஸார்?’ என்றார். ‘செப்பலி கேளகே பித்துபிட்டிதே!’ என்றேன். ‘நோட்தினி’ என்றவாறே பார்த்தவரின் கண்களில் செருப்பு அகப்பட்டது. நிதானமாக ரயில் மேடையில் உட்கார்ந்த வாறே தன் ஒரு காலை விட்டுத்  துழாவித் துழாவி எடுத்துக் கொடுத்துவிட்டார்!

அப்பாடா!  இன்சுலின் கதை நாளைக்கு!

20 thoughts on “ரயில் பயணங்களில்………. ஒரு சாகசப் பயணம்!

 1. உங்கள் வாழ்க்கை சந்தோஷத்த படிக்க எனக்கும் சந்தோஷமா இருக்குங்க. ..

  1. வாங்க அனந்த்!
   உங்கள் வருகை, உங்கள் கருத்துரை இரண்டுமே எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நன்றி!

  1. வாங்க ஸ்ரீராம்!
   விடமுடியாதே! புத்தம்புது செருப்பாயிற்றே! வெங்கட்டும் அதையே சொல்லுகிறாரே!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. செருப்பு விழுந்து விட்டால் விட்டு விட வேண்டியது தான். ரயில் புறப்பட்டால் ஆபத்து!

  இன்சுலின் கதை என்னாச்சு என படிக்க தொடர்கிறேன்…..

  1. வாங்க வெங்கட்!
   புது செருப்பு அதுவும் ஸ்பெஷல் செருப்பு விலையும் அதிகம் – 2000 ரூ மட்டுமே!
   அதனால் விட மனசில்லை. ஆனால் நீங்கள் சொல்வது உண்மை.
   இன்சுலின் கதை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 3. சாகசப் பயணம் (எங்களுக்கு) ஜாலியா போகுது. “ஹை, புது செருப்பு வரப்போகுதே”னு விட்டுட வேண்டியதுதான். அடுத்து இன்சுலின் கதை என்ன ஆச்சு ? அறியும் ஆவலில் …..

  1. வாங்க சித்ரா!
   இப்போதுதான் இரண்டு மாதங்களுக்கு முன் இதே போன்ற ஒரு பயணத்தில் சக பிரயாணி ஒரவர் என் செருப்பைப் போட்டுக் கொண்டு இறங்கிவிட்டார். இதுவே புது செருப்பு தான். இனி செருப்பு தொலைந்தால் வேறு கிடைக்காது!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க தனபாலன்!
   ஆமாம், அதனால்தான் நானும் ரொம்பவும் பயந்தேன். நல்லகாலம் அடுத்தநாள் இன்சுலின் போட்டுக்கொண்டு விட்டார். அடுத்த பதிவு படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. டீ விக்கறவன் ஒரு ஆபத்பான்தவன். அடுத்தது யாரு. எது இருக்கோ இல்லையோ நீங்கள் இனிமேல் உங்களிடமும் இன்ஸுலின் ஸ்டாக் வைத்துக்கொண்டு விடுங்கள். எல்லா இடங்களிலும்இடர் தீர்க்க யாராவது வருவார்கள். ஆனாலும் ரஞ்ஜனியின் பிரயாணமென்றால் விசேஷ நிருபரும் கூட வந்து விடுகிறார். பார்ப்போம். எதிர்பார்ப்பு கூடி விட்டது. அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   நீங்கள் சொல்வதுபோல நானும் இன்சுலின் வைத்துக் கொள்ள முடியாது ஆனால் இனி முன்னாலேயே கேட்டுவிடவேண்டியது தான். இடர் தீர்க்க வனமாலி தான் எனக்கு எப்போதுமே கூட வருவது. வேறு யார் வருவார்கள்?
   எப்படியோ இன்சுலின் அடுத்த நாள் வந்துவிட்டது.
   வருகைக்கும் விசேஷ நிருபரை அடையாளம் கண்டுபிடித்ததற்கும் நன்றி!

 5. எனக்குப் பலமுறை இப்படி ஆகி இருக்கிறது. செருப்பை எடுக்காமல் தான் போவேன். இப்போ சமீபத்தில் ஒரு முறை காலைபல்லவனில் ஏறும்போது செருப்புக் காலை வார, பின்னால் ஏறிய பெண்மணி ஆபத்பாந்தவியாகச் செருப்பை லபக்குனு பிடித்து என்னிடம் கொடுத்துவிட்டார். 🙂

  1. வாங்க கீதா!
   பலமுறையா? எங்களுக்கும் இது இரண்டாவது முறை. ஒருமுறை யாத்திரை கோஷ்டியில் போகும்போது கணவருடைய செருப்பு ரயில் ட்ராக்கில் விழுந்துவிட்டது. இரண்டு பெட்டிகளுக்கு இடையே உள்ள பள்ளத்தில். ஒரு போர்ட்டர் சட்டென குதித்து எடுத்துக் கொடுத்து விட்டார். உண்மையில் அந்தப் பெண்மணி ஆபத்பாந்தவி தான்!
   வருகைக்கும், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

  1. வாங்க பாண்டியன்!
   என்ன கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு //த்ஸொ த்ஸொ த்ஸொ// என்கிறீர்களா? என்னாலும் எடுக்க முடியாமல், செருப்பை விடவும் முடியாமல் நான் தவித்த தவிப்பு……!
   வருகைக்கும் த்ஸொ த்ஸொ த்ஸொ வுக்கும் நன்றி!

  1. வாங்க ஜலீலா!
   உண்மை, ஒருவழியாகக் கிடைத்தது. இனி ரயிலில் ஏறும்முன் கையில் செருப்பை எடுத்துக் கொண்டு ஏறலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்! ஹா….ஹா….!
   வருகைக்கும், ஆறுதலான வார்த்தைகளுக்கும் நன்றி!

 6. உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கன் களைந்துள்ளார் டீ விற்பவர்! உதவும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s