சீயத்தின் சிரிப்பு தொடருகிறது……!

சென்ற சனிக்கிழமை நினைவுகள் தொடருகின்றன…..

படம் நன்றி: கூகிள்

செங்கட் சீயம் சிரிப்பதற்கு முன் நடந்தது என்ன?
இரணியகசிபு தனது மகன் பிரகலாதனை கடலில் தள்ளுமாறு தன் வீரர்களுக்கு கட்டளையிடுகிறான். அவன் செய்த தவறு என்ன?

‘பள்ளியி லோதி வந்ததன் சிறுவன் வாயிலோ ராயிர நாமம், ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக் கொன்றுமோர் பொறுப்பில னாகி….’

பள்ளியில் படித்து வந்த சின்னஞ்சிறு பாலகனின் வாயில் நாராயணின் நாமங்கள் ஆயிரமாயிரம்! இதைத்தான் இரணியனால் பொறுக்க முடியாமல் போயிற்று. தானே எல்லாம் என்று நினைத்திருக்கும் ஒரு தந்தைக்கு ‘நீயில்லை பரமன். பரமன் என்று ஒருவன் உனக்கும் மேலானவன்’ என்று சொல்லும் ஒரு மகன். தந்தையின் வீரர்களால் கடலில் எறியப்பட்ட பின்னும் அவன் கடலுள் மூழ்காமல் ஒரு கல்லின் மீது கிடக்கிறான்.

‘நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆகலின், வேலை
மடு ஒத்து, அங்கு அதின் வங்கமும் அன்றாய்,
குடுவைத் தன்மையது ஆயது, குன்றம்.

வாய் முழுவதும் நாராயண நாமம். நாராயணனின் திருநாமத்தை சொல்லுவதை பிரகலாதன் நிறுத்தவில்லை. அதனால் அந்தப் பெருங்கடல் ஒரு சிறிய மடுவைப் போலவும், அவனைக் கட்டி எறிந்த மலை ஒரு சுரைக் குடுவை போலவும் ஆயிற்று.

சினை ஆலின்
இலையில் பிள்ளை எனப் பொலிகின்றான்.
அன்று ஆலிலையின் மேல் பள்ளி கொண்ட சிறுபாலகனைப் போல திருமாலை ஒத்து கிடந்தான்.
காரார விந்தேன பதார விந்தம் முகார விந்தே வினிவேசயந்தம்
வடசஸ்ய பத்ரசஸ்ய புடேசயானம் பாலம் முகுந்தம் மனசாஸ்மராமி – என்ற முகுந்தாஷ்டக ஸ்லோகம் நினைவிற்கு வருகிறது, இல்லையா?

தனக்கு எதற்காக இந்த மாதிரியான கொடிய தண்டனை என்று பிரகலாதன் ஹரியிடம் கேட்கிறான்: ‘உன்னுடைய அடியார்க்கு அடியன் என்னும் நிலை தவிர வேறேதேனும் நான் விரும்பியதுண்டா? ‘உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி’ என்பது போல உனக்குத் தெரியாதது ஒன்று உண்டோ? பிரம்ம தேவனும், தேவர்களுமே உன்னை அறியாமல் இருக்கும்போது, என் போன்றவர்கள் ஒருநாளில் உன்னை அறியமுடியுமோ? இன்றைக்கு நீ என்னை மறந்தது ஏனோ? நீதான் எனக்குத் தாய் தந்தை என்னும் உறவுகளைக் கொடுத்தாய். அவர்களை வழிபடும் நெறியையும் நீதான் தந்தாய். நீ குடியிருக்கும் நெஞ்சை உடையவன் நான். நீ தந்த இந்த நோயை நீயே தீர்க்கவும் வேண்டும்’ என்று இறைஞ்சினான்.

