ஸ்ரீரங்கத்து வீடு

IMG_20130221_145709

 

இது ஸ்ரீரங்கம் வீடு அல்ல. சிவராமபுரம் வீடு.

 

எங்கள் ஸ்ரீரங்கத்து அகம் பேரன் பேத்திகள் நிறைந்து இரண்டு பட்டுக் கொண்டிருக்கும். காலையில் எங்களுக்கு சாதேர்த்தம் (இரவு சாதத்தில் நிறைய நீர் ஊற்றி வைத்துவிட்டு, காலையில் அதில் உப்பு, மிளகாய், நிமிண்டிப் போட்டு கூடவே பெருங்காயம் போட்டு டம்ப்ளரில் கொடுப்பாள் பாட்டி – இது தான் சாதம்+ தீர்த்தம் = சாதேர்த்தம்)  தான் காலை சிற்றுண்டி.  சாதேர்த்தம் இல்லை அது அமிர்தம்! ‘கம்’மென்று வயிறு நிரம்பிவிடும்.

 

பாட்டியின் அகம் பெரியது. இந்தக் காலத்தைப் போல அறைகள் இருக்காது. அத்தனை பெரிய வீட்டில் ஒரே ஒரு அறை தான் – காமிரா உள். வேறு அறைகள் கிடையாது. வாசலிலிருந்து வரலாம், வாருங்கள். வாசலில் நுழைந்தவுடன் இடது பக்கம் மிகப்பெரிய திண்ணை. திண்ணையின் ஒரு பக்கம் பாதித் திண்ணைக்கு வெய்யில் வராமல் மூங்கில் தட்டி போட்டிருக்கும். இப்போது நாம் ‘ஜாலி’ என்கிறோமே, அது போல. திண்ணையில் தலைகாணி போல ஒரு அமைப்பு. ‘சாய்வு’ என்பார்கள் அதை. அங்கிருந்தே மாடிக்கு ஒரு மரப்படி போகும். இடது பக்கத் திண்ணை போலவே வலது பக்கத்திலும் ஒரு சின்ன திண்ணை. சும்மா உட்காரலாம், அவ்வளவுதான். திண்ணை உலர்ந்த தென்னங்கீற்றுகளால் மூடப்பட்டிருக்கும். சிலசமயம் இந்தக் கீற்றுகளை மாற்றுவார்கள். ரொம்பவும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருப்போம், கீற்றுகள் அடுக்கப்படுவதை.

 

எங்களின் பகல் பொழுதுகள் இந்தத் திண்ணையில் தான். பாட்டியின் அகத்தில் நிறைய புளியங்கொட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். திண்ணை முழுக்க இவைகளைப் பரப்பி, கொந்தி கொந்தி விளையாடுவோம். ஐந்துகல் விளையாட்டும் உண்டு. ஆடுபுலி ஆட்டம்; தாயம் பரமபதம் என்று எல்லா உள்அரங்கு விளையாட்டுகள் பகல் பொழுதில். சாயங்காலம் கிட்டிபுள், கோலி பம்பரம் என்று வெளியரங்கு விளையாட்டுக்கள் வாசலில். ஏழெட்டு வயது ஆகிவிட்டால் என் பெரியம்மா பிள்ளை சைக்கிள் விடச் சொல்லிக் கொடுப்பான். விழுந்து எழுந்து விடுமுறை முடிவதற்குள் கற்றுக்கொண்டு விடுவோம். நான் தான் சைக்கிள் விட சரியாகக் கற்றுக்கொள்ளாத ஆள். பிற்காலத்தில் இருசக்கர வண்டி விட ரொம்பவும் திண்டாடினேன் அதனால்.

 

திண்ணையைத் தாண்டி உள்ளேபோனால் சின்னதாக தாழ்வாரம். இங்குதான் கயிற்றுக்கட்டில்கள்  வைக்கப்பட்டிருக்கும். இரவு வெளியே எடுக்கப்பட்டு வாசலில் போடப்பட்டு நாங்கள் இதன் மேல் படுத்துக் கொள்வோம். ஆஹா! வானத்தில் மினுமினுக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி ரொம்ப நேரம் கதை பேசுவோம். எப்போது தூங்கினோம் என்றே தெரியாது. நடு இரவில் சிலசமயம் குளிரும். அப்போது எழுந்து திண்ணையில் படுத்துக்கொள்வோம்.

