Uncategorized

ரயில் பயணங்களில்…..4 ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாமா?

 

ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாமா?’ என்றார் இன்னொரு பெண். நானும் என் கணவரும் ஒருவரையொருவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம் – இத்தனைக்குப் பிறகு சிற்றுண்டியா? என்று மயங்கி விழாமல் இருக்க! காலை சிற்றுண்டியை ஒரு அரசனைப் போல சாப்பிட வேண்டும் என்பார்களே அதன் முழு அர்த்தம் அன்றைக்குத் தான் புரிந்தது. முதலில் சிகப்புக் கலரில் பூரி வந்தது. எங்களுக்கும் தான்! (இந்த வாக்கியத்தைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்) அடுத்து நெய் தடவிய ரொட்டி. அடுத்தது ஃபூல்கா சப்பாத்தி. அதற்கு தொட்டுக்கொள்ள வகைவகையான மசாலாக்கள், கறிவகைகள் அதைத் தவிர ஊறுகாய்கள். அந்த சிற்றுண்டி அரசனுக்கு மட்டுமல்ல; அவனது அரசவைக்கும், ஏன் குடிமக்களுக்கும் கூட போதும். அத்தனை வகைகள்!

 

நடுநடுவில் ரயிலில் வரும் குர்குரே, லேஸ், பிஸ்கட் வகைகள் வேறு வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்தார்கள். டாங்கோ ஜூஸ் ரயிலிலேயே செய்து எல்லோருக்கும் விநியோகம் செய்தார்கள்.

‘ஆண்ட்டி நீங்கள் ‘தியா அவுர் பாத்தி’ (இது ஒரு ஹிந்தி சீரியல் – தமிழில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் வருகிறது)  பார்ப்பீங்களா? எங்கள் வீடுகளும் அப்படித்தான் இருக்கும். எல்லோரும் கூட்டுக் குடும்பத்தில் தான் இருக்கிறோம். நாங்கள் எல்லோரும் நண்பர்கள் தான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல; எங்கள் கணவன்மார்கள் – மொத்தம் 7 பேர்கள் – பள்ளிக்கூட நாட்களிலிருந்து நண்பர்கள். ஒவ்வொரு வருடமும் 7 குடும்பங்களும் சேர்ந்து எங்காவது சுற்றுலா போவோம். இந்த முறை நான்கு பேர்களால் வரமுடியவில்லை. நாங்கள் லோனாவாலாவில் இறங்கு ‘இமேஜிகா’ தீம் பார்க் போய்க்கொண்டிருகிறோம்.’

 

பேசிக்கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும்போது ஒரு பெண் யாருக்கோ போன் செய்து மொத்தம் 12 சாப்பாடு வேண்டும் என்று சொன்னார். மதிய உணவு! நல்லவேளை கைக்குழந்தை தப்பித்தது! என்னிடம் ஒரு நம்பர் கொடுத்து, ‘நீங்க திரும்பி வரும்போது சாப்பாடு வேண்டுமென்றால் இந்த எண்ணுக்கு போன் செய்தால் உங்களுக்கு சாப்பாடு ரயிலிலேயே கொண்டுவந்து கொடுப்பார்கள்’ என்றார். நாங்கள் மும்பையிலிருந்து திரும்பும்போது அந்த எண் பயன்பட்டது.

 

‘கூச்சப்படாமல் சாப்பிடுங்க ஆண்ட்டி, அங்கிள்’ என்று ஏக உபசாரம் வேறு. ‘எல்லாமே வீட்டில் செய்தது. எங்களை ரொம்ப படிக்க வைக்க மாட்டார்கள், ஆண்ட்டி. சமையல் வேலை செய்ய பழக்குவார்கள். விதம்விதமாக இனிப்பு வகைகள், சமோசா, கட்லெட் என்று செய்வோம். எங்கள் தலைமுறை பரவாயில்லை. நாங்கள் எல்லோருமே கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறோம். எங்கள் அம்மா எல்லாம் சரியாகப் பள்ளிக்கும் போனதில்லை. இப்போது நாங்களும் படிக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறோம்’

