Uncategorized

காணாமல் போய்விட்டேன்!

 

வெளியில் போகும்போது என் கணவர் எப்போதுமே ‘உன் கைப்பையில் பணம் இருக்கிறதா பார்த்துக்கொள் என்பார். இவருடன் தானே போகிறோம், காசு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்று  நான் யோசிப்பதுண்டு. என்னிடம் ஒரு வழக்கம். காரில் ஏறியவுடன் கைப்பையை பக்கத்தில்  வைத்துவிடுவேன். இறங்கும்போது எடுத்து மாட்டிக் கொள்வேன். இதனால் நான் இரண்டு முறை தொலைந்து போனேன்.

 

பெங்களூருக்கு வந்த புதிது. கோதாஸ் காபி பவுடர் கிடைக்குமிடம் தேடிப் போய்க்கொண்டிருந்தோம். மெஜஸ்டிக் பகுதிக்கு வந்தோம். காரை ஓட்டிவந்த என் கணவர் திடீரென, ‘அதோ தெரியுது பார் கோதாஸ் காபி பவுடர் கடை. சீக்கிரம் இறங்கு. இங்கெல்லாம் வண்டிய நிறுத்தக்கூடாது….’ என்றார். நான் ‘எங்கே கடை?’ என்றேன். ‘அங்க பாரு எதிரில்…..! சீக்கிரம் இறங்கும்மா…..போலீஸ் வந்துவிடுவார்கள்…… நான் காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வருகிறேன்….!’ என்று அவசரப்படுத்தவும், நான் கடையை சரியாகப் பார்க்காமல் காரைத் திறந்து இறங்கி விட்டேன். என் கணவர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

 

கடை எங்கே எங்கே என்று தேடுகிறேன். கண்ணிலேயே படவில்லை. ஒரு போலீஸ்காரர் அருகில் வந்தார். ‘சைட் ஹோகி’ என்றார். அவரிடமே ‘கோதாஸ் காபி ஷாப்?’ என்றேன். ‘சைட் ஹோகி…. சைட் ஹோகி’ (ஓரமாப் போங்க) என்கிறார் அவர். சட்டென்று நடைபாதை மேல் ஏறி கடைகளை பார்த்துக் கொண்டே நடந்தேன். என்னடா கஷ்டகாலம்!  கடையையும் காணோம். கணவரையும் காணோம்.  இவர் எங்கிருக்கிறாரோ, எப்படிக் கண்டுபிடிப்பது?  நான் கடையில் இருப்பேன் என்று இவர் நேராகக் கடைக்குப் போய்விட்டால் என்ன செய்வது? நான் எங்கிருக்கிறேன் என்று எனக்கே புரியவில்லையே, இவருக்கு எப்படி தெரிவிப்பது? நேரம் போய்க் கொண்டிருந்தது. எனக்கு வீட்டிற்குப் போகவும் வழி தெரியாது. என்ன செய்வது? ஒருவேளை என்னைத் தேடி விட்டு கிடைக்காமல் வீட்டிற்குப் போயிருப்பாரோ?  பொதுதொலைபேசி எங்காவது இருந்தால் வீட்டிற்குப் போன் செய்யலாம். இறங்கும் அவசரத்தில் கைப்பையை காரிலேயே விட்டுவிட்டேன். கையில் காசு இல்லாமல் எப்படி பேசுவது? ச்சே! நம்ம நிலைமை இப்படியாகிப் போச்சே! வீட்டிற்குப் போகலாம் என்றால் அதற்கும் கையில் காசு இல்லையே. என்ன செய்வது?

