Uncategorized

ரயில் பயணங்களில் ….5 ‘எங்காத்துக்காரி ஊருக்குப் போயிட்டா…!’

tea image

 

ஒருமுறை வேளுக்குடி திரு கிருஷ்ணன் ஸ்வாமியின் குழுவுடன் சேர்ந்து பிருந்தாவனம் துவாரகா சென்றிருந்தோம். சென்னையிலிருந்து ரயில். நான் என் சமந்தியுடன் சென்றேன். என் சம்மந்தியின் தங்கை ஒருவரும் எங்களுடன் வந்தார். அவரது கணவர் அவரை ரயிலில் ஏற்றிவிட்டு விட்டு அங்கேயே நடைமேடையிலேயே நின்றிருந்தார். மனைவி திரும்பத் திரும்ப ‘நீங்க கிளம்புங்கோ’ என்று சொல்லியும் ஆள் அசையவில்லை. ‘உங்களுக்கு டாடா சொல்லிவிட்டுத்தான் போவார் போலிருக்கு’ என்றேன் நான். எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாமி சொன்னார்: ‘ரயில் கிளம்பியதும் உங்க அகத்துக்காரர் ஜனகராஜ் மாதிரி,’எங்காத்துக்காரி ஊருக்குப் போயிட்டா….! எங்காத்துக்காரி ஊருக்குப் போயிட்டா…!’  என்று டான்ஸ் ஆடிவிட்டுத் தான் போவார் போலிருக்கு’ என்று சொல்ல அந்தக் கணவர் உட்பட அத்தனை பேரும் சிரித்துவிட்டோம். அப்படியும் அவர் ரயில் கிளம்பியதும்தான் கிளம்பினார். மாமி மேல ரொம்பப் பாசம் போல!

 

நாங்கள் பயணம் செய்தது துராந்தோ விரைவு வண்டி. எங்களுக்கு சாப்பாடும் அதிலேயே வந்துவிட்டது. காலையில் காபி – அமுல் பால் பவுடர், ரெடிமேட் காபி பவுடர் சர்க்கரை பொடி கொடுத்துவிட்டுப் போவார்கள். நாம் எல்லாவற்றையும் பிரித்து, பேப்பர் கப்பில் போட்டு வைத்திருந்தால் சுடச்சுட தண்ணீர் வரும். அதை நம் கப்பில் கொட்ட காபி ரெடி! வெந்நீர் ஊற்றும்போது சில மாமிகள் (அந்த வண்டி முழுவதும் மாமாக்கள். மாமிகள் தான்!) பாதி கப் நிரம்பியதும் ‘போதும்… போதும்!’ என்பார்கள். இவர்கள் எல்லாம் கொஞ்சமாகக் காப்பி சாப்பிடுவார்கள் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன் முதலில். பிறகுதான் ‘சுண்ணாம்புல இருக்குது சூட்சுமம்’ என்று புரிந்தது. ஸ்ட்ராங் காப்பிக்காக கொஞ்சமாக வெந்நீர்! பலே மாமிகள்!  காலை சிற்றுண்டிக்கு பன், பிரட் வரும். மதிய உணவின் போது சூப், பிரட் ஸ்டிக், சப்பாத்திகள், புலாவ், தயிர் கடைசியில் ஐஸ்கிரீம் எல்லாம் வரும்.

நாங்கள் இறங்கியது நிஜாமுத்தீன் ரயில் நிலையத்தில். அங்கிருந்து பேருந்துகளில் பிருந்தாவனம் சென்றோம். இஸ்கான் அமைப்பு கட்டியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டோம். அங்கு ஒரு கிருஷ்ணன் கோவில். ஒவ்வொரு நாளும் அங்கிருந்த ராதாகிருஷ்ணன் பளிங்குச் சிலைகளுக்கு ஒவ்வொரு கலர் உடைகள். நல்ல கண்ணைப் பறிக்கும் மஞ்சள், வயலெட், பச்சை, ஆரஞ்சு நீலம் என்று உடைகள் வெகு அழகாக உடுத்தியிருப்பார்கள்.

