Uncategorized

முடிந்துவிட்ட நம்பிக்கை – அருணா ஷான்போக்

 

ஜூன் ஆழம் இதழில்  நான் எழுதிய கட்டுரை.

‘எனக்கு அழுவதா, இல்லை எனது சகோதரியின் 42 வருட துயரம் முடிவுக்கு வந்தது என்று ஆறுதல் அடைவதா என்று தெரியவில்லை. ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறேன்’ என்கிறார் அருணா ஷான்போகின் மூத்த சகோதரி ஷ்யாமளா. ‘சிறு வயதில் மிகவும் அழகாக இருப்பாள் அருணா. ரொம்பவும் புத்திசாலி. எல்லோருடனும் மிகவும் சுலபமாக பழகுவாள்’.

 

‘எங்களுக்கு அவளைக் கவனித்துக் கொள்ள இயலாத சூழல். எங்கள் வறுமை எங்களை அவளிடமிருந்து தூரத் தள்ளிவிட்டது. அவளை எங்களுடன் வைத்துக் கொள்ளவோ, அவளது மருத்துவமனை செலவுகளுக்கு பணம் அனுப்பவோ முடியவில்லை’. குடும்பத்தில் வறுமைதான் அருணாவை மும்பைக்குச் செல்ல தூண்டியது. எஸ்எஸ்எல்சி முடித்த கையுடன் மும்பை சென்றுவிட்டார் அருணா.

 

1973 ஆம் வருடம் நவம்பர் 27 ஆம் தேதி மும்பை கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையில் செவிலியராகப் பணி புரிந்து கொண்டிருந்த 25 வயது அருணா ஷான்போக், அந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில் உடை மாற்றிக் கொண்டிருந்தார். அங்கு வந்த வார்டு பாய் ஸோகன்லால் பர்த்தா வால்மீகி அவரை கற்பழிக்க முயற்சி செய்தான். முதலில் அவரை தன் கைவசம் இருந்த நாய் கட்டும் செயினால் செயலிழக்கச் செய்து பின் ஆசன வாய் மூலம் கற்பழித்தான். அவரிடமிருந்த பொருட்களை திருடிக்கொண்டு சென்றான். இந்த சம்பவத்துடன் அருணாவின் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். கழுத்து நெறிபட்டதில் அவரது மூளைக்கு  இரத்தம், பிராணவாயு செல்வது தடைப்பட்டதால், அவரது மூளை பாதிக்கப்பட்டது. ஒரு மருத்துவரை மணம் செய்ய வேண்டுமென்ற அவரது கனவு நொறுங்கியது. மீண்டு வர இயலாத கோமாவில் ஆழ்ந்துவிட்டார். 42 வருடங்களாக கோமாவில் இருந்த அருணா கடந்த மே மாதம் 18 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

 

இந்தக் கொடூர சம்பவம் நடப்பதற்கு முன் அருணாவிற்கும் அதே மருத்துவ மனையில் வேலை செய்துவந்த ஒரு இளம் மருத்துவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. சம்பவத்திற்குப் பிறகு வால்மீகி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்கும், திருட்டுக் குற்றத்திற்கும் 7 வருட தண்டனையாக சிறையில் அடைக்கப்பட்டான். கற்பழிப்புக் குற்றம் இந்த இளம் ஜோடிகளுக்கு நெருக்கடியை விளைவிக்கும் என்று கேஇஎம் மருத்துவமனை டீன் கருதியதால் போலீசிடம் அது சொல்லப்படவில்லை. 1980 இல் வால்மீகி சிறையிலிருந்து வெளியில் வந்து கோமாவில் இருந்த அருணாவைக் கொல்ல முயன்றான். மும்பை மாநகராட்சி அருணாவை இரண்டுமுறை கேஇஎம் மருத்துவமனையிலிருந்து – படுக்கை தேவைப்படுகிறது என்று சொல்லி – வெளியேற்றப் பார்த்தது. ஆனால் இம்முயற்சிகள் யாவும் இந்த மருத்துவமனை செவிலியர்களால் முறியடிக்கப்பட்டன.

 

42 வருடங்களாக அவரை கேஇஎம் மருத்துவமனை செவிலியர்கள் மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொண்டனர். ‘அருணாவிற்கு நாங்கள் புது ஆடைகள், படுக்கை விரிப்புகளை வாங்கித் தருவோம். அதனால் அவரது உலகம் வண்ணமயமாகவே இருந்தது’ என்கிறார்  கேஇஎம் மருத்துவமனை செவிலியர் தலைவி அருந்ததி வெல்ஹார்.

