Uncategorized

‘பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்’ – தீபிகா படுகோன்

நவம்பர் மாத ஆழம் இதழில் ‘ஒரு சமூகத்தை மதிப்பிடுவது எப்படி?’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள எனது கட்டுரை இது.

1deepika Padukone

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் மும்பை பதிப்பு பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் காணொளி படத்தை தனது வலைப்பதிவில் இப்படி அறிமுகம் செய்திருந்தது. OMG! Deepika padukone’s cleavage show! வெகுண்டெழுந்தார் தீபிகா. ‘ஆம்! நான் ஒரு பெண். எனக்கு வளைவு நெளிவுகளுடன் கூடிய உடல் இருக்கிறது. இதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா?’ என்று சீற்றத்துடன் ட்வீட் செய்தார். அத்துடன் நிற்காமல், ‘பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள் பெண் உரிமை பற்றிப் பேச வேண்டாம்’ என்றார் சூடாக. இதற்கெல்லாம் அசைந்து கொடுக்குமா டைம்ஸ் ஆப் இந்தியா? ‘இது ஒரு பாராட்டுரை! நீங்கள் ரொம்பவும் அசத்தலாக இருக்கிறீர்கள் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’ என்று பதில் சொல்லி முடித்துக் கொண்டது. அதாவது முடித்துக்கொண்டு விட்டோம் என்று நினைத்துக் கொண்டது.

ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் இந்த பதில் ட்விட்டர் பயனாளர்கள் எல்லோரையும் கொதித்தெழச் செய்துவிட்டது. அன்று முழுவதும் ‘நான் தீபிகாவிற்கு ஆதரவு’ என்று ட்விட்டர் முழுவதும் பல பல ட்வீட்டுகள். பிரபலங்கள் மட்டுமின்றி தீபிகாவின் விசிறிகளும் அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்தனர். உதாரணத்துக்குச் சில:

பர்கா தத்: ‘ சில வெளிப்படையான பேச்சுக்கள் மட்டுமே இந்தப் பெண் வெறுப்பாளர்களை சங்கடப்படுத்தும்.

கரன் ஜோகர்: அதிர்ச்சி! இந்த அவமரியாதையை தீபிகா மட்டுமல்ல; எந்த ஒரு பெண்ணாலும் தாங்க முடியாது!

தியா மிர்சா: கேளிக்கை செய்தி ஊடகங்கள் என்றைக்குமே பெண்களை மரியாதையுடன் நடத்தியதில்லை. யாரோ ஒருவர் இதை இப்படியே விடுவதில்லை என்ற முடிவை எடுத்தது மகிழ்ச்சி!

கவிதா கிருஷ்ணன்: நடிகைகளையும் விளையாட்டு வீராங்கனைகளையும் பத்திரிகைகள் இப்படித்தான் நடத்துகின்றன. இவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, இவர்கள் தங்கள் செய்கை குறித்து வெட்கப்படச் செய்ய வேண்டும். சபாஷ் தீபிகா!

வாதங்கள்

இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை தன்னிலை விளக்கம் அளித்தது: “அச்சு ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் என்று பல்வேறு ஊடகப் பிரிவுகளைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனம் எங்களுடையது. ஒவ்வொரு ஊடகத்தினையும் ஒவ்வொரு வகையில் அணுகுவோம் நாங்கள். இணையதளத்தில் இந்த மாதிரியான உணர்ச்சிகரமான தலைப்புகள் புதிதல்ல. இணையதளத்தில் போட்டிகள் அதிகம்; ஒழுங்கு முறைகள் என்பதை எதிர்பார்க்கமுடியாது…..’

பதிலுக்கு தீபிகா தனது முகநூல் பக்கத்தில் எழுதினார்: ‘நான் ஏற்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு நான் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டோ அல்லது நிர்வாணமாகவோ வரவேண்டும். ஒரு நடிகையாக எதை ஏற்பது எதை தவிர்ப்பது என்பது என் விருப்பம். அது ஒரு பாத்திரம்; உண்மை அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். நான் ஏற்கும் பாத்திரத்தை பார்ப்பவர்கள் ஏற்கும் வகையில் நடிப்பது எனது தொழில்’.