 

அடுத்தநாள் எங்கு போகப்போகிறோம், எத்தனை மணிக்கு தயாராக வேண்டும் என்றெல்லாம் முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள். நாங்கள் கிளம்புவதற்கு ஒரு மணி நேரம் முன்னால் காலை சிற்றுண்டி மற்றும் காப்பி ரெடியாகி நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்துவிடும். நான்கு கிளம்ப வேண்டும் என்றால் காலை மூன்று  மணிக்கு காலைச் சிற்றுண்டி வந்துவிடும். எப்படித்தான் அத்தனை சீக்கிரம் தயார் செய்வார்களோ தெரியாது. யாராவது சிற்றுண்டி நன்றாகயில்லை, காப்பி சுமார் என்றெல்லாம் பேசினால் எனக்கு மிகவும் வருத்தமாகிவிடும். வீட்டில் நான்கு பேருக்கு சமைக்க செய்ய நாம் எத்தனை வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர்கள் தயார் செய்கிறார்களே, அதை பாராட்ட வேண்டுமில்லையா?

 

அதுவும் அத்தனை காலையில். ஒருநாள் கூட எங்களுக்கு உணவு இல்லையென்றோ, போதவில்லை என்றோ கிடையவே கிடையாது. சிலர் குழுவினருடன் வராமல் தாங்களாகவே வண்டி அமர்த்திக் கொண்டு வெளியில் போய்விட்டு வேளை கெட்ட வேளையில் திரும்பி வந்து சாப்பாடு கிடைக்கவில்லை என்று குறை கூறுவார்கள். வெளியில் போகிறவர்கள் அங்கேயே சாப்பிட்டுவிட்டு வர வேண்டியதுதானே. இல்லையென்றால் குழுவினருடன் வர வேண்டும். எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமல் குறை மட்டும் சொல்வார்கள். இன்னொரு தமாஷும் நடக்கும். காப்பி கழுநீர் மாதிரி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே அதையும் ப்ளாஸ்க்குகளில் பிடித்துக் கொண்டு போவார்கள். மற்றவர்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று கூட யோசிக்காமல் ஒரு பெரிய பாத்திரம் நிறைய காப்பி வாங்கிக் கொண்டு போகிறவர்களும் இந்தக் கூட்டத்தில் உண்டு.

 

ஸ்வாமியே ஒருமுறை பேசும்போது சொன்னார்: நாம் வந்திருப்பது சாப்பாட்டிற்காக அல்ல; அதற்கென்று உங்களைப் பட்டினி கிடக்கச் சொல்லவில்லை. வேளாவேளைக்கு நாங்கள் கொடுக்கிறோம். கொஞ்சம் முன்னேபின்னே இருந்தால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். நாம் வேறு ஒரு அனுபவத்திற்கு – கிருஷ்ணானுபவத்திற்கு வந்திருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று. எங்கு போனாலும் சிலர் மாறவே மாட்டார்கள். முதலில் வயிறு பிறகுதான் கிருஷ்ணானுபவம்!!

 

பயணங்கள் தொடரும்…..!

 

 

Advertisements

22 thoughts on “ரயில் பயணங்களில் ….5 ‘எங்காத்துக்காரி ஊருக்குப் போயிட்டா…!’

