Uncategorized

விளக்கெண்ணெய் க்ளைமாக்ஸ்!

patti

 

எங்கள் ஸ்ரீரங்கம்மாள் பாட்டி

க்ளைமாக்ஸ் அன்னிக்கு காலையில் எழுந்திருக்கும்போதே நாங்கள் எல்லோரும் பலியாடு மாதிரி முகத்தில் சுரத்தே இல்லாமல் இருப்போம். (பின்னணியில் சோக வயலின் சத்தம் கேட்கிறதா?) பல் தேய்த்துவிட்டு வந்தவுடன் காபியில் விளக்கெண்ணெய் விட்டுக் கொடுத்து விடுவாள் பாட்டி. அதற்குப் பிறகு அன்றைக்கு மென்யூ வெறும் பருப்புத் துவையலும், சீராம் மொளகு ரசமும் தான். வேறு ஒன்றும் கிடைக்காது. இதையெல்லாம் விட இப்போது நினைத்தாலும் சுவாரஸ்யம் என் சகோதரன் செய்யும் ரகளை. எப்போதுமே அவன் கொஞ்சம் வாலு தான். அவனை ரங்கவிலாசம் அழைத்துக்கொண்டு போய்விட்டால் போச்சு! பார்க்கும் சாமானையெல்லாம் வாங்கிக்கொடு என்று அழ ஆரம்பிப்பான். வாங்கிக் கொடுக்கவில்லையென்றால் அவ்வளவுதான்! அங்கேயே தரையில் கீழே விழந்து பிரண்டு அழுதுத் தள்ளிவிடுவான். பார்க்கிறவர்கள் இவன் அழும் அழுகை தாங்காமல்,  ‘பாவம், குழந்தை, கேட்டதை வாங்கிக் கொடேன். என்னத்துக்கு இப்படி அழ விடற?’ என்று சொல்லிவிட்டுப் போவார்கள். என் பெரியம்மா சொல்வாள்: ‘இவன அழைச்சிண்டு போனா ரொம்ப தொல்லை. பார்க்கறதெல்லாம் வாங்கிக்குடு வாங்கிக்குடுன்னு  உசிர வாங்குவான்.  இல்லன்னா உருண்டு பிரண்டு அழுகை. பார்க்கறவா நான் ஏதோ குழந்தைய  கொடுமை பண்ணிட்டேன் போல ஏம்மா குழந்தையை இப்பிடி அழ விடறேன்னு கேட்டுட்டுப் போறா. அதே இந்த ரஜினியை (நான்தான்!) பாரு. தேமேன்னு கையை பிடிச்சுண்டு எல்லாத்தையும் கண் கொட்டாமல் பார்த்துண்டு வரது. வாய தொறந்து இது வேணும், அது வேணும்னு கேட்டதே கிடையாது!’ அப்பவே நான் ரொம்ப நல்ல பொண்ணு!

 

சரி. இப்போ மறுபடியும், விளக்கெண்ணெய் படலத்திற்கு வருவோம். என் சகோதரன் காலையில் எழுந்திருக்கும்போதே ‘ஓ! என்ற அலறலுடன் தான் அன்று எழுந்திருப்பான். நாங்கள் எல்லோரும் எழுந்துவிட்ட பின்னாலும், தூங்குவது போல பாசாங்கு செய்வான். என் மாமாக்களில் யாராவது ஒருவர் அவனை குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு போய் புழக்கடையில் நிறுத்தி, ‘பல்லை தேய்!’ என்று ஒரு மிரட்டல் போடுவார்கள். அவன் வீறிட்டுக் கொண்டு அவர்கள் பிடியிலிருந்து திமிறி  ‘முடியாது!’ என்று சொல்லிக்கொண்டு திண்ணைக்கு ஓடி வருவான் மறுபடி தூங்க! மாமாக்களிடம் அதெல்லாம் நடக்காது. ஒருவழியாக அழுதுகொண்டே பல்லைத் தேய்ப்பான் – தேய்ப்பான், தேய்ப்பான், தேய்ப்பான் ரொம்ப நேரம் தேய்த்துக்கொண்டே இருப்பான். ‘ம்ம்ம்! சீக்கிரம்’ என்று மாமா அவனை மிரட்டிக்கொண்டே இருப்பார்.