டைம்ஸ் பத்திரிகை: ‘இந்த வாதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளுகிறோம். ஆனால் நீங்கள் மேடையில் நடனம் ஆடும்போது, ஒரு பத்திரிகை மேலட்டைப் படத்திற்காக புகைப்படம் எடுக்கும்போது, அல்லது ஒரு படத்தின் விளம்பரத்திற்காக நீங்கள் அணியும் உடைகள் எந்த வகையைச் சார்ந்தது? எந்த மாதிரியான கதாபாத்திரங்களை நீங்கள் ஏற்கிறீர்கள் இந்த சந்தர்ப்பங்களில்? ஏனிந்தப் பாசாங்கு? தீபிகாவிற்கு ஆதரவு என்று சொல்லிக்கொண்டு எத்தனை ஊடகங்கள் இந்த புகைப்படத்தை தங்கள் வெளியீடுகளில் போட்டுக்கொண்டன? இந்த புகைப்படம் இல்லாமல் இந்த விஷயத்தை பேசியிருக்கலாமே? இது என்னவகையான போலித்தனம்? இந்தப் புகைப்படங்கள் எல்லாம் யாரோ ஒருவர் உங்கள் அறைக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்தோ, அல்லது மறைக்கப்பட்ட காமிராக்கள் மூலமோ, அல்லது உங்கள் அனுமதியின்றியோ எடுக்கப்பட்ட படங்கள் அல்ல’.

தீபிகா: ‘ஒரு ஆணின் கட்டழகைப் பார்க்கும்போது எங்களுக்கும் பொறாமை வரும். ஜொள்ளு விடுவோம். ஆனால் நிச்சயம் அவனது அந்தரங்க உறுப்பினை பெரிது படுத்திக் காட்டி அதற்கு கேவலமான ஒரு தலைப்பும் கொடுக்க மாட்டோம்’.

டைம்ஸ் பத்திரிகை: நாங்களும் உங்கள் அந்தரங்க உறுப்புகளைப் பெரிது பண்ணிக் காண்பிக்கவில்லை. தலைப்பு இன்னும் நல்லவிதமாக இருந்திருக்கலாம் என்பதை நாங்களும் ஒப்புக்கொள்ளுகிறோம். எங்களுக்கு ஒரு தணிக்கை குழு வேண்டுமென்று சொல்லுகிறீர்களா? அல்லது உங்கள் புகைப்படங்களில் எவற்றைப் போடலாம் என்று ஒவ்வொருமுறையும் உங்களைக் கேட்க வேண்டுமா? தார்மீக போலீஸ் வேடம் போட நாங்கள் தயாராக இல்லை.

தீபிகா: ‘எனக்கு இந்த விஷயத்தைப் பெரிது படுத்த விருப்பமில்லை; நான் அதிகம் பேசினால் தேவையில்லாமல் அந்தப் பத்திரிக்கைக்கு விளம்பரம் கிடைக்கும். அவர்களும் இந்த விஷயத்தை பெரிது படுத்தி வேறு விதமாக திரித்து தகாத ஒரு தலைப்புடன் எழுதக் கூடும்’

டைம்ஸ் பத்திரிகை: ‘இப்படிச் சொல்லும் நீங்கள் உங்கள் கருத்துக்களை மறுபடி மறுபடி ட்வீட் செய்ததுடன் பலருக்கும் இது பற்றி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். வெளிவரப்போகும் உங்கள் புதிய படத்திற்கான விளம்பரமா இது? நாங்கள் போட்டிருக்கும் வீடியோ கிட்டத்தட்ட ஒரு வருடமாக யூடியூபில் இருக்கிறது. இப்போது ஏன் இந்த மறுப்பு? உங்களுக்கு ஆதரவாக இந்த விஷயத்தை பேசிய மற்ற ஊடகங்கள் இனி இதுமாதிரியான படங்களை போடாமல் இருக்குமா?’

சமூக ஆர்வலர் கவிதா கிருஷ்ணன் தீபிகாவிற்கு ஆதரவாக உடனே ட்வீட் செய்ததுடன் நிற்காமல் பத்திரிக்கையின் இந்தத் தன்னிலை விளக்கத்திற்குப் பிறகு தனது முகநூல் பக்கத்தில் இப்படி எழுதினார்.

