ஸ்ரீரங்கத்து வீடு – பாட்டியின் கமகம காப்பி!

விறகுக் கட்டைகள்

கூடத்திலிருந்து நேராக புழக்கடைக்குச் செல்லலாம். இங்கு முதலில் வருவது விறகு அடுக்கும் பரண் இருக்கும் இடம். நாங்கள் எல்லோரும் இரண்டிரண்டு விறகாக கொண்டுவந்து கொடுப்போம். ஏற்கனவே சொன்னது போல என் அம்மா வீராங்கனை போல சரசரவென்று பரண் மேல் ஏறி விறகை அடுக்கிவிடுவாள். சில சமயங்களில் அம்மாவை தேள் கொட்டும். அந்தத் தேள் எங்கிருக்குமோ, எங்களை கொட்டாது. அம்மா அதற்கெல்லாம் அசர மாட்டாள். பரணில் ஏறி உட்கார்ந்து கொள்வாள். ஏற்கனவே இருக்கும் விறகுகளை ஒரு ஓரமாக அடுக்கி விட்டு புது விறகுகளை அடுக்குவாள். முதல் நாள் பெரிய பெரிய மரத்துண்டுகளாக வரும். அடுத்த நாள் ஒருவர் வந்து அவற்றை விறகாக வெட்டிக் கொடுப்பார். தூர நின்று கொண்டு வேடிக்கைப் பார்ப்போம். ஸ்ரீரங்கத்தில் இதெல்லாம் தான் எங்கள் பொழுதுபோக்கு. கையில் சிலாம்பு ஏறிவிடும் என்று விறகு கட்டைகளை அப்படியே எடுத்து வர மாட்டோம். ஒரு சாக்கு துணியில் இரண்டிரண்டாக வைத்து எடுத்து வருவோம்.

 

 

இந்த இடத்தைத் தாண்டி ஒரு ரேழி. அங்கு மாடிப்படிகள். அப்படியும் மாடிக்குப் போகலாம். இந்த ரேழியில் கமகமவென்று ஒரு வேலை நடக்கும். உங்களை சஸ்பென்ஸில் வைக்காமல் நானே சொல்லிவிடுகிறேன். காப்பிக்கொட்டை இங்கு வறுப்பார்கள். இதுவும் எங்களுக்குப் பொழுதுபோக்கு தான். காபிக்கொட்டையை வாங்கிக் கொண்டுவந்து ரோலரில் போட்டு வறுப்பார்கள். அம்மாவோ, பெரியம்மாவோ இதைச் செய்வார்கள். யாரும் இல்லையென்றால் பாட்டியே செய்துகொள்ளுவாள். கீழே இரும்பு அடுப்பு இருக்கும். அதன் மேல் இந்த ரோலர் இருக்கும். ரோலரில் இரண்டு உருளைகள் இருக்கும். முதலில்  சல்லடை போன்ற ஒரு உருளை இருக்கும். இது உள்ளே இருக்கும். மேலே இன்னொரு உருளை இருக்கும்.  ரோலருக்கு ஒரு பக்கம் கைப்பிடி இருக்கும். ரோலரில் வறுக்காத காப்பிக் கொட்டைகளை (வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் இவை) சல்லடை போன்ற உருளையில் போடுவார்கள்.அதை மேல் உருளையால் மூடுவார்கள். ரோலரின் அடியில் அடுப்பு இருக்கும். ரோலர் நேராக அடுப்பின் மேல் உட்காராது. அடுப்பில் கரி போட்டு மூட்டி அதன் மேல் ரோலரை வைப்பார்கள். ரோலரின் ஒரு பக்க கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ‘கிறுகிறுவென’ சுற்றவேண்டும். கீழே இருக்கும் அடுப்பில் தணல் சூடு அதிகமாகவும் இருக்கக்கூடாது. குறைவாகவும் இருக்கக் கூடாது. அவ்வப்போது கரியை கூட்டி, குறைத்து அடுப்பில் சூட்டை ஒரே மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும். ரோலரை  கைவிடாமல் ஒரே சீராக சுற்ற வேண்டும். . எனக்கு ரொம்ப ஆசை அதை சுற்ற வேண்டும் என்று. விடவே மாட்டார்கள். ‘உனக்கு சரியாக வறுக்கத் தெரியாது. விளையாடு, போ!’ என்று விரட்டுவார்கள். ஆனால் எனக்கு அங்கேயே இருக்கப் பிடிக்கும். காரணம் கொஞ்ச நேரத்தில் வெளிர் பச்சை நிற காப்பிக் கொட்டைகள் வறுபட்டு பிரவுன் கலரில் வெளியே வரும். வாசனையை வைத்து உள்ளே இருக்கும் காப்பிக் கொட்டைகள் சரியான படி வறுபட்டிருக்கிறதா என்று பாட்டி சொல்லிவிடுவாள். ரோலரில் சின்னதாக ஜன்னல் மாதிரி மூடியிருக்கும். அதைத் திறந்தும் கொட்டைகள் வறுபட்டு விட்டனவா என்று பார்ப்பார்கள். வறுபட்ட கொட்டைகளை ரோலரின் மூடியைத் திறந்து ஒரு தட்டில் கொட்டுவார்கள். ஆறியதும் அதை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்து விடுவார்கள். அந்தக் கொட்டைகளை பொடியாக மாற்ற ஒரு மிஷின் உண்டு. தினமும் தேவையான அளவு வறுத்த காப்பிக் கொட்டைகளை அதில் போட்டு அரைத்துக் கொள்ளுவாள் பாட்டி. புத்தம்புது காபி!  இந்த மிஷின் ஒரு புனல் மாதிரியான அமைப்புடன் இருக்கும். அதற்குள் வறுத்த காப்பிக் கோட்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போடவேண்டும். இதற்கும் ஒரு கைப்பிடி இருக்கும். அதை சுற்றினால் இன்னொரு பக்கம் காப்பிப் பவுடர் ஒரு குழாய் வடிவ அமைப்பிலிருந்து வரும். பாட்டியில் கமகம காப்பி வாசனை தூக்குகிறதா?