 

இந்தக் களேபரம் புழக்கடையில் நடந்து கொண்டிருக்கும்போதே நாங்கள் ஒவ்வொருவராக தளிகை உள்ளில்  உட்கார்ந்து கொண்டிருக்கும் பாட்டியினிடம் போவோம். பாட்டிக்கு ஒரு பக்கத்தில் ஒரு பெரிய பாத்திரத்தில் காப்பி – சாப்பிடும் சூட்டில் இருக்கும். இன்னொரு பக்கத்தில் விளக்கெண்ணெய் பாட்டில் இருக்கும். பாட்டி காப்பியை ஒரு டம்ப்ளரில் கொட்டி அதில் இரண்டு ஸ்பூன் வி.எண்ணையை விட்டுக் கலக்கிக் கொடுப்பாள்.  பாட்டிலைப் பார்க்கும்போதே எங்களில் ஒருவருக்கு ‘உவ்வே….!’ என்று குமட்டும். ‘யாரது, அது?’என்று அதட்டுப் போடுவாள் பாட்டி. முதல் நாளே நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுவோம். யாரு பெரியவாளோ அவா முதலில் விளக்கெண்ணெய் சாப்பிட வேண்டும். அப்புறம் அவர்களை விட சிறியவர்கள் என்று. இல்லையில்லை சின்னவர்கள்  முதலில்  சாப்பிடவேண்டும்  என்று போட்டியும் வரும்.

 

நான் இந்தப் போட்டிக்கெல்லாம் வரவே மாட்டேன். கிடுகிடுன்னு போயி பாட்டி குடுக்கறத வாங்கி வாயில குத்திண்டு வந்துடுவேன் சமத்தா! சில வருடங்கள் எல்லோரையும் போல காப்பில விளக்கெண்ணெய் விட்டு சாப்பிட்டு வந்தேன். அப்புறம் சே! ஏன் காப்பியையும் கெடுக்கணும், வி. எண்ணைய் சேர்த்து என்று ஒரு ஞானோதயம் பிறந்தது. அதனால முதல்ல வி.எண்ணையை வாங்கி ஒரே மடக்கு. குரங்கை நினைக்காமல் குடித்துவிடுவேன். பிறகு காப்பியை என்ஜாய்! எல்லோருக்கும் என்னைப் பார்த்து அதிசயம். ‘எப்படி நீ ஜாலியாக வி.எண்ணையை வாங்கிக் குடிக்கிறாய்? குமட்டலையா?’ என்று நேர்முகப் பேட்டி எல்லாம் எடுப்பார்கள்.’காப்பில கலந்தாலே எங்களால குடிக்கமுடியலையே! உன்னால எப்படி அப்படியே குடிக்க முடியறது?’ ன்னு  அதிசயப் பிறவி மாதிரி என்னைப் பார்ப்பார்கள். நான் என்னோட லாஜிக்கை சொல்வேன்: ‘வி.எண்ணைய் குடிக்கறது கஷ்டம் தான். அதை காப்பில போட்டு காப்பியையும் ஏன் கெடுக்கணும்? அப்புறம் ஏன் அதைக் கஷ்டப்பட்டு குடிக்கணும்? இரண்டுமே கஷ்டமா இருக்கறத விட, வி.எண்ணையை தனியா கஷ்டப்பட்டு குடிச்சுட்டு, காப்பியை ரசிச்சு குடிக்கலாமே!’

 

‘இதுக்கு இருக்கற சாமர்த்தியத்தைப் பாரேன்’ என்று எல்லோரும் சொன்னாலும் யாருமே என்னை மாதிரி ரிஸ்க் எடுக்க விரும்பல. வி.எண்ணையை காப்பில கலந்து காப்பியையும் கெடுத்து, காப்பியை ‘கொழ கொழ’ன்னு சாப்பிடவே செய்தார்கள். நான் மட்டும் என் தனி வழில குடித்துக் கொண்டிருந்தேன். எங்களில் சிலர் வி.எண்ணையைக் குடிக்க பயந்து தாங்களாகவே பாட்டியிடம் போய், ‘பாட்டி நீயே மூக்கை பிடித்து என் வாயில வி.எண்ணைய் கலந்த காப்பியை கொட்டிட்டு’ என்று பாட்டியிடம் ‘சர்வ தர்மான் பரித்யஜ்ய’ என்று தஞ்சம் புகுந்து விடுவார்கள்!

