Uncategorized

பெங்களூரு, மைசூரு, ஷிவமொக்க…..

 

Karnataka name change truck

படம் நன்றி: http://bangalore.citizenmatters.in/articles/462-bengaluru-name

இனிமேல் எங்களூரை பெங்களூர் என்று ஸ்டைலாகச் சொல்ல முடியாது; சொல்லக் கூடாது! அதிகாரபூர்வமாக இனிமேல் பெங்களூரு தான். கர்நாடகாவிலுள்ள 12 நகரங்களுக்கு இப்பெயர் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

 

இந்தப் பெயரை மாற்றும் போட்டி ஒவ்வொரு மாநிலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது பலவருடங்களாக.

 

 • பாம்பே மும்பை ஆனது 1995 இல். இந்தப் பெயர் மாற்றத்திற்கு மகாராஷ்டிரார்கள் 40 வருடம் போராடினார்கள்.
 • மெட்ராஸ் சென்னை ஆனது 1996 இல்.
 • கல்கத்தா கொல்கத்தா ஆனது 2001.
 • த்ரிவேன்றம் திருவனந்தபுரம் ஆனது 1991.
 • பாண்டிச்சேரி புதுச்சேரி ஆனது 2006.
 • 2008 இல் பூனா பூனே ஆனது.
 • 2011 இல் ஒரிசா ஓடிஷா ஆனது.

 

 

இந்தப் பெயர் மாற்றங்களுக்கு ஒவ்வொரு மாநிலங்களும் செலவழிக்கும் பணம் கோடிக்கணக்கில் என்று செய்திகள் சொல்லுகின்றன. பெயர் மாற்றத்தால் என்ன பயன் என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. பெங்களூர் என்று ஆங்கிலத்தில் இருந்த பெயரை இப்போது பெங்களூரு என்று கன்னடப் படுத்திவிட்டோம் என்று சொல்லுகிறார்கள்.  பெருகிவரும் ஆங்கில மோகத்தை கட்டுப்படுத்தவும், நமது அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இது முதல் படி என்றார் சமீபத்தில் மறைந்த யு.ஆர். அனந்தமூர்த்தி.

 

உண்மையில் இந்த ஊருக்கு முதன்முதலில் இருந்த பெயர் ‘பெந்தகாளூரு’ அதாவது ‘வேகவைத்த பயறு ஊரு’. காளு என்பது முழுதானியங்ளை குறிப்பிடும் சொல். கெம்பே கௌட என்பவர்தான் பெங்களூருவை நிர்மாணித்தவர். அவர் ஒரு சமயம் இந்த பக்கம் வந்தபோது அவருக்கு ரொம்பவும் பசித்ததாம். ஒரு முதியவள் அவருக்கு வேகவைத்த பயறை சாப்பிடக் கொடுத்தாளாம். அதிலிருந்து இந்தப் பகுதியை அவர் பெந்தகாளூரு என்று குறிப்பிட ஆரம்பித்து அது மருவி பெங்களூர் ஆயிற்றாம்.

 

இன்னொரு வரலாறும் சொல்லப்படுகிறது. பேகூரு அருகே கண்டெடுக்கப்பட்ட, இந்த பிரதேசத்தை ஆண்ட கங்க மன்னர்களின் (860 கி.பி.) காலத்தில் வைக்கப்பட்ட ஒரு வீரக்கல்லில் இந்த ஊரின் பெயர் பெங்கவல்-ஊரு என்றிருக்கிறதாம். இதற்கு அர்த்தம் பாதுகாவலர்களின் நகரம் என்பது. இந்தப் பெயர் சில பல மாற்றங்களுடன் பெங்களூர் ஆகிவிட்டது.

 

தேதிவாரியாக இந்தப் பெயர் மாற்றத்தின் வரலாறு:

 • யு.ஆர். அனந்தமூர்த்தி பெங்களூரு என்று பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி.
 • செப்டம்பர் 27, 2006 ஆம் ஆண்டு ப்ருஹத் பெங்களூரு மஹாநகர பாலிகே இந்தக் கோரிக்கையை முன்மொழிந்தது.
 • ஆகஸ்ட் 30, 2012 – மத்திய அரசு சர்வே ஆப் இந்தியாவிடமிருந்து இந்தப் பெயர் மாற்றம் பற்றிய கருத்துரை கேட்டது.
 • சர்வே ஆப் இந்தியா, ரயில்வே துறை, தபால் துறை, அறிவியல், தொழில்நுட்பத்துறை, உளவுத்துறை போன்ற துறைகளின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அனுமதி கொடுக்க வெற்றிகரமாக இந்த நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன.
 • அக்டோபர் 17, 2014 மத்திய அரசு அனுமதி கொடுத்தது.
 • கர்நாடக முதல்வர் நவம்பர் 1, 2014 கன்னட இராஜ்யோத்சவ தினத்திலிருந்து இந்த நகரங்கள் புதிய பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