பிரகலாதனின் இந்த நிலையை அறிந்து கொண்ட இரணியன் தன் வீரர்களிடம் ‘அவனை என் முன் கொண்டு வாருங்கள். இவனைக் கொல்வது ஒன்றே இனி வழி. இவனது பைத்தியம் தீர இவனுக்கு கடுமையான் விஷத்தை கொடுங்கள்’ என்றான். அப்படியே தனக்குக் கொடுக்கப்பட்ட கடுமையான விஷத்தை சாப்பிட்டும் பிரகலாதன் சோர்வடையவில்லை. முடிச்சுகள் போடப்பட்ட சாட்டையினால் பல வீரர்கள் அவனை அடித்தனர். இதைப் பார்த்தவர்கள் இனி பிரகலாதன் பிழைக்க மாட்டான் என்று நினைத்திருக்கையில் அவன் தன்னுள்ளத்துள் ‘ஆயிரம் கைகள் என்று எண்ணிக்கையில் அடக்க முடியாத கைகளை உடைய எம்பெருமான் என் உள்ளத்தில் இருக்கின்றான்’ என்று அந்தப் பரமனை தியானம் செய்தவாறு இருந்தான். பிரகலாதன் மேல் விழும் கணக்கில்லாத அடிகளை அந்தப் பரமன் தனது எண்ணிக்கை இல்லாத கைகளினால் தடுத்தான் என்றும் கொள்ளலாம். இதனைக் கண்ட இரணியன் ‘இவன் எதோ மாயசக்தியினால் பிழைத்திருக்கிறான். இவன் உயிரை நானே மாய்ப்பேன்’ என்று வருகிறான். அவனைப் பார்த்துப் பிரகலாதன் கூறுகிறான்: ‘ உன்னால் என் உயிரைப் பறிக்க முடியாது. எல்லா உலகங்களையும் படைத்தவனின் செயல் அது’.

இவ்வார்த்தைகளை கேட்ட இரணியன் கொதித்து எழுந்து பேசுகிறான்: ‘யாருடா இந்த உலகத்தை படைத்தது? என்னை புகழ்ந்து பேசி வாழ்கின்றன மூம்மூர்த்திகளா? இல்லையென்றால் முனிவரா? என்னிடம் எல்லாவற்றையும் தோற்று ஓடிய தேவர்களா? இல்லை வேறுயாராவதா? யாரு சொல்லடா’ என்கிறான்.

இரணியனுக்கு பிறந்த பிரகலாதன் அவனுக்கு சற்றும் சளைக்காமல் பதில் சொல்லுகிறான். ‘தந்தையே! எல்லா உலகங்களையும் படைத்தளித்தவனும், பல்வேறு வகையான உயிர்களைப் படைத்தவனும், அந்த உயிர்கள் தோறும் நீக்கமற நிறைந்திருப்பவனும், மலரிலே மணமாயும். எள்ளிற்குள் எண்ணையாயும் இருப்பவனும், எல்லாப் பொருள்களையும் தன்னில் கொண்டிருப்பவனும் ஆகிய அந்த ஹரி தான் அது’

‘தந்தையே! நான் உன்மேல் வைத்துள்ள அன்பினால் நான் உறுதியாகக் கூறுவதை நீ கேட்க மாட்டாய்; என் கண்ணால் நான் காணுமளவிற்கு எங்கும் நிறைந்திருக்கிறான். உன் கண்ணால் பார்க்கும் அளவிற்கு எளியவனோ அவன்? உனக்குப் பின் பிறந்த உன் தம்பி இரணியாட்சன் உயிரைக் குடித்த புண்டரீகக் கண் எம்மான் அவன்’ என்கிறான் பிரகலாதன்.

‘பொற்கணான் (இரணியாட்சன்) ஆவி உண்ட புண்டரீகக் கண் அம்மான்’ என்று இந்தப் பாடலில் வரும் வரிகள் மிக அழகானவை.

கொஞ்சம் கொஞ்சமாக தந்தை தனயனின் வாக்குவாதம் சூடேறுகிறது. ‘எல்லாப் பொருளிலும் உறையும் உன் இறைவனைப் பார்த்துவிட்டு பிறகு நான் நல்லவற்றை செய்கிறேன். இந்த தூணில் இருக்கிறான் என்றாயே, எங்கே அவனை இங்கு நீக்கமற நிறையச் செய் எனக்குத் தெரியும் படி’ என்று பிள்ளையை அழைக்கிறான் இரணியன்.