 

இவ்வளவும் இங்கே நடந்துகொண்டிருக்கும் போது இந்தக் கதையின் நாயகன் மாமாக்களின் பிடியில்    “எனக்கு வேண்டாம்….நான் சாப்பிட மாட்டேன்…!’ என்று அலறிக்கொண்டே  வருவான். அப்போதுதான் தளிகை உள் களைகட்டும். பாட்டி சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும் பயன்படுத்துவாள். ‘சமத்து நீ! தங்கக்கட்டி நீ! வாடா ராஜா!’ என்று கொஞ்சலில் ஆரம்பிப்பாள். ‘நான் சமத்து இல்ல. தங்கக்கட்டி இல்ல. நான் வரமாட்டேன் போ!’ என்று தொண்டை கிழிய கத்துவான் நாயகன். ‘இந்த ஒரு தடவ தான். அடுத்த வருஷத்துலேருந்து வேண்டவே வேண்டாம், சரியா? நீ சமத்தா என் மடில படுத்துப்பாயாம்; நான் வாயில காப்பியை கொட்டுவேன். நீ டக்குன்னு முழுங்கிடுவயாம். வா! வா!’ என்று அடுத்த அஸ்த்திரத்தை விடுவாள். நாங்கள் எல்லாம் குசுகுசுவெனப் பேச ஆரம்பிப்போம். ‘களுக்’ என்று சிரிப்பும் வரும் எங்களுக்கு. பாட்டி எங்களைக் கோபமாகப் பார்த்து பேதத்தில் இறங்குவாள்.  ‘எல்லோரும் அவாவா வேலையைப் பார்த்துண்டு போங்கோ! இங்க என்ன கூட்டம்? இங்க என்ன வேடிக்கையா நடக்கிறது?’ என்று எங்களையெல்லாம் விரட்டுவாள் பாட்டி. நாங்க இந்த வேடிக்கையைப் பார்க்கத்தானே இத்தனை நேரம் காத்திருந்தோம்? அதனால கொஞ்ச தூரம் தள்ளி நின்று கொள்வோம்.

 

‘வாடண்ணா! நீ எத்தனை சமத்து! ஓட்டை கூடல ஒன்றரை கூடை சமத்து!’ என்று நைச்சியானுசந்தானம் ஆரம்பிக்கும். ‘ஓட்டை கூடைன்னா எனக்குத் தெரியும். அதுல ஒண்ணும் நிக்காது! நான் சமத்து இல்ல…நீ பொய் சொல்ற….நான் வரமாட்டேன் போ…!’ என்று நாயகன் ஓட எத்தனிக்க, இனி பொறுக்க முடியாது என்று என் மாமாக்கள் இருவர் அவனைக் கட்டிப் பிடித்து பாட்டியிடம் கொண்டு வருவார்கள். அவர்களிருவரையும் கால்களாலும் கைகளாலும் அடித்து, உதைத்து ஒருவழி செய்துவிடுவான் நாயகன். ‘எமப்பய….! போன ஜென்மத்துல கழுதையாப் பொறந்துருப்பான்…!’ என்று என் மாமா ஒருவர் அவனிடம்  உதை வாங்கும் சமயத்திலும் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று ஜோக் அடிப்பார்.

 

இப்போது பாட்டியும் வைய ஆரம்பித்து விடுவாள். கடைசி வழி தண்டம் ஆயிற்றே! பாட்டியின் மடியில் அவனைப் படுக்க வைத்து, இரண்டு பேர்கள்  கையைக் காலைப் பிடித்துக் கொள்ள, பாட்டி அவன் மூக்கை இறுக்கப் பிடித்து ‘ஆ…..!’ என அவன் அலறும்போது வி.எண்ணைய் கலந்த காப்பியை அவன் வாயில் கொட்டுவாள். அப்பாடா என்றிருக்கும் எங்களுக்கு! ஆனால் அத்துடன் முடியாது அந்த நிகழ்வு. வாயில் இருப்பதை முழுங்காமல் தொண்டையில் வைத்துக் கொண்டு ‘களகள’ என சத்தம் செய்வான். எங்களுக்கு சிரிப்புத் தாங்காது. நாங்கள் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிடுவோம். இறுக்கமான சூழ்நிலை அப்படியே மாறிவிடும். நாங்கள் சிரிப்பதைப் பார்த்து பாட்டி சிரிக்க, மாமாக்கள் அந்த சிரிப்பில் கலந்து கொள்ள, நாயகன் கம்பீரமாகப் பாட்டியின் மடியிலிருந்து எழுந்து கொள்வான். திடீரென நினைவு வந்தாற்போல பாட்டி ‘டேய்! விளக்கெண்ணெய் என்னாச்சுடா?’ என்று பதறிப் போய் கேட்பாள். ‘முழுங்கிட்டேன்!’ என்று சொல்லிவிட்டு நாயகன் சிட்டாகப் பறந்துவிடுவான்!

