Uncategorized

ரயில் பயணங்கள் தொடர்கிறது……!

 

 

 

சிறுவயதுகளில் எங்களுக்குத் தெரிந்த ஒரே ரயில்நிலையம் சென்னை எழும்பூர். மலைக்கோட்டை ரயிலில் ஏறி ஸ்ரீரங்கம் போவோம். கோடை விடுமுறை ஆரம்பித்தவுடன் போனால், பள்ளிக்கூடம் திறப்பதற்கு முதல் நாள் திரும்பி வருவோம். ஸ்ரீரங்கம் தவிர வேறெங்கும் ரயிலில் சென்றது கிடையாது. பல வருடங்கள் சென்ட்ரல் ரயில் நிறுத்தம் பார்த்ததேயில்லை. எங்கள் உறவினர் ஒன்றிரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சென்னையில் தான் இருந்தார்கள். அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் உள்ளூர் பேருந்துகள் அல்லது நடராஜா சேவை. முக்கால்வாசி நடைதான்.  மறந்துவிட்டேனே! அப்பாவைப் பெற்ற தாத்தா, பாட்டி பல்லாவரத்தில் இருந்தார்கள். அதற்கும் எக்மோர் போய் உள்ளூர் ரயிலில் போவோம். இந்த இரண்டு இடங்களைத் தவிர வேறெங்கும் ரயிலில் போனது இல்லை.

 

எங்கள் பெரியம்மாவின் குடும்பம் வடஇந்தியாவில் இருந்தது. அவர்களும் கோடை விடுமுறையில் ஸ்ரீரங்கம் வருவார்கள். எங்களைப் போல இரவு ஏறினால் காலையில் ஸ்ரீரங்கம் என்றிருந்ததில்லை அவர்கள் பயணம். சென்னை சென்ட்ரலுக்கு வந்து அங்கிருந்து இன்னொரு ரயில் பிடித்து ஸ்ரீரங்கம் வரவேண்டும். மூன்று நாட்கள் ஆகிவிடும் ஸ்ரீரங்கம் வந்து சேர. எனக்கும் அவர்களைப் போல மூன்று நாட்கள் பயணம் செய்ய வேண்டும் என்று அப்போதெல்லாம் ஆசையாக இருக்கும். மூன்று  நாட்கள் ரயிலில் ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வரலாமே என்று தோன்றும். என் அம்மாவிடம் சொன்னால், ‘நாறிப் போய்விடுவோம்’ என்பாள்.

 

இன்னொரு ஆசையும் எனக்கு உண்டு. திருச்சி வந்து ஸ்ரீரங்கம் வரும் ரயிலில் வரவேண்டும் என்பதுதான் அந்த ஆசை. ஏனென்றால் அப்போது இரண்டு பாலங்கள் வரும். காவிரிப் பாலம் ஒன்று; கொள்ளிடப் பாலம் ஒன்று.  காவிரிப் பாலத்தில் ரயிலில் போவது போல த்ரில் வேறில்லை என்று நினைத்திருந்தேன் – பிற்காலத்தில் சம்பல் நதியைப் பார்க்கும்வரை! சம்பல் நதி மேல் ரயில் போனபோது பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தது இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. திருப்பதி மலைமேல் பேருந்து போவதைப் பார்த்து பிரமித்தவள் பத்ரிநாத் போனபோது இமயமலை எதிரில் நம் திருமலா ஜுஜுபி என்று உணர்ந்தேன்!

 

ஸ்ரீரங்கம் வரும்போது பெரியம்மா பால் கோவா செய்து கொண்டு வருவாள். இன்னும் அதன் ருசி எங்கள் நாவில் இருக்கிறது. இனிக்கிறது. ஸ்ரீரங்கத்தில் எங்களை வரவேற்க மாமாக்களில் யாராவது ஒருவர் ஸ்டேஷனுக்கு வருவார்கள். ஒரு லொடலொட மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டு பின்மண்டையில் இடி பட்டுக்கொண்டே வீடு வந்து சேருவோம். ஸ்ரீரங்கத்தின் மண்வாசனையே அலாதிதான். நாங்கள் வந்திறங்கியவுடன் எங்கள் மாமா சொல்லுவார்: ‘மெட்ராஸ் அழுக்குப் போக எல்லோரும் குளித்துவிட்டு வாருங்கள். உங்களுக்காகவே ‘லைப்பாய் சோப்’ வாங்கி வைத்திருக்கிறேன். உங்களோட அழுக்கிற்கு அதுதான் சரி’ என்பார். இப்போது இந்த சோப்பிற்கு என்ன விளம்பரம் செய்கிறார்கள்!