 

தாழ்வாரத்தில் இடது பக்கம் வாசப்பக்கத்து உள். அது எப்போதும் பூட்டியே இருக்கும். இந்தப் பூட்டு இந்த தலைமுறைகளுக்கு தெரியாத ஒன்று. இந்த உள்ளிற்கு இரண்டு கதவுகள் ஒரு கதவு முதலில் சாத்தப்பட்டு மேல் தாழ்ப்பாள், கீழ் தாழ்ப்பாள் போடப்படும். பிறகு இன்னொரு கதவும் சாத்தப்படும். இந்தக் கதவின் மேல் புறத்தில் ஒரு சங்கிலி இருக்கும். கதவின் நிலையில் ஒரு கொக்கி இருக்கும். சங்கிலியை இந்தக் கொக்கியில் போட்டு பிறகு பூட்டுப் போடுவார்கள்.

 

தாழ்வாரத்தைத் தாண்டினால் பெரிய கூடம். கூடத்தில் இரண்டு தூண்கள். தூண்களுக்கு அந்தப் பக்கம் ஊஞ்சல். புளியங்கொட்டை, பல்லாங்குழி ஆட்டங்கள் அலுத்துவிட்டால் ஊஞ்சல் ஆட வந்துவிடுவோம். ஊஞ்சல்தான் ரயில் வண்டி. அதில் உட்காருபவர்களுக்கு எந்த ஊர் என்று கேட்டு மாமாக்கள் சேர்த்து வைத்திருக்கும் ரயில் டிக்கட்டுகளை விநியோகிப்போம். நடுவில் ஸ்டேஷன்கள் வரும் அப்போது நிறுத்தி என் கடைசி மாமா ‘பஜ்ஜி, போண்டா, முறுக்கு, வடை!’ என்று  விற்றுக்கொண்டு வருவார். இதுவரை நாங்கள் சீரியஸ் ஆகக் கேட்டுக் கொண்டு வருவோம். உடனே ‘தண்ணிக் காபி, தண்ணிக் காபி, கடுப்பு டீ’ என்று குரல் கொடுப்பார். கிளுகிளுவென்று சிரிப்போம் நாங்கள்.

 

ஊஞ்சல் பற்றியே ஒரு பதிவு முழுக்க எழுதலாம். நாங்கள் எல்லோரும் அதில் உட்கார்ந்துகொண்டால் என் மாமாக்களில் ஒருவர் அந்த ஊஞ்சலை ஒரு பக்கத்து உச்சிக்குக் கொண்டுபோய் சட்டென்று விட்டுவிட்டு பக்கத்தில் ஒதுங்கி விடுவார். அந்த ஊஞ்சல் கீழே வரும் வேகத்தில் நாங்கள் ‘ஓ’ என அலறுவோம். சிலசமயம் அவரும் ஓடிவந்து ஏறிக்கொள்ளுவார்.

 

எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவோம். ஆளாளுக்கு ஒவ்வொன்று கேட்போம் – பாட்டி சா போ சா (சாதம் போட்டு சாத்தமது) சா போ கு, சா போ மோ என்று. பாட்டி பாவம் எங்களை சமாளிக்க முடியாமல் எல்லோரும் ஒண்ணா கேளுங்கோ என்பாள். அவ்வளவுதான். சா போ சா என்று கோரஸ் ஆகக் கத்துவோம். பாட்டி ‘முதல் பசி ஆறித்தா? பேசாமல் இருக்கணும்’ என்பாள். தட்டை எடுத்துப் போவதற்கு முன் கட்டாயமாக தட்டை சுற்றி நீர் சுற்ற வேண்டும். அப்போதுதானே எச்சில் பிரட்ட உதவும்? சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே யாராவது ஒருவர் ‘லொடக்’ என்று தீர்த்தத்தைக் கொட்டுவோம். அது அப்படியே இன்னொருவர் தட்டு வரை ஓடும். சாப்பிடும் நேரம் அமர்க்களம் தான். பாட்டி எங்களை எதற்காகவும் கோபிக்கவே மாட்டாள்.