Advertisements

22 thoughts on “விளக்கெண்ணெய் க்ளைமாக்ஸ்!

 1. ஹாஹா….. விளக்கெண்ணை படலம் வெகு ஜோர்….. அத்தைப் பாட்டி இப்படி எங்களுக்கும் கொடுத்ததுண்டு. ஆனால் காப்பியில் கலந்தல்ல! நேரடியா இரண்டு ஸ்பூன்! 😦

 2. வெகு சுவாரஸ்யமான நினைவுகள். நல்லவேளை, எனக்கு வேப்பிலைக் கட்டி வைத்தியம் தவிர வேறு எதுவும் தந்ததில்லை! நீங்கள் செலெக்ட் செய்த வழிதான் சரி. எனக்கு அப்படித் தந்திருந்தாலும் உங்கள் வழியைத்தான் நானும் பிடித்திருப்பேன்! உங்கள் தம்பியின் ஆர்ப்பாட்டம் சுவாரஸ்யம்.

  1. வாங்க ஸ்ரீராம்!
   நல்லவேளை தப்பித்தீர்கள்! என் வழி தான் சிறந்த வழி என்று நான் இன்றைக்கும் நினைக்கிறேன்.
   அது தம்பியா அண்ணாவா என்பது சஸ்பென்ஸ்! எங்கள் வீட்டில் எல்லோரும் இந்தப் பதிவுகளைப் படிப்பதால் பெயர் சொல்லாமல் சகோதரன் என்று எழுதிவிட்டேன். 🙂
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
   வேப்பிலைக் கட்டி வைத்தியம் பற்றி எழுதிவிட்டீர்களா?

 3. நீங்கள் தைரிய சாலிதான்.என்ன செய்தாலும் பாட்டியிடம் இருந்து தப்ப முடியாது என்பதால் நீங்கள் சொன்ன வழிமுறை சிறந்தது. விளக்கெண்ணை குடித்த நினைவில்லை. இப்போது யாரும் இதெல்லாம் செய்வதில்லை .ஒரு அல்பண்டசோல் மாத்திரை.
  உண்மையான் விளக்கெண்ணை பதிவு. சிரித்து ரசித்தேன்.

  1. வாங்க முரளி!
   எனது செல்லப் பெயரும் ரஜினி – அதனால என் வழி தனி வழி எப்போதுமே! 🙂
   வருகைக்கும், ரசித்து சிரித்ததற்கும் நன்றி!

 4. ம்ம்ம்ம்ம் எங்களுக்கெல்லாம் பாட்டி கொடுத்ததில்லை. 🙂 அப்பாவே கொடுப்பார் . நீங்க சொன்ன மாதிரி காஃபியில் கலந்து தான்! அதனாலோ என்னமோ எனக்குக் காஃபியேப் பல வருடங்கள் பிடிக்காமல் இருந்துட்டு அப்புறமாக் கல்யாணம் ஆனப்புறமாக் கொஞ்சம் கொஞ்சமாக் குடிக்க ஆரம்பிச்சேன். 🙂 விளக்கெண்ணெய் இப்போவும் சாப்பிடுவது உண்டு. ஆனால் நீங்க சொன்ன மாதிரி வி.எ. தனியா வெந்நீரோடு. அதன் பின்னர் காஃபியை ருசித்துக் குடிப்பேன். 🙂

