என் குடும்பம்

மாடு மேய்க்கும் கண்ணா……!

crying baby

 

 

 

அடிச்சுப் பாடடி பெண்ணே 2

 

கதையை தொடரும் முன் நேயரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்துவிடலாம். சரியா?

இதோ கீதா கேட்டிருந்த ஓடப்பாட்டு:

 

எழிலுடையாள் பார்புகழும்

தசரதர் மகனாக வந்தவரே ஸ்வாமி

தாடகை தன்னுயிரை கொன்றுமே வந்து

 

அகலிகையை சாப விமோசனமும் தந்து

அன்புடனே ஜனகரது அரண்மனைக்கு வந்து

குவலயத்தோர்களும் கொண்டாடி நிற்க

கூறியே கோதண்டராமனே என்று

பரிவாரமுடன் வில்லை வளைத்துமே வந்து

பாவை ஜானகியுடன் பக்கத்தில் நின்று

ஜெயஜெயவென்றுமே மேளங்கள் கொட்ட

ஸ்ரீராமர் ஜானகியை கல்யாணம் செய்தார்

ஏலேலோ ராமஜயம்

ஏலேலோ சீதாஜயம்

 

இதைப் போன்ற பாடல்கள் எல்லாம் திருமதி சரஸ்வதி பட்டாபிராமன் என்பவரால் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு ‘கெளரி கல்யாண வைபோகமே’ என்ற தலைப்பில் லிப்கோ வெளியீடாகக் கிடைக்கிறது என்ற உபரித் தகவலையும் இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

 *************************************************************************************

 

யதியின் கதையை தொடரலாமா?

யதியின் அம்மாவின் ஆசைக்காக இரண்டு நபர்கள் சங்கீத சாகரத்தில் தினமும் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். முதலாமவர் பாட்டு வாத்தியார் அனந்தசயனம். எந்த வேளையில் இந்தப் பெயர் வைத்தார்களோ பாவம்! தனது சிஷ்யகோடிகளின் பாட்டைக் கேட்டால் சயனிக்கும் ஆசையே போய்விடும் அவருக்கு.

 

இரண்டாவது நமது கதாநாயகி யதிராஜவல்லி. அம்மாவின் தாங்க முடியாத தொணத்தொணப்பிற்காக சங்கீத சாகரத்தில் விழுந்தவள் இவள். இவர்கள் இருவரையும் பார்த்துப் பூரித்து போனது யதியின் அம்மாதான்.  எப்போதோ தனது சின்ன வயதில் வாங்கிய ஹார்மோனியம் இப்போதாவது பயன்படுகிறதே என்று படு உற்சாகமாக இருந்தால். படு பழசான அந்த ஹார்மோனியத்தில் இருந்த  வெள்ளையும் கருப்புமான சின்னசின்ன கட்டைகள் எழுப்பும் ஒலி அவள் காதில் தேனாகப் பெய்தது.  ‘ஸா’ ‘பா’ ‘ஸா’ விற்கே இத்தனை உணர்ச்சி வசப்படுபவள் இன்னும் பெண் எதிர்காலத்தில் ஒரு எம்எஸ் ஆக வருவாள் என்ற கற்பனையில் வானத்தின் உச்சிக்கே  போய்வந்தாள்.

 

தினமும் யதியை ‘ஸா’ பிடிக்கச் சொல்லி கெஞ்சி கெஞ்சி முடியாமல் நொந்து போனார் அனந்தசயனம். ‘இந்த கஷ்டமான சரளி வரிசை, ஜண்ட வரிசை மாதிரி தண்டம் எல்லாம் வேண்டாம். என் பெண்ணுக்கு ஏதாவது பாட்டு சொல்லிக் கொடுங்கோ’ என்றாள் யதியின் அம்மா ஒருநாள். ‘மாடு மேய்க்கும் கண்ணா சொல்லிக் கொடுங்கோ ஸார்!’ என்றாள் யதி பரவசமாக. வாத்தியாருக்கு சந்தோஷமான சந்தோஷம். பின்னே யதி முதல் தடவையா சங்கீதம் கத்துக்கறதுல கொஞ்சம் சுவாரஸ்யம் காட்டறாளே! ஹார்மோனியத்துல ‘ஸா’ பிடித்தார். ‘ஸார்! கண்ணன் மாடு மேய்க்கறதுக்கு எதுக்கு ஸார் ‘ஸா’ பிடிக்கணும்?’ (நியாயமான கேள்வி!!!) ஹார்மோனியத்தை தூக்கி அந்தப்பக்கம் வைத்தார். ‘மாடு மேய்க்கும் கண்ணா….’ என்று ஆரம்பித்தார்.