 

இப்படியிருக்கும் பாட்டி ஒருநாள் மட்டும் ‘வில்லி’யாக மாறிவிடுவாள். விளக்கெண்ணை போட்டும் நாள் தான் அது. முதல் நாள் இரவே எங்களிடம் சொல்லிவிடுவாள் பாட்டி: நாளைக்குக் காலை காபியில் விளக்கெண்ணை கலந்து கொடுக்கப்படும் என்று. நாங்கள் எல்லோருமே இஞ்சி தின்ற ஏதோ போல அன்றைக்கு படுக்கப் போவோம். எல்லோருக்குமே தெரியும் பாட்டியிடமிருந்து தப்ப முடியாது என்று. ஆனால் என் சகோதரன் இரவே அழுது அடம் பிடிக்க ஆரம்பிப்பான். ‘நாளைக்குத் தானே இன்னிக்கே ஏன் அழற?’ என்று அவனை சமாதானப் படுத்துவோம். அழுது கொண்டே தூங்கப்போவான். தூங்காமல் எழுந்து உட்கார்ந்து கொண்டு ‘நான் இன்னிக்கே ஊருக்குப் போறேன்’ என்பான். ‘விடிஞ்சதும் விளக்கெண்ணை குடித்துவிட்டு நீ கிளம்பு’ என்பாள் பாட்டி விடாக்கண்டனாய்.

அடுத்த நாள் விடியும்……….கூடவே என் சகோதரனின் அழுகையும் ஆரம்பிக்கும் !

நாளை க்ளைமாக்ஸ்!

29 thoughts on “ஸ்ரீரங்கத்து வீடு

 1. ஹஹஹஹ் அருமையான குழந்தைப்பருவ நினைவுகள் அழகாக கோர்வையாகச் சொல்லிச் செல்கின்றீர்கள் சகோதரி…க்ளைமாக்ஸ் அறிய காத்திருக்கின்றோம்….ஆவலுடன்…

  1. வாங்க துளசிதரன்,
   முதல் முதலாக வந்ததற்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

  1. வாங்க ரூபன்,
   வருகைக்கும், படித்து மகிழ்ந்ததற்கும் நன்றி!

 2. சாதேர்த்தம் -இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

  நல்ல நினைவோடை. இது மாதிரி வீடுகளில்தான் நானும் பாட்டி வீட்டில் தங்கி இருக்கிறேன். நாகையில் மற்றும் பெரும்பண்ணை யூரில்!

  கேமிரா உள் என்ற பெயர் ஏன் வந்தது?

  1. வாங்க ஸ்ரீராம்!
   கேமிரா உள் என்ற பெயர் ஏன் வந்தது என்று எனக்கும் தெரியாது. கம்ர என்றால் அறை அல்லவா? அது எப்படியோ தமிழில் மருவி வந்திருக்கும் என்று நினைக்கிறேன். வேறு யாராவது பதில் சொல்லுகிறார்களா, பார்க்கலாம்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 3. //திண்ணையில் தலைகாணி போல ஒரு அமைப்பு. ‘சாய்வு’ என்பார்கள் அதை.//

  மதுரைப்பக்கம் இதை மாப்பிள்ளைத் திண்ணை என்பார்கள். அந்தச்சாய்விலே படுத்துக்கறதுக்கும்போட்டி உண்டே? 🙂

  நீங்க தாழ்வாரம் என்பதை நாங்கள் ரேழி என்போம். ரேழியில் இருக்கும் அந்த உள்ளும் ரேழி உள் என்றே அழைக்கப்படும். பெரும்பாலான வீடுகளில் இந்த ரேழியிலேயே மாடிப்படியும் காணப்படும். அதைத் தாண்டி முற்றம், கூடம்! முற்றத்தில் மேலே வெளிச்சம் வர கம்பிக்கிராதி போட்டிருப்பாங்க. 🙂 என் நினைவுகளையும் கிளப்பி விட்டுட்டீங்க!

  1. வாங்க, வாங்க கீதா!
   உங்களிடமிருந்து நிறைய பின்னூட்டங்கள் வரும் என்று எதிர்பார்த்தேன்.
   ரேழி என்ற வார்த்தை எழுதும்போது நினைவிற்கு வரவில்லை. அதனால் தாழ்வாரம் என்று எழுதிவிட்டேன். எங்கள் பாட்டி அகத்தில் நடுவில் முற்றம் இருக்காது. கூடத்தில், சமையலறையி ல் வெளிச்சம் வர ‘எடுத்துக்கட்டி’ இருக்கும். அடுத்த பதிவில் இதையெல்லாம் எழுதுகிறேன்.