தளிகை உள்ளிருந்தும் புழக்கடைக்கு வரலாம். புழக்கடையில் கிணறு  இருக்கும். வெந்நீர் உள் இங்குதான் இருக்கும். காலையிலேயே எழுந்து இந்த வெந்நீர் அடுப்பை மூட்டி விடுவாள் பாட்டி. பெரிய பாத்திரம் ஒன்று – அதற்குப் பெயர் சருவம் – தினமும் நீர் காய்ந்து காய்ந்து அடிப்பாகம் கரேல் என்று இருக்கும். குளிக்கப் போகிறவர்கள் கிணற்றிலிருந்து நீரை இழுத்து வாளியில் எடுத்துக் கொண்டு போகவேண்டும். வெந்நீருடன் இந்த கிணற்று நீரை கொட்டி விளாவிக் கொண்டு குளிக்க வேண்டும். குளித்து முடித்தவுடன் சருவத்தில் குறைந்திருக்கும் நீரை கிணற்றிலிருந்து நீரை இழுத்து நிரப்பி விட்டு வரவேண்டும்.

 

இன்னும் வரும்……

எங்கள் பாட்டி

13 thoughts on “ஸ்ரீரங்கத்து வீடு – பாட்டியின் கமகம காப்பி!

 1. வென்னீர் சருவமா வியாழக்கிழமை உப்பு புளி போட்டுத் தோய்த்து பளிச்சென்று இருக்கும். காபி கலக்க கரி போகிணியும் இருக்குமே. அதிகம் வேலை வாங்காது கீழ் போர்ஷன் கருப்பாக இருக்கும் ஆனால் கையில் ஒட்டாது. சருவம்,போகிணி எல்லாம் உறவுகள் போலிருக்கு பெரிய வீடுகளானால்தான் வென்னீர் உள். இல்லாவிட்டால் தோட்டத் தாழ்வாரத்தில்தான் வென்னீரடுப்பு. கட்டிண்டு குளிக்கிற பழசு கட்டிக்கொண்டுதான் குளிக்கணும். மீதியெல்லாம் ஸரிதான்.

