அரசியல் · நான்காம் தமிழ் ஊடகம்

ஆம்ஆத்மியின் அபார வெற்றி!

Arvind Kejriwal's 'swachh Delhi abhiyaan', Aam Aadmi Party makes Delhi BJP and Congress 'mukt'

நான்காம் தமிழ் ஊடகத்தில்  ‘எமது பார்வையில்’ பகுதியில் வந்துள்ள எனது கட்டுரை

‘நாங்கள் கண்டு பயப்படும் அளவிற்கு ஒரு பெரும்பான்மையை எங்களுக்குக் கொடுத்துவிட்டனர் டெல்லிவாசிகள். அவர்களுக்கு நான் ஒரு உண்மையான முதலமைச்சராக இருப்பேன்’ என்று டெல்லி தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஆம்ஆத்மி கட்சித் தலைவர் திரு அர்விந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது சொன்னார்.

கருத்துக் கணிப்புகளும் பொய்த்தன – ஆம்ஆத்மி கட்சிக்கு பாதிக்கு மேல்பட்ட இடங்கள் கிடைக்குமென்று அவை சொன்னதை பொய்யாக்கிவிட்டு டெல்லிவாசிகள் 67 இடங்களை ஆம்ஆத்மி கட்சிக்கு தூக்கிக் கொடுத்துவிட்டனர். 70 இடங்களைக் கொண்ட டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி 67 இடங்களையும், பாஜக 3 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டுவிட்டது.

சென்ற வருடம் மே மாதத்திலிருந்து பாஜக தனது தொடர் வெற்றியைக் கொண்டாடி வருகிறது. இனி இந்தியாவில் தங்கள் கட்சியே பெரும்பான்மை என்ற ஒரு மனோபாவம் வந்துவிட்டது அந்தக் கட்சியின் தலைவர்களுக்கு.. டெல்லியில் அரசியல் சூழ்நிலை மாறிவருகிறது என்பதை அறிந்திருந்தும், தங்களுக்கே வெற்றி என்ற ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையில் ஆழ்ந்திருந்த அவர்களுக்கு டெல்லிவாசிகள் கொடுத்த பலமான அடி தான் இந்த தேர்தல் முடிவுகள்.

முதல்முறை கிடைத்த வெற்றியை சரியானமுறையில் தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலையிலும் ஆம்ஆத்மி கட்சி மக்களின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை விடவில்லை. தங்கள் கட்சியை புதுப்பித்துக் கொள்வதிலும், தங்களது தவறுக்கு மன்னிப்புக் கேட்டும் மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்தனர். மக்களும் இந்தக் கட்சிக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்க விரும்பினார்கள்.

முன்கூட்டிய தயாரிப்பு தந்த வெற்றி

2014 மக்களவைத் தேர்தலில் தோல்வி கண்டதிலிருந்தே ஆம்ஆத்மி கட்சியினர் டெல்லி  தேர்தலுக்குத் தங்களை தயார் செய்யத் தொடங்கிவிட்டனர். பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு முன்பாகவே தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் முன் வைத்தனர். இப்படிச் செய்ததன் மூலம் மக்களுடன் தங்கள் உறவை புதுப்பித்துக் கொண்டனர்.

வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கெஜ்ரிவால் தனது செய்கைக்கு மன்னிப்புக் கேட்டார். இந்த அவரது செயல் அவரை உண்மையான ‘ஆம்ஆத்மி’ ஆக்கியது. எதிர்கட்சியினரை அவமானம் செய்து பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் ஆம்ஆத்மி உறுப்பினர்கள். கிரண் பேடியைப் பற்றி குறைத்துப் பேச மறுத்துவிட்டார் கெஜ்ரிவால். எதிர்கட்சிகள் குறை கூறிய தனது அராஜக உருவை அவரும் வெகுவாகக் குறைத்துக் கொண்டார். இந்த மாற்றங்களினால் பதவி கிடைத்தால் அராஜகம் செய்வார், பதவியை உதறி எறிந்துவிடுவார் என்ற மக்களின் எண்ணம் சவால்களை எதிர்கொள்ளுபவர், எளிமையானவர் என மாறியது.