 

நகரங்களின் பெயரை மாற்றியாயிற்று. சரி. பல்கலைகழகங்களின் பெயர்கள், இன்னும் பல பிராண்ட் பெயர்கள் என்னவாகும்? மைசூர் சாண்டல் சோப் மைசூரு சாண்டல் சோப் என்றாகுமா? மைசூர் பல்கலைக்கழகம் மைசூரு பல்கலைக்கழகம் என்றாகுமா? மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். அதனால் பெயர்களுக்கு இருந்த மதிப்பு குறையலாம் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

 

இந்தப் பல்கலைக்கழகம் இந்தியாவில் ஆறாவதாக அமைந்த பல்கலைக்கழகம். 1916 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி மைசூரு மகாராஜா நால்வாடி கிருஷ்ணராஜ வாடியார் அரியணை ஏறினார். அதைத் தொடர்ந்து இந்தப் பல்கலைக்கழகம் 1916 ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி அமைக்கப்பட்டது.

 

2016 ஆம் ஆண்டு நூறு ஆண்டுகள் காணப்போகும் மைசூர் பல்கலைக்கழகம் தன் பெயரை மாற்றிக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. சில பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே பெயர் மாற்றத்திற்குத் தங்களை தயார் செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டன பாம்பே பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் என்று ஆனதுபோல.

 

பெயர் மாற்றப்பட்ட நகரங்களின் பழைய பெயர்களும் புதிய பெயர்களும் ஒரு லிஸ்ட்:

 

பழைய பெயர்                              புதிய பெயர்

பெங்களூர்                                        பெங்களூரு

பெல்காம்                                           பெளகாவி (Belagavi)

பெல்லாரி                                          பள்ளாரி (Ballari)

பீஜாபூர்                                                வீஜாபூரா (Vijapura)

சிக்மகளூர்                                         சிக்கமகளூரு

குல்பர்கா                                            கலபர்கி (Kalaburgi)

ஹாஸ்பெட்                                      ஹாஸபெட்டே (Hosapete)

மேங்களூர்                                          மங்களூரு (Mangaluru)

மைசூர்                                                  மைசூரு (Mysuru)

ஷிமோகா                                          ஷிவமொக்கா (shivamogga)

தும்கூர்                                               துமகூரு (Tumakuru)

ஹூப்ளி                                             ஹுப்பள்ளி

வெப்துனியா வில் இன்று 8.11.2014 வெளியான கட்டுரை.

 

இங்கு எனது அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒருமுறை ஒரு பார்மசி தொழிற்சாலையில் கன்னடம் (Spoken கன்னட) சொல்லிக் கொடுக்க என்னைக் கூப்பிட்டிருந்தார்கள். எப்போதும் ஆங்கிலம் (Spoken English) சொல்லிக்கொடுக்கும் எனக்கு இது ஒரு மாறுதலான அசைன்மெண்ட். அந்த தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்திருந்ததால் அங்கு வேலைபார்ப்பவர்களுடன் பேச கன்னடம் தேவையாக இருந்தது.

முதல் நாள் அறிமுகம் முடிந்தவுடன் திரு. த்ரிபாதி கேட்டார்: ‘மேடம், how to say pencil, pen, car in Kannada?’

எனக்கு இந்தக் கேள்வி கொஞ்சம் விசித்திரமாக இருந்தாலும் ‘இதற்கெல்லாம் நீங்கள் கன்னட வார்த்தைகள் கற்றுக்கொள்ள வேண்டாம். பென்சில், பென், கார் என்றே சொல்லலாம்’ என்றேன்.

உடனே அவர் சொன்னார்: இல்லை மேடம், பென்சிலு…பென்னு.. காரு என்று சொன்னால் கன்னடம் ஆகிவிடும்’ என்று!

இந்த சமயத்தில் எனக்கு ஏனோ இந்த விஷயம் நினைவிற்கு வருகிறது!

 

 

 

 

 

Advertisements

9 thoughts on “பெங்களூரு, மைசூரு, ஷிவமொக்க…..

 1. சோழர் காலத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த வெங்காலூர் தான் இன்றைய பெங்களூரு என்பது தான் உண்மை. ஆனால் அந்தப் பெயர்களுக்கு கன்னடர்கள் இன்று கற்பிக்கும் கருத்துக்களுக்கு விளம்பரம் அளிப்பதை தமிழர்கள் தவிர்க்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

  “வெங்கால மரங்கள் (button-flower trees) மிகுதியும் இருந்த ஊரு வெங்காலூர். கரூருக்கு அருகே கொங்கின் 24 உள்நாடுகளில் ஒன்று வெங்காலநாடு. அதனால் கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் வெங்காலூர் என்பதன் பெயர் வெளிச்சமாகிறது. இன்று வெங்காலூர் பெங்களூர், இந்தியாவின் கணினித் தொழில் நுட்பத் துறைத் தலைநகரமாகும்.”

