Uncategorized

டெல்லி யாருக்கு? பாகம் 2

kejriwal

ஆம்ஆத்மி கட்சி : விரைவான எழுச்சி

ஆம்ஆத்மி கட்சி டெல்லி தேர்தலுக்குத் தயாரானபோது கட்சியே மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மக்களவைத் தேர்தலில் கட்சியின் பெரிய தலைவர்கள் எல்லொரும் தோல்வியை தழுவியிருந்தனர். உட்பூசல் மலிந்திருந்தது. கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர் என்று கருதப்பட்ட ஷாசியா இல்மி ஆம்ஆத்மி கட்சியின் தலைவரைச் சுற்றி ஒரு குழு செயல்பட்டு வருவதாகச் சொல்லி கட்சியை விட்டு வெளியேறியிருந்தார். தொண்டர்கள் உள்ளம் தளர்ந்து போய் கட்சி பிளவுபட்டு இருந்த நிலையில் அர்விந்த் கெஜ்ரிவால் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். மிகவும் கடினமான வேலைதான். ஆனால் கடந்த சிலமாதங்களாக இந்தக் கட்சி இரவுபகலாக முனைப்புடன் செயல்பட்டு வருவதை குறிப்பிட்டே ஆகவேண்டும். கெஜ்ரிவாலின் ராஜினாமா செய்த சேதாரத்தை பூசி மெழுகும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கெஜ்ரிவால் தான் ‘சுத்தமான மனிதர்’ என்பதை முன் வைத்தாலும், சென்ற தேர்தலின் போது இந்திய அரசியலில் ஒரு மாற்றம் கொண்டு வருவார், தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றாமல் போனது இவருக்கு எதிராக வேலை செய்கிறது. எங்கே போனாலும் முதலமைச்சர் பதவியை ஏன் விட்டுவிட்டீர்கள் என்று மக்கள் கேட்கின்றனர். மக்களுடைய மனதில் இருந்த ஆழமான கோபத்தை உணர்ந்த கெஜ்ரிவால் தன் பேச்சை மன்னிப்புடனே ஆரம்பிக்கிறார். மக்களிடம் கேட்காமல் தான் ராஜினாமா செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொள்ளுகிறார். தான் மறுபடி அந்தத் தவறை செய்யமாட்டேன் என்கிற உறுதியையும் அளிக்கிறார்ர். இந்த முறை ‘ஐந்து வருடம்’ என்கிற கோஷத்தை அவரது ஆதரவாளர்கள் முழங்குகிறார்கள். தான் செய்தது குற்றம் இல்லை; தவறான கணிப்பு என்கிறார். இதன் விளைவாக அவருக்கு இன்னொருமுறை வாய்ப்புக் கொடுக்கவும் டெல்லிவாசிகள் தயாராகிவிட்டனர் என்ற ஒரு கருத்து பரவலாக நிலவுகிறது.  நிலைமை இப்படியிருக்க, இவரது ராஜினாமாவை வைத்துக்கொண்டே இன்னமும் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சென்றமுறை பிரதமமந்திரி வேட்பாளராக இருந்த மோதி இப்போது பிரதம மந்திரியாகிவிட்டார். அவரைப் பிரதம மந்திரி ஆக்கிய மத்தியதர வகுப்பினர் அவரை தங்களை காப்பாற்ற வந்த, தங்கள் கனவுகளை நனவாக்க வந்த தேவதூதராகவே  நினைத்திருக்கிறார்கள். இந்த மாறுபட்ட சூழ்நிலையில் கெஜ்ரிவால் தன் அரசியல் வியூகத்தை வகுக்க வேண்டியிருந்தது. பிரசாரத்தின் ஆரம்பத்தில் மோதி பிரதம மந்திரி; ஆனால் டெல்லியில் நடக்கும் தேர்தல் முதல்மந்திரிக்கானது என்று பேசிய கெஜ்ரிவால், மோதி இந்தத் தேர்தலை தனது செல்வாக்கை மீண்டும் மக்களிடையே நிரூபிக்க வந்திருக்கும் வாய்ப்பாக நினைக்கிறார் என்பதை வெகு சீக்கிரம் புரிந்து கொண்டார். அதற்குத் தகுந்தாற்போல தனது பிரசார திட்டத்தை மாற்றி அமைத்தார்.

தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே தனது பிரசாரத்தை ஆரம்பித்து பாஜகவை திணற அடித்தார் கெஜ்ரிவால். டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயாவிற்கும் டெல்லி மின்வாரியத்திற்கும் இடையே இருப்பதாகச் சொல்லப்படும் தொடர்பும் கெஜ்ரிவாலிற்கு சாதகமாக அமைந்துவிட்டது. கெஜ்ரிவாலின் குறைந்த கால ஆட்சியின் போது மின்சாரம், குடிநீர் கட்டணங்கள் இவை குறைக்கப் பட்டதை இன்னுமும் டெல்லிவாசிகள் பெரும்பாலோர் நினைவில் வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு அரசு அலுவகத்திற்குச் சென்று லஞ்சம் கொடுக்காமல் ஒரு காரியத்தை முடித்துக்கொண்டு வருவது எத்தனை சுலபமாக இருந்தது என்று கெஜ்ரிவாலின் மிகக்குறைந்த நல்லாட்சிக் காலத்தை எண்ணி பெருமூச்சு விடுகிறார் ஒரு எளியவர். கெஜ்ரிவால் நீர், மின்சாரம், ஊழல் இல்லாத ஆட்சி  என்ற அடிப்படையில் தனது பிரச்சாரத்தை அமைத்திருக்கிறார். தனது 49 நாட்கள் ஆட்சியை சுட்டிக் காட்டுகிறார். மிகவும் பலம் வாய்ந்த பிரச்சாரமாக இருக்கிறது ஆம்ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சாரம். கெஜ்ரிவாலின் ஆளுமை இன்னும் அதிகரித்திருக்கிறது. இவரது இந்த சக்தி வாய்ந்த, ஆளுமை நிறைந்த பிரச்சாரத்தை முறியடிக்கவே அமித் ஷா, ஆர்எஸ்எஸ், ஒரு பெரிய அமைச்சர்கள் கூட்டம் என்று எல்லோரையும் களத்தில் இறக்கியிருக்கிறது பாஜக.

இதன் காரணமாகவே பாஜக தனது கட்சிக்குள் கிரண்பேடியை அழைத்துவர வேண்டி வந்தது. பாஜகவின் இந்த முடிவு தேவையில்லாத ஒன்று; கெஜ்ரிவாலைக் கண்டு பயந்துவிட்டது பாஜக என்கிறார்கள் சில அரசியல் ஆர்வலர்கள். மோதி ராம்லீலா மைதானத்தில் நடத்திய கூட்டத்தில் எதிர்பார்த்த அளவு மக்கள் அணிதிரளவில்லை. சிலவருடங்களுக்கு முன் இதே இடத்தில் அன்னா ஹசாரே தலைமையில் கெஜ்ரிவால், கிரண்பேடி இருவரும் ஊழலுக்கு எதிராக நடத்திய போராட்டம் மக்கள் மனதில் இன்னும் இருக்கிறது. கிரண்பேடியை நிறுத்தியது கெஜ்ரிவாலின் ஆளுமைக்கு எதிராக என்று அரசியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எனவே இந்தத் தேர்தல் ஆளுமை அடிப்படையில் நடத்தப்படும் போட்டி என்பது தெளிவாகிறது. இன்னொரு கருத்து இந்த தேர்தல் ஆம்ஆத்மி கட்சிக்கும், ஆம்ஆத்மி கட்சிக்கும் நடுவில் நடக்கும் தேர்தல் என்கிறது. ஆம், கெஜ்ரிவால், கிரண்பேடி இருவரும் ஒரு மாற்று அரசியலையும், லஞ்சம் அற்ற ஆட்சியையும் பற்றிப் பேசியவர்கள் அல்லவா? அன்னா ஹசாரே நடத்திய போராட்டம் முடிந்திருக்கலாம் ஆனால் பாதிப்புகள் இன்னும் மக்களின் நினைவில் இருக்கின்றன. அவர்களது அரசியல் அறிவும் அதிகரித்து இருக்கிறது இந்தப் போராட்டத்தினால். இனி எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் அது தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்; மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற அளவிற்கு மக்களுக்கு அரசியல் பற்றிய விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றால் அதற்கு அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

தேர்தல் பிரசாரங்கள் விவாதங்களாக மாறி சூடேறிக் கொண்டிருக்கும் இந்த  வேளையில் கெஜ்ரிவால் கூறுகிறார்: ‘எங்களுக்கு மத்திய அரசுடன் நல்லவிதமான உறவை வளர்க்கவே விருப்பம். மோதலை நாங்கள் விரும்பவில்லை. ஒரு நல்ல மக்களாட்சியில் கலந்துரையாடல், விவாதம், கருத்து வேறுபாடுகள், மறியல் போராட்டங்கள் எல்லாம் இருக்க வேண்டும். எங்கள் கட்சியும், நாங்களும் பக்குவப்பட்டிருக்கிறோம். இந்த முறை எங்களது கடைசி ஆயுதமாக மறியல் போராட்டம் இருக்கும்’.

தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வில் பாஜக பிரபலமான கட்சியாக இருந்த போதும், அவர்களிடத்தில் கெஜ்ரிவாலின் ஆளுமைக்கு எதிராக நிறுத்தக் கூடிய தலைவர் இல்லை என்றும், கெஜ்ரிவால் மிகவும் பிரபலமான முதலமைச்சர் வேட்பாளர் என்று தெரிய வந்திருக்கிறது. தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட ஐந்து கருத்து ஆய்வுகளில் மூன்று ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் என்று சொல்லுகின்றன. இன்னும் இரண்டு ஆய்வுகள் ஆம்ஆத்மி பாதிக்கு மேல்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன.

