சிரித்தது செங்கட் சீயம்!

படம்: நன்றி கூகிள்

ஒரு வாரமாக காத்திருந்தது நேற்று கைக்குக் கிட்டியது. சென்ற வாரம் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களை சந்தித்தோம். உள்ளத்தில் தோன்றுவதை  அப்பட்டமாக  எழுதும் விமரிசகர் அவர். அவரால் எனது டாலர் நகரம் மதிப்புரை பரிசிற்கு உரியதாகத் தெரிந்தெடுக்கப்பட்டது என்பது எனது எழுத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.

அன்றைக்கே மதியம் கம்பராமாயண முற்றோதலில் இரணியவதைப் படலம்; தூணிலிருந்து நரசிம்மம் வரப்போகிறது என்று திருமதி ஷைலஜா சொல்லிக்கொண்டிருந்தார். என் வீட்டில் விருந்தாளி வருவதாக இருக்கவே மனமில்லாமல் அவரிடம் ‘அடடா! நல்ல ஒரு கட்டத்தை இழக்கப் போகிறேனே’ என்று வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன். வெ.சா அவர்களைச் சந்திக்க வந்திருந்த ஹரிக்ருஷ்ணன் ‘இந்த வாரம் அவ்வளவு பாடல்கள் படிக்க முடியாது; அதனால் நரசிம்மம் அடுத்த வாரம் தான் வரமுடியும்’ என்றார். அடுத்த வாரம் என்றால் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். அன்றிலிருந்து நேற்று காலை கம்பராமாயண முற்றோதலுக்கு போகும்வரை 109 திவ்ய தேசத்து எம்பெருமான்களிடமும் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தேன். (108 திவ்ய தேசம் தானே, நீங்கள் 109 என்கிறீர்களே, என்று கேட்பவர்களுக்கு, எங்கள் வீட்டில் இருக்கும் நாராயணன் எம்பெருமானிடமும் அனுமதி வாங்க வேண்டுமே!)

ஒரு வழியாக எல்லா நாளும் கோளும் நல்லதாக அமைய நேற்று சனிக்கிழமை 20.12.2014 அன்று நாங்கள் எல்லோரும் காலை பத்து மணியளவில் திரு சொக்கன் அலுவலகத்தில் கூடினோம். கம்பராமாயண முற்றோதலில் அது 93 வது அமர்வு. யுத்தகாண்டம்  படித்துக் கொண்டிருக்கிறார்கள். விபீஷணன் ராமனை அடைக்கலம் புகுவதற்கு முன் தன் அண்ணன் ராவணனுக்கு அறிவுரை கூறும் முகமாக இந்த இரணியவதையை கூறுகிறான்.

இந்த படலத்தின் உயிரான பாட்டு இது:

சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச்

சத கூறு இட்ட கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்;

இந்நின்ற தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்;

இத்தன்மை காணுதி விரைவின்என்றான்; ‘நன்றுஎனக் கனகன் சொன்னான்.

நாங்கள் இந்த முற்றோதலின் போது ஆளுக்கு ஐந்து ஐந்து பாடல்கள் என்று படித்துக் கொண்டு போனோம். மேற்கண்ட பாடல் ஷைலஜாவிற்கு வந்தது. பாதிப் பாடலுக்கு மேல் அவருக்கு படிக்க முடியாமல் கண்களில் நீர் ததும்பியது. குரல் கம்மியது. சமாளித்துப் படித்து முடித்துவிட்டு சொன்னார்: மனதளவில் ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதியின் நுழைவாசலில், மேலே உள்ள மேட்டழகிய சிங்கர் சந்நிதிக்கு எதிரில் உள்ள கம்பராமாயண அரங்கேற்ற மண்டபத்திற்குப் போய்விட்டதாகவும், சிறுவயதில் பல நேரங்களில் இந்த மண்டபத்தில் நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருப்பது வழக்கம் என்றும் கூறிய போது நாங்களும் அவருடன் அந்தக் காலத்திற்குப் பயணப் பட்டோம். எங்களாலும் அவரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தப் பாடல்களை முழுவதும் படிக்க வேண்டுமென்பது தனது பல நாளைய கனவு என்றார் ஷைலஜா. தெய்வீகப் பாடல்களுக்கு இருக்கும் மேன்மையை என்ன சொல்ல? இதனால் தான் இப்பாடல்களை ஈரச் சொற்கள் என்கிறார்களோ?