 2. “கி. மு. 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியத்தில்,

  “வடவேங்கடம் தென்குமரி
  ஆயிடைத்
  தமிழ்கூறும் நல்லுலகத்து”

  என்று வேங்கடமலைக்கு அல்லது வேங்கடக் கோட்டத்தின் வடவெல் லைக்குத் தெற்கிலுள்ள நிலமெல்லாம் தமிழ்நாடெனக் குறிக்கப்பட்டது. அதற்குட்பட்டதே வெங்காலூர் (Bangalore).

  “கொங்கணக் கூத்தருங் கொடுங்கரு நாடரும்”
  “கோற்றொடி மாதரொடு குடகர் தோன்ற”

  என்னும் சிலப்பதிகார அடிகளால் கி.பி.2ஆம் நூற்றாண்டில் கருநாடு (கருநாடகம்), குடகு என்பன மொழிப்பெயராகவன்றி நாட்டுப் பெயரா கவே வழங்கியமை அறியப்படும்.

  கி. பி. 7ஆம் நூற்றாண்டினரான குமரிலபட்டர் தமிழையும் திராவிட மொழிகளையும் ‘ஆந்திர திரவிட பாஷா’ என்று தொகுத்துச் சுட்டியதால், அவர் காலத்திலும் கருநாடகமொழி தனிமொழியாகப் பிரியாது தெலுங்கில் அடக்கப்பட்டிருந்தமை தெளிவாம்.

  எல்லா வகையிலும் தமிழிலக்கியத்திற்கு மிகமிகத் தாழ்ந்த கன்னட இலக்கியமும் கி.பி.8ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதே.

  தொல்காப்பியக் கிளவியாக்க 51ஆம் நூற்பாவுரையில், இளம் பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர் முதலிய உரையா சிரியர் காட்டியிருக்கும்

  “வடுகர் அருவாளர் வான்கரு நாடர்
  சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறுங்
  குறுகா ரறிவுடை யார்.”

  என்னும் பழைய மேற்கோட் செய்யுளும், “கொடுங் கருநாடரும்” என் னும் இளங்கோவடிகள் குறிப்பும், “இதெல்லாம் பழைய கருநாடகம்” என்னும் வழக்கும், பண்டைக் கருநாடக மாந்தரின் நிலைமையை உணர்த்தும்.

  1. வாங்க வியாசன்!
   உங்களுடைய விரிவான விளக்கம் நிறைய விஷயங்களைச் சொல்லுகிறது. நிறைய ஆதாரங்களுடன் வெங்காலூர் என்பதுதான் பெங்களூர் என்று எடுத்துக் காட்டியதற்கு நன்றி! விரிவான கருத்துரைக்கும், உங்கள் முதல் வரவிற்கும் மனமார்ந்த நன்றி!
   உங்களைப் போன்றவர்கள் என் பதிவை படித்துக் கருத்திடுவது ரொம்பவும் மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

 3. அருமையான அலசல். எல்லாமே அரசியலாகும் இந்த யுகத்தில் இந்தக் காரணங்களை எல்லாம் ஒத்துக்கொள்வார் யாருமில்லை. இதன் மூலம் என்ன சாதித்தனர் என்பதும் புரியவில்லை.

  1. வாங்க கீதா!
   சாதனை எதுவுமில்லை. நீ மாத்தினயா, நானும் மாத்தறேன் என்கிற வீண், வறட்டுப் பிடிவாதம். அவ்வளவுதான்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 4. ///
  பென்சிலு…பென்னு.. காரு என்று சொன்னால் கன்னடம் ஆகிவிடும்’ என்று!
  //////

  சென்னை என்று தமிழில் மாற்றியபொழுது இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகுமா என்று யோசித்ததுண்டு. ஆல் இந்தியா ரேடியோவையும் திருவள்ளுவர் பேருந்தையும் தவிர்த்து யாரும் சென்னை என்கிற ஒன்றை யாரும் பயன்படுத்தியதில்லை. இப்ப கிட்டத்தட்ட மெட்ராஸ் வழக்கொழிந்துவிட்டது. பெங்களுருவும் பியூச்சருலுவில் அப்படி ஆக வாழ்த்துக்கள் 🙂

  1. வாங்க பாண்டியன்!

   நான், எங்க அம்மா எல்லோரும் இன்னும் மெட்ராஸ் தான் சொல்லுகிறோம். மெட்ராஸ் என்றால் தான் எங்க ஊரு போல இருக்கு. சென்னை -ன்னா வெளிநாடு மாதிரி இருக்கு!

   புயூச்சருலு’ என்றால் (லு) சேர்த்தால் தெலுங்கு ஆகிவிடும். ப்யூச்சரு தான் கன்னடம். பி கேர்புல் – எனக்கு சொன்னேன்! யாராவது சண்டைக்கு வரப்போறாங்க!

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s