நான்காம்தமிழ் ஊடகம் இணைய இதழில் (4.2.2015) வந்திருக்கும் எனது கட்டுரை
எந்த மாநிலத்திலும் இதுவரை தான் செய்யாத ஒரு செயலை டெல்லி தேர்தலுக்காக செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி: புதிதாக ஒரு நபரை இறக்குமதி செய்ததுடன் அவரை முதல்மந்திரி வேட்பாளராகவும் அறிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல சுமார் 120 நாடாளுமன்ற அங்கத்தினர்கள், மூத்த மத்திய அமைச்சர்கள் எல்லோரும் டெல்லி தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடுக்கி விடப்பட்டுள்ளார்கள். இத்தனைக்கும் டெல்லி முழுமையான மாநில அந்தஸ்து பெறாத, வெறும் 70 இடங்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய தொகுதி.
பதினைந்து நாட்களுக்கு முன் பாஜக, புகழ் பெற்ற காவல்துறை அதிகாரி கிரண் பேடியை கட்சிக்குள் சேர்த்துக்கொண்டு அவரை தனது கட்சியின் தலைவராக அறிவித்தபோது, இரண்டு விஷயங்கள் வெளிப்பட்டன. முதலாவது, ஆம் ஆத்மி கட்சியின் – மரபு சாரா அரசியலை செய்யத் தயாரா என்ற – சவாலை பாஜக ஏற்றுக்கொண்டது. இரண்டாவது 2013 ஆம் ஆண்டு ஹர்ஷவர்தன் தலைமையில் டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தான் கற்ற பாடத்தை – அதாவது டெல்லியில் கெஜ்ரிவாலை அவரது குகைக்குள்ளேயே சந்திக்க வேண்டும் – என்பதை பாஜக இன்னும் மறக்கவில்லை. சென்றமுறை ஹர்ஷ்வர்தனின் சுத்தமான இமேஜ், மற்றும் மோதியை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டபோதும் தனிப்பெரும் கட்சியாக வெல்லமுடியவில்லை. இந்த முறை இவற்றைத் தாண்டி ஏதாவது செய்தால்தான் பெரும்பான்மை வாக்குகளுடன் வெல்லமுடியும் என்ற நிலை பாஜகவிற்கு.
இந்த இரண்டு கட்சிகளின் அரசியல் வியூகத்தைப் பார்க்கலாம்.
பாரதீய ஜனதா கட்சி
பாஜகவின் தலைவர் அமித் ஷாவிற்கு மோதி அரசின் ஏழு மாத சாதனைகள், மோதியின் புகழ் இவை பக்கபலம். கிரண் பேடியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் அண்ணா ஹசாரேவின் பாசறையிலிருந்து வந்தவர்கள். இருவரும் எல்லா தகுதிகளிலும் சமமானவர்களே. ஆனால் அர்விந்த்திடம் இருக்கும் அராஜகம் பேடியிடம் இல்லை என்று பாஜக கூறுகிறது.
‘டெல்லிவாசிகளிடம் நேர்மறையான எண்ணங்களை வளர்த்தவர் கிரண்பேடி. ஒருவேலையை எடுத்தால் அதை முழு ஈடுபாட்டுடன் கச்சிதமாக முடிப்பவர் என்று பெயர் எடுத்தவர். எங்களுக்கும் இவர் மாதிரியான ஒருவர் தேவையாயிருந்தது’ என்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. ஆம் ஆத்மி கட்சி முன்வைக்கும் குறையான ‘பாஜக கட்சிக்கு தனியாக ஒரு தலைவர் இல்லை; எல்லாவிடங்களிலும் பிரதம மந்திரியே வர வேண்டியிருக்கிறது’ என்ற புகாருக்கு கிரண்பேடியை முன்னிலைப் படுத்தியதன் மூலம் பதிலளித்துவிட்டதாக பாஜக நினைக்கிறது. முதலில் ஜகதீஷ் முகியை பாஜக டெல்லி தேர்தலுக்கு முன்னிறுத்திய போது கெஜ்ரிவாலுக்கு சமமாக நிற்க வைக்க ஒரு தலைவர் கூட பாஜகவில் இல்லை கிண்டல் அடித்தது ஆம்ஆத்மி கட்சி. கிரண்பேடி கெஜ்ரிவாலுக்கு இணையானவர் என்பதுடன் அவரது பிராபல்யம் பெண்கள் மற்றும் சீக்கியர்களின் வாக்குகளைப் பெற்றுத் தரும் என்றும் பாஜக நம்புகிறது. கிரண்பேடியின் வருகை பாஜகவிற்கு பலத்தைக் கூட்டினாலும், இந்த டெல்லி தேர்தல் மோதியும் அமித்ஷாவும் எதிர்கொள்ளும் கடினமான களமாக இருக்கும். கூடவே மோதி அலையின் வேகம் குறைந்திருப்பத்தையும் குறிப்பிட வேண்டும்.