  1. வாங்க கீதா!
   இப்பவும் வி. எண்ணைய் சாப்பிடுவீங்களா? அட!
   என்ன ஒரு காமென்ட் டோட நிறுத்திட்டீங்க? மின்சாரம் இல்லைன்னு சொல்லியிருந்தீங்க, அதுனாலையா?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 5. பரவாயில்லையே.காபியில் கலந்து கொடுப்பது. எங்காத்தில் ஒரு பானக பூஜையே நடக்கும். நிலாவரை,கடுக்காய்,சோம்பு,திராக்ஷை,இன்னும் என்னென்னவோ சேர்த்து ஒரு பெரிய கச்சட்டியில் கஷாயம் தயாராகும், பாட்டியிடம் அடுத்த உறவுக்கார குழந்தைகளுக்காக அட்வான்ஸ் புக் ஆகியிருக்கும். ஒரு வெள்ளிக் கிண்ணம். அதிலே விட்டு விட்டு ஒண்ணு இரண்டு மூணு மூக்கைப் பிடிச்சிண்டு கடகடன்னு குடிக்கணும். அப்பாவும் பிரதான பங்கு. பானகம் மாதிரி எவ்வளவு நன்னா இருக்கு அபிப்ராயம் கொடுப்பார். அழுகை, ஆர்பாட்டம், அமக்களம் எல்லாம் உண்டு. உரவுக்கார குழந்தைகள் அப்பாவிற்கு பயந்து கொண்டு பலிகடாவாக குடிக்கும். சிலதுகள் வாந்தி பண்ணும் மாதிரி நடிக்கும். கலியாணம் செய்து பெண்ணைக் கொண்டு விடும்போது அப்பா,மாதாமாதம் விளக்கெண்ணெய் கொடுக்கவேண்டும் என்று சொன்னது இன்னும் வம்ச வழிக்கதையாக ்அவர்கள் வீட்டில் உலாவருவது இப்படி எத்தனையோ? போன ஜன்மத்தில்க் கழுதையாய்ப் பிறந்திருப்பான் என்ற இடம் படிக்கும்போது சிறிப்பு தாள வில்லை அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   உங்களிடமிருந்து நீண்ட, சுவாரஸ்யமான கருத்துரை வரும் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றவில்லை. //கலியாணம் செய்து பெண்ணைக் கொண்டு விடும் போது அப்பா, மாதமாதம் விளக்கெண்ணெய் கொடுக்க வேண்டும்// என்றாரா? நல்ல தமாஷ்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 6. ஆஹா… ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன் இப்பகுதியை!!

  //ஏன் காப்பியையும் கெடுக்கணும், வி. எண்ணைய் சேர்த்து என்று ஒரு ஞானோதயம் //

  போன பதிவிலேயே இதைத்தான் நினைத்தேன்!! நீங்க சமத்துதான் (என்னைப் போலவே) ஹி..ஹி…!!

  எங்க வீட்டுல இஞ்சி + வேப்பிலை கொடுக்கும்போது என் & தங்கைகளின் குழந்தைகள் இப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க. ஏன்னா, என்ன செஞ்சாலும் உங்க பாட்டி மாதிரியே நானும் விடாக்கொண்டன் என்று நல்லாவே தெரியும். அதனால், பேசாம வாங்கிக் குடிச்சுட்டு போயிடுவாங்க. அதுவும், குடிச்சு 10 நிமிடம் வரை தண்ணீர்கூட குடிக்க விடமாட்டேன்.

  1. வாங்க ஹூசைனம்மா!
   நீங்களும் வில்லி தான் போலிருக்கே! என்னையும் உங்களைப்போலவே சமத்து என்று ஒத்துக் கொண்டீர்களே! நன்றிங்கோ!
   தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? விளக்கம் ப்ளீஸ்!

 7. ரஞ்சனி சமத்து மட்டுமல்ல சாமர்த்தியசாலியும் தான் என நிரூபித்துவிட்டீர்களே முதலில் வி எண்ணெய் பிறகு காபியை ரசித்து ருசித்துக்குடிப்பது ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் உங்கள் சகோதரன் அமர்க்களமும் ரசிக்கும்படியாக எழுதியுள்ளீர்கள் பாராட்டுக்கள் ரஞ்சனி வி எண்ணெய் பதிவையும் ரசித்து ருசித்து படித்தேன்

  1. வாங்க விஜயா!
   என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ(ங்க) பார்க்கிறீங்க?
   வருகைக்கும், ரசித்து ருசித்து படித்ததற்கும் நன்றி!

  1. வாங்க மஹா!
   Emoticon லேயே சொல்ல வேண்டியதை சொல்லிட்டீங்க! நானும் முயற்சி செய்கிறேன்.
   வருகைக்கும் புதுமையான கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s