 

அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தே எங்களுக்கு வயிறு நிரம்பிப் போயிருந்தது. ஒரு பூரி, ஒரு நெய் ரொட்டி, ஒரு பூல்கா என்று வாங்கிக் கொண்டோம். நாங்கள் எடுத்துப் போயிருந்த சப்பாத்தி, தக்காளி தொக்கு இரண்டையும் அவர்களுக்குக் கொடுக்கவே வெட்கமாக இருந்தது! நான் 6 சப்பாத்தி எடுத்துக் கொண்டு போயிருந்தேன். யானைப் பசிக்கு அது சோளப்பொரி இல்லையோ? என் கணவர் ஒரு ஸ்டேஷனில் இறங்கி வாழைப்பழங்கள் வாங்கி வந்து எல்லோருக்கும் கொடுத்தார்.

 

மதிய சாப்பாடு முடிந்தவுடன் இனிப்பு வகைகள் ஆரம்பமாயின. முதலில் லட்டு; அடுத்தது மலாய் சிக்கி; பிறகு பாதாம் பர்பி; பிறகு…..பிறகு…… எனக்கு பெயர்கள் கூட மறந்துவிட்டது. சாப்பாடு முடிந்தவுடன் பான் வேண்டுமே. அதுவும் கொண்டுவந்திருந்தார்கள். வகை வகையாகப் பாக்கு, சோம்பு, சாரைப்பருப்பு என்று. அது முடிந்தவுடன் உலர்ந்த எலந்தம் பழம். ‘ஜீரணத்திற்கு நல்லது’ என்று சொல்லி கொடுத்தார்கள்.

 

ஒருவழியாக லோனாவாலா ஸ்டேஷன் வந்ததோ, நாங்கள் பிழைத்தோமோ! பிரியாவிடை கொடுத்து ‘நன்றாக எஞ்ஜாய் பண்ணுங்கள்’ என்று வழியனுப்பி வைத்தோம்.

 

அவர்கள் இறங்கிப் போனதும் என் கணவர் கேட்டாரே ஒரு கேள்வி: ‘இப்படி விடாமல் சாப்பிடுகிறார்களே, அந்தப் பெண்கள் எப்படி ஒல்லியாவே இருக்காங்க?’

 

‘அம்பது வயசுக்கு மேலே குண்டடிப்பாங்க’ என்று சொன்னேன். சரிதானே? (ஹி…..ஹி…..சொந்த அனுபவந்தேன்!)

 

மறக்க முடியாத (சாப்பாட்டு) மனிதர்கள்!

 

 

 

 

 

Advertisements

37 thoughts on “ரயில் பயணங்களில்…..4 ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாமா?

  1. வாங்க கந்தசாமி ஐயா!
   நாங்களும் அதிகம் சாப்பிடவில்லை. ஒரு நெய் ரொட்டி, ஒரு மேத்தி ரொட்டி, ஒரு பூரி – இவைகளை நாங்கள் இரண்டு பேருமே பங்கிட்டுக் கொண்டு சாப்பிட்டோம். அந்த உணவு வகைகளைப் பார்த்துத்தான் அசந்து போனோம்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 1. இப்படியே சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் டாக்டர் கிட்டே கண்டிப்பாய் போய்த்தான் ஆகவேண்டும்; அதிலிருந்து தப்பிக்க முடியாது. ‘வருமுன் காப்போன் வாழ்க்கை’ அந்தக் குறள் தான் நினைவுக்கு வருகின்றது!