 

ஸ்ரீரங்கம் நினைவுடன் போட்டிபோட்டுக் கொண்டு நினைவிற்கு வருவது சிலோன் ரேடியோ. காலையில் எங்களை எழுப்புவதே இந்த வானொலி தான். முத்துமுத்தான பாடல்களுடன் மயில்வாகனம் எங்களை எழுப்புவார். ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?’ என்று டிஎம்எஸ், சுசீலா இனிமையாக பாடி எங்கள் கோடை விடுமுறையை துவக்குவார்கள். அதைத் தொடர்ந்து பல்தேய்த்து, காப்பி  குடித்துவிட்டு  குளிப்பதற்கு  கொள்ளிடம் போவோம். எங்களுடன் பெரியவர்கள் யாரும் வர மாட்டார்கள். நாங்களே போய்விட்டு  குளித்துவிட்டு வருவோம். ‘9 மணி சங்கு ஊதியவுடன் வந்துவிட வேண்டும் ‘ என்று சொல்லி அனுப்புவாள் பாட்டி. போகும் வழியில் எல்லாம் ‘ஸ்ரீரங்கம்மாவின் பேரன் பேத்தி’களாக அறியப்படுவோம். கொள்ளிடத்தில் அதிகம் நீர் இருக்காது. உட்கார்ந்துகொண்டு ஆறஅமரக் குளிப்போம் . ஆனால் ஊற்றுக்கள் நிறைய இருக்கும். என் சகோதரன் சொல்லுவான்: ‘நாமளே இந்த ஊற்றுக்களை எல்லாம் தோண்டிதோண்டி  இன்னொரு கொள்ளிடம் பண்ணிடலாம்’ என்று!

ஸ்ரீரங்கத்தில் இன்னொரு நிகழ்வு மறக்க முடியாதது: விளக்கெண்ணை போட்டல்!

நாளை தொடரலாம்….

 

Advertisements

29 thoughts on “ரயில் பயணங்கள் தொடர்கிறது……!

  1. வாங்க கீதா!
   நாங்கள் அம்மாவுடன் காலை வண்டியில் வருவோம். அது ஸ்ரீரங்கத்திற்கு வரும். சில சமயங்களில் நீங்கள் சொல்வது போல திருச்சி வந்து வருவோம். நான் பெரியவளானதும் மலைக்கோட்டை வண்டியில் வந்து கொண்டிருந்தோம். பெங்களூரு வந்த பிறகு திருச்சிக்குத் தான் போவோம். ஸ்ரீரங்கம் ஸ்டேஷனை பல வருடங்கள் கழித்து போனதடவை – சென்னையிலிருந்து பல்லவன் வண்டியில் வந்தோம் – பார்த்தேன். ரொம்பவும் மாடர்ன் ஆகிவிட்டது போல இருந்தது.

 1. சென்னைக்கு அடிக்கடி ரயிலில் வந்த அனுபவம் நிறையவே உண்டு. ஒரு தரம் தனியா வந்தப்போத் திருச்சிக்கு அருகில் டிரெயில் ஆகி வண்டியை மணிக்கணக்காக நிறுத்திட்டாங்க. சனிக்கிழமை காலை சென்னை எழும்பூரில் ஏறினவள் ஞாயிறு காலை மதுரை போய்ச் சேர்ந்தேன். இதே போல் தான் என் முதல் பிரசவம் முடிஞ்சு மதுரையில் இருந்து திரும்பறச்சேயும் நடந்தது. முதல்நாள் காலை மதுரையில் ரயில் ஏறிவிட்டு மறுநாள் மாலை ஏழு மணிக்குச் சென்னை போய்ச் சேர்ந்தேன். அதுவும் எழும்பூருக்கு இல்லை. சென்ட்ரல். எங்க பொண்ணு முத முதல்லே இறங்கும்போது பெரிய ஸ்டேஷனில் தான் இறங்குவேன்னு 45 நாள் குழந்தையா இருக்கும்போதே முடிவு பண்ணிட்டா! 🙂

  1. உங்களின் அனுபவங்கள் என்றுமே அலாதியானவை தான், கீதா!
   உங்கள் குழந்தை ஆயிற்றே, சின்ன ஸ்டேஷனில் எல்லாம் இறங்கலாமா? :)!

