Uncategorized

எனது கதாநாயகன்

vivekanandar - firstbook

எனது முதல் புத்தகத்தின் கதாநாயகன் விவேகானந்தர் பிறந்தநாள் இன்று. எனது புத்தகத்தின் கடைசி அத்தியாயம் இங்கே:

 

தன்னிகரற்ற குரு

 

சுவாமி விவேகானந்தருக்கு முன்னால் நம் நாட்டில் மகான்கள் யாருமே பிறக்கவில்லையா? மக்களை வழி நடத்தவில்லையா? ஆன்மீக நாடான இந்தியாவில் துறவிகளுக்கோ, மதத்தலைவர்களுக்கோ, சொற்பொழிவாளருக்கோ என்றுமே குறைவில்லை. அப்படியிருக்கும்போது, சுவாமி விவேகானந்தர் எப்படி மற்றவர்களிலிருந்து வேறுபட்டு இருந்தார்? அவர் வாழ்ந்தது 39 வருடங்களும் சில மாதங்களும். அதற்குள் அவர் சாதித்தது மனித சக்திக்கு அப்பாற்பட்டு நிற்கிறது. இந்த சாதனைகளுக்கு எந்த ஆற்றல் அவருக்குத் துணை நின்றது?

இந்தியா என்றால் வறுமையும், பஞ்சமும், பெண் குழந்தைகளைக் கொல்லுவதும், பெண்கள் கொடுமைக்கு உள்ளாவதும் மட்டுமே என்று நினைத்திருந்த மேலைநாடுகளின் எண்ணத்தை மாற்றி, ஆன்மீகச் செல்வம் செழிக்கும் நாடு இந்தியா என்ற கருத்தை நிலைநாட்ட தன்னந்தனியாக மேலைநாடுகளுக்குச் சென்றாரே, அவருடன் கூடப் போனது யார்? எந்த இந்து சமய அமைப்பின் சார்பில் அவர் மேலைநாடுகளுக்குச் சென்றார்? சர்வமத மகாசபையில் எல்லோரும் முன்கூட்டியே தயார் செய்துகொண்டு வந்து பேசியபோது, முன்தயாரிப்பு எதுவும் இல்லாமல், ‘அமெரிக்க சகோதர சகோதரிகளே’ என்று பேச ஆரம்பித்து அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்தாரே, அவரை வழி நடத்திய அற்புத ஆற்றல் எது? 150 ஆண்டுகளுக்குப் பின்னும் நாம் அவரை தெய்வத் திருமகனாக நினைக்கக் காரணம் என்ன?

 

மனித ஆற்றல், இறைவனின் வழிகாட்டுதல், நல்ல குருவை அடைந்து அவரது சொற்படி நடத்தல் என்ற மூன்றும் கலந்த ஒரு அற்புத கலவை இந்த ஆற்றல் என்று சொல்லலாம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வாழ்ந்ததன் பலனாக சுவாமிஜிக்குக்  கிடைத்த மாபெரும்  ஆற்றல் என்றும் சொல்லலாம். ஸ்ரீராமகிருஷ்ணரால் ‘நீயே நரநாராயணனாக அவதரித்தவன்’ என்று சொல்லப்பட்டிருந்தாலும்,  அவரை சிவபெருமானின் அவதாரம், புத்தரின் அவதாரம் என்று பலர் சொன்னாலும், தமது மன ஆற்றலை மட்டுமே துணையாகக் கொண்டு மகத்தான காரியங்களை சாதித்திருக்கிறார் சுவாமிஜி.

 

முதன்முதலாக ஏழை மக்களுக்காக உருகிய தீர்க்கதரிசி இவர்தான். இந்த பண்புதான் அவரை அவருக்கு முன் இருந்த மகான்களிலிருந்து வேறுபடுத்தியது. இந்தியப் பயணத்தின் போது அவர் கண்ட ஏழை இந்தியா அவரை வருத்தியது. ‘என் தாய்நாட்டு மக்களுக்கு நான் என்ன செய்யமுடியும்?’ என்ற இடைவிடாச் சிந்தனை அவரது ஆற்றலுக்கு பின்னணியாக இருந்தது. எந்த ஒரு விஷயத்தையும் யாரோ சொன்னார்கள் என்பதற்காக நம்பாமல், தானே சோதித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை அவரது ஆற்றலை வழி நடத்தியது.