மக்கள் தங்கள் மேல் வைத்திருக்கும் நல்லெண்ணங்களை தக்க வைத்துக் கொள்வதும் தேர்தலில் வெற்றி பெற உதவும். தன் பெயர் தைக்கப்பட்ட பத்து லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்திருந்த மோடியை விட தலையைச் சுற்றி மப்ளர் அணிந்திருந்த கெஜ்ரிவால் மக்களுக்கு நெருக்கமான அவர்கள் தினமும் காணும் சாதாணர மனிதராகத் தோன்றினார்.

பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பழமையான கட்டமைப்புடன்,  புதிய எண்ணங்கள், புதிய நடைமுறைகள், புதிதாக  ஒன்றைச் செய்து பார்க்கும் ஆர்வமின்றி இருப்பது கூட இந்த தேர்தல் முடிவுகளுக்குக் காரணம் எனலாம். ஆம்ஆத்மி ஆளும் கட்சிக்கு எதிராகப் போராட ஆரம்பித்து கட்சியாக மலர்ந்தது. படித்த இளைஞர், அரசுத் துறையில் வேலை பார்த்த ஒருவர், ஊழலுக்கு எதிராகப் போராடியது அகில இந்தியாவையும் விழிப்படையச் செய்தது. ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று இருக்கும் சாதாரண கீழ்தட்டு மக்களையும் உலுக்கி எழுப்பியது இந்தப் போராட்டம். போராட்டத்திற்குக் கிடைத்த ஆதரவை தனது கட்சிக்கும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் கட்சி ஆரம்பித்தார் கெஜ்ரிவால். நம்பிக்கை வீண் போகவில்லை என்பதுடன் இப்படிப்பட்ட நிலையில் ஒரு கட்சி உருவானது அரசியல் வேண்டாம் என்றிருந்தவர்களுக்கும் ஒரு சுவாரஸ்யத்தை உண்டு பண்ணியது. சத்தமாகப் பேசுவது, ஆளும் கட்சியைக் குறை கூறுவது மட்டுமே அரசியல் என்றிருந்த இந்தியாவின் அரசியல் நிலையை ஆம்ஆத்மி கட்சி முற்றிலுமாக மாற்றியது.

மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியினால் அசந்திருந்த பாஜகவை கெஜ்ரிவாலும் அவரது சகாக்களும் வெற்றி கொண்டுவிட்டனர். அவசர அவசரமாக கிரண்பேடியை கடைசி நிமிடத்தில் கட்சிக்குள் அழைத்து வந்தும் பலனில்லாமல் போய்விட்டது. முதலமைச்சர் பதவிக்கு கெஜ்ரிவால் தான் சிறந்தவர் என்று மக்கள் தீர்மானித்துவிட்டனர்.

இப்போது கெஜ்ரிவால் செய்ய வேண்டியது என்ன?

மக்கள் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள். முதலில் கெஜ்ரிவால் செய்ய வேண்டியது கட்சிக்குள் வளர்ந்து வரும் உட்பூசலை நீக்குவது. அடுத்ததாக பரபரப்பு அரசியலைக் கைவிடவேண்டும். அன்னா ஹசாரே தலைமையில் நடந்த போராட்டத்தின் போதே கெஜ்ரிவால் சர்வாதிகாரியாக  நடந்து கொள்வதாக ஒரு கருத்து நிலவியது. தனது தன்னாட்சிப் புத்தகத்தில் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசும் கெஜ்ரிவால் தனது கட்சியில் முதலில் அதை அமல்படுத்த முன்வரவேண்டும். கட்சிக்குள் நிலவும் அதிருப்திக்கு முடிவு கட்ட வேண்டும்.