 

1999 இல் ‘அருணாவின் கதை’ என்ற புத்தகம் எழுதியவரும், சமூக ஆர்வலரும் ஆன பிங்கி விரானி ‘அருணாவை கண்ணியமாக இறக்க அனுமதிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். இதற்குப் பத்து வருடங்களுக்குப் பிறகு ‘அருணாவிற்கு பலவந்தமாக உணவு அளிக்கும் முறையை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அருணாவை பரிசோதித்துப் பார்க்க ஒரு மருத்துவக் குழுவை அமைத்தது. ‘உணர்வற்ற தாவர  நிலையில் அவர் இருப்பதாக’ அந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதே ஆண்டு கீழ் நீதிமன்றத்தில் ‘அருணாவை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று விரானி முன் வைத்த கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. ‘மரணம் விளைவிக்கக்கூடிய மருந்துகளை அவருக்குக் கொடுக்கக் கூடாது; இனி அவர் பிழைக்க வழியில்லை என்ற நிலையில் அவருடைய வாழ்வை நீட்டிக்கும் கருவிகளுடனான இணைப்பைத் துண்டிக்கலாம்’ என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

‘அருணா கற்பழிக்கப்பட்ட அன்றே இறந்துவிட்டார். அவரால் ஒரு மைல்கல் சட்டம் – மந்தமான கருணைக்கொலை – அமுலுக்கு வந்திருக்கிறது. அமைதியும் கண்ணியமும் கொண்ட மரணம் அவருக்கு வாய்க்கவில்லை’ என்கிறார் பிங்கி விரானி.

 

அருணாவின் கற்பழிப்பும், 42 வருடங்கள் அவர் அனுபவித்த துன்பங்களும், இப்போது நிகழ்ந்திருக்கும் அவரது மரணமும் பல விடை தெரியாத கேள்விகளை நம் முன் வைக்கின்றன.

 

நம்நாட்டில் கற்பழிப்பு என்பதன் கொடூர முகமாக இருந்தார் அருணா. வால்மீகி இந்த வழக்கில் குற்றவாளி என்றாலும் ஆயுள்தண்டனை அனுபவித்தது என்னவோ அருணா தான். அருணாவை கற்பழித்தவனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது, ஆனால் கற்பழிப்புக் குற்றத்திற்காக அல்ல. இந்த வழக்கு நடைபெறும் காலகட்டத்தில் அவன் சிறையில் ஒருவருடம் இருந்ததால் இந்த 7 வருட தண்டனை 6 வருடமாகக் குறைக்கப்பட்டது. தனது ‘அருணாவின் கதை’ புத்தகத்தில் பிங்கி விரானி எழுதுகிறார்: ‘யோனி மூலம் பலாத்காரம் செய்யப்பட்டால்தான் அது கற்பழிப்பில் சேரும்; வால்மீகி செய்தது ஆசனவாய் வழியே என்பதால் அவன் மீது கற்பழிப்புக் குற்றம் சுமத்தப்படவில்லை என்பது இந்த வழக்கில் மிக மோசமான விஷயம்!’

 

அருணாவிலிருந்து நிர்பயா வரை கற்பழிப்பும், அதன் கொடூரங்களும் அதிகமாகிக் கொண்டே போகும் வேளையில் இதற்கான தண்டனையைப் பெறுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. பிறந்த குழந்தையிலிருந்து, எழுபது வயது பெண்மணி வரை எல்லா வயதினரும் கற்பழிப்பிற்கு ஆளாகிறார்கள். அருணா ஒரு அழகிய இளம்பெண்ணாக, திருமணத்திற்குத் தயாராகவும் இருந்தவர். ஒரு கயவனின் சித்திரவதைக்கு ஆளாகி உணர்வற்ற தாவர நிலைக்குத் தள்ளப்பட்டு 42 வருடங்கள் தனது வாழ்வை படுக்கையில் கழித்தவர்.

 

இது ஒருபுறம். மறுபுறம் கேஇஎம் மருத்துவமனையின் செவிலியர்கள் அருணாவின் மீது காட்டிய அப்பழுக்கற்ற அன்பு, இரக்கம். 42 வருடங்களை படுக்கையில் கழித்தும் அவருக்கு ஒரு படுக்கைப்புண் கூட வரவில்லை என்பது எத்தனை ஆச்சர்யமானது! இந்த செவிலியர்கள் அவரது ஒவ்வொரூ தேவையையும், ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு இரவும் பார்த்துப்பார்த்து செய்தனர். அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சிரம் மேற்கொண்டு அந்த பணியிலிருந்து ஒரு வினாடி கூட நழுவவில்லை. அவரை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்யப்பட போது அதை எதிர்த்து, அவருக்கு வாழ்வதற்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன என்று போராடினர். மாநகராட்சி அந்த படுக்கையைக் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது அதை எதிர்த்து  வாபஸ் வாங்கும்படியும் செய்தார்கள்.

 

‘குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, பிறந்த தேசத்தாலும் மறக்கப்பட்ட அருணாவிற்கு இந்த செவிலியர் மூலம் கிடைத்த வாழ்க்கையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அருணாவிற்கு பணிவிடைகள் செய்த  இவர்களுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்’ என்று டைம்ஸ் ஆப் இந்தியா வலைத்தளத்தில் எழுதுகிறார், ஜிதேந்திர வர்மா.