தீபிகா பகிர்ந்துகொண்டிருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, ‘தீபிகா தனது உடலழகை பெருமையுடன் காட்டிக் கொள்ளும்போது, நாம் போட்ட தலைப்பு நியாயமானதே என்று உங்களுக்குத் தோன்றலாம். உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒரு நடிகையாக தன்னை நிலைநிறுத்த அவர் தன் உடலை காட்டிக்கொள்ளுகிறார் என்றே வைத்துக் கொள்ளுவோம். தெருவில் போகும் ஒரு சாதாரண மனிதன் உங்களின் தலைப்பை படித்துவிட்டு அதை தனக்குக் கிடைத்த உரிமமாக எடுத்துக்கொண்டு தீபிகாவின் உடலழகை எட்டிப் பார்த்துவிட்டு அவரது முகத்திற்கு எதிரிலேயே அவரை விமரிசிக்கிறான்; அல்லது அவரை மோசமாக நடத்துகிறான் என்றால் அவர் அப்படிக் ‘காண்பித்ததால்’ அவன் அப்படி செய்வது சரி என்று சொல்வீர்களா?

அவன் சும்மா தீபிகாவின் அழகை ரசித்தான் என்று சொல்வீர்களா? தங்கள் உடலழகைக் காட்டும் பெண்களை விட, அடக்க ஒடுக்கமான பெண்ணை முறைப்பதும் அவளது அங்கங்களைப் பற்றி விமரிசிப்பதும் தான் குற்றம், பாலியல் அத்துமீறலா? இதைத்தான் சொல்லுகிறது உங்கள் பதில். நீங்கள் சொன்னதை திருப்பி பெற்று, மன்னிப்பு கேட்காமல் இப்படி சொல்வது இங்கிருக்கும் எல்லா பாலியல் வன்முறையாளர்களையும் கூப்பிட்டு ‘தங்கள் உடலழகைக் காட்டும் பெண்களைப் பற்றி ‘என்ன ஒரு வளைவு நெளிவுள்ள உடல் உனக்கு!’ என்று சொல்வது தவறில்லை என்று சொல்வது போலிருக்கிறது. எல்லா பாலியல் வன்முறையாளர்களும் ஒரு சேரத் திரண்டு வந்து உங்களுடன் சேர்ந்து பாலியல் பற்றி கொச்சையாகப் பேசுவதும், விமரிசனம் செய்வதும் சரி என்று சொல்லுகிறீர்களா?’

இத சர்ச்சைகளைத் தொடர்ந்து பல செய்திப் பத்திரிக்கைகள் இதெல்லாம் விளம்பரத்திற்காக பிரபலங்களும் பத்திரிக்கைகளும் செய்யும் தந்திரம் என்று எழுதின. ஆனால் ஹிந்து பத்திரிகை தனது வலைத்தளத்தில் டைம்ஸ் பத்திரிக்கையை கண்டித்திருக்கிறது. டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஹிந்து பத்திரிக்கையின் சார்பில் எழுதப்பட்ட திறந்த கடிதத்திலிருந்து சில பகுதிகள்:

அன்புள்ள டைம்ஸ் ஆப் இந்தியா,

பல சமயங்களில் வாயைத் திறக்காமல் இருப்பது நல்லது. இணையதள உலகமே திரண்டு வந்து உங்களை சாடியபோது – நீங்கள் செய்தது சரி என்று உங்களுக்குத் தோன்றியபோதும் – சற்று உள்ளாய்வு செய்திருக்கலாம். அல்லது வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம்.

உங்கள் தன்னிலை விளக்கத்திலிருந்து சில வரிகள்:
‘பல ஊடகங்களை நடத்தும் நாங்கள் ஒவ்வொரு ஊடகத்தையும் ஒவ்வொரு வகையில் கையாளுகிறோம்……..’ நீங்கள் சொல்வது சரி என்றாலும் ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் பண்பு, நெறிமுறைகள் உண்டல்லவா? அவற்றை மீறலாமா?