அவனுக்குச் சற்றும் குறையாத பிரகலாதன் சொல்லுகிறான்: ‘நான் சொல்லும் ஹரி சாண் அளவே உள்ள பொருள்களிலும் இருக்கிறான். பிரிக்க இயலாத ஒன்றுபட்ட தன்மையை உடைய அணுவை நூறு நூறு துண்டாக வெட்டி அதில் வரும் பகுதியான ‘கோண்’ இலும் இருக்கிறான். மிகப் பெரிய மேரு மலையிலும் இருக்கிறான். இங்கிருக்கும் தூணிலும் உளன். இப்போது நீ எங்கே எங்கே என்று பேசுகிறாயே, அந்தப் பேச்சினுள்ளும் இருக்கிறான். இதை நீ வெகு விரைவில் இங்கு காண்பாய்’ என்று சொல்ல இரணியன் ‘நல்லது நல்லது’ என்கிறான்.

‘நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘நன்று, நன்று!’
என்ன நக்கு விசை திறந்து உருமு வீந்ததென்ன ஓர் தூணின்,
வென்றி இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்;
எற்றலோடும் திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, அச்செங்கண் சீயம்’.

பிரகலாதனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆடினான்; பாடினான்; துள்ளிக் குதித்தான். அப்படியிருக்கும் போது இரணியன் நரசிம்மத்தைப் போருக்கு அழைத்தான்: ‘யாரடா சிரித்தது? என் பிள்ளை சொன்னானே, அந்த அரியா? எனக்குப் பயந்து ஓடி கடலினுள் ஒளிந்து கொண்டது போதாது என்று இப்போது இந்தத் தூணினுள் ஒளிந்து கொண்டாயா? வா வா, சீக்கிரம், போர் செய்யலாம்’ என்று கூப்பிட்டான்.

இப்போதுதான் பிளக்கிறது தூண். சீயம் அந்தத் தூணினுள் பிறந்தது. பிறகு எட்டுத் திசையெங்கும் வளர்ந்தது பேரண்டத்தை அளந்தது; அதற்கப்புறமும் வளர்ந்ததை யார் அறியமுடியும்? அது வளர்ந்ததால் உலகமாகிற முட்டை மேலும் கீழுமாகக் கிழிந்தது. அடுத்து வரும் பாடல்களில் அந்த நரசிங்கம் அரக்கர்களை எல்லாம் அழித்ததைக் கூறுகிறார் கம்பர். தனது கூரிய நகங்களால் அரக்கர்களை பிடித்து மலைகளில் மோதியது. நீருக்குள் குமிழி வரும்படி அழுத்தியது; கைகளால் பிசைந்தது.

பிரகலாதன் தனது தந்தையைப் பார்த்து ‘இப்போதாவது இறைவனை வணங்கு; அவன் உன்னுடைய அடாத செயல்களை எல்லாம் பொறுப்பான்’ என்கிறான். அவனோ ஒரு கையில் வாளை ஏந்தி இன்னொரு கையில் கேடயத்தை பற்றிக்கொண்டு நரசிம்மத்தை எதிர்க்கத் தயாரானான்.

‘இந்த சிங்கத்தின் தோளையும் தாளையும் வெட்டிக் களைந்து அதே கையோடு உன்னையும் வெட்டிச் சாய்ப்பேன் பிறகு இப்படிச் செய்த எனது வாளை வணங்குவேன். அது செய்யாமல் இந்தச் சிங்கத்தை நான் வணங்குவேனோ?’ என்றான். இப்படிச் சொன்ன இரணியனது கால்களை தனது ஒரு கையால் பற்றி நரசிங்கப் பெருமாள் சுழற்றினான்.