 

இந்த சமுதாயத்தில் அருணா ஏன் இத்தனை துயரங்களை தனி மனுஷியாக அனுபவிக்க வேண்டும்? அவரைக் கற்பழித்தவன் எப்படி இத்தனை சுதந்திரமாகத் திரிகிறான்? இன்னொருமுறை இதே தவறை செய்ய அவன் தயங்கமாட்டான்; செய்துவிட்டு தப்பிக்கவும் செய்வான். இது எப்படி?  இந்த நிகழ்வு இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் நடக்கவில்லை. இந்தியாவின் மையப் பகுதியில் நடந்திருக்கிறது. ஏன் இந்தியாவில் மட்டும் இப்படி நடக்கிறது?

 

இந்தக் கேள்விகளுக்கு நமக்கு விடை கிடைக்குமா?

 

Advertisements

13 thoughts on “முடிந்துவிட்ட நம்பிக்கை – அருணா ஷான்போக்

 1. என்ன சொல்வது என்றே தெரியாத நிகழ்வு. கற்பழிப்புக் குற்றத்தை இந்தச் சம்பவத்தில் புகார் அளிக்கப்படவில்லை என்று வைத்துக் கொண்டாலும், இது போன்ற குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அளித்தால் ஒழிய தீர்வு கிடைக்காது, குறையாது. மனிதாபிமானம் செத்து விடவில்லை என்பதை அந்த மருத்துவமனையின் சக செவிலியர்கள் செயல்கள் காட்டுகின்றன.

  1. வாங்க ஸ்ரீராம்!
   செய்தித்தாள்களில் இவரைப் பற்றிப் படித்திருந்தாலும், இந்தக் கட்டுரை எழுதும்போது மனம் முழுக்க வலி. அப்படி என்ன பாவம் செய்திருப்பார் என்று மனது துடித்துப் போனது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. இந்த அருணாவின் நிலையை தொடர்ந்து படித்தவள் நான். இந்தமாதிரி ஸக செவிலியரின் உதவி யாவரையும் பிரமிக்க வைக்கிறது. அதுவும் 42 வருஷங்கள் தன்னிலை அறியாத ஆஸ்ப்பத்திரி வாஸம். செவிலியர் கள் உதவிக்கு மனதார நன்றி பாராட்டமட்டுமே நம்மால் முடியும். இன்னும் தொடர்ந்து கற்பழிப்புகள் தேசத்தில் நடந்து கொண்டே இருக்கிறது. மனிதன் அவனவனாகத் திருந்தினால்தான் விடிவு பிறக்கும்.

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   திருடனா பாத்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றன.
   என்ன ஒரு கொடுமையான வாழ்க்கை!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 3. காமாட்சி அம்மா சொல்வது போல் எழுபதுகளில் இருந்தே அருணாவின் நிலைமை குறித்துப் படித்து வருகிறேன். அவரைப் போற்றிப் பாதுகாத்த செவிலியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள். அவர்களுக்கு பாரத ரத்னாவெல்லாம் ஒன்றுமே இல்லை. அதற்கும் மேலே ஏதேனும் விருது இருந்தால் அதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் இந்தச் செவிலியர்.

  1. வாங்க கீதா!
   ஒரு கயவனால் வாழ்க்கையை இழந்த அருணாவிற்கு இந்த செவிலியர்கள் செய்துவந்த தொண்டு பாராட்டுக்குரியது தான். என்றாலும் அவர் அத்தனை துன்பங்களுக்கு ஆளாகியிருக்க வேண்டுமா என்பது பெரிய கேள்வி. சுய நினைவில்லாமல் உள்ளுக்குள் எத்தனை வேதனைகளோ? பாவம். கருணைக்கொலை செய்திருக்கலாமோ, என்னவோ என்று கூட சிலசமயம் தோன்றுகிறது, எனக்கு.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. கேஇஎம் மருத்துவமனையின் செவிலியர்கள் அருணாவின் மீது காட்டிய அப்பழுக்கற்ற அன்பு, இரக்கம். 42 வருடங்களை படுக்கையில் கழித்தும் அவருக்கு ஒரு படுக்கைப்புண் கூட வரவில்லை என்பது எத்தனை ஆச்சர்யமானது! இந்த செவிலியர்கள் அவரது ஒவ்வொரூ தேவையையும், ஒவ்வொரு பகலும், ஒவ்வொரு இரவும் பார்த்துப்பார்த்து செய்தனர். அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை சிரம் மேற்கொண்டு அந்த பணியிலிருந்து ஒரு வினாடி கூட நழுவவில்லை.

  அப்படியான நடமாடும் கடவுள்
  நம்மில் இல்லையே – எனவே
  கேஇஎம் மருத்துவமனையின் செவிலியர்களைப் பாராட்டுவோம்.

  1. வாங்க யாழ்பாவாணன்!
   மும்பை மருத்துவ மனை செவிலியர்கள் உண்மையிலேயே நடமாடும் கடவுள்கள் தான்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க தனபாலன்!
   நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் நம் நாட்டில் இதெல்லாம் நடக்காதே!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   1. தண்டனை இருக்கிறது என்கிற நினைப்பு வரவேண்டும். ஆனால் அதுதான் நம்மூர்ல கிடையாதே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s