இந்த தேர்தல் எப்படி இருக்கும்?
- இருதரப்பிலும் போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.
- தேர்தல் களத்தை சமாளிக்க பாஜக அரசு தனது மத்திய அமைச்சர்களையும், மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் அதிகமான தனது கட்சித் தலைவர்களையும் டெல்லியில் இறக்கியுள்ளது இந்தப் போட்டியின் தீவிரத்தை காட்டுகிறது.
- தனது கட்சியின் உட்பூசலை கொஞ்சநாள் அடக்கி வாசிக்கவும் தயாராகிறது பாஜக.
- கிரண்பேடியின் பேச்சாற்றல் எல்லோருக்கும் தெரிந்தது என்றாலும் ஒரு அரசியல்வாதியாக எப்படி பேசவேண்டும் என்று அவருக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்தல் அரசியலுக்கு அவர் புதியவர் அல்லவா? சில ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டி அவருக்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை என்பதை உறுதி செய்கிறது.
- மொத்தத்தில் இந்தத் தேர்தல் ஆம்ஆத்மி கட்சிக்கும், பாஜகவிற்கும் நடக்கும் இடையேயான ஒரு நேரடி மோதல்.
ஏன் டெல்லித் தேர்தல் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது என்பதற்கு அரசியல் அறிஞர் திருமதி நீரஜா சௌத்ரி காரணங்களைக் கூறுகிறார்:
‘கடந்த எட்டு மாதங்களாக நாம் பார்த்து வரும் பாஜகவின் தொடர் வெற்றிகள் தொடருமா என்பதை இந்தத் தேர்தல் நிர்ணயிக்கும். ஒருவேளை தொடரவில்லையென்றால் பாஜகவின் எதிரிகளுக்கு பெரும் கொண்டாட்டமாக போய்விடும். பாஜகவின் தோல்வி, வரப் போகும் இரண்டாண்டுகளில் பல மாநிலங்களில் நடக்கப் போகும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை உண்டாக்கி புதிய புதிய கூட்டணிகளை உருவாக்கலாம். இந்தத் தேர்தலில் மிகவும் வியப்பான ஒரு விஷயம் ஆம்ஆத்மி கட்சியின் எழுச்சி. சென்றமுறை கிடைத்த மாபெரும் வெற்றிக்குப்பின், முதலமைச்சர் பதவியை கெஜ்ரிவால் உதறித் தள்ளியதால் செல்வாக்கு இழந்த இந்த கட்சி இப்போது மிகத் தீவிரமான போட்டிக்கு தயாராகி இருக்கிறது. இதுவே டெல்லி தேர்தலில் ஒரு சுவாரஸ்யமான விஷயமாகி இருக்கிறது. இந்தியா முழுவதும், குறிப்பாக டெல்லிவாசிகள் இந்த தேர்தலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’.
பாஜகவிற்கும் ஆம்ஆத்மி கட்சிக்கும் தான் நேரடி மோதல் என்பது தெளிவாகிவிட்டது. இல்லையென்றால், பிப்ரவரியில் தனது பட்ஜெட்டை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் நிதியமைச்சர் தினமும் இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு மணிநேரம் செலவழிப்பாரா? உள்ளூர் தலைவர்களை நம்பாமல், பாஜகவை வளர்த்த பல தலைவர்களை புறம்தள்ளிவிட்டு புதிய முகமாக கிரண்பேடியை – பல தலைவர்களின் விருப்பமின்மையுடன் கொண்டு வருவார்களா? பேடியின் வரவு டெல்லியின் மத்திய வகுப்பினரின் வாக்குகளை பாஜகவிற்கு – மோதிக்குக் கொடுத்தது போலவே – அள்ளித் தரும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் மத்திய வகுப்பினரில் ஒரு சிலரின் பார்வை கெஜ்ரிவால் மேல் இருக்கிறது என்பதையும் பாஜக உணர்ந்தே இருக்கிறது.