 2. எங்களகத்தில் இப்பவும் பில்டர்,டவரா டம்ளர் உபயோகம்தான். என்ன நீங்கள் கொடுத்திருக்கும் அதே அளவு பாத்திரம் நகல். நரஸூஸ்,ஸ்டேன்ஸ் எல்லாம் போய் கோதாஸ்ஸா மாறி இருக்கு. நான் காபி சாப்பிட்டதே இல்லை. அது வேரெ விஷயம்.சிலரகத்தில் கொட்டையுடன் கோதுமை வறுத்துக் கலப்பது,என்ற விஷயங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். சிக்கிரி கலப்பதும் ஜெனிவாவில் நாமே செய்து கொள்ள வேண்டும். வறுத்த கொட்டையை வாங்கி அங்குள்ள மெஷினில் நாமாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஏதோ கணக்கில் சிக்கிரி பாக்கெட் வாங்கி வீட்டிற்கு வந்து கலந்து கொள்ள வேண்டும். நான் அந்த வேலைக்குப் போக மாட்டேன். பொடி அவ்வளவு தரம் என்று எல்லோரும் சொல்லுவார்கள் எங்கு போனாலும் நம்முடைய காப்பி. அந்த பாட்டி காப்பி நல்ல பாலில் காவேரி தண்ணிியில் ருசிக்கு கேட்கவா வேண்டும். நடுவே என் பிரதாபம். வருகிறேன். அன்புடன்

 3. மெஷினில் அரைத்து கமகமவென்று பாட்டி போட்ட காப்பி இன்னும் ருசிக்கிரதாஅன்புடன்

 4. இந்தக் காஃபிக் கொட்டை ரோலர், காஃபிக் கொட்டை அரைக்கும் மிஷின் எல்லாமும் என்னிடமும் இருந்தது. பிறந்த வீட்டுச் சீதனமாக. எங்கே மாற்றல் வந்தாலும், கல்லுரல், அம்மியோடு இவையும் எங்களுடன் வரும். வட மாநிலங்களில் காஃபிப் பொடியோ, கொட்டையோ கிடைக்காது என்பதால் சென்னை ஒரு தரம் வந்துவிட்டுப் போனால் குறைந்த பட்சம் 5 கிலோ காஃபிக் கொட்டை கொண்டு போவேன். அது தீருவதற்குள்ளாக ராணுவ வீரர்கள் யாரானும் தமிழ்நாடு, கர்நாடகாப் பக்கம் போனாங்கன்னா அவங்க கிட்டேச் சொல்லிக் காஃபிக் கொட்டை வாங்கி வரச் சொல்லுவோம்.

 5. கூர்கில் இருந்த ஒரு நண்பர் அங்குள்ள காஃபி எஸ்டேட்டில் இருந்து காஃபிக் கொட்டை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். 96 ஆம் வருஷம் வரையிலும் வீட்டிலே வறுத்துக் கையால் அரைத்த காஃபிப் பவுடரில் போடும் காஃபி தான். 96 ஆம் வருஷம் எனக்கு ஆஸ்த்மா பிரச்னை ரொம்பப் பெரிசாகி விபரீதமாகப் போய் எமர்ஜென்சியில் இருக்கும்படி ஆகி விட்டது. அப்போ அன்றாடப் பழக்கத்தைக் கேட்ட மருத்துவர் இதை எல்லாம் கண்டிப்பாய் விடணும்னு வற்புறுத்திச் சொன்னதால் நம்ம ரங்க்ஸ் அரை மனதாக விட்டுட்டார். அப்போக் கூட மருத்துவர் கிட்டே நான் வறுக்கிறேனே என்றும் கேட்டிருக்கார். அந்தப் புகையே வீட்டில் இருக்கக் கூடாதுனு சொல்லிட்டார் மருத்துவர்.