 

சுய பச்சாத்தாபம் அதிகமாகப் போய் ஏதேதோ யோசிக்க ஆரம்பித்து விட்டேன். என்னைக் காணாமல் குழந்தைகள் என்ன செய்வார்கள்? அழுகை அழுகையாக வந்தது. தொலைகாட்சியில்  ‘காணவில்லை’ என்று விளம்பரம் கொடுப்பாரோ? நல்லதாக என் புகைப்படம் வீட்டில் இருக்கிறதோ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். அப்போதெல்லாம் தொலைக்காட்சியில் எட்டு மணிவரைதான் கன்னட நிகழ்ச்சிகள். அதன் பின் டெல்லியிலிருந்து வரும் நிகழ்ச்சிகள்தான். கன்னட நிகழ்ச்சியில் தினமும் ‘காணயாகிதாரே’ (காணாமல் போய்விட்டார்கள்) என்ற நிகழ்ச்சி வரும். அதில் நாளை நம் படமும் வரும் என்று நினைத்துக் கொண்டு பொங்கி பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன். எங்கேயும் போகாமல் அங்கேயே நின்று கொண்டேன்.

 

‘என்ன இங்கேயே நிக்கிற? காபி பவுடர் வாங்கலையா?’ என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் இவர் குழந்தைகளுடன் நிற்கிறார். அப்பாடா என்று ஆசுவாசமாக இருந்தாலும் கோவம் கோவமாக வந்தது. இப்படியா விட்டுவிட்டுப் போவது? ‘கடை எங்கேன்னே தெரியலை. எப்படி வாங்கறது?’ இதற்கு மேல் பேசினால் அழுதுவிடுவேன் என்று புரிந்து கொண்டு ‘சரி, சரி வா, காருக்குப் போகலாம்’ என்றார். என்னைக் காணோம் என்று துளிக்கூட கவலையில்லையே…..

 

காரில் ஏறி உட்கார்ந்தவுடன் அழுகையும் கோவமுமாகப் பேசினேன்: ‘நீங்க பாட்டுக்கு கடை அங்க இருக்குனு சொல்லிட்டு போயிட்டீங்க. தேடறேன் தேடறேன் காணவேயில்லை…. உங்களையும் காணோம். என்ன பண்றதுன்னே புரியலை. நான் தொலைஞ்சு போயிருந்தா?’

‘எப்படி தொலைஞ்சு போவ? வாயில இருக்கு வழி. ஒரு ஆட்டோவ பிடிச்சு வீட்டுக்கு வர வேண்டியதுதான்’

‘கையல காசு இல்ல. எப்படி ஆட்டோல வரது?’

‘வீட்டுக்கு வந்துட்டு கொடுக்க வேண்டியதுதான். ஹேண்ட்பேக் எடுத்துக்கோன்னா கேக்க மாட்ட. நான் என்ன பண்றது?’

தப்பு என்னுடையதாயிற்றே. பேசாமல் இருந்தேன்.

‘அம்மாதான் கிடைச்சுட்டாளேப்பா, நாம ஐஸ்கிரீம் சாப்பிடலாம்பா..’

கிடைச்சுட்டேனா? என்னைத் தேடினாரா? இது என்ன எனக்குத் தெரியாம என்னவோ நடக்கறதே!

‘உன்னை கடையில காணோம்ன உடனே அப்பா ரொம்ப கவலைப் பட்டாம்மா…..!’

‘நிஜமாவா?’

 

இந்த வருடம் மே 23 ஆம் தேதி எங்களுக்குத் திருமணம் ஆகி 40 ஆண்டுகள் நிறைவடைந்தன. தாம்பத்தியப் படகு இப்படியே செல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 

 

இன்னொருதடவை தொலைந்தது அடுத்த பதிவில்……!

 

 

 

 

Advertisements

47 thoughts on “காணாமல் போய்விட்டேன்!

 1. 40 – வருடங்கள்….. வாழ்த்துகள் அம்மா….

  காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! 🙂 மற்ற அனுபவமும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்….

 2. சுவாரஸ்யமான அனுபவம். அவர் சொன்னது சரிதானே? ஆட்டோ ஏறி வீட்டுக்கு வந்து பணம் தரலாமே… என் பையன்களிடம் நான் முன்பு அப்படித்தான் சொல்வேன்.

  இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

  1. வாங்க ஸ்ரீராம்!
   அவர் சொல்வது எப்போதுமே சரியாக இருக்கும். இரண்டாவது முறை காணாத போனபோது அதைத்தான் செய்தேன்!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  1. வா கண்மணி!
   காப்பி பவுடர் அவர் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்! கடையில் நான் இருப்பேன் என்று நினைத்து என்னை அங்கே காணவில்லையென்றுதான் தேடிக் கொண்டு வந்தார்! 🙂
   வருகைக்கும், காப்பி பவுடர் வாங்கினோமா இல்லையா என்று அக்கறையுடன் கேட்டதற்கும் நன்றி!!!!

  1. வாங்க தனபாலன்!
   அங்கேயே இரண்டு கடைகளுக்கு நடுவில் கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்தது. கடை போர்ட் கன்னட மொழியில். அப்போது நான் கன்னட மொழி எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளவில்லை! பிறகு அந்த மொழியைக் கற்றவுடன் முதலில் படிக்க ஆரம்பித்தது கடைகளின் பெயர்களைத்தான்!
   வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

 3. இப்போ நம்ம ஸ்டைல் அலம்பலுக்கு ஒண்ணொண்ணா வருவோம். வருவோமா

  முதல்கேள்வி! கையில் கைப்பை இல்லாமல் காப்பிப்பொடி எப்படி வாங்கலாம்னு நினைச்சீங்க? காசு இல்லாமல் காப்பிப் பொடி எப்படிக் கொடுப்பாங்க? அப்போவும் கைப்பை நினைவே வரலையா?

  ஹிஹிஹி, நம்ம கதையே தனி! வெளியே போனால் கைப்பை இல்லாமல் போக மாட்டேன். நம்ம ரங்க்ஸ் நேர் மாறாக கைப்பை எதுக்குனு அதட்டுவார்! அப்போப் பார்த்து எனக்குக் காதே இருக்காது! அப்புறமா அரை மனசா அவர் எடுத்து வர பணத்திலே பாதியை என்னிடம் கொடுத்துக் கைப்பையில் வைச்சுக்கோனு கொடுப்பார்.

  ஹிஹிஹி, ஏன்னா முழுப்பணத்தையும் அவர் கிட்டே கொடுத்துட்டா எங்கே போறாரோ அங்கேயே கைப்பையைப் பணத்தோட வைச்சுட்டு வருவார். அப்புறமா திரு திரு! நல்லவேளையா இரண்டு, மூன்று முறை பை இப்படிக் கெட்டுப் போய் அகப்பட்டிருக்கு. பணமும் 200, 300 ரூக்கு மேல் இருந்ததில்லை.

  1. இவர்தான் பின்னாலேயே வருகிறாரே, பணம் கொடுக்க. அதனால் காப்பி பவுடர் வாங்கப் போனபோது பை பற்றிய நினைவு வரவில்லை. காணாமல் போய்விட்டோமே என்ற பயம் வந்தவுடன் தான் காசு நினைவு வந்தது.
   எங்க வீட்டுல நேர் எதிர். பணம் அவரிடம் தான் எப்பவுமே. நான் எங்கயாவது விட்டுவிட்டு வந்துவிடுவேன் என்று அவர் சொல்லுவார். அதனால் நான் கையை வீசிக் கொண்டு போவேன்! இது எப்பூடி?

 4. பையைத் தோளில் மாட்டினேனோ இல்லையோ, ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்கும்போது கூடக் கழட்டிப் பக்கத்தில் வைக்கவே மாட்டேன். எனக்குப் பக்கமாக மடியிலேயே கைப்பையை அணைத்தாற்போல் வைச்சுட்டு உட்காருவேன். பையைத் தான் அப்படி எடுத்து வைச்சுட்டு நல்லா உட்காரேன் என்று ரங்க்ஸ் அதட்டுவார். ம்ஹூம், இந்த விஷயத்தில் ரங்க்ஸ் சொன்ன பேச்சை நான் கேட்கிறதே இல்லைனு ஒரு சபதம்!

  1. ஆட்டோவில் ஏறினாலும் முதலில் கைப்பையை கழற்றிவிட்டு மறுவேலை. ஆனால் பத்திரமாகப் பிடித்துக் கொண்டு வருவேன். என்ன ஒரு மங்கம்மா சபதம், போங்க!