 4. உங்க பாட்டி “சாதேர்த்தம்” கொடுத்தால் எங்க பாட்டி எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய கல்சட்டிப் பழைய சாதத்தைப் பிசைந்து கைகளில் போடுவாங்க. நாங்க கிட்டத்தட்டப் பத்துப் பனிரண்டு பேரன், பேத்திகள் ஒன்றாய்க் கூடிக் களித்த காலம் அது. எங்க பாட்டி பழையது போட்ட கதையைக் கடைசிக் கட்டி மாம்பழம்ங்கற பேரிலே எழுதினேன். 🙂

  1. பழைய சாதத்தை கல்சட்டியில் வைத்திருந்து பிசைந்தும் போடுவாள் பாட்டி. நாங்களும் எண்ணிக்கையில் நிறையத்தான். மாவடு தான் தொட்டுக்கொள்ள.

  1. நிச்சயம் படித்துப் பார்க்கிறேன். விளம்பரம் நிச்சயம் வேண்டும். படித்துப் பார்த்து பின்னூட்டமும் போட்டாச்!
   வருகைக்கும், புயல் போல பின்னூட்டங்கள் போட்டதற்கும் நன்றி!

 5. மிக அருமையான பதிவு ரஞ்சனி ராதா நல்லூர் பற்றி இதுபோலவே ஒரு பதிவு நான் எழுதியிருந்தேன். குழந்தைப் பருவத்து நினைவுகள் என்றும் பசுமை மாறாதவை தான் அதிலும் பாட்டியின் அன்பும் கண்டிப்பும் தாங்கமுடியாதவைதான் மிகவும் ரசித்தேன் பாராட்டுக்கள்.

  1. வாங்க விஜயா!
   நானும் உங்கள் பதிவு படித்திருக்கிறேன்.
   வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி!

  1. வாங்க தனபாலன்!
   வருகைக்கும், சந்தோஷமாக ரசித்ததற்கும் நன்றி!

 6. எந்நேரமும் இருட்டாக இருப்பதால் காமிரா உள் என்று சொல்லி இருக்கலாம். டார்க் ரூமில் தானே ஃபிலிமைக் கழுவுவார்கள். அதனாலோ? 🙂

 7. இந்த வீடு எங்களூர் வீடுமாதிரிதான் இருக்கு. , ரேழி,கூடம் தாவாரம்,காமராஉள்ளு, அதும் பக்கத்திலே ஒரு சின்ன உள்ளு. அதில்தான் வருஷாந்திர ஸாமான்கள் சேகரிக்கப் பட்டிருக்கும். சாத்தூத்தம் எந்று நாங்கள் சொல்வோம்.. நல்ல பெரிய கச்சட்டியில் தூததம் கொட்டின சாதம். தொட்டுக்க மெந்திக்குழம்பு. தயிரை விட்டு சாதத்தைப் பிசைந்து எல்லோரையும் ரவுண்டாக உச்கார வைத்துக் கையில் போடுவார்கள். கையிலுள்ள சாதத்தில் கட்டை விரலால் குழி செய்து கொண்டால் ஒரு கரண்டிமுட் டை குழம்பு கிடைக்கும். அப்பாடா அந்த ருசியெல்லாம் இந்த நாளைய அரிசிக்கு வராது. அதுவும் காவேரிக்கரை அரிசி இன்னமும் ருசி. திண்ணை,தட்டி மறைப்பு, தலைக்குயரக்கட்டை ஊஞ்சல் என எல்லோருக்கும் இனிய நினைவுகளைக் கிளப்பி விட்டீர்கள். எண்ணெய்சாதம் சாப்பிட்டுப் பழக்கம உண்டா. இன்னும் எவ்வளவோ எழுத வருகிறது. போதும். அவலைத் தூண்டும் நிகழ்வுகள். அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   எண்ணை சாதம் சாப்பிட்டதில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் அதுபற்றி எழுதுங்கள். சாப்பிட்டிருக்கிறேனா என்று சொல்லுகிறேன். நீங்களும் எழுதுங்கள். உங்கள் வலைத்தளத்தில் எழுதலாமே!
   வருகைக்கும், இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

  1. வாருங்கள் அபயா அருணா!
   உங்கள் பதிவு படித்துவிட்டு கருத்துரையும் சொல்லிவிட்டு வந்தேன். வருகைக்கும், உங்கள் பதிவின் இணைப்பைக் கொடுத்ததற்கும் நன்றி!