 

கன்னியாகுமரியில், அவரிடம் பணம் இல்லாததால் படகோட்டிகள் அவரை ஸ்ரீபாத பாறைக்கு அழைத்துச் செல்ல மறுத்த போது சற்றும் தயங்காமல் அலைகடலில் குதித்து நீந்தியே அந்தப் பாறையை சென்று சேர்ந்தாரே, எதற்கு? ‘என்னால் முடியும்’ என்று மார்தட்டவா? இல்லை; ‘என் தாய் திருநாட்டு மக்களே, என்னால் முடிந்தால் உங்களாலும் முடியும். உங்களுக்குள் இருக்கும் தெய்வீக ஆற்றலை உணருங்கள். உங்கள் அறியாமைத் துயிலிலிருந்து எழுந்திருங்கள்; எப்போதும் விழித்திருங்கள்; உங்கள் லட்சியத்தை அடையும் வரை ஓயாதீர்கள்’ என்ற எழுச்சி மந்திரத்தை உபதேசிக்க.

சுவாமிஜி மனிதர்களிடம் கொண்டிருந்த அளவற்ற அக்கறை அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது. மனிதனிடம் உள்ள எல்லையற்ற திறமைகளையும் ஆற்றலையும் வெளிக்கொணர உதவுவதே தன் முக்கியப்பணி என்று  எண்ணினார். கோவிலில் இருக்கும் கடவுளிடம் பற்று வைக்கும் மனிதர்களைப் பார்த்து உங்கள் சக மனிதனிடம் பற்று வையுங்கள் என்றார். கடவுள் என்பவர் எங்கோ உட்கார்ந்துகொண்டு மனிதர்களை ‘விதி’ என்னும் நூலினால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பவர் அல்ல; மனிதர்களின் உள்ளே ஆன்மாவாக நிறைந்திருக்கிறார். தன்னுள்ளே இருக்கும் தெய்வீகத்தை ஒவ்வொரு மனிதனும் உணருவதால் அவனது ஆற்றல் பெருகி, வெற்றிகரமான வாழ்க்கை வாழமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.

சுவாமிஜியின் இன்னொரு பண்பும் நம்மைக் கவருகிறது. அது அவரது வெளிப்படையான பேச்சு. சிங்கத்தின் குகைக்குள்ளே போய் அதனுடன் போரிடுவது போல ‘எங்கள் மதமே உலகத்தில் சிறந்தது’ என்றெண்ணி இருந்தவர்களை, அவர்களின் நாட்டிலேயே ‘எல்லா மதங்களும் இறைவனை உணர வழிகாட்டும் பாதைகள். எல்லா மதங்களையும் நாங்கள் மதிக்கிறோம்’ என்ற தமது வாதத்தின் மூலம் வாயடைக்கச் செய்தார். ‘மதத்தின் பெயரால் சண்டை வேண்டாம். மனித இதயங்களைத் திறக்கவும், மனிதனை பொருளாதார ரீதியில் மேம்படவும் செய்வதே மதம். மதமாற்றத்தின் மூலம் சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. பசித்தவனுக்கு மதம் தேவையில்லை; அவனது தேவை பசித்தபோது உணவு. அந்த உணவை பெற, அவர்கள்  தங்கள் சொந்தக் காலில் நிற்க, கல்வியைக் கொடுங்கள். அந்தக் கல்வி ஏட்டுச்சுரைக்காயாய் இல்லாமல் மதத்திலிருந்து அவனை விலகாமல், அவனை உருவாக்கும் கல்வியாக இருக்கட்டும்’ என்றார்.

இறைவனைத் தேடுபவர்களுக்கு மட்டுமே இருந்த ஆன்மத் தேடலை சாதாரண மனிதர்களுக்கும் உரிமை ஆக்கினார். இந்த ஆன்மத் தேடலுக்கு உதவும் கல்வியை மனிதனை உருவாக்கும் கல்வி என்று குறிப்பிட்டார். ஆன்மிகம், இறையனுபூதி என்று பேசினாலும், சமயச் சடங்குகள், சமயச் சின்னங்கள் மனிதனுக்கு அவனை அறிய உதவவில்லை என்றால் இவற்றால் எந்தப் பலனும் இல்லை என்று வெளிப்படையாகப் பேசினார். யாரும் பாவிகள் இல்லை. பாவமும் புண்ணியமும் சேர்ந்ததே மனித வாழ்வு. எல்லோரும் தெய்வத்தின் குழந்தைகள். மதவாதிகள் மனிதனை மறந்துவிட்டு இறைவனைப் பார்த்தார்கள். ஆனால் சுவாமிஜி மனிதர்களிலே இறைவனைப் பார்க்கச் சொன்னார்.

சாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டிருந்த கருத்துக்களை சாதாரண மக்களுக்கும் பொதுவாக்கினார். வறட்டு வேதாந்தத்தை செயல்முறை வேதாந்தமாக மாற்றினார். ஏழை மக்களிடம் நாராயணனைக் கண்டார். தந்தை கொடுத்த கட்டுடலை கொண்டு தரித்திர நாராயண சேவையை கடைசி வரை அந்த உடல் நலிந்தபோதும் செய்தார். தாய் சொன்னபடி அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டையும் கடைசி நிமிடம் வரை காத்தார். குரு சொன்னது போல தனது அமானுஷ்ய ஆற்றல்களை ஒருபோதும் தன் சொந்தப் பலனுக்காக உபயோகிக்கவில்லை.

இறைவனை நம்பி இறைவன் காட்டிய வழியிலேயே தன் வாழ்க்கையை நடத்தினார். மக்களுக்கு மட்டுமல்ல, மன்னர்களுக்கும் அவர்களது நிலையை எடுத்துரைத்து, கடமைகளை நினைவுறுத்தினார். சர்வமத மகாசபையில் அவர் மூலம் வெளிப்பட்டது இந்தியாவின் மத உணர்வு. பழமையான கீழ்த்திசை, நவீன மேல்திசை இவை இரண்டின் சிந்தனைகளும் கலந்து சங்கமிக்கின்ற இடமாக சுவாமிஜி காட்சியளித்தார். ஆன்மிகம் என்பதற்கு மனிதன் தன்னுள்ளே இருக்கும் ஆன்மாவை உணருவதே என்ற புதிய கருத்தை சொன்னார்.

மனிதனைப்பற்றிய புதிய கண்ணோட்டம், மதம் பற்றிய புதிய கருத்துக்கள், கடவுள் பற்றிய  புதிய சிந்தனை இவற்றுடன், நல்லொழுக்கத்துடன் கூடிய புதிய சமுதாயம் என்று மனித குலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் தனது செய்தியாக சுவாமிஜி இந்த உலகிற்குக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

மிகக்குறைந்த வயதில் மிகப்பெரிய சாதனை செய்து நம் மனங்களில் மறக்கவொண்ணாத தாக்கத்தையும் ஏற்படுத்திச் சென்ற அந்த மாமனிதரை அவர் சொல்லிச் சென்ற செய்திகளை பின்பற்றுவதன் மூலம் பெருமைபடுத்துவோம். அவரே சொன்னதுபோல நம்முள் அவர் உருவமற்ற குரலாக இருந்து நம்மை வழி நடத்துவார் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

மகாகவி பாரதியாரின் வார்த்தைகளுடன் ஆரம்பித்து ரவீந்திரநாத் தாகூரின் இந்த வார்த்தைகளுடன் சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றை நிறைவு செய்வோம்.

அனைத்துப் பரிமாணங்களிலும் மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியே விவேகானந்தரின் செய்தி – ரவீந்தரநாத் தாகூர்.

மதிப்புரை.காம் தளத்தில் வந்த இந்தப் புத்தகத்தின் மதிப்புரை இங்கே:

அதே தளத்தில் வந்த இன்னொரு மதிப்புரை இங்கே:

 

தொடர்புடைய பதிவுகள்

வந்தார் விவேகானந்தர்

யாரு ஸார் இவரு?

 

Advertisements

26 thoughts on “எனது கதாநாயகன்

 1. அருமையான பகிர்வு விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுவது நம் அனைவருக்கும் பெருமையாக உள்ளது

 2. நான் படித்து ரஸித்ததை இன்னொருமுறை ஞாபகப்படுத்திக்கொள்ள இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. வாழ்த்துகள். நம்மை நாமே அறிந்து கொள்ள மிகவும் பயனான புத்தகம். உங்கள் புத்தக வெளியீடுகள் பயனுள்ளதாக மேன்மேலும் வளர வாழ்த்துகள். அன்புடன்.

 3. மனித ஆற்றல், இறைவனின் வழிகாட்டுதல், நல்ல குருவை அடைந்து அவரது சொற்படி நடத்தல் என்ற மூன்றும் கலந்த ஒரு அற்புத கலவை இந்த ஆற்றல் என்று சொல்லலாம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வாழ்ந்ததன் பலனாக சுவாமிஜிக்குக் கிடைத்த மாபெரும் ஆற்றல் என்றும் சொல்லலாம்.//

  உண்மை .
  கட்டுரை மிக அருமையாக இருக்கிறது. மனிதனின் நம்பிக்கை, மன ஆற்றல் அனைத்தையும் கொடுக்கும் என்று மெய்பித்த்வர் விவேகானந்தர்.
  மனோபலம் அனைவருக்கும் மிகவும் வேண்டும். சோர்ந்து இருக்கும் போது இக் கட்டுரை படித்தால் சோர்வு மறைந்து புத்தணர்ச்சி கிடைக்கும் ரஞ்சனி. வாழ்த்துக்கள்.

