Uncategorized

அப்பாவின் நினைவில்………

எங்கள் அப்பாவின் பெயர் துரைசாமி. எங்கள் பாட்டியும் அப்பாவின் உடன்பிறந்தவர்களும் அப்பாவை ‘தொச்சா’ என்று கூப்பிடுவார்கள்.  அப்பா நல்ல கலர். குளித்துவிட்டு வந்தால் பளிச்சென்று இருப்பார். தினமுமே நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்வார். நல்லநாள், பண்டிகை நாட்களில் மட்டும் திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொள்வார். அதிகம் கோபித்துக் கொள்ள மாட்டார். அடிசன் நிறுவனத்தில் வேலையில் இருந்தார். அங்கு தொழிலாளர்களின் நலசங்கத்தில் அப்பா பொருளாளர் ஆக இருந்ததால் தினமுமே இரவு நேரம் கழித்துத் தான் வருவார். அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்த ஆர் வெங்கட்ராமன் புகைப்படமும், தொழிலாளர் நல சங்கத் தலைவர் ஆர். குருமூர்த்தி புகைப்படமும் எங்கள் வீட்டுச் சுவரை அலங்கரிக்கும்.

 

அப்பா பிறந்து வளர்ந்தது ஆந்திர மாநில சிங்கராயகொண்டாவில். அதனால் அப்பாவிற்கு தெலுங்கு எழுதப்படிக்க வரும். தமிழும் எழுதுவார். ஆனால் நிறைய பிழைகள் இருக்கும். நாங்கள் அப்பாவின் கடிதங்களைப் படித்துவிட்டு சிரிப்போம். ஒருமுறை நாங்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது அப்பா எங்களுக்கு எழுதிய கடிதத்தில் ‘கண் டெஸ்ட் பண்ணிக்கொண்டு கண்ணடி போட்டுக் கொண்டேன்’ என்று எழுதியதைப் படித்துவிட்டு ரொம்பவும் சிரித்தோம். ‘ஏம்ப்பா! கண்ணாடிக்கு காலை ஒடித்துவிட்டாய்?’ என்று கேட்டதற்கு ‘அதை காதில் தானேம்மா மாட்டிக்கொள்கிறோம், அதற்கு எதற்கு கால்?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.

 

சினிமா என்றாலே அப்பாவிற்குப் பிடிக்காது. அதுவும் எம்ஜிஆர் படங்களுக்கு எப்போதும் தடை தான். ‘ரொம்ப நல்ல படமாம்’ என்றால் ‘ஆமா, உங்களுக்கு எல்லா படமுமே நல்ல படம் தான்’ என்பார். எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் அப்பாவின் பங்குதான் அதிகம். பொறுமையாக அத்தனை வேலைகளையும் வாய்பேசாமல் செய்து கொடுப்பார்.

 

அப்பா சில வேலைகளை ரொம்பவும் திறம்பட செய்வார். மாம்பழம் தோல்  முழுவதையும் கத்தியை வைத்துக்கொண்டு, துளிக்கூட கட் ஆகாமல் தோலை எடுப்பார். அப்படி அப்பா எடுத்துக் கொடுக்கும் தோலை நான் எடுத்து அப்படியே சாப்பிட்டு விடுவேன். ‘போன ஜென்மத்தில் இது ஆடாவோ, மாடாவோ பிறந்திருக்கும்’ என்று அப்பா சிரித்துக் கொண்டே சொல்வார். அதேபோல அப்பா வித்தை செய்யும் இன்னொரு பழம் விளாம்பழம். ஓட்டை உடைத்து இரண்டாகப் பிளந்து வெல்லம் போட்டு ஓட்டிலேயே போட்டுக் கொடுத்து விடுவார். ஆ! மறந்துவிட்டேனே! அப்பா செய்யும் ஒரு சைட் டிஷ்: எண்ணை மாங்காய் ஊறுகாயிலிருக்கும் மாங்காய் துண்டங்களை எடுத்து தயிரில் போட்டு ‘மாங்கா புடுஸ்’ என்று பருப்புப் பொடி சாதத்திற்கு தொட்டுக்கொள்ள கொடுப்பார்.