 1. பொதுவாகக் குழு யாத்திரை என்பது சில சமயங்களில் மட்டுமே செய்திருக்கோம். மந்த்ராலயம் போனப்போக் குழு யாத்திரை. அந்த யாத்திரை ஏற்பாடு செய்தவர் எங்களிடம் சாப்பாட்டுக்கும் சேர்த்துப் பணம் வாங்கிக் கொண்டு ஒண்ணுமே ஏற்பாடு செய்யவில்லை. ராகவேந்திர மடத்தில் இலவசச் சாப்பாடு போடுபவர்களிடம் சொல்லி வாங்கிக் கொடுத்தார். இரவு உணவுக்கு அவரவர் பார்த்துக்கணும்னு சொல்லிட்டார். சர்க்கரை வியாதிக்காரங்க எல்லாம் அவஸ்தைப் பட்டாங்க. இத்தனைக்கும் காலை காஃபி, காலை ஆகாரம், மதிய உணவு, இரவு உணவு எல்லாவற்றுக்கும் சேர்த்தே பணம் வாங்கினார். இதைச் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்? இம்மாதிரி அனுபவங்களும் குழுவாகப் போனபோது கிடைத்தது.

  1. வாங்க கீதா!
   சிலசமயம் இப்படியும் நடக்கிறது. என் அக்காவும், அம்மாவும் நிறைய இடங்களுக்கு குழுவினருடன்தான் போவார்கள். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி என்பார்கள்.

 2. அஹோபிலம் போனப்போவும் குழுவாகத் தான் போனோம். சிறப்பான ஏற்பாடு என்பதோடு எங்களுக்குக் கொடுத்த அறையில் வெளிநாட்டு முறையிலான கழிப்பறை இல்லை என்று நான் தயங்கவே குழுவில் இன்னொருத்தர் தங்களுடைய அறையை எங்களுக்குக் கொடுத்துவிட்டு அவர் எங்கள் அறையில் தங்கினார். உபசாரங்களும் அருமையாக இருந்தது. மிகவும் கவனமாகவும் அழைத்துச் சென்றார்கள். நான் மெதுவாக நடப்பேன் என்பதால் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் என்னோடு கூடவே வந்தார்.

 3. திருக்கயிலை யாத்திரையின் போது ஒரு சில தவிர்க்கப்பட வேண்டிய குறைகள் இருந்தாலும் உணவு விஷயத்தில் வயிற்றை ரொப்பிக்கொண்டே இருப்பார்கள். நம்மால் தான் சாப்பிட முடியாது! இவற்றைத் தவிர மற்றப் பயணங்கள் எல்லாம் நாங்கள் தனியாகவே சென்றவை! அவற்றில் கர்நாடகாவில் மங்களூர், கடில், கத்ரி, சுப்ரமண்யா, தர்மஸ்தலா, கொல்லூர், உடுப்பி, சிருங்கேரி, ஹொரநாடு அன்னபூர்ணா ஆகிய இடங்களுக்குச் சென்று தரிசித்த அனுபவங்கள் இன்னமும் பசுமையாக நினைவில் நிற்பவை.

  1. நாங்களும் முதலில் தனியாகவே போய்வந்தோம். ஆனால் குழுவினருடன் போனால் பல இடங்கள் குறைந்த நாட்களில் பார்க்க முடிகிறது. செலவும் குறைச்சல். கேரள திவ்ய தேசங்கள் போனது மறக்கவே முடியாத அனுபவம். கேரளாவே சொர்க்கம் போலத்தான் இருக்கிறது. பேசாமல் திருவல்லாவில் போய் இருந்து விடலாம் என்று தோன்றும். கர்நாடகாவில் நீங்கள் சொன்ன இடங்கள் நாங்களும் தனியாகவே போய் வந்தோம் – காரில். மறக்க முடியாத இடம் சிருங்கேரி, உடுப்பி.
   வருகைக்கும், தகவல்கள் நிறைந்த பின்னூட்டங்களுக்கும் நன்றி!

  1. வாங்க செந்தில்குமார்!
   வருகைக்கும், கூடவே பயணித்ததற்கும் நன்றி. எல்லா இடங்களிலும் இப்படித்தான் ராதா கிருஷ்ணனுக்கு அலங்காரங்கள் செய்கிறார்கள்.

