Uncategorized

அரியலூர் அடுக்கு தோசை – 3   

    

படம் பார்த்தாதானே என்ன படம்னு நினைவிருக்கும்? படம் பார்க்கவிடாமல் நண்டு சிண்டுகள் கொட்டம் அடித்தன. கொட்டாய் உள்ளே நுழைந்து ‘பெஞ்சு’ சீட்டுக்கு போனோமோ இல்லையோ, ‘நான் மன்னி பக்கத்துல’, ‘நான் மன்னி பக்கத்துல’ என்று முட்டி மோதி ஒண்ணோட ஒண்ணு சண்டை. ‘நா நடுவுல உக்காந்துக்கறேன், நீங்க என் ரெண்டு பக்கத்துலயும் உக்காருங்கோ’ என்றால் என் பெண் ‘ஹோ’ என்று அழுகை. ‘நாந்தான் ஒன் கப்பத்துல (பக்கத்துல) என்று. ஒரு வழியா பெஞ்சின் ஒரு கோடியில் என் அகத்துக்காரர். இந்த கோடியில் நான். நடுவில் ஐந்து வாண்டுகள். எனக்கு அப்புறம் என் பெண். என் அகத்துக்காரருக்கு அந்தப் பக்கம் சித்தியா.

கொட்டாய் உள்ளே போறதுக்கு முன்னால நடந்துதே ஒரு கூத்து அதைச் சொல்லலையே. எழுந்து நின்ற ஆள் சீட்டு உள்ள போடல என்று தெரியவந்ததும் வாண்டுகள் ‘நா போய் இடம் பிடிக்கிறேன்; நா போய் எடம் பிடிக்கிறேன்’ என்று ஒரே சத்தம். சித்தியா ஒரு அதட்டல் போட்டார். கொஞ்சம் அமைதி. என் குழந்தைக்கோ இவர்கள் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்து ஒரே சிரிப்பு. என் இடுப்பில் உட்கார்ந்து கொண்டு குதிகுதின்னு குதிச்சுண்டிருந்தா. என் அகத்துக்காரர் சித்தியாவிடம் ‘நா டிக்கட் வாங்கறேன்’ ன்னு பர்ஸை எடுத்தார். ‘அண்ணா சேர் வாங்குங்கோ…. அண்ணா….!’ என்று எல்லாம் கோரஸ்ஸாக சொன்னதுகள்.  ‘அம்மாவோட வந்தா நாங்கள்ளாம் தரை டிக்கட்டுல தான் படம் பார்ப்போம். மணலை குமிச்சி வெச்சி அதும்மேல உக்காந்துண்டு படம் பார்ப்போம். கண்ணம்மா (சித்தியின் கடைசிக் குழந்தை) தூங்கியே போய்டுவா!’

‘மன்னி மெட்ராஸ். அதனாலே அண்ணா சேர்தான் வாங்குவார்’ என்று என்னைப்பார்த்து சிரித்தபடியே பெரியவன் சொன்னான்.

‘மெட்ராஸ் மெட்ராஸ்’ அப்படிங்கறது பாராட்டா, கேலியான்னு எனக்குப் புரியல. ஸ்ரீரங்கம் போனாலும் எல்லோரும் எங்களை ஒருமாதிரிதான் பார்ப்பார்கள். அதுவும் கொள்ளிடத்திற்குக் குளிக்கப் போனா நாங்கள் எல்லாம் கட்டிண்டு வந்த துணியோட ஆத்துல உக்காறத பார்த்து ஒரு நமுட்டு சிரிப்புடன், ‘பட்டணத்துலேருந்து வரேளா’ என்று அங்கருக்கற மாமிகளெல்லாம் கேலியா கேட்பா. அவா மாதிரி எங்களுக்கு ஒரு துண்டை கட்டிண்டு இடுப்புப் புடவையை தோய்ச்சுக் கட்டிக்கற வித்தை தெரியாது அதனால. இங்க இந்த குழந்தைகளும் மெட்ராஸ்ன்னு சிரிக்கறதுகளே! மெட்ராஸ்காரான்னா இளப்பமா?

டிக்கட் வாங்கின உடனே ‘உள்ள போலாம், உள்ள போலாம்’ ன்னு அமர்க்களம்.

‘படம் ஆரம்பிச்சிருக்குமா?’