 

அப்பாவிற்கு விதம்விதமான துவையல்கள் பிடிக்கும். காய்கறிகள் போட்டு குழம்பு, கறியமுது என்று சாப்பிடுவதை விட  துவையல் சாதம் என்றால் ரொம்பவும் விருப்பபட்டு சாப்பிடுவார். தன் தட்டில் போட்டு மொத்தமாகக் கலந்து எங்களுக்கு உருண்டை உருண்டையாக செய்து கொடுப்பார்.

 

அப்பா மிகவும் விரும்பிப் படித்த தினசரி மெயில். அப்பாவின் காலத்திலேயே இந்த செய்தித்தாள் நின்று போய்விட்டது. ‘நல்ல தினசரி. நிறுத்திவிட்டார்களே!’ என்று அப்பா வருத்தப்பட்டது இன்று போல இருக்கிறது. இன்றைக்கும் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் மெயில் கட்டிடம் பார்க்கும்போது தவறாமல் அப்பாவின் நினைவு வரும். எப்போதுமே வெள்ளை பான்ட், வெள்ளை ஷர்ட் தான் போடுவார் அப்பா. ஃபுல் ஷர்ட் போட்டுக்கொண்டு மடக்கி விட்டுக் கொள்வார்.

 

பெரிய குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்து அப்பா ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். ஆனால் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல்  வளர்த்தார். ‘நான்கு குழந்தைகளை பெற்ற நான் உங்களையெல்லாம் நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’ என்பார். தனக்கென ஒரு வீடு கூட கட்டிக்கொள்ள முடியவில்லை அப்பாவால். கடைசிக் காலத்தில் உடல்நலக் குறைவால் ரொம்பவும் கஷ்டப்பட்டார்.

 

என் திருமணத்தின் போதே அப்பாவின் உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது. தனது வாழ்நாளில் என் அக்காவிற்கும், எனக்கும் திருமணம் செய்து வைத்தது அப்பாவின் பெரிய சாதனை. எங்களிருவரையும் வேறு யாரிடமும் கைகாட்டாமல் தனது கடமையை செவ்வனே செய்துவிட்டார் அப்பா.

 

VHS மருத்துவ மனையில் அப்பா இருந்தபோது அங்கிருந்த மருத்துவர் என்னைக் கூப்பிட்டு அப்பாவின் நாட்கள் எண்ணப்பட வேண்டியதுதான் என்று சொன்னபோது நான் பேச்சிழந்து நின்றது இன்னும் நினைவில் இருக்கிறது. மருத்துவரிடம் பேசிவிட்டுத் திரும்பிய உடன் அப்பாவிடம், ’ஒண்ணுமில்லைப்பா, உனக்கு சரியாயிடுமாம்’ என்று நான் கண்ணீரை அடக்கிக் கொண்டு சொன்னபோது, அந்த வேதனையிலும் வலியிலும் அப்பாவிடம் ஒரு இயலாத புன்னகை. அப்பா சொன்னார்: ‘இல்லம்மா, நான் சீக்கிரம் போயிடணும்; இந்த வலி வேதனை தாங்க முடியல’. அப்பாவிடம் நான் அன்று சொல்லாதது – நாங்களும் அப்பாவின் வேதனை தாங்கமுடியவில்லை. சீக்கிரம் அப்பாவை திருவடி சேர்த்துக்கொள், பெருமாளே என்று வேண்டிக் கொண்டோம் என்பதை.

 

உலகில் இருக்கும் அத்தனை அப்பாக்களுக்கும் ‘இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!’

 

Advertisements

13 thoughts on “அப்பாவின் நினைவில்………

  1. வாங்க கீதா!
   அப்பாவை நினைக்கும்போதெல்லாம் நாங்களும் நெகிழ்ந்து தான் போவோம்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  2. அருமையான பதிவு….மனதைத் தொட்டது என்றால் மிகையல்ல சகோதரி!