இந்த இரண்டு கட்சிகள் போடும் கூச்சலில் காங்கிரஸ் கட்சி இருக்குமிடமே தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி இன்னும் தனது பழைய புகழிலேயே வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது. தங்களது 15 வருட ஆட்சி தங்களது சாதனையைப் பேசும் என்கிறார்கள். தங்களது முன்னேற்ற திட்டங்களையெல்லாம் கெஜ்ரிவாலும், அவரது ஆட்சியைத் தொடர்ந்து வந்த ஜனாதிபதி ஆட்சிமுறையும் கெடுத்துவிட்டதாக கூறுகிறார்கள்.

இந்திய அரசியலின் போக்கை திருப்பிபோடும் என்று எதிர்பார்க்கப்படும் டெல்லி தேர்தலின் முடிவு என்னவாக இருக்கும்? ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்குமா? அது பாஜகவா? ஆம்ஆத்மியா? காங்கிரஸ் கட்சி என்னாவாகும்? எல்லோரும் பயப்படுவது சென்ற முறை போல தொங்கு நிலை ஏற்பட்டுவிடுமோ என்றுதான். டெல்லிவாசிகளின் கையில்தான் எல்லாம் இருக்கிறது. இன்னும் 6 நாட்களில் தெரிந்து விடும். பொறுத்திருப்போம்.

யார் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், இந்தத் தேர்தலின் நாயகன் சந்தேகமின்றி கெஜ்ரிவால்தான்.

பாகம் 1 

Advertisements

12 thoughts on “டெல்லி யாருக்கு? பாகம் 2

  1. கெஜ்ரிவாலை நம்புவது என்பது மண்குதிரையை நம்புவது போலத் தான். ஆனால் டெல்லி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டம் என்னவோ அவருக்கும் நிறையக் கூடுகிறது. ஆனால் ஒன்று! பொதுவாக ஆளும் கட்சிக்குச் சாதகமாக இருப்பவர்கள் குறைவு தான். அதிலும் இம்முறை ஆள்வது பாஜக. பாஜக எதைச் செய்தாலும் அதில் குற்றம் கண்டு பிடிப்பவர்களே அதிகம். உடனே மதவாதம் என ஆரம்பிப்பார்கள்! பொறுத்திருந்து பார்க்கலாம். எனக்கு என்னமோ தொங்கு நிலை தான் ஏற்படும் எனத் தோன்றுகிறது. அப்படி ஒரு வேளை கெஜ்ரிவால் வந்துவிட்டால் அவருடைய உண்மையான திறமை வெளிப்பட்டுத் தானே ஆக வேண்டும்! அதையும் பார்ப்போமே!

  2. டெல்லி யாருக்கு என்று அறிய ரொம்பவே ஆர்வமாகத்தான் இருக்கிறது அம்மா! இந்த பதிவை படித்த பின்னே , ஆர்வம் இன்னும் அதிகமாகி இருக்கிறது! பொறுத்திருந்து பார்க்க வேண்டியது தான்!

  3. கேஜ்ரிவால் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. கோமாளித்தனமாக ஏதாவது செய்வார் என்ற எண்ணமே நிறையப் பேர் மனதில் இருந்தது. இம்முறை அவரது அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. வெற்றி கிட்டினால் அதைப் பயன்படுத்தி நல்ல உதாரணமாக திகழவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. பார்க்கலாம் .
    அருமையான அலசல் அரசியல் பற்றி நீங்கள் எழுதியதை படித்த நினைவு இல்லை. அவ்வப்போது இது போன்ற கட்டுரைகள் எழுதுங்கள்

  4. கருத்துக்கணிப்புகளை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் மேடம். எனக்கென்னவோ, பா.ஜ., பின்னடைவுக்கு, அவர்கள் லோக்சபா தேர்தலில் அள்ளிவிட்ட வாக்குறுதிகளும், காஸ் மானிய பிரச்னையும்தான் காரணம் என்று தோன்றுகிறது. 100 நாட்களில் கருப்புப் பணத்தை கொண்டு வந்து விடுவோம் என்று கூறியதை செய்ய முடியவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசு என்னென்ன தவறுகள் செய்ததுவோ, அவற்றையே இந்த அரசும் செய்கிறது. பெட்ரோல் விலையை, சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப குறைத்திருந்தால், கொஞ்சம் கூட, ஓட்டும், சீட்டும் சேர்ந்து கிடைத்திருக்கும். ஆனால், அம்பானி கோபித்துக்கொள்வாரே?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s