  ‘ம.கி.சுப்பிரமணியன்’

  1. வாங்க சுப்பிரமணியன்!
   பெரியவர்கள் பரவாயில்லை; குழந்தைகள் எல்லாம் இப்பவே குண்டாக இருந்தனர். எப்படி அவர்களைக் காப்பாற்றப் போகிறார்களோ, தெரியவில்லை.
   உங்கள் பெயரில் ‘ம’ என்பதற்கு மண்டகொளத்தூர். கி என்பது உங்கள் தந்தையின் பெயரோ?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. பொதுவாக வடமாநிலங்களிலேயே வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பார்கள். நல்ல சாப்பாடு, வெளியே போய் வருதல், நல்ல துணி என்று அனுபவிப்பார்கள். ஆகவே இதெல்லாம் என்னைப் பொறுத்தவரை அதிசயமே இல்லை. ஆனால் அவங்க மட்டும் தான் இப்படிச் சாப்பிடுவாங்கனு இல்லை. வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் போடுவாங்க. அவங்க தேநீர் குடிக்கும்போது சாப்பிடும் பொருட்களையும் பார்த்தால் இன்னும் என்ன சொல்வீங்களோ! 🙂

  1. வாங்க கீதா!
   நீங்கள் அந்தப் பக்கம் இருந்திருப்பதனால் உங்களுக்கு தெரிந்திருக்கிறது, போலிருக்கிறது அவர்களின் சாப்பாட்டு முறை. நாங்கள் அசந்துதான் போய்விட்டோம்.
   அடுத்த பின்னோட்டம் படிக்கிறேன்.

 3. இவங்களை விடுங்க, பஞ்சாபிகள் சாப்பிடுவதைப் பார்த்திருக்கீங்களா? அவங்களோட ” ஏக் கண்டே சல்னே கா சாய்” சாப்பிட்டிருக்கீங்களா? லஸ்ஸி? பராத்தா? ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்க! ஒரு பராத்தாவுக்கு மேல் நம்மால் முடியாது. அவங்க நாலு, ஐந்துனு வெளுத்துக் கட்டுவாங்க. 🙂 ஒரு முறை ஆக்ராவில் நாங்க பட்டர் பராத்தாவும் ஆலு மட்டரும் சொல்லிட்டோம். விபரம் தெரியாமல் ஆளுக்கு இரண்டு பராத்தா சொல்ல, ஆர்டர் எடுப்பவர் முதலில் ஒண்ணு கொண்டு வரேன், சாப்பிட்டுட்டு அடுத்தது ஆர்டர் கொடுங்கனு சொன்னார்! நாங்க கேட்கலை. நான் எப்போதும் வீட்டிலே செய்யும் பராத்தா மாதிரி நினைச்சு மூணு சொல்லிட்டோம். ஆனால் அவர் இரண்டு தான் கொண்டு வந்தார். நல்லவேளைனு அப்புறமா நினைச்சோம். அன்னிக்குப் பூரா அப்புறமாச் சாப்பிடவே இல்லை. அந்த மாதிரிப் பராத்தா நாமெல்லாம் செய்யறதும் இல்லை. இப்போ இப்போக் கொஞ்சம் செய்தாலும் அவ்வளவு வெண்ணெயும், நெய்யும் ஜீரணம் ஆகிறது கஷ்டமா இருக்கு! 🙂

  1. சென்னைக்கு பிறகு எனக்குத் தெரிந்த ஒரே ஊர் பெங்களூரு தான். அதிகம் வட இந்தியா பக்கம் போனதில்லை. நீங்கள் எழுதியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