‘ஊஹும். முதல்ல பீடி, சிகரெட் விளம்பரம். அப்புறம் அரசாங்க செய்திச் சுருள் வரும். ‘அஸ்ஸாமில் வெள்ளம்’, பஞ்சாபில் பஞ்சம்’ அப்படின்னு. அதுவும் சரியாத் தெரியாது. பிலிம் முழுக்க மழையா இருக்கும்!’

‘மழையா?’

‘ஆமா, மன்னி  ஒரே பிலிம காமிச்சு காமிச்சு தேஞ்சு போயிருக்கும்!’

பரவாயில்ல. பசங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. ‘சீவா பசங்களா கொக்கா?’ என்றார் என் அகத்துக்காரர் என் மனசப் படிச்சா மாதிரி.

அதற்குள் ஒரு வாண்டு திடீரென நினைவிற்கு வந்தது போல சொல்லித்து: ‘போனதடவ ஒரு கேலிப்படம் காமிச்சா. அதுல ஒரு மாமா முண்டாசெல்லாம் கட்டிண்டு  ரயில்ல வருவா. தன்னோட ஊர் வந்தவுடனே – ரயில் அவா ஊருல நிக்காது – அதனால ரயில்ல இருக்கற செயினப் பிடிச்சு இழுத்துடுவா. ரயில் நின்னவுடனே ஜாலியா விசில் அடிச்சுண்டே ரயில்ல இருந்து இறங்கி நடந்து போவா. அப்போ ஒரு கை நீளமா பின்னாலேருந்து வந்து அந்த மாமாவோட கழுத்தைப் பிடிச்சு அழைச்சுண்டு போயி, ஜெயில்ல போடும்…! செயினைப் பிடிச்சு இழுக்கக் கூடாதுன்னு எழுதிக் காட்டுவா’.

‘மன்னி நீங்க அந்தப் படம் பார்த்திருக்கேளா? மெட்ராஸ்ல அதெல்லாம் காட்டுவாளா?’

‘ம்ம்ம்…. காட்டுவா…’ என்றேன். அப்போது இந்தக் கேலிச்சித்திரம் தொலைக்காட்சிகளில் வந்துகொண்டிருந்தது.

ஒரு வழியா உள்ள போயி உக்காந்துண்டோம். அங்கே ஒரு அமர்களம் ஆச்சு. உண்மையிலேயே குழந்தைகள் சொன்னா மாதிரி அரசாங்கச் செய்திச் சுருள், செயினைப் பிடிச்சு இழுக்கற ஆள் என்று எல்லாப்படங்களுக்கு காண்பித்தார்கள். எனக்குக் கதை சொன்ன வாண்டு ரொம்பவும் என்ஜாய் பண்ணிண்டு ‘கிலுகிலு’ வென்று சிரித்துக் கொண்டிருந்தது. படத்தைவிட இதுகளைப் பார்க்கிறது எனக்கு பெரிய எண்டர்டெயின்மென்ட் ஆக இருந்தது.

இடைவெளில நான் சொன்னேன்: ‘குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கோ’

காதுல விழுந்துதோ இல்லையோ, ‘அண்ணா, காளிமார்க் சோடா’, ‘ இல்லண்ணா எனக்கு கோலி சோடா’ , ‘எனக்கு குச்சி ஐஸ்க்ரீம்!’ என்று ஒரே கூச்சல், கும்மாளம்.

எல்லோருக்கும் அவரவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தார். குழந்தைகளுக்கு குஷியோ குஷி.

படம் முடிஞ்சு வெளியே வந்தவுடன் இவர் கேட்டார் ‘பசிக்கறது, ராத்திரிக்கு என்ன சாப்பாடு?’

‘அடுக்கு தோசை….!’ என்றேன்.

(தொடரும்)

அரியலூர் அடுக்கு தோசை பார்ட் 1 

அரியலூர் அடுக்கு தோசை 2 

Advertisements

16 thoughts on “அரியலூர் அடுக்கு தோசை – 3   

 1. அரியலூரிலிருந்து நீங்கள் மெட்ராஸ் திரும்பி வரும் வரை இரவும் பகலும் அடுக்கு தோசைதானா? எத்தனை அடுக்கிக்கொண்டு திரும்பினீர்கள். உங்கள் டூரிங் டாக்கீஸ் அனுபவம் என் சின்ன பாட்டிகளுடன் நான் இராதா நல்லூரிலிருந்து திருவாரூர் சென்று டூரிங் டாக்கீஸில் பார்த்த படங்களையும் அந்த அனுபவங்களையும் நினைவு படுத்தியது ரஞ்சனி எழுதிய நடை அழகுக்கு விருதே கொடுக்கலாம். தொடருங்கள் நாங்களும் உங்கள் அடுக்கு தோசையை அனுபவிக்கிறோம்