 

ஆஹா! இங்கு ஒண்ணை சொல்ல மறந்துட்டேனே! யதி பாடும்போது யதியின் அம்மா வாத்தியாரின் பின்னால் நின்று கொண்டு யதிக்கு ஆணை கொடுத்துக் கொண்டே இருப்பாள். அனந்தசயனத்திற்கு யதியுடன் கூட அவள் அம்மாவையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம். ‘ஸ்ருதி தானே வேண்டாம், தாளம் போடலாமே’ என்று கேட்டபடியே அனந்தசயனம் ‘மாடு மேய்க்கும் கண்ணா’ என்று தனது தொடையில் தாளம் போட்டுப் பாட ஆரம்பித்தார். நுணலும் தன் வாயால் கெடும் என்பார்களே அந்தப் பழமொழி அவருக்கு ஏனோ அப்போது நினைவிற்கு வரவில்லை, பாவம்!

 

யதிக்கு வேறு ஒரு நினைப்பு. அடுத்தவாரம் வரவிருக்கும் தனது அத்தைப் பெண்ணிற்கு இந்தப் பாட்டைப் பாடி ஆடியும் காட்டிவிட வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருந்தாள். யதிக்கு ஆடத் தெரியுமா என்று அபிஷ்டு மாதிரி கேட்கப்படாது, ஆமா சொல்லிட்டேன்! என் கதாநாயகி சகலகலாவல்லியாக்கும்! வாத்தியார் பாடிய வரியை யதியும் பாடினாள். இல்லை இல்லை அப்படியே உரைநடை போல ஒப்பித்தாள். ராகத்திற்கும் அவளுக்கும் எட்டாம் பொருத்தமாயிற்றே! அனந்தசயனம் மறுபடி மறுபடி கண்ணனை ‘மாடு மேய்க்கப் போகாதே’ என்று பாடிக் கொண்டிருந்தார். ஊஹூம்! யதிக்கு ராகம் வரவேயில்லை. அனந்தசயனம் யதியின் மேல் வந்த கோபத்தை தன் தொடை மேல் காட்டினார். யதியின் அம்மாவுக்கு பெண்ணின் மேல் ரொம்ப கோபம். வாத்தியார் பாவம் எத்தனை முறை அடிச்சு அடிச்சு சொல்லித் தருவார். இந்தப் பெண்ணிற்கு வரவேயில்லையே! மனம் நொந்து போனாள். ‘யதி அடிச்சு பாடுடி, அசடு! அடிச்சுப் பாடு’ என்று கையை ஆட்டி ஆட்டி ஜாடை காட்டினாள். யதிக்கு ஒன்றும் புரியவில்லை. யாரை அடிக்கச் சொல்றா அம்மா? திரும்பத்திரும்ப அம்மா சொல்லவே தாய் சொல்லைத் தட்டாத தனயள் இல்லையோ அவள்? அடுத்த நொடி ‘பளார்!’ என்று ஒரு சத்தம். அனந்தசயனம் கன்னத்தில் ஒரு கையை வைத்துக் கொண்டு கண்களில் நீர் மல்க உட்கார்ந்திருந்தார்! இன்னொரு கையில்…? அதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா?

 

யதியின் பாட்டு வகுப்பு அப்படியே நின்று போனது. வாத்தியார் சம்பளம் கூட வாங்கிக் கொள்ளாமல் மறைந்து போனார். இந்தக் கதை நிஜமா என்று கேட்கிறவர்கள், இதை என் கடைசி மாமா சொல்லி  கேட்கணும். நேரில் பார்த்தவர் போல சொல்லுவார். எத்தனை முறை சொல்லியிருப்பாரோ, நாங்கள் எத்தனை முறை விழுந்து விழுந்து சிரித்திருப்போமோ, நினைவில்லை. மேற்சொன்ன கல்யாணத்தில் கூட என் மாமா இந்த கதையை சொல்ல ‘கெக்கே…கெக்கே’ என்று சிரித்துக் கொண்டே இருந்தேன். அதோட கூட இன்னொன்றும் சொன்னார்: ‘கல்யாணப் பெண்ணோட அம்மாவுக்கு பீரங்கி மாதிரி குரல்’ என்று. பீரங்கிக்கு குரல் உண்டா?