முதல்முறை பதவி ஏற்றபோது எதற்கெடுத்தாலும் தர்ணா, போராட்டம் என்று தெருவில் இறங்கினார். இரண்டாம் முறையாக மக்கள் அவர்மேல் தங்களது நம்பிக்கையை காட்டியிருக்கிறார்கள். போராட்டம் என்பதை பின்னுக்குத் தள்ளிவிட்டு டெல்லியின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன் நாங்கள் வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்று பட்டியல் போடுவது சுலபம். வெற்றி பெற்றபின் அவைகளை நடைமுறை படுத்தும்போது தான் உண்மையான சிக்கல்கள் தெரியும். டெல்லியின் மத்திய வகுப்பு மக்கள் கெஜ்ரிவால் மீது வைத்திருக்கும் அளவில்லாத நம்பிக்கையின் விளைவுதான் இந்த வெற்றி.

வெற்றி தலைக்கு ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஐந்து வருடங்கள் இருக்கின்றன. கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு கட்சியையும் நல்லமுறையில் நடத்திக் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால் நிச்சயம் அவர்களது ஒத்துழைப்பு கிடைக்கும். மத்திய அரசும் ஆம்ஆத்மி கட்சிக்கு உதவுவதாக வாக்குக் கொடுத்திருக்கிறது.

இந்த ஐந்து வருடங்கள் எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் அடுத்தமுறை ஆம்ஆத்மியின் தலையெழுத்து என்ன என்பது தெரியும். வெற்றியினால் வந்த அராஜகப் போக்கு காங்கிரஸ் கட்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. பாஜகவும் இந்தத் தேர்தலில் பாடம் கற்றிருக்கிறது. இவற்றை உதாரணமாக எடுத்துக் கொண்டு கெஜ்ரிவால் ஒரு நல்லாட்சி கொடுப்பார் என்று நம்புவோம்.

டெல்லி யாருக்கு ? என்ற கேள்விக்குத் தலைநகரின் மக்கள் தெளிவான பதிலாக ஆம் ஆத்மியை வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள். கெஜ்ரிவால் குறிப்பிடுவது போல் இந்த வெற்றி ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல, அனைத்துக்குக் கட்சிகளுக்குமே பயம் தரக் கூடிய வெற்றிதான். ஆம் ஆத்மியின் இந்த அபார வெற்றி அகில இந்திய அரசியலில் புதிய நம்பிக்கைகளை, புதிய அரசியலைத் தோற்றுவிக்கலாம்!

Advertisements

11 thoughts on “ஆம்ஆத்மியின் அபார வெற்றி!

 1. ஆம்…’ஆம் ஆத்மியிந்’ இத்தகைய வெற்றி எதிர்பாரத ஒன்றுதான். போனதடவை மாதிரி தப்பு செய்யாமல் அவர் செயல் படவேண்டும். அவர் குறிக்கோள் டெல்லி முன்னுக்கு கொண்டுவருவது; அதைத்தான் மக்கள் எதிர்பார்ப்பு. செய்வாரா?

  “எம்.கே.எஶ்.”

 2. தன் தவறுகளில் இருந்து பாடம் படிப்பவர் என்பதால் இந்த முறை தன்னைத் தானே சரி செய்து கொண்டு சிறப்பான அணியுடன் செயல்படுவார் என்றே தோன்றுகிறது.

 3. கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதிலும்,யாரையும் தாக்கிப்பேசாமல் அநுஸரித்துப் போவதிலும் , பதவியை மதித்து பிரரிடம் ஒத்துழைப்புப் பெருவதிலும்,கவனம் செலுத்தினால் போதும். நல்லதே நடக்க வேண்டும்.