 4. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானாவில் பனிரண்டு வயதுப் பெண் குழந்தை ஒரு குடும்பம் மொத்தத்துக்கும் அழகாக நன்றாகச் சமைக்கும். +2 முடித்ததும் கல்யாணமும் பண்ணிக் கொடுத்துடுவாங்க. பையர் அப்போது தான் கல்லூரியில் முதல் வருஷம் படித்துக் கொண்டிருப்பார். அநேகமாக வயது வித்தியாசம் அதிகம் இருக்காது. ஒரு வயசிலிருந்து இரண்டு வயதுக்குள் தான் வித்தியாசம் இருக்கும். பல சமயங்களிலும் சம வயதாகவும் இருக்கும். கல்யாணம் செய்து கொண்டு இருவரும் கல்லூரியில் படிப்பார்கள். அது போல் இன்றளவும் ராஜஸ்தான், குஜராத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைதான். கட்டாயமாகக் கடைப்பிடிப்பார்கள். வீட்டுக்கு வரும் பெரியவங்களைக் காலில் விழுந்து சிறியவர்கள் வணங்குவார்கள். அப்பா, அம்மா இருந்தால் பொதுவாக இருப்பார்கள். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பிள்ளை வீட்டில் சாப்பாடு; வாரத்தில் ஒரு நாள் அப்பா, அம்மா வீட்டில் அனைவரும் சேர்ந்து உண்பார்கள். பார்க்கவே அழகாக இருக்கும். 🙂 உறவை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். மனஸ்தாபங்கள் எல்லாமும் இருக்கும். நேரடியாகப் பேசிக் கொள்வார்கள்.

  1. எவ்வளவு தகவல்கள் கொடுக்கிறீர்கள்! உங்கள் அனுபவங்கள் உங்கள் எழுத்தின் மூலம் தெரிகிறது.
   எல்லோரும் சேர்ந்து உண்பது உறவை விட்டுக் கொடுக்காமல் இருப்பது மனஸ்தாபங்களை நேரடியாகப் பேசிக் கொள்வது எல்லாமே நம் வீடுகளிலும் நடந்தால் நன்றாக இருக்கும்.

 5. மறந்தே போயிட்டேன், சொல்ல! சதாப்தியில் போயிருக்கீங்களா? சென்னை–பெங்களூரில் அவ்வளவு சுவாரசியம் இல்லை. நாங்க டெல்லி–அமிர்தசரஸ் போனப்போ எவ்வளவு வகைச் சாப்பாடு தெரியுமா? அதுவும் மதியம் உணவுக்கு முன்னால் கொடுக்கும் சூப்போடு சாப்பிட, பன், ப்ரெட் ஸ்டிக்ஸ், டோஸ்ட் ப்ரெட், ரஸ்க் வகைகள்,மற்றும் ப்ரெடில் செய்யப்பட்ட வகை, வகையான உணவுகள்! சாப்பாடிலும் ஃபுல்கா அல்லது பராத்தா, ப்ளெயின் சாதம், ஃப்ரைட் ரைஸ் அல்லது வெஜ் பிரியாணி, தால், இரண்டு சப்ஜி, சாலட், தயிர், ஊறுகாய், ஸ்வீட், பழம், கடைசியில் ஐஸ் க்ரீம்.

  1. சென்னை-பெங்களூரு சதாப்தியில் சாப்பாடு நன்றாகவே இல்லை. காலையில் இங்கிருந்து கிளம்பும் வண்டியில் படு மோசம். மாலையில் சென்னையிலிருந்து வரும் வண்டியில் போன தடவை வந்தேன். சப்பாத்தி சாப்பிடவே முடியவில்லை. சாதம் தயிர் கலந்து சாப்பிட்டேன். தயிர் நன்றாக இருந்தது. இதிலும் கடைசியில் ஐஸ் கொடுக்கிறார்கள்.
   உங்கள் சாப்பாட்டு அனுபவமும் அலாதியாக இருக்கிறது. வருகைக்கும், அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றீஸ்!