இரணியனை மாலைப் பொழுதில் அவனது அரண்மனையின் வாசலில், தனது மடியின் மேல் இருத்திக் கொண்டு தனது கை நகத்தின் முனையாலே, குருதி பொங்க அவனது வயிரம் பாய்ந்த மார்பினை இருபிளவாகப் பிளந்து கொன்றான்.
சீற்றத் தோற்றமுடைய சிங்கப் பிரானைக் கண்டு தேவர்கள் அஞ்சினர். பிரமன் வந்து துதிக்கிறான்.
‘நின்னுள்ளே என்னை நிருமித்தாய்; னின் அருளால்,
என்னுளே, எப்பொருளும் யாவரையும் யான்
ஈன்றேன்; பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே!
பொன்னுளே தோன்றியது ஒரு பொற்கலனே போல்கின்றேன்’.

இதன் பிறகு சிங்கப்பிரான் சீற்றம் தணிந்து தேவர்களுக்கு அபயம் அளிக்கிறார் என்ற பாடலுடன் சென்ற சனிக்கிழமை வகுப்பு நிறைவடைந்தது.

இன்னும் நிறைய எழுதலாம். ஒவ்வொரு பாடலுக்கும் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! என்ன இனிமையான தமிழ்! கம்பராமாயணத்தை எப்போது முழுமையாக அனுபவிக்கப் போகிறோம் என்று மனது ஏங்குகிறது என்பதுதான் உண்மை.

14 thoughts on “சீயத்தின் சிரிப்பு தொடருகிறது……!

    1. வாங்க ஸ்ரீராம்!
      நிதானமாகப் படியுங்கள்.
      வருகைக்கும் படித்த பின் போடப்போகும் கருத்துரைக்கும் நன்றி!

  1. உங்கள் பதிவைப் படிக்கும் போது கம்பராமாயணம் படிக்கும் ஆவல் உண்டாகிறது. பிரகலாதன் கதை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் ரஞ்சனி.

    1. வாங்க ராஜி!
      உங்களுக்கு ஓர் தகவல்: தமிழ் இணையப் பல்கலைகழகத்தின் இணையப் பக்கத்திற்குப் போனால் கம்பராமாயணம் முழுவதும் விளக்க உரையுடன் இருக்கிறது. படித்துப் பாருங்கள். சுலபமாகப் புரியும்.

      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    1. வாங்க ஆறுமுகம்!
      வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும் நன்றி!

  2. பெங்களூருவில் கம்பராமாயண வகுப்புகள். ஹிரண்யகசிபுவின் ஆணவக்கொக்கரிப்பு, சிங்கத்தின் சிலிர்ப்பான சிரிப்பு, ப்ரஹலாதன் கண்ட காணக்கிடைக்காத காட்சி-கம்பனின் தேனினும் இனிய சொல்லாட்சி என உங்களின் தொடர் பக்திமணம், இலக்கியரசனையோடு மகிழ்வு தருகிறது.

  3. திரைக்கதை போல் கண்முன் விரிகிறது காட்சி… அருமை… அருமை…
    சீயத்தின் மேலான என் கவிதையை ரசித்து பதிலளித்ததற்கு மிக்க நன்றிகள்…

  4. பாடலும், பொருளும் சுவையானதாக உள்ளது. தொடர்ந்து வருகிறேன்.

  5. தெரிந்த கதை தான். சமீபத்தில்தான் திருமதி விசாகா ஹரி சொன்ன பிரகலாத சரித்திரம் பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன் என்ன இருந்தாலும் திருமதி ரஞ்சனியின் நடையே வேறு ரசித்தேன் அதுமட்டுமல்ல கிறிஸ்துமஸ்க்கு என் பிள்ளைக்கு கிடைத்த இரண்டு நாள் விடுமுறையில் மங்கள கிரி பானக நரசிம்மஸ்வாமியை மிக அருகில் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது அது பற்றி என் பதிவில் எழுதுகிறேன் கட்டாயம் படிக்கவும்

Leave a reply to ஸ்ரீராம் Cancel reply