   (கீதா: // மாம்பழம் தோல் முழுவதையும் கத்தியை வைத்துக்கொண்டு, துளிக்கூட கட் ஆகாமல் தோலை எடுப்பார். // நானும் இப்படிக் கட் செய்வதை என் அப்பாவிடம் கற்றுக் கொண்டேன். )

  1. வாங்க தனபாலன்!
   அப்பா கடைசியில் ரொம்பவும் வலி, வேதனைகளை அனுபவித்தார். நாங்களும் கலங்கித் தவித்தோம். அப்பாவின் நினைவு வரும்போதெல்லாம் அவரது வலிகளும் நினைவிற்கு வரும்.
   நன்றி!

 1. அம்மாக்களை போற்றும் அளவுக்கு நம் சமூகம் அப்பாக்களை கொண்டாடுவதில்லை. அதற்கு காரணம் அப்பாவின் கடுமையான கண்டிப்பும் இருக்கலாம். அப்பாவின் அருமையை தெரிந்து கொள்ளும் போது அவர்கள் நம்மை விட்டு வெகு தூரம் போயிருப்பார்கள்.
  அருமயான பதிவு!

  1. வாங்க செந்தில்!
   அம்மா அளவிற்கு குழந்தைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள பல அப்பாக்கள் தவறிவிடுகிறார்கள். ஆனால் என் அப்பாவுக்கு நான் ரொம்பவும் செல்லம்.
   வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!

 2. அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு என்பது பெரியோர் வாக்கு ஆனால் எனக்கோ அன்பு அறிவு இன்பம் ஈர்ப்பு எல்லாமே என் அப்பாதான். என் அப்பாவைப்பற்றிய பல பதிவுகள் நான் எழுதியுள்ளேன். எல்லா மகள்களுக்குமே அப்பா என்றால் தான் பிரியம் அதிகம் இருக்கும் மிகவும் நெகிழவைத்த பதிவு ரஞ்சனி பாராட்டுக்கள்.

  1. வாங்க விஜயா!
   பெண் குழந்தைகளுக்கு அப்பாவிடம் தான் இயற்கையான ஈர்ப்பு இருக்கும் என்பார்கள். நானும் உங்களைப் போல்தான்.
   வருகைக்கும், உங்கள் அப்பாவை நினைவு கூர்ந்து எழுதியதற்கும் நன்றி!

 3. தந்தையர் தினத்தின் இந்தப் பதிவின் கனம் அதிகம். தொடர்ந்து பெற்றோர்கள் மாற்றங்களைச் சந்தித்து வருகின்றனர். கூட்டுக் குடும்பமாய் இருந்தது தனிக் குடித்தனங்களாய் மாறியது. இப்போது பலரும் அனாதைப் பெற்றோராய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வாழ்க்கை எப்படி மாறுகிறதோ இல்லையோ. பெற்றோரை மேலும் தனிமைப் படுத்திக்கொண்டே இருக்கிறது. என்னையும் சேர்த்து.

  1. வாங்க பாண்டியன்!
   அப்பாவை நினைக்கும்போது என் மனமும் கனத்துப் போகும்.
   பெற்றோர்கள் தனிமைப் படுத்தப் படுவது வருத்தமான விஷயம் தான். காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாமா?
   பிள்ளைகளுடன் இருக்கும் பெற்றோர்கள் கொடுத்து வைத்தவர்கள்!
   வருகைக்கும், சிந்தனையைத் தூண்டும் கருத்துரைக்கும் நன்றி!

 4. உணர்வுபூர்வமாக அப்பாவை நினைவூட்டி
  தந்தையர் நாள் வாழ்த்துகள் பகிர்ந்து
  எல்லோரையும்
  சிந்திக்க வைத்துவிட்டீர்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s