Uncategorized

மைசூரு ராஜ்ஜியத்தின் புதிய மகாராஜா

 

இன்றைய நாள் மே 28, 2015 மைசூருவின் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். புதிய மகாராஜாவாக திரு யதுவீர் க்ருஷ்ணதத்த சாமராஜ ஒடையார் மைசூரு ராஜ்ஜியத்தின் புதிய மன்னராக முடி சூட்டிக்கொண்டிருக்கிறார். முடிசூட்டு விழா காலை 9.25 மணியிலிருந்து 10.28 மணிக்குள் நடந்தேறியது. நாற்பது வருடங்களுக்கு முன் மைசூரு அரச குடும்பத்திற்குச் சொந்தமான அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட வெள்ளி அரியணை (பத்ராசனா) வெளியே கொண்டு வரப்பட்டு, மைசூரு அரண்மனையில் உள்ள கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டு புதிய மகராஜா அதில் அமர்ந்தார். இரண்டு நாட்களாகவே பலவிதமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் அரியணை ஏறும் மைசூரு அரசர்கள் இந்த வெள்ளி அரியணையையே பயன்படுத்துகிறார்கள். இன்று வியாழக்கிழமை, தசமியுடன் கூடி வருகிறதால் மிகவும் நல்ல நாளாகக் கருதப்பட்டு முடிசூட்டு விழாவிற்கு உகந்த நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

திப்பு சுல்தானின் ஆட்சி முடிந்த பிறகு ஒடையார் அரச பரம்பரை மீண்டும் மைசூரு அரசைக் கைப்பற்றியது. 1799 இல் மும்மடி கிருஷ்ணராஜ வாடியார் பிரிட்டிஷ் அரசால் மைசூரு மகாராஜாவாக அறிவிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 5 வயது! ஜூன் 30 1799 ஆம் ஆண்டு முடிசூட்டிக் கொண்டார். அவரது வாரிசு சாமரஜ  ஒடையாரும் 5 வயதாகும் போது முடிசூட்டிக் கொண்டார். ஆனால் அவர் அதிக காலம் இருக்கவில்லை. 31 வயதில் இயற்கை எய்துவிட்டார். நால்வாடி கிருஷ்ணராஜ வாடியார் 10 வயதில் முடிசூட்டிக் கொண்டார். 1895 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி முடிசூட்டிக் கொண்ட இவர் மிக நீண்ட நாள் ஆண்ட ராஜா ஆவார். ஜெயசாமராஜ ஒடையார் மற்றும் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ ஒடையார் இருவரும் தங்களது 21வது வயதில் முடிசூட்டிக் கொண்டனர். அந்த வகையில் இப்போது முடிசூட்டிக் கொள்ளப் போகும் யதுவீர் வயதானவர் (!) என்று சொல்ல வேண்டும். இவருக்கு இப்போது 23 வயது!

மன்னராட்சி இந்தியாவில் மறைந்த பின் இந்த முடிசூட்டு விழாக்கள் ரொம்பவும் பெரிய அளவில் பொதுநிகழ்ச்சியாக நடப்பதில்லை. அரச பரம்பரையினர் மட்டும் பங்கு பெறும் தனியார் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீ ஜெயசாமராஜ வாடியாரின் முடிசூட்டு விழாதான் கடைசியாக நடந்த கோலாகலத் திருவிழா. இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தவர்கள் தங்களை மிகவும் கொடுத்து வைத்தவர்களாக நினைத்து இன்றளவும் அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்கள்.

முடிசூட்டு விழாவிற்காக அரண்மனை புதன்கிழமையிலிருந்து மூடப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புதிய மகாராஜாவிற்கு ஏற்ற அரச உடைகள் இரண்டு இடங்களில் தைக்கப் படுகின்றன. புதிய மகராஜா பரம்பரை பரம்பரையாக அரசர்கள் அணியும்  உடையான நீள அங்கி – கலாபட்டி ஜரிகை வேலைப்பாடு செய்தது – அணிந்திருந்தார். இந்த அங்கி மைசூரு தன்வந்திரி தெருவில் உள்ள ஹெவென்லி டைலர்ஸ் என்ற இடத்தில் கையால் தைக்கப்பட்டது. ஷெர்வானி ஒரு பிரபல துணிக்கடையில் தயார் செய்யபட்டிருக்கிறது.

ஹெவென்லி டைலர்ஸ் சொந்தக்காரர் திரு பத்மராஜ் அரச குடும்பத்தின் தையற்காரர் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 40 வருடங்களாக அரச குடும்பத்து உடைகளை தைத்து வருபவர். புதிய ராஜாவிற்கு இரண்டு நீள அங்கிகள் – ஒன்று வெள்ளை, மற்றொன்று ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட அங்கி – தைக்கப்பட்டுள்ளன.