மேலே கம்பனை அனுபவிப்போம் வாருங்கள். மகனைப் பார்த்துச் சொல்கிறான் இரணியன். ‘நீ இப்போது சொன்னாயே, எங்கும் பரந்துளான் உன் இறைவன் என்று. அவனை நீ நான் காணும் படி இந்தக் கம்பத்தின் வழியே  காட்டாது போவாயானால், மத்தகத்தை உடைய யானையை சிங்கம் கொல்வது போல உன்னை கொன்று உன்னுடைய இரத்தத்தையும் குடித்து, உன் உடலையும் தின்பேன்’ என்றான்.

இப்படிச் சொன்ன தந்தையைப் பார்த்து மகன் சொல்லுகிறான். ‘உன்னால் கொல்லும்படி என் உயிர் அத்தனை சுலபமானது அல்ல; நான் அப்போது சொன்னவன் நீ தொடும் இடம் எல்லாவற்றிலும் தோன்றுவான் அப்படித் தோன்றவில்லையாயின் என் உயிரை நானே மாய்த்துக் கொள்வேன்; அப்படியில்லையானின் நான் திருமாலுக்கு அடிமையானவன் இல்லை’

‘நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘நன்று, நன்று!’

என்ன நக்கு விசை திறந்து உருமு வீந்ததென்ன ஓர் தூணின்,

வென்றி இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்;

எற்றலோடும் திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, அச்செங்கண் சீயம்’.

மகன் இத்தனை சொல்வதைக் கேட்ட அரக்கனுக்கும் இறைவனைக் காணலாம் என்கிற ஆசை அதிகமாக வர  மிகுந்த வேகத்துடன் ஓடி, இடி விழுவது போல ஒரு தூணை தன் கையால் அறைந்தான். அந்த நொடி திசைகள் எல்லாம் திறந்து அண்டம் பிளந்து கிழியுமாறு நரசிங்கம் சிரித்தது.

இந்தப் பாடலை படிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்ன ஒன்று என்றால் நரசிங்கம் எனது மென்மையான குரலில் அமைதியாக வந்தார்! ஆனாலும் இந்தப் பாடலைப் படித்தவுடன் உடல் சிலிர்த்தது நிஜம்! ஆனால் அந்த மென்மையை ஈடு செய்யும் வண்ணம் ஹரிஜி அவர்கள் பெரும்குரலில் இந்தப் பாடலை படித்தார். (எல்லாப் பாடல்களையுமே நாங்கள் ஒருதரம் படித்தவுடன் ஹரிஜி மற்றொருமுறை பதம் பிரித்து கணீரென்ற குரலில் படிப்பார்)

ஷைலஜா சொன்னார்: இந்தப் பாடலை திருமூலநாதன் (எங்கள் குழுவிலிருக்கும் ஒரு இளைஞர்) படித்திருக்க வேண்டும் என்று. நான் அமைதியாகப் படித்த போதே உடல் சிலிர்த்தது என்றால் அவர் கம்பீரமாகப் படித்திருந்தால் எங்களுக்கு ‘நரசிம்ம ஸ்வாமியே’ வந்திருப்பார் என்று தோன்றியது.

இன்று நரசிம்மன் வருகிறார் என்பதற்காக ஷைலஜா பானகம் செய்து எடுத்து வந்திருந்தார். செங்கண் சீயம் சிரித்தவுடன் பானகத்தை அவருக்கு அமுது செய்வித்தார். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், சுண்டல் இவற்றுடன் நாங்களும் எங்கள் மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு வழி நெடுக சிங்கப்பிரானைப் பற்றியும்,  நாங்கள் உணர்ச்சி வசப்பட்டதையும், உடல் சிலிர்த்ததையும் பேசியபடியே வந்தோம்.

என்னை ஒரு தாயினும் பரிந்து அழைத்துச் சென்ற ஷைலஜாவிற்கு எனது முதல் நன்றி. காரில் வந்து எங்களையெல்லாம் கூட்டிச் சென்ற மகேஷிற்கும், வழி நெடுக சிரித்து பேசியபடி வந்த ஐயப்பன், திருமூலநாதன், வகுப்பில் அவ்வப்போது தனது விளக்கத்தையும் தந்து வகுப்பை நடத்தி சென்ற சொக்கனுக்கும், ஒவ்வொரு பாட்டையும் கம்பீரமாகச் சொல்லி விளக்கம் அளித்த ஹரிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

இனி அடுத்த வருப்பிற்கு நான் போவேனா? தொடர்ந்து செல்ல முடியுமா என்ற வினாவெல்லாம் மனதுள் எழுந்தாலும், இந்த சனிக்கிழமை வகுப்பை எனது ஆயுள் முழுவதும் மறக்க இயலாது என்பது சரதம் (சத்தியம்) இந்த வார்த்தையை தந்த கம்பனுக்கு நன்றி!

14 thoughts on “சிரித்தது செங்கட் சீயம்!