  1. வாங்ககோமதி! நீங்கள் சொல்லியிருப்பது போல விவேகானந்தர் பற்றிப் படித்தாலே நமக்கு ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

 4. உங்கள் எழுத்துப் பணி மேலும்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 5. இறைவனைத் தேடுபவர்களுக்கு மட்டுமே இருந்த ஆன்மத் தேடலை சாதாரண மனிதர்களுக்கும் உரிமை ஆக்கினார். இந்த ஆன்மத் தேடலுக்கு உதவும் கல்வியை மனிதனை உருவாக்கும் கல்வி என்று குறிப்பிட்டார். ஆன்மிகம், இறையனுபூதி என்று பேசினாலும், சமயச் சடங்குகள், சமயச் சின்னங்கள் மனிதனுக்கு அவனை அறிய உதவவில்லை என்றால் இவற்றால் எந்தப் பலனும் இல்லை என்று வெளிப்படையாகப் பேசினார். யாரும் பாவிகள் இல்லை. பாவமும் புண்ணியமும் சேர்ந்ததே மனித வாழ்வு. எல்லோரும் தெய்வத்தின் குழந்தைகள். மதவாதிகள் மனிதனை மறந்துவிட்டு இறைவனைப் பார்த்தார்கள். ஆனால் சுவாமிஜி மனிதர்களிலே இறைவனைப் பார்க்கச் சொன்னார்.//

  வாழ்த்துக்கள்! அருமையான கருத்து! சுவாமியைப் பற்றிய தங்கள் புத்தகம் எல்லோரையும் சென்றடைய பிரார்த்தனைகள். ஏன் சென்றடைய வேண்டும்? இதற்கு எங்களில் கீதாவின் பதில்…

  என் மகன் கால்நடை மருத்துவம் படித்த போது, இரு வருடங்களுக்கு முன் வகுப்பில் மெடிசின் போதித்த பேராசிரியர் தத்துவங்களும் அவ்வப்போது வகுப்பில் மாணவர்களுக்குப் போதிப்பதுண்டு. மாணவர்கள் வாழ்க்கையை அழகாக வாழ வேண்டும் என்று. அப்போது ஒரு முறை சுவாமியைப் பற்றிக் கூறுகையில், அவர் கேட்டிருக்கிறார், “உங்களில் எத்தனை பேருக்கு சுவாமி விவேகானந்தரைப் பற்றித் தெரியும். அவர் பற்றிய புத்தகங்களையும், தத்துவங்களையும் வாசித்துள்ளீர்கள்” என்று. அதற்கு என் மகனும், மற்றொரு பையனும் மட்டுமே கை உயர்த்தியுள்ளனர். இந்த இருவரிலும் மகன் மட்டுமே அவரது தத்துவங்களை வாசித்திருப்பவன். அதிலும் அவரது ஒரு பொன் மொழியை சிறு வயது முதலே தன் டயரியில் குறித்து வைத்தவன். வாழ்க்கையில் வெற்றி அடைவது குறித்த மொழி அது. பேராசிரியருக்கு இருவர் மட்டுமே கை உயர்த்தியது வருத்தம்.

  எனவேதான் விரும்புவது. புத்தகம் அதிகம் பேரைச் சென்றடைய வேண்டும் என்று.

  சுவாமியைப் பற்றி எழுதிய தங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தீராது. வாழ்த்துக்கள். மேலும் தாங்கள் நிறைய படைப்புகள் வெளியிட வேண்டும் சகோதரி.

  துளசிதரன், கீதா

  1. வாங்க துளசிதரன், கீதா!
   மிக அருமையாக ஒரு நிகழ்வினைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய இளைஞர்கள் எல்லோரும் விவேகானந்தரைப் படித்தால் போதும். இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாகிவிடும்.
   உங்கள் பிள்ளைக்கும், அவரை சிறந்த வழியில் வளர்த்திருக்கும் உங்களிருவருக்கும் எனது பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!

 6. அருமை …
  அற்புதம்…

  அம்மா தாங்கள் பதிவுகளில் நயம் நன்றாக உள்ளது …

  இதே போல் தமிழகம் பசிக்கு உணவளித்த , கம்பனுக்கு பிறகு கவி பாடி சிறப்பு செய்த , மடமென்பது துறவிக்கு மட்டுமே ஆனால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலை நிறுவி பசி ஆற்றிய அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் குறித்தும் நேரம் இருப்பின் தங்கள் எழுத்து நடையில் இயற்ற வேண்டுகிறேன்….

  நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s