 5. ரயிலில் போனாலும் அப்படித் தான்! ஒரு முறை நாங்க நாக்பூர் செல்கையில் டிக்கெட் செக்கிங்குக்கு வந்திருக்காங்க. ஒரே அசதி என்பதால் நான் கொஞ்சம் கண்ணயர்ந்துட்டேன். அதுக்காகக் கைப்பையை எல்லாம் கீழே வைக்கலை. கையில் இறுக்கிப் பிடிச்சிருந்தேன். நம்ம ரங்க்ஸ் நான் தூங்குவதால் மெல்லப் பையை எடுக்க முயற்சி பண்ண, நான் தூக்கத்திலேயே பையை யாரோ பிடுங்குவதை உணர்ந்து திரும்ப என் பக்கம் இழுக்க, கூட வந்த என் மாமியார் அதைப் பார்த்துச் சிரிக்க, திரும்ப ரங்க்ஸ் இழுக்க, நான் இழுக்க, எனக்கு வந்ததே கோபம்! ஓங்கி ஒரு குத்து! நல்லவேளையா ரங்க்ஸின் மூக்கில் படலை! எக்கச்சக்கமா எங்கேயோ விழுந்திருக்கு! என் ஓரகத்தி சிரிப்பை அடக்க முடியாமல் என்னை எழுப்பினாள். அப்புறமா நிலைமை புரிஞ்சது. டிடிஆர் திகைச்சுப் போய் டிக்கெட் செக் பண்ணாமலேயே அங்கேருந்து போயிட்டார். அப்புறமா மெல்ல பயந்து கொண்டே வந்து டிக்கெட்டைக் கேட்டு வாங்கி செக் செய்தார்னா பாருங்க!
  வீராங்கனையாக்கும் நாம்!

  1. நீங்க எழுதியிருப்பதைப் படித்து சிரித்து சிரித்து வயிற்றுவலியே வந்துவிட்டது. உண்மையான வீராங்கனை! பாவம் டிடிஆர்!

 6. மேற்சொன்னசம்பவம் உண்மையாய் நடந்ததே. நிஜம்மாவே நான் என் கணவர் தான் பையைப் பிடுங்குகிறார் எனத் தெரியமால் தூக்கத்தில் போராடி விட்டுப் பின்னர் மாமியாரும், ஓரகத்தியும் உலுக்கி எழுப்ப எழுந்து நிலைமையைப் புரிந்து கொண்டேன். :)) பொதுவாப் பயணத்தில் ஜாஸ்தி தூங்கவே கூடாது!

  1. நான் தூங்குவேன் ஆனா தூங்க மாட்டேன்! உள்ளுக்குள்ள ஒரு விழிப்புணர்வு இருந்துகிட்டே இருக்கும். யாராவது நடந்து போனால் கூட விழிப்பு வந்துவிடும். அசந்து தூங்க மாட்டேன்.
   நல்ல அனுபவம் உங்களுடையது!

 7. காணாமல் போய் விட்டோம் என்ற கவலையை விட , காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு செய்வதற்கு வீட்டில் நல்ல புகைப்படம் இருக்கிறதோ இல்லையோ என்ற கவலை தான் அதிகம்.. நல்ல இருக்கே உங்க கதை அம்மா ;​)

  1. வாங்க மஹா!
   ஆமா மஹா. எங்கள் ரேஷன்கார்டு, பாஸ்போர்ட் இவைகளில் இருக்கும் என் படத்தைப் பார்த்தால் எனக்கே அடையாளம் தெரியாது! என் கண்டுபிடிக்கிறவர்களுக்கு சரியான படம் கிடைக்க வேண்டாமா? இல்லைன்னா என்னை எப்படி கண்டிபிடிப்பார்கள்?
   நன்றி!