 6. ஆனால் நான் காஃபிக்குச் சிக்கரி சேர்ப்பதில்லை. அந்த வாசனையே எங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காது. என் மாமியார் கிராமத்தில் இருந்தவரை சர்க்கரையைக் கருக்கி ஃபில்டரில் ஊற்றுவார். டிகாக்‌ஷன் திக்காக இறங்கும் என்பார். நான் எப்போதுமே ப்யூர் காஃபி தான். யு.எஸ்ஸில் ரகம் ரகமாகக் காஃபிக் கொட்டை வறுத்தது, வறுக்காததுனு கிடைக்கும். கொலம்பியா காஃபிக் கொட்டை வாங்கி அங்கேயே மிஷினும் இருக்கும், அரைச்சுக்கலாம். ஆனால் நாங்க வறுத்த கொட்டையாக வாங்கி அதுக்குனு வீட்டில் தனி மிக்சி ஜார் வாங்கி வைச்சிருக்கோம். அதிலே போட்டு தினம் ராத்திரி அரைத்து விட்டுக் காஃபி மேக்கரில் போடுவோம்.

 7. பால் தான் அங்கே பிரச்னை. இந்த 1% பால் 2% சதவீதம் இவற்றிலே எல்லாம் காஃபி காஃபியாக இருக்காது. அதுக்கப்புறம் எங்களைப் போன்ற காஃபி ரசிகனான என் தம்பி (சித்தி பிள்ளை) ஹாஃப்&ஹாஃப் என்ற வகைப் பால் டப்பாக்களில் கிடைக்கும். அதை வாங்கிக் கலங்க என்று சொல்லிக் கொடுத்தார். அதுக்கப்புறமாக் காஃபி ஆஹா! தான்! விமானங்களில் போகும்போது கொடுக்கும் காஃபி சகிக்காது! வேறே வழியில்லாமல் குடித்து வைப்போம். 🙂 ஆனால் அதிலேயும் ராயல் நேபாள் ஏர்லைன்ஸில் காஃபி நன்றாக இருந்தது. நம்ம நாட்டு ஏர் இந்தியாவில் கூட காஃபி தண்டம்!

 8. இப்போ 2012 ஆம் ஆண்டு அம்பத்தூரில் இருந்து திருச்சி ஶ்ரீரங்கம் வரச்சே தான் காஃபிக் கொட்டை மெஷின், மாவு அரைக்கும் மெஷின், ரோலர் எல்லாத்தையும் விலைக்குப்போட்டோம். படம் எடுத்து வைச்சுக்கத் தோணலை ஊரிலிருந்து கிளம்பும் போது இருக்கும் மன அழுத்தம், இதெல்லாம் நினைச்சுப் பார்க்கலை. 🙂

 9. இந்த விறகுக் கட்டை அனுபவங்கள் நிறையவே உண்டு. நானும் அடுக்கி வைத்து, எடுத்து எரித்து… விறகடுப்பில், வெங்கலப் பானையில் சாதம் வடித்து கஞ்சி வடிப்பது அந்த வயதில் எனக்கு சவாலான விஷயம்!

  பாட்டி வீட்டில் காபிப்பொடி மெஷின் பார்த்திருக்கிறேன்,

 10. காபி மணம் மூக்கைத் துளைக்கிறது ரஞ்சனி என்ன ஆனாலும் பழய நினைவுகள் சுகம்தான். எங்காத்திலும் காபிகொட்டை மிஷின் இருந்தது. தினமும் ஒருவர் அதில் பொடி அரைக்கவேண்டும். நான் காபி இதுவரை குடித்ததில்லை. அதனால் அந்த வாசனை எனக்குப் பிடிக்காது ஆனால் உங்கள் நடை என்னை கவர்ந்தது அதனால் காபி மணம் என்று எழுதியுள்ளேன்

 11. பரணில் இருந்து விறகை இறக்கும் காட்சியைக் கண்முன்னே கொண்டு வந்தது இந்த பதிவு. தொடரட்டும் திருவரங்கன் ஆசியுடன். நன்றி.

 12. எங்கள் தாத்தா வீட்டில் இதே மாதிரி வறுத்து பொடி செய்து காபி சாப்பிட்டதாக அப்பா கூற கேள்விப்பட்டு இருக்கிறேன்! நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s