 

அடுத்து அடித்துப் பாடும் பாடகி….! (தொடரும்)

Advertisements

21 thoughts on “மாடு மேய்க்கும் கண்ணா……!

 1. பிரமாதம் ரஞ்சனி அம்மா அடிச்சு பின்னிடீங்க! நான் பாட்டு கிளாஸ் போனது என் கண் முன்னே நியாபகத்துக்கு வந்து சென்றது… என்னுடன் பாட்டு படித்த பெண் நிஜமாகவே பீரங்கி குரலில் தான் பாடுவாள்… அவளை திரும்ப திரும்ப பாட சொல்லுவார் ஆசிரியை… நாங்கள் எல்லோரும் அமைதியாய் கேட்டு கொண்டிருக்கும் போது தோழி ஒருத்தி தாங்க மாட்டாது களுக் என்று சிரிக்க நான் குபுக் என்று சிரித்து மாட்டி கொள்வேன் 😀

  1. வாங்க மஹா!
   குரல் இல்லாதவர்களுக்குத் தான் பாட வேண்டும் என்ற ஆசை வரும் போலிருக்கே!
   வருகைக்கும், ரசித்துப் போட்ட கருத்துரைக்கும் நன்றி!

 2. நல்லாவே அடிச்சுப் பாடி இருக்காங்க யதிராஜவல்லி. வாழ்க, வளர்க! 🙂 ஓடப்பாட்டுப் பகிர்வுக்கு நன்றி. லிஃப்கோவில் புத்தகம் கிடைத்தால் வாங்கிடறேன்.

  1. வாங்க கீதா!
   உங்கள் வாழ்த்துக்களை யதிராஜவல்லியிடம் சொல்லிவிடுகிறேன். பாட்டுப் புத்தகத்தில் மசக்கைப் பாட்டெல்லாம் கூட இருக்கிறதா என் ஓர்ப்படி சொன்னால். இணையம் மூலம் வாங்க முடியுமான்னு பாருங்க. லிப்கோ தளம் இருந்தால் வாங்கி விடலாம்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 3. குதிச்சுப் பாடறது,கொட்டிப்பாடரது இதெல்லாம் கும்மி அடிப்பதைச் சொல்வார்கள் சிலர். அடிச்சுப்பாடி அழுதுகொண்டோடி ரொம்ப சிரிப்பா இருந்தது. நான்கூட அடிச்சுப் பாடடி என்றால் தாளத்தைத்தான் சொல்லுவார்கள் என்று நினைத்தேன். கதை சுவாரஸ்யமாகப் போகிறது.
  பீரங்கி படபடவென்று பொழியப்போகிறதா என்னசெய்யப் போகிறது? / யாது செய்யப் போகிறது. குண்டு துளைக்காத உடை அணியவேண்டியதுதான். அன்புடன்

  1. வாங்கோ காமக்ஷிமா!
   தாளத்தைத் தான் தாயார் சொல்லியிருக்கிறாள். மகள் சமர்த்தாகப் புரிந்து கொண்டிருக்கிறாள்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. எத்தனை நகைச்சுவையாக எழுதுகிறீர்கள் ரஞ்சனி பிரமாதம் ஆனாலும் உங்களுக்கு யதியைக் கண்டால் ஏன் ஆகமாட்டேன் என்கிறது புரியவில்லை பீரங்கிக்கும் குரல் உண்டு. ஆனால் அதை நம்மால் ரசிக்கமுடியாது அவ்வளவுதான் என் பாட்டி கூட சொல்வார் ஆகா என்ன பீரங்கிக்குரல் அந்தப் பெண்ணுக்கு என்று அபஸ்வரம் பாடுபவர்களை குறிக்கும் அடைமொழிச்சொல் அது ஜமாயுங்கள்

 5. பாவம் அனந்தசயனம்!! யதிராஜவல்லி புத்திசாலி பொண்ணா இருக்காளே….:))) சிரிச்சு மாளலை…:))

  பீரங்கிக் குரலை படித்ததும், சிறுவயதில் என் தம்பி ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பீரங்கி பச்சடி போடுங்கோ மாமா என்றது தான் நினைவுக்கு வந்தது…..:))) அவன் கேட்டது பீட்ரூட் ஸ்வீட் பச்சடியை…:)

  1. வாங்க ஆதி!
   பின்னே? என்னோட கதானாயகின்னா சும்மாவா?
   உங்கள் தம்பியின் பீரங்கி பச்சடியை ரசித்தேன்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s