 4. பா.ஜ.க. வின் ஒட்டு சத விஹிதம் அப்படியே இருந்தாலும் காங்கிரஸ் ஒட்டு தற்போது கேஜ்ரிவாளுக்குக் கிடைத்துள்ளது. இது ஏன் பா.ஜ.கா. விற்குப் போக வில்லை என்று அவர்கள் பார்க்க வேண்டும்.
  ‘வீடு திரும்புதல்’ போன்ற கோமாளித்தனங்கள் ( மறு வீடு அழைத்தல் போல ) எல்லாம் சிறுபான்மை மக்களிடம் ஒருவித எதிர்ப்பு மனப்பான்மையை உருவாக்கி உள்ளன என்பது உண்மையே. சாதுக்களும், சந்நியாசிகளும், மஹந்த்களும், யோகிகளும் மடங்களில் மட்டுமே இருந்து நாட்டிற்கு நன்மை வேண்டி ஹோமம் செய்யலாம். அதை விடுத்து ‘மறு வீடு அழைத்தல்’ , இத்தனை பிள்ளை பெற்றுக் கொள்ளுதல் போன்ற குடும்பப பராமரிப்பு ஆலோசனைகளைச் சொல்லாமல் இருக்க பா.ஜ.க. ஏதாவது ‘சன்யாச தோஷ நிவர்த்தி ஹோமம்’ செய்யலாம்.

 5. Modi in the recent times looked more like an industrialist with his smart rich dress and did not appeal to the common voter. who was already under heavy financial stress kejri with his muffler clown wearing had caught the attention of the voters and all hundred percent non hindus votes were simply packeted to kejriwal.let us hope kejri would not do gimmicks but work for the downtrodden….

 6. ஆமருவி அவர்களின் கருத்தோடு ஒத்துப் போகிறேன். ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். கிரண் பேடியை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தது தான் பாஜகவின் இமாலயத் தவறு. இதன் மூலம் டெல்லி வாழ் சிறுதொழில் வியாபாரிகளுக்கு மனதில் அச்சம் குடி கொண்டு விட்டது. அதோடு அந்நிய மதத்தினர் ஓட்டுக்கள் அனைத்தும் சிந்தாமல், சிதறாமல் ஆம் ஆத்மிக்குப் போயிருக்கின்றன. இதோடு காங்கிரஸ் ஓட்டுக்களும் சேர்ந்து கொண்டன. ஆனால் டெல்லி அரசியல் என்பது தனி.

  அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமலும், வருமானத்திற்குச் சரியான வழி செய்யாமலும் இலவசக் குடிநீரும், மின்சாரமும் எப்படிக் கொடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மக்கள் உடனடியாக மாற்றங்களை எதிர்பார்ப்பார்கள். அப்படி எதிர்பார்ப்பு இருப்பதால் தான் பாஜக செய்யும் பல நல்ல முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் விஷயங்களின் தன்மையை எவரும் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில் இவை பலனளிக்கக் குறைந்தது 2 ஆண்டுகள் ஆகலாம்.

  உடனடியாக மாற்றங்களை எதிர்பார்க்கும் மக்களுக்கு கெஜ்ரிவால் எப்படி நம்பிக்கையூட்டப் போகும் விதத்தில் ஆட்சியைக் கொண்டு செலுத்தப் போகிறார் என்பது புரியவில்லை. அதோடு ஆம் ஆத்மி கட்சியில் எவரும் அரசியலோ, ஆட்சி நிர்வாகமோ புரிந்தவர்கள் அல்ல. கெஜ்ரிவால் உட்பட. நம் குடியரசுத் தலவர் கூட கெஜ்ரிவாலுக்கு அரசியல் சாசனப் புத்தகம் தான் பரிசளித்திருக்கிறார். அரசியல் சட்டம் என்ற வரையறைக்குள்ளேயே கெஜ்ரிவால் ஆட்சியை அளிக்கத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும்.

  டெல்லி நிலைமை இப்படி இருக்க அஸ்ஸாம் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மிகப் பெரும்பான்மை இடங்களைப் பிடித்திருக்கிறது என்பதை எந்த ஊடகமும், அல்லது பெருமை வாய்ந்த ஹிந்து நாளிதழ் போன்றவையோ சொல்லவே இல்லை என்பதையும் மறக்கக் கூடாது. இது டெல்லித் தேர்தலின் முடிவுகள் வந்த பின்னர் வந்திருக்கின்றன என்பதையும் மறக்கக் கூடாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s