 4. ஒரு சிறு திருத்தம்…இது சம்மந்தி இல்லை; ‘சம்பந்தி’ ஆகும். ‘மந்தி’ என்றால் யாராவது அடிக்க வந்தூடப்போறாங்கோ!

  ஏன் இப்படியும் எடுத்துக்கொள்ளலாமே. அந்தக் கணவருக்கு அவர் மனைவி டூர் போனது…அவருக்கு ஒரு ‘big relief’ தான் போங்க!

  வேளுக்குடி திரு கிருஷ்ணன் ஸ்வாமிகள் வெகு அழகாகவே சொல்லிட்டார்…இப்போ வந்திருப்பது ‘சாப்பாட்டுக்கு அல்ல…கிருஷ்ணானுபவத்திற்கு வந்திருக்கிறோம் என்று! அடுத்த டூர்ல….இப்படி ‘சாப்பாட்டையே’ நினைத்துக்கொண்டு இருப்பவர்களை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்! ஸ்வாமிகளுக்கு என் நமஸ்காரங்கள்.

  “மணியன்”
  Chapel Hill, NC, USA.

  1. வாங்க சுப்பிரமணியன்!
   நீங்கள் சொன்னபடியே மாற்றிக் கொள்ளுகிறேன். பேசும்போது இப்படியே சொல்லிச் சொல்லி பழகிவிட்டது.
   குழுவினருடன் யாத்திரை என்றால் விதம் விதமான மனிதர்களைப் பார்க்கலாம். ஸ்வாமிக்கே சொல்லிச்சொல்லி வாய் வலித்திருக்கும்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க தனபாலன்!
   நாங்கள் கிருஷ்ணன் ஸ்வாமியுடன் சென்றிருந்த போது வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 7500! காலையில் கோயில்கள் தரிசனம். சாயங்காலம் ஸ்வாமியின் பாகவத சப்தாகம். அங்கேயே சாப்பாடு. சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
   நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய செயல்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 5. ராதா கிருஷ்ணன் படம் கொள்ளை அழகு உங்களின் இனிதான பயணம் படித்தபோது உங்களுடன் பயணம் செய்த திருப்தி தெரிந்தது வாழ்த்துக்கள் ரஞ்சனி தொடரட்டும் உங்கள் பயணம் ரசிக்கவும் ருசிக்கவும் தயாரக இருக்கிறோம்.

 6. ரயில் பயணங்களில் நாங்களும் உடன் வந்து கொண்டிருக்கிறோம்….ராதா கிருஷ்ணர் படம் அழகோ அழகு…வேறு ஒரு அனுபவத்திற்கு போகும் போது நினைவை அதில் செலுத்த வேண்டும் தான். ஐயா சொன்னது சரி. நமக்கு நிறைவாய் உணவு கிடைக்கிறதே…

  1. வாங்க உமையாள் காயத்ரி!
   அவரைப் போல ஏற்பாடுகள் யாருமே செய்ய மாட்டார்கள். அப்படியும் குறை கூறுவார்கள். என்ன மனிதர்களோ என்று தோன்றும்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 7. அன்புடையீர்! வணக்கம்!
  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (10/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வலைச்சர இணைப்பு:
  http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  http://www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  1. வாங்க முரளிதரன்!
   திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமியுடன் சென்றோம். அவர்களே டிக்கட் வாங்கி (ரயில், பஸ்) விட்டார்கள்.
   வருகைக்கும், பதிவைப் படித்ததற்கும் நன்றி!

 8. இது போன்ற இடங்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் அனுபவங்களை ரசித்தேன். தொடர்கிறேன்.

  1. வாங்க ஆதி!
   பலருக்கு அது புரிவதில்லை. அவர்கள் ஆடும் ஆட்டத்தை வைத்து ஒரு பத்து பதிவு தேற்றிவிடலாம்!
   வருகைக்கும், ரசித்ததற்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s