  1. வாங்க விஜயா!
   எல்லோருக்குமே இந்த அனுபவம் இருக்கும். நீங்களும் உங்கள் அனுபவத்தை எழுதுங்கள், கூடிய விரைவில்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 2. நடுவில் படச்சுருள் விட்டுப்போய்,அதாவது படம் அறுந்து போய் ,முருக்குவடை சுண்டல் எனக் கோரஸாக வியாபாரம் ஆரம்பித்துவிடுமே. இப்படி எத்தனை முறை ஆகுமோ கடவுளுக்குத்தான் தெரியும். எங்கள் ஊரில்
  மண்தரை,கேலரிதான் இருக்கும். ஊரில் பெரிய மனுஷா யாராவது வந்தா ஒரு பழமையான இரண்டு சேர் வரும். யார் பெரிய மனுஷா? கொஞ்சம் பணக்காரா?
  நானெல்லாம் ஏழாவது படிக்கையில் ஸ்கூல் டீச்சர் அழைத்துப் போன முதல் படம்
  காரைக்கால் அம்மையார். என்னையும் அசைபோட வைத்து விட்டாய் மலரும் நினைவுகளை. நன்றி. கதையழகா,நடையழகா,புடவையழகா? எல்லாமே அழகுதான். அன்புடன்

  1. வாங்கோ காமாக்ஷிமா!
   உங்கள் கருத்துரை படிக்கும்போதே நீங்கள் அந்த காலத்திற்குப் போய்விட்டது புரிகிறது.
   வருகைக்கும் ரசித்துப் படித்து பாராட்டியதற்கும் நன்றி!

 3. நான் சென்னை வந்ததும் டென்ட் கொட்டாயிற்கு அழைத்து சென்று விட்டீர்கள் ரஞ்சனி. . மிக மிக சுவை உங்கள் அடுக்கு தோசை . தொடர்ந்து எழுதுங்கள். எனக்கும் டென்ட் கொட்டாய் அனுபவம் உண்டு. வேறொரு சமயத்தில் எழுதுகிறேன். ஆனால் உங்கள் தொடர் என்னையும் ஒரு தொடர் எழுதும் ஆசையைத் தூண்டுகிறது.. எதைப் பற்றி எழுத …… யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
  வாழ்த்துக்கள் ரஞ்சனி.

 4. மண்ணைக் குமிச்சி வெச்சி உட்கார்ந்து படம் பார்க்கும் இடத்தில், ஒரு அசூசியான அனுபவம் எனக்கு உண்டு. உவ்வே. பிற்காலத்தில் என்னைப் போன்றே பீடிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் என புரிந்து கொண்டேன்.

  1. வாங்க பாண்டியன்!
   நீங்க சொல்றது சரி. எங்க பாட்டி எப்பவும் பெரிய பெட்ஷீட் கொண்டுவந்துடுவாங்க. எங்க குடும்பமே அதன் மேல் உட்கார்ந்துக்கும்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 5. அம்மா.. எனக்கும் இந்த டென்டு கோட்டை அனுபவமெல்லாம் உண்டு… அடுக்கு அடுக்காக நீங்கள் விவரித்த நிகழ்ச்சிகளால் அரியலூர் அடுக்கு தோசை மறந்து போச்சு பார்த்து கோங்க.. அடுத்து என்ன நடக்கும் ஆர்வத்துடன் விடை பெறுகிறேன் 🙂

 6. உங்கள் எழுத்து நடையில் அவ்வளவு சுவாரஸ்யம். அடுக்கு தோசை தொடர் தோசையாகி விட்டதே…:)

  நானும் முதல் முறை திருப்பராய்த்துறையில் அகண்ட காவிரியில் கரையில் உட்கார்ந்து கொண்டு கூஜாவில் மொண்டு குளித்தேன். பின்பு சுடிதாருடன். அப்புறம் தோய்த்து குளிக்க பழகிக் கொண்டேன். கும்பல் இல்லாததால்….:)

  கொள்ளிடத்தில் இதற்காகவே தான் குளிக்க போவதேயில்லை. அவ்வளவு சாமர்த்தியம் போறாது…:)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s