 1. பெங்களூரில் கம்பராமாயணம் படிக்கிறீர்களா? கம்பராமாயணம் பற்றி எதுவும் தெரியாதவர்களுக்கும் இந்த மாதிரி வகுப்புகள் புரியுமா? அல்லது கம்பராமாயணத்தை கொஞ்சம் படித்து விட்டு செல்ல வேண்டுமா?

  நரசிம்மரைப் பற்றி நீங்கள் எழுதியதைப் படிக்கும் போதே உபன்யாசம் கேட்டதுப் போல் இருக்கிறது.
  தொடருங்கள் உங்கள் கம்பராமாயண வகுப்புகளை . எங்களுக்கும் அருமையான தகவல்கள் கிடைக்குமே !

  1. வாங்க ராஜி! சுமார் இரண்டு வருடங்களாக கம்பராமாயண வகுப்பு நடந்து வருகிறது. சனிக்கிழமைகளில் மதியம் ஆரம்பித்து முன் மாலை வரை. என்னால் இந்த வகுப்பிற்கு மட்டுமே போக முடிந்தது.
   கையில் புத்தகம் இருப்பதால் சுலபமாகப் புரிந்து கொள்ளமுடியும் ராஜி. நான் அன்று சுமார் எண்பது பாடல்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு போயிருந்தேன். முதலில் நீங்கள் கம்பராமாயணம் படித்திருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. எனக்கும் இதுவே முதல் முறை. பள்ளியில் சில சில பாடல்கள் படித்ததுடன் சரி.

   வருகைக்கும் நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கும் நன்றி!

 2. “சிரித்தது செங்கட்சீயம்” படித்து…
  சிலிர்த்தது எந்தன் தேகம்
  அருமை… மேலும் இதைப்பற்றி எழுதினால் 🙂 🙂

  முன்பு நான் எழுதிய “தசாவதார மகிமை” என்ற பதிவில், நரசிம்ஹ அவதாரத்தைப்பற்றிய வரிகள் இங்கே. http://wp.me/p5gvcj-c

  அண்ட பகிரண்டமெலாம் அலறிய ரற்றிடவே
  ஆறாச்சினத் தோடோ ரரியநர சிங்கமென்றே
  அன்பனுக் கருளவே வக்கணமாங்கே நின்ற
  ஆளரிநின் அருட்பாதம் போற்றி போற்றி!!

  1. வாங்க ராகவன்!

   இன்னுமொரு பதிவும் எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள். உங்களுடைய நரசிம்ஹ அவதாரத்தைப் பற்றிய பாடல் அருமையாக அமைந்திருக்கிறது. பாராட்டுக்கள்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க தனபாலன்!
   வருகைக்கும், எனது அனுபவத்தை உணர்ந்ததற்கும் நன்றி!

 3. 109 திவ்ய தேச கடவுளின் அருளோடு நரசிம்மனை தரிசித்த உங்களின் அனுபவத்தைப் படிக்கும்போதே என் மேனி சிலிர்த்தது என்றால் நேரில் கேட்டு அனுபவித்த உங்களின் அனுபவம் எப்படி இருந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிகிறது ரஞ்சனி பாராட்டுக்கள்

  1. வாங்க விஜயா!
   உங்களுக்கும் மேனி சிலிர்த்தது என்றாள் அது கம்பனின் பாடல்கள் கொடுக்கும் அனுபவம்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. ஏற்கெனவே குழுமத்தில் படித்தேன். ஷைலஜா எழுதி இருந்தார். இங்கே உங்கள் பகிர்வு. மிக்க நன்றி. நரசிம்ம தரிசனம் அருமை.

 5. படித்தவுடன் நானும் நேராக உங்களுடன் அமர்ந்து சொற்பொழிவைக் கேட்டமாதிரி,உணர்ச்சி வசப்பட்டமாதிரி இருந்தது. என்ன அருமையான கட்டம். நரஸிம்ஹ தரிசனம் இப்படி எதிர்ப்பார்க்காத விதத்தில் கிடைத்தது பாக்கியம்தான்.
  உணர்ச்சிக் குவியல் ஆஹா!!!!!!!!!!!!!!!!!அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   உண்மையிலேயே உணர்ச்சிக் குவியல்தான்! வேறு வார்த்தைகளே இல்லை!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 6. இன்று ஏதோ தேடப்போய் இந்த அருமையான பதிவை மீண்டும் ஒருமுறை படித்துச் சிலிர்த்தேன்!! அடடா !!

  அடியேன் கூட அந்த நிகழ்வைக் கற்பனை செய்தேன் இவ்வாறு: https://asmalltownkid.wordpress.com/2015/07/12/ந்ருஸிம்ஹ-பிரதாபம்/

  🙏🙏

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s