 8. எடுத்துக்கட்டி பற்றி நீங்க குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கையில் அந்தக்கால மதுரை வீடுகளின் கல்யாணக் கூடத்தின் எடுத்துக்கட்டிகள் நினைவில் வருது. கீழே உட்கார இடம் இல்லாதவர்கள் எடுத்துக்கட்டியின் நாற்புற ஜன்னல் வழியாகவும் கீழே நடக்கும் கல்யாணத்தைப் பார்ப்பார்கள். மேலே உள்ளவர்களுக்குப் புத்தகமோ, பூவோ கொடுக்கணும்னா கொடிக்கம்பில் வைத்துச் சுருட்டிக் கம்போடு மேலே நீட்டுவேன். கீழ் வீட்டுக்காரங்க கிட்டே இருந்து புத்தகங்கள் பலவும் அப்படிப் பரிமாறிக் கொண்டிருக்கோம். 🙂 சில சமயம் துணி கூட!

  1. நீங்கள் சொல்வதுபோலத்தான் ஸ்ரீரங்கத்து வீட்டின் கூடத்தில் இருக்கும். அதற்கு நேர் கீழே ஊஞ்சல் இருக்கும். தளிகை உள்ளில் சின்னச்சின்னதாக கண்ணாடிகள் வைத்த எடுத்துகட்டிகள் மூன்று நான்கு இருக்கும்.

 9. எங்களுக்கு பாட்டி வீட்டிற்கு போகும் பாக்கியம் இல்லை. ஆனால் பெரியம்மா வீட்டிற்கு விஜயவாடா செல்வோம். அங்கே அத்தைப்பாட்டி [பெரியம்மா/அம்மாவின் அத்தை] இருப்பார்கள். அவர்கள் தான் எங்களுக்கு! கல்சட்டியில் சாதம் பிசைந்து போட அவரைச் சுற்றி எங்கள் வீட்டு வாண்டுகள் தவிர, பக்கத்து வீட்டு வாண்டுகளும் உண்டு! இனிமையான காலம் அது! அத்தைப் பாட்டியின் பாசமும், அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த விஷயங்களும் ஏராளம்…. அவரைப் பற்றி இது வரை ஏன் எழுதவில்லை என எனக்குள் ஒரு கேள்வி இப்போது. எழுத வேண்டும்!

  இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். ஸ்ரீரங்கத்தில் இருந்த பழைய வீடுகளை ஒவ்வொன்றாக இடித்து அங்கேயே அனுமதி இல்லாது Flats கட்டி வருவது தொடங்கிவிட்டது. இன்னும் சில வருடங்கள் போனால், பழைய வீடுகள் கொஞ்சம் கூட இருக்காது என்பது வருத்தமான விஷயம்!

  1. வாங்க வெங்கட்!
   நீங்கள் பாட்டி வீட்டுக்குப் போகாமல் இருந்ததை அத்தை பாட்டி வீட்டுக்குப் போய் சரிகட்டி விட்டீர்கள், போலிருக்கு! உங்கள் அத்தை பாட்டி பற்றி நீங்கள் எழுதுங்கள். உங்கள் இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
   அந்த காலம் போல இப்போதைய தலைமுறை பாட்டி வீட்டிற்கெல்லாம் போவதேயில்லை, இல்லை.
   ஸ்ரீரங்கத்தில் நான்கு சித்திர, உத்தர வீதிகளில் அவ்வளவு மாற்றங்கள் இல்லை. எங்கள் வீட்டிற்கு நேர் எதிர்த்தாற்போல எழுத்தாளர் சுஜாதா வீடு. இப்போது அவர்கள் யாரும் அங்கில்லை. வேறு யாரோ வாங்கி இரண்டு மாடி கட்டியிருக்கிறார்கள். எங்கள் பாட்டி வீடு அப்படியே இருக்கிறது. திண்ணை மட்டும் மிஸ்ஸிங்!
   அடுத்த பதிவின் பின்னூட்டத்தில் திரு சுரேஷ் சொல்லியிருப்பது போல வளர்ச்சியும் ஒருவகையான அழிவுதான்!
   வருகைக்கும், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 10. வணக்கம்.

  உங்கள் வாழ்க்கை படிக்க சந்தோஷமா இருக்கு. நன்றி

 11. அருமையான நினைவலைகளை மீடி இருக்கிறீர்கள் ரஞ்சனி. நம் எல்லோருடைய பாட்டிகளுக்கும் நமனத்தில் கோவில் உண்டு. நன்றை. நாங்களும் சாத்தேர்த்தம் தான்.:)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s