தன்வந்திரி தெருவிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தள்ளி இருக்கும், கே.ஆர் சர்க்கிள் அருகே உள்ள விஸ்வேஸ்வரய்யா கட்டிடத்தில் திரு ரமேஷ் என். லலிகே புதிய அரசருக்கு ஷெர்வானி தைத்துக் கொடுத்தவர்.  அதி உன்னதமான பட்டுத் துணியில் ராயல் பிங்க் வண்ணத்தில்  தங்க, வெள்ளி இலைகள் முக்கோண வடிவில்  அமைக்கப்பட்டு ஷெர்வானி தயாராகியிருக்கிறது. காட்டன்-சில்க் துணியில் இரண்டு கால் சராய்கள் – ஒன்று தங்கக் கலரில் தேன்கூடு டிசைனிலும், இன்னொன்று லைட் பர்பிள் கலரிலும் தயாராகி இருக்கின்றன.

27 வது மகாராஜாவான இவருக்கு 40 புரோஹிதர்கள் இந்த முடிசூட்டு விழாவை நடத்தி வைத்தனர். அரண்மனைக்குள் இருக்கும் 16 கோவில்களிலும் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடந்தன. கர்நாடகாவின் முதல்வர் திரு சித்தராமையாவும் அவரது மந்திரிகளும், அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுமாக 1200 பேர்கள் இந்த வைபவத்தை கண்டு களித்தனர்.

மறைந்த ஸ்ரீகண்டதத்த ஒடையாரின் சகோதரியின் பேரன் இந்தப் புதிய மகாராஜா. இந்த வருடம் பிப்ரவரி 23 ஆம் தேதி மகாராணி ப்ரமோதா தேவி (மறைந்த மகாராஜா ஸ்ரீகண்டதத்தரின் மனைவி) யால் பிள்ளையாக தத்து எடுத்துக்கொள்ளப்பட்டார். பெட்டதகோட்டை வம்சத்தை சேர்ந்த அர்ஸ் குடும்பத்தை சேர்ந்தவர் இவரது தந்தை கோபால்ராஜ் அர்ஸ். தாயார் திரிபுரசுந்தரி தேவி. இவர்களுக்கு ஒரு மகள் இங்கிலாந்தில் படித்து வருகிறாள்.

பெங்களூரு வித்யா நிகேதனில் பத்தாம் வகுப்பு வரையிலும், கனேடியன் இன்டர்நேஷனல் ஸ்கூலில் 12 ஆம் வகுப்பு வரையிலும் படித்த மகாராஜா தற்சமயம் அமெரிக்க மசாசுசெட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும், ஆங்கிலமும் படித்து வருகிறார். முடிசூட்டுவிழா முடிந்ததும் படிப்பதற்கு அமெரிக்கா செல்லுகிறார், புதிய மகாராஜா.

புதிய மகாராஜாவை நாமும் வாழ்த்துவோம்.

படங்கள் நன்றி: இணையதளம்

 ஸ்ரீகண்டதத்த ஒடையார்

மைசூரு ஒடையார் வம்சத்தின் சாபம்  

Advertisements

12 thoughts on “மைசூரு ராஜ்ஜியத்தின் புதிய மகாராஜா

 1. தொலைக்காட்சியில் பார்த்தேன். நிகழ்வுகளில் சிலவும் காட்டப்பட்டன. மஹாராஜாவுக்கு வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கப் பிரார்த்தனைகள்.

 2. நேபாள ராஜாக்களின் ஒவ்வொரு அரசகுடும்ப நிகழ்வுகளும் ஞாபகம் வருகிறது. ராஜவம்சங்களில் அவர்கள் எப்போதும் ராஜாக்களே. வாழ்க மைசூர் மஹாராஜா. அழகாக விவரங்களைத் தொகுத்தளித்த நீங்களும் பாராட்டுக்குரியவர்.. அன்புடன்

  1. வாங்க ஸ்ரீராம்!
   மகாராஜா என்றாலே எனக்கு என்னவோ ஒரு த்ரில்! அதனால் சேகரித்து சேகரித்து எழுதினேன்.
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

 3. வணக்கம்
  அம்மா
  அறிந்திடாத தகவல் மிக அருமையாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி… அம்மா சிறந்த ஆட்சியாக அமைந்தால் நல்லது.. நன்று…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. வாங்க ரூபன்!
   இவர்கள் பெயருக்குத்தான் மகாராஜாக்கள். பழைய வழக்கத்தை விடாமல் முடிசூட்டு விழா செய்துகொள்ளுகிறார்கள். அதுகூட குடும்பத்தினருடன் மட்டுமே. வெளி ஆட்களுக்கு அனுமதி கிடையாது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s