  1. இனிமேல் தான் உங்கள் பயணக்கதைகள் எல்லாம் படிக்கணும். பத்து வருடங்களாக உற்சாகமாக எழுதி வருகிறீர்களே! அதற்கே உங்களை ரொம்பவும் பாராட்ட வேண்டும். இதே உற்சாகம் என்றைக்கும் தொடரட்டும்!
   வருகைக்கும், என் பதிவுக்கு நிறைய நிறைய கருத்துரை போட்டு உற்சாகப்படுத்துவதற்கும் நன்றீஸ்!

 2. பயணங்கள் சுகமானவை. ரயிலாகட்டும், பஸ்ஸாகட்டும்… அந்தக் காலத்தில் ஆறுகளில் கரை தொட்டு ஓடியது தண்ணீர். இப்போது அது இல்லாததால் மக்கள் மனங்களில் கண்ணீர்!

  1. வாங்க ஸ்ரீராம்!
   அட! ஒரு கவிதை எழுதிட்டீங்களே!
   பயணங்கள் சுகமானவை தான் மனதில் உற்சாகம் இருந்தால்!
   வருகைக்கும், கவிதைக்கும் நன்றி!

 3. மலரும் நினைவுகள் வெகு அருமை. 2000ம் ஆண்டு என் புக்காத்து மாமா பெண் கல்யணத்திற்காக ஸ்ரீரங்கம் போயிருந்தேன். ஸ்ரீரங்கனின் தரிசனமும் காவிரி ஸ்னானமும் கிடைத்தது அந்த நினைவுகளை அசைபோட்டேன்.

  1. வாங்க விஜயா!
   இப்போ ஸ்ரீரங்கம் ரொம்பவும் மாறிப் போச்சு! அதற்காகவே இந்தப் பதிவை எழுதுகிறேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. ரயில் பயணங்கள்…..

  சின்ன வயதில் நாங்கள் விடுமுறை என்றால் போவது விஜயவாடாவிற்கு…. நெய்வேலியிலிருந்து சென்னை வரை பேருந்து. அதன் பிறகு ரயில்….. கிருஷ்ணா நதி வரும்போதே மனதுக்குள் குஷி பிறந்து விடும்…. அப்பாடி…. எத்தனை நீள Bridge என ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம்…..

  இப்போதும் பயணம் செய்யப் பிடித்திருக்கிறது! தொடர்ந்து பயணம் செய்வோம்….

  1. வாங்க வெங்கட்!
   எனக்கும் பயணங்கள் செய்வது ரொம்பப் பிடிக்கும். ஒரு செட் மாற்றுத் துணி எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்று பல நேரம் நினைத்துக் கொள்வேன். உங்கள் பயணக் கட்டுரைகள் நான் மிகவும் விரும்பிப் படிப்பேன்.
   நானும் செகந்திராபாத் போகும்போது கிருஷ்ணா நதி பாலத்தை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
   வருகைக்கும், தொடர்ந்து பயணிப்பதற்கும் நன்றி!

 5. வாரணாசியிலிருந்து கயா செல்லும் வழியில் சோன் நதிப் பாலம் வரும் பார்த்திருக்கீங்களா? நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமான பாலம். நீளத்தின் பிரம்மாண்டம் அசத்தும்!

  1. வாரணாசி, கயா பக்கம் இன்னும் போகவில்லை கீதா. நீங்கள் சோன்நதி பற்றி சொல்லியவுடன், போகவேண்டும் என்று தோன்றுகிறது.

 6. எனது ரயில் பயண அனுபவங்கள் குறைவு! ஆனால் ரயிலில் பயணிப்பதே ஓர் சுகானுபவம் தான்! அன்றைய ஸ்ரீ ரங்கம் நீங்கள் விவரிக்கையில் இன்றைய ஸ்ரீ ரங்கம் தோன்றி வருத்தமுறச் செய்கின்றது! வளர்ச்சியும் ஒருவிதத்தில் அழிவுதான் இல்லையா?