 6. கீதா மாமி(மேடத்துக்கு இது பரவாயில்லை, கோவிச்சுக்க கூடாது 🙂 ) இந்த மாதிரி பதிவு வரும்னு காத்திருந்தது மாதிரி இருக்கு. அவங்க பாத்தத/சாப்பிட்டத விட உங்க பட்டியல் நீளமா இருக்கு. இருவரும் இந்த அளவுக்கு நியாபகம் வைத்துள்ளீர்களே அருமை. ஸ்ரீதர்

 7. ஆஹா! நன்மனம், நேத்திக்குத் தான் உங்களை நினைச்சுண்டேன், காணோமேனு! அதே நன்மனம் ஶ்ரீதர் தானே! நல்வரவு! வலை உலகில் இருக்கீங்கனு தெரிஞ்சு மகிழ்ச்சி. பழைய நண்பர்களையே பார்க்க முடிகிறதில்லை. நான் ஒருத்திதான் தன்னந்தனியாய் (!!!!!!!!!!!!!!!) இருக்கேன் போல!

   1. ஆமாம், ரஞ்சனி, ஆனால் மற்றப் பதிவுகளுக்கு வருகிறார். அங்கே பார்ப்பது தான். இன்னும் நிறையப் பேர் இருக்கின்றனர். யாரும் இப்போது எழுதுவது இல்லை. அம்பி, கைப்புள்ள, நாகை சிவா, மதுரை ராம் , என் உபிசவாக இருந்த வேதா, , பொற்கொடி, பெரிசு மற்றும் எஸ்கே எம் என அனைவரும் அழைக்கும் சண்டைக்கோழி அம்மா ஷாலினி இப்படி……….எல்லாருமே வயசிலே சின்னவங்க என்றாலும் உரிமையுடனும், சலுகையுடனும், அன்பாகவும் பேசுவார்கள். எழுதுவார்கள். என் பதிவுகளுக்கு ஓர் ஜீவனே இவர்கள் அனைவராலும் வந்தது. அதிலும் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு என்னைக் கலாய்ப்பது என்பது அல்வா சாப்பிடுவது போல்! நானும் உள்ளூர ரசிப்பேன். 🙂 இப்போ யாருமே இல்லை. எப்போவானும் பொற்கொடியைப் பார்க்க முடியுது. வேதாவை முகநூலில் இரண்டு நாட்கள் முன்னர் பார்த்தேன். ஷாலினி பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டு அதிலே பிசி. நாகை சிவா எங்கே இருக்கார்னு சட்டுனு சொல்ல முடியாது.அவர் வேலை அப்படி. மத்தவங்க குடும்ப வாழ்க்கையிலே பிசி. நன்மனம் மட்டும் அவ்வப்போது தென்படுகிறார். 🙂 இதுவும் கடந்து போகும்!

 8. ஜெயின் குடும்பங்களின் சாப்பாடு பற்றி எனக்கும் அனுபவம் உண்டு. சாப்பிடத்தான் நம்மால் முடியாதே தவிர சுவையாக இருக்கும். தங்கள் பதிவு மலைக்க வைக்கும் உணவு விருந்து.

 9. டெல்லி–ஹரித்வார் செல்லும் சதாப்தியில் தயிர் கொடுப்பாங்க பாருங்க! ஐஸ் க்ரீம் தோத்துடும். அதே போல் காலை உணவோடு லஸ்ஸியும் கொடுப்பாங்க. மெனு கார்டை எடுத்துட்டு வருவாங்க. நாம ஆர்டர் பண்ணறது கிடைக்கும். இட்லி, உப்புமா வடை உள்பட! 🙂 தோசை கிடைக்கிறதில்லை.:))))

  1. உங்கள் பதிவுலக நட்புகளின் விவரங்கள் படித்தேன். இத்தனை பேர்களுடன் இப்போது அவ்வளவாக தொடர்பில்லை என்பது சற்று வருத்தம் கொடுக்கத் தான் செய்யும். நீங்கள் சொல்வதுபோல இதுவும் கடந்து போகும்! அங்கே பதில் சொல்ல முடியவில்லை. இங்கே சொல்லுகிறேன்.