 8. உங்கள் திருமண நாளை இதுவரை எனக்குத் தெரியாமல் எப்படி மறைத்து வைத்தீர்கள் என்பது எனது முதல் கேள்வி? பரவாயில்லை ஒரு மாதம் தானே ஆகிறது இதோ பிடியுங்கள் வாழ்த்தை 40 வருட தாம்பத்திய வாழ்க்கைக்கு ஒரு பெரிய ஓ போடுவோம். இன்னும் பல வருடங்கள் உங்கள் திருமண நாளை நீங்கள் இருவரும் சந்தோஷமாக கொண்டாட எனது இனிய வாழ்த்துக்கள்
  நீங்கள் காணாமல் போன கதை பிரமாதம் அடிக்கடி காணாமல் போய்விடாதீர்கள் பிறகு அவர்கள் தேடுவதை நிறுத்தி விடுவார்கள் வெகு காமெடியாக இருந்தது missing கதை பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ரஞ்சனி

 9. சுவையான பதிவு.
  பாவம், கணவர் கவலையோடு தேடியிருக்கிறார். ’’காஃபி வாங்கப்போனாள்..காதலி என்னவானாள்..!’’ என்று கலக்கக் கவிதை எழுதியிருப்பாரோ?

  1. வாங்க ஏகாந்தன்!
   அவராவது கவிதை எழுதுவதாவது? ரொம்பவும் பிரக்டிகல் மனிதர். நான் தான் கதை, கற்பனை என்று இருப்பவள். ஜோடி அப்படித்தான் அமையும் போலிருக்கு.
   வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும் நன்றி!

 10. வாவ்… 40 வது வருட மணவிழா நல்வாழ்த்துக்கள் அம்மா!!! நான் கூட காணாம போய் இருக்கேன் சின்ன வயசுல அதும் இரண்டு முறை !!!!!

  1. வா சமீரா! நீண்ட நாட்களுக்குப் பின் உன் வருகை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. வாழ்த்துக்களுக்கு நன்றி. நீயும் மீண்டும் எழுத ஆரம்பிக்கலாமே!

 11. ‘காணவில்லை’ என்று விளம்பரம் கொடுப்பாரோ? நல்லதாக என் புகைப்படம் வீட்டில் இருக்கிறதோ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்..
  வெகு இயல்பான வரிகள்

 12. நீங்கள் கதை சொல்லும் சூழலுக்கே எங்களையும் அழைத்துச் செல்கிறீர்கள். வளமான நடை. காணமல் போன கதையை மிகவும் ரசித்தேன்.

 13. நான் இங்கு எங்கே காணாது போய்விட்டேன்/ ? என்னையே காணோமே. பின்னூட்டம் உங்களைத் தேடிக்கொண்டு போய்விட்டது போல உள்ளது. . நன்றாகக் காணாது போய்க்கிடைத்தீர்கள். இதெல்லாம் எவ்வளவு உதவியாக இருக்கிறது. லேட்டான இரண்டாவது பின்னூட்டம். திருமண நாள் வாழ்த்துகள்
  இந்த ஆதரிச தம்பதிகளுக்கு. அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   இரண்டாவது பின்னூட்டமா? முதல் பின்னூட்டம் எங்க போச்சுன்னு தெரியலையே!
   விடாமல் இரண்டாம் தடவை வந்ததற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  1. வாங்க துரை!
   வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
   என்னுடைய பதிவை தூக்கி சாப்பிட்டுவிடும் பின்னூட்டங்கள் கீதாவினுடையது. திரும்பத்திரும்ப பின்னூட்டங்கள் போட சளைப்பதேயில்லை – அதுவும் படு சுவாரஸ்யமாக!

 14. எழுதாத கவிதைனு சொல்லச் சொல்லுங்க. அதுவே கவிதையாயிடும் ஹிஹி.. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லைனு ஒரு கனமான வரியுண்டு. எல்லாம். உங்க ரங்க்சுக்கு டிப்ஸ்.

 15. காணாமல் போன கதை சுவாரஸ்யம். அழகான நடை…..எங்களையும் அப்படியே அழைத்துச் செல்கின்றீர்கள்….அருமையான கதை சொல்லி…..விவரணம் படைப்பவரும் நீங்கள்….சகோதரி!

  ரசித்தோம்….

 16. பிலேட்டட் வெட்டிங்க் டே வாழ்த்துகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவனின் பரிபூரணமான அருள் கிடைக்க பிரார்த்தனைகளுடன்…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s