ஆம்ஆத்மி கட்சியின் நிலை என்ன? பாகம் – 2
கொஞ்சம் பெரிய கட்டுரையாதலால் இங்கு இரண்டு பாகமாக போடுகிறேன்.
நல்ல அலசல் தான். ஆனால் மஹாராஷ்ட்ராவிலும் சிவசேனை ஒதுங்கிக் கொண்டதும் அனைவரும் பாஜகவுக்கு வாய்ப்பில்லை என்றே சொன்னார்கள். இப்போதும் அனைத்துத் தொலைக்காட்சிகளும் ஆம் ஆத்மி கட்சிக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். கெஜ்ரிவாலை எந்த அளவுக்கு நம்பலாம்?
ஒரு அரசு அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து அவரால் வேலை செய்ய முடியவில்லை. அதே போல் முதல் மந்திரி பதவியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அசெம்பிளியைத் தெருவில் தான் கூட்டுவேன் எனப் பிடிவாதம் பிடித்தார். கெஜ்ரிவாலின் தேவை எப்போதும் ஊடக வெளிச்சத்தில் தான் இருக்க வேண்டும் என்பதே. வீடு முதற்கொண்டு முதலில் சொன்னது ஒன்று, பின்னர் பெரிய வீடு என்று எடுத்துக் கொண்டார். யாரோட அனுமதியும் இல்லாமல் மின் விநியோகத்தில் நடத்திய குளறுபடிகள்! இப்படி நிறைய இருக்கிறது. கெஜ்ரிவாலுக்குப் பக்குவம் என்றால் என்ன என்பது தெரிய இன்னும் பல காலம் ஆகவேண்டும்.
40 வருட அனுபவம் கொண்ட கிரண் பேடியா? 5 வருடம் முழுதும் முடிக்காத கெஜ்ரிவாலா? இதான் தலையாய கேள்வி! 🙂
என்ன இப்பொழுது நிறைய அரசியல் கட்டுரை எழுதுகிறீர்கள்? அடுத்த தேர்தலில் நீங்கள் போட்டியிடப்போகிறீர்களா என்ன ரஞ்சனி எனக்கும் அரசியலுக்கும் காத தூரம் அதை அலசுவதுமில்லை அதிக அனுபவமும் இல்லை ஊறுகாய் மாதிரிதான் எப்போதாவது பேசுவேன் அவ்வளவுதான்?
IT HAS BEEN FOUND THAT WOMEN CHIEF MINISTERS DID NOT DELIVER A GOOD GOVERNANCE IN INDIA MAMTA VASUNDARA MAYAWATHI OUR JEYA
KIRAN WILL BEONE AMONG THEM ONLY>>>DELHI PEOPLE ARE UNFORTUNATE>>>
திரு நட்சந்தர், உங்கள் லிஸ்டில் திருமதி இந்திரா காந்தியும் சேர்ந்தவரா? :))))) இல்லை முதல் மந்திரிகள் மட்டுமா? தெரியலை! போகட்டும். திருமதி கிரண் பேடி 40 வருஷங்களுக்கு மேல் அரசு அலுவலில் அதுவும் காவல் துறையில் பணியாற்றியவர். நிர்வாகம் என்றால் என்ன என்பது அவருக்கு ஓரளவு புரியும் என்பது என் கருத்து. ஆனாலும் பார்க்கலாம். கெஜ்ரிவால் அவரை விடத் திறமைசாலி இல்லை என்பதும் என் கருத்து. பொறுப்பு என வந்து விட்டால் கெஜ்ரிவாலைப் போல் தட்டிக் கழிப்பவர் இல்லை. ஆனால் இம்முறை வாக்குறுதி கொடுத்திருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போமே! :)))))