   வட இந்தியாவில் பால் ரொம்பவும் திக் காக இருக்கும், இல்லையா? அதனாலேயே லஸ்ஸி, ஐஸ்க்ரீம் எல்லாமே நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
   அயோத்தியாவில் ஓரிடத்தில் லஸ்ஸி பிரமாதமாகக் கிடைக்கும். பெரிய எவர்சில்வர் ட்ரேயில் தயிர் கெட்டியாக வைத்திருப்பார்கள். கத்தியை வைத்து வெட்டி, லஸ்ஸி செய்து கொடுப்பார்கள். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து தூரம்தான் என்றாலும் தினமும் போய் சாப்பிட்டு விட்டு வருவோம். அதேபோல பஞ்ச த்வாரகா போயிருந்த போது எங்கள் பஸ் நிற்குமிடங்களில் வந்து குல்பி விற்பார்கள். ஐந்து ரூபாய் தான்! நிறைய வாங்கி சாப்பிட்டிருக்கோம்!

  1. மறுபடியும் எழுத ஆரம்பிக்கலாமே! நான் இன்னும் உங்கள் பதிவுகளைப் படித்ததில்லை. படித்துப் பார்க்கிறேன், வெகு விரைவில்.
   உங்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சி!

 10. இளம் வயதுக்காரர்கள் சாப்பிட்டுப் பழக்கம் அவர்களுக்கு ஜீரணம் ஆகிவிடும்.
  எல்லாமே சுவையாகவும் இருக்கும். அவர்கள் வீட்டில் சாப்பாடு கொடுத்தால் முதலில் பறிமாறுவதைப் பார்த்தாலே வயிறு நிரம்பி விடும். இதெல்லாம் உங்களுக்கு ஒரு பிரயயாணத்திலேயே கிடைத்து சுவையாக எழுதுவதற்கு ஒரு ஸப்ஜெக்டும் கிடைத்து, எழுதியும் விருந்தளித்து விட்டீர்கள். கட்டுரையே வயிற்றை நிரப்பி விட்டது. அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   எங்களுக்கும் பார்த்துப்பார்த்தே வயிறு நிறைந்துவிட்டது! இன்றைக்கும் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க டொக்டர் ஐயா!
   உண்மையிலேயே அலாதியான அனுபவம் தான். இருபத்துநான்கு மணிநேரமும் அலுக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 11. கல்யாண சமையல் சாதம் பாட்டும் அந்த எஸ் வி ரங்காராவ் இடத்தில் உங்களையும் வைத்து கற்பனை பண்ணி பார்த்தேன் ரொம்ப சுகமாக இருந்தது. உங்கள் பதிவு ரொம்ப சுவையாக இருந்தது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ரஞ்சனி

 12. ரஞ்சனி, முதல்லேயே சொல்லணும்னு நினைச்சு மறந்துட்டேன். 🙂

  ‘//நீங்க திரும்பி வரும்போது சாப்பாடு வேண்டுமென்றால் இந்த எண்ணுக்கு போன் செய்தால் உங்களுக்கு சாப்பாடு ரயிலிலேயே கொண்டுவந்து கொடுப்பார்கள்’ என்றார். நாங்கள் மும்பையிலிருந்து திரும்பும்போது அந்த எண் பயன்பட்டது.//

  இந்தத் தொலைபேசி எண் நினைவிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். தொலைதூரப் பயணத்தில் பயன்படும். அனைவருக்கும் பயனாகலாம்.

  1. உங்கள் வேண்டுகோள் உடனடியாக நிறைவேற்றப் படுகிறது:

   http://www.travelerfood.com/ ஆன்லைனில் பார்க்கலாம். அங்கேயே உணவுக்கு ஆர்டரும் கொடுக்கலாம். தொலைபேசி எண்:07827998877

   இன்னொரு பதிவிலும் இந்த விவரங்களைக் கொடுத்திருக்கிறேன்.

 13. இதெல்லாம் வட மாநிலத்தவர்களுக்கு மிகவும் சகஜம்…:))) உங்க நடையில் படிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கும்மா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s