  1. வாங்க சுரேஷ்!
   அன்றைய ஸ்ரீரங்கம் மட்டுமே என் நினைவில் இருக்கிறது. தெற்கு வாசல் மொட்டை கோபுரத்திற்கு அப்புறம் ஊரே இருக்காது. மொட்டை கோபுரமும் மொட்டையாக இருந்தபோதுதான் பிடித்திருந்தது!
   நீங்கள் சொல்வதுபோல வளர்ச்சியும் ஒருவிதத்தில் அழிவுதான்! அதுவும் ஸ்ரீரங்கம் ரொம்பவும் பாழாகிவிட்டது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 7. முதலில் பார்த்து அனுபவித்த காட்சிகள்,அதில் கிடைத்த ஸந்தோஷங்கள், மறுபடியும் எவ்வளவு முன்னேற்ற மடைந்தாலும், காட்சிகள் பார்த்து அனுபவித்தாலும், அந்த நிகழ்வுகளுக்கு ஸமானமாகாது. கமகமவென்று தகிக்கும் நிலக்கரியும், குப்குப்பென்ற கரும் புகையும், கண்ணில் விழும் கரித்தூளுக்கும் எங்கு போவது. நின்று நிதானமான ரயிலை ஓடிப் பிடித்து விடலாம். ஸ்டேஷந்களை எண்ணி பெயரெழுதி குறிப்பெடுக்க முடியுமா/ இரவு படுத்து தூங்கி எழுந்தால் போகும் இடம் போய்ச்சேர வேண்டுமே! ஒருமணிநேரம் லேட் என்கிறோமே. இதெல்லாம் அப்போது இல்லையே..நன்றாய் அநுபவித்தஸ்ரீரங்கம் ட்ரிப்தான் உயர்ந்தது. இன்றும் அநேக அநுபவங்கள் ஏற்படலாம். பழமைக்கு எதுவும் ஈடாகாது. அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   பழமைக்கு எதுவும் ஈடாகாது. ரொம்பவும் நிஜம்.அதுவும் சிறிய வயதில் குழந்தைத் தனத்துடன் சில நிகழ்வுகள் மனதில் பதிந்துவிட்டன என்றால் அதைப் போல சுகம் தரும் நினைவுகள் வேறில்லை என்றே தோன்றும்.
   நாங்களும் ஒரு காலத்தில் வழியில் வரும் ஸ்டேஷன்களின் பெயர்களை எழுதிக் கொண்டே போவோம். ஊஞ்சலில் ரயில் விளையாட்டு விளையாடும் போது அவற்றை சொல்லி ரயிலை நிறுத்துவோம்.
   வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க கோமதி! ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை சந்தோஷத்தைக் கொடுக்கிறது. உங்களுடையப் பயணக் கட்டுரைகளும் வருமென நினைக்கிறேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 8. ஒரு காலத்துல பஸ்ஸில் போகும்போது ரயில் வருதுன்னு கேட் போடுவாங்க பாருங்க, மதிய நேர வெயில் & புழுக்கத்தைக்கூட மறந்து, ‘ஹை, ரயிலப் பாக்கப் போறோமே’ன்னு ஒரு சந்தோஷம் வரும் பாருங்க, அதுக்கும் ஈடு இணையில்லை. ஒத்துக்கணும், சரிங்களா 🙂 இந்த அளவுக்குத்தான் என்னுடைய ரயில் அனுபவம்.

  சுவையா இருக்கு உங்க ரயில் அனுபவம் !

  1. வாங்க சித்ரா!
   ரயில் அனுபவம் இல்லையென்றால், வேறுவித அனுபவம் இருக்கும், இல்லையா?
   வருகைக்கும், ரசித்ததற்கும் நன்றி!

 9. ரயில் ப்யணங்கள் பஸ் பயணங்கள் இரண்டுமே இனிமைதான் என்றாலும் ரயில் பயணங்கள் கூடுதல் இனிமை. இப்போதெல்லாம் பஸ் பயணம் பிடிப்பதில்லை. தாவது வெளியூர் பயணம். ரயில் என்றால் சுகம் தான்…….

  தங்கள் விவரணம் அருமை. எங்கள் பழைய நினைவுகளையும் மீட்டெடுத்தது….

  1. வாங்க துளசிதரன்!
   நீங்களும் பழைய நினைவில் ஆழ்ந்துவிட்டீர்களா? எனக்கும் ரயில் பயணம் தான் ஒத்துக்கொள்ளும். பஸ் பயணம் உட்கார்ந்துகொண்டே போவதால் நம்மை அயர்ச்சிப் படுத்துகிறது, இல்லையா?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 10. இனிமை நினைவுகள் தொடரட்டும் . ரயில்பயணம் வசதியானது . ஆனால் ரயில்கள் ஊரிலிருந்து சற்று விலகி இருப்பதாகவே தோன்றும்.

  1. வாங்க முரளி!
   நான் கூட உங்களை மாதிரிதான் சொல்வேன்: ரயில் நிறுத்தம் தூரத்தில் இருக்கிறது என்று. என் அம்மா சொல்வாள் உன் வீட்டு வாசலில் ரயில் ஓடுமா என்று. ஆனால் இப்போது மெட்ரோ வந்ததிலிருந்து எங்கள் வீட்டு வழியாகவும் ரயில் போகும்போலத்தான் இருக்கிறது!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s