‘இணையதளத்தில் இந்த மாதிரியான உணர்ச்சிகரமான தலைப்புகள் புதிதல்ல……’
இந்த வரிகள் உங்கள் செய்கைக்கு நீங்கள் துளிக்கூட வருந்தவில்லை என்பதைக் காட்டுகிறது. ‘நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் இங்கு இப்படித்தான்; நீங்கள் இவற்றை பழக்கிக் கொள்ளவேண்டும்’. என்று சொல்வது போல இது இருக்கிறது.

‘இணையதளத்தில் போட்டிகள் அதிகம்; ஒழுங்கு முறைகள் என்பதை எதிர்பார்க்கமுடியாது…..’ இது உண்மை என்றாலும் நீங்கள் உங்கள் தளத்தில் போடும் விஷயங்களைப் பற்றி நீங்கள் தான் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும், இல்லையா?

தீபிகாவின் பல புகைப்படங்களை நீங்கள் தொகுத்து அவரது உடலழகு வெளிப்படுமாறு போட்டிருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் கொடுத்த தலைப்பு அவர் வேண்டுமென்றே இதுபோல காட்சி அளித்தது போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்கிறது. இதுதான் தீபிகாவிற்குக் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. நீங்கள் செய்ததற்கும், தெருவில் போகும் ஒரு பெண்ணைப்பார்த்து ஒருவன் விசில் அடிப்பதற்கும், பேருந்தில் பிரயாணம் செய்யும் ஒருவன் கூடப் பயணிக்கும் பெண்ணின் துப்பட்டா விலகும்போது எட்டிப் பார்ப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தீபிகா இதை விளம்பரத்திற்காகச் செய்தாரா? தெரியவில்லை. பொதுமக்கள் உங்களைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்கிறார்களே!

உங்களுக்கு ஒரு தணிக்கைக்குழு தேவையில்லை. ஆனால் ஒருவிஷயத்தை வெளியிடும்போது மற்றவர்களுடன் கலந்தாலோசிப்பதில் தவறில்லை.

இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு பெண்கள் இங்கு நடத்தப்படும் முறை. தினமும் ஒரு கற்பழிப்பு செய்தி வந்துகொண்டிருக்கும் நேரத்தில் இப்படி மிக நேர்த்தியாக ஒன்றைச் செய்துவிட்டு அதைப்பற்றிய வருத்தம் கூட இல்லாமல் இருப்பது விஷயத்தை மேலும் மோசமான நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது. தாங்கள் இதைபோல ஒரு பொருளாக்கப்படுவதை எந்தப் பெண்ணும் தீபிகா உட்பட விரும்புவதில்லை. சமுதாயத்தின் இந்த மனநிலைக்கு எதிராகத்தான் பெண்கள் போராடி வருகிறார்கள்.

தீபிகாவின் உள்ளுணர்வைப் புரிந்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருக்கலாம் அல்லது வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம். இரண்டும் செய்யாமல், விஷயத்தையும் தவறாகப் புரிந்து கொண்டு ஆழமான குழியில் விழுந்துவிட்டீர்கள்!

இப்படிக்கு உங்கள் பதிலால் வெறுப்படைந்த ஒரு பெண்.

தொகுத்துப் பார்க்கும்போது, இரண்டுவிதமான குரல்கள் இங்கே ஒலித்திருப்பதைக் காணமுடிகிறது. ஒன்று, தவறையும் எழைத்துவிட்டு, அதனை இறுதிவரை ஒப்புக்கொள்ளாத அல்லது ஒப்புக்கொள்ள துணிச்சலற்ற ஒரு ஆணாதிக்கக் குரல். இரண்டு, அந்த மனபாவத்தை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டி கண்டிக்கும் ஆரோக்கியமான குற. ஒரு சமூகத்தில் எந்தக் குரல் அதிகமாகவும், வலிமையாகவும் ஒலிக்கிறது என்பதை வைத்துத்தான் அந்தச் சமூகத்தின் தரத்தை மதிப்பிடமுடியும்.

Advertisements

2 thoughts on “‘பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்’ – தீபிகா படுகோன்

  1. “ஒரு சமூகத்தில் எந்தக் குரல் அதிகமாகவும், வலிமையாகவும் ஒலிக்கிறது என்பதை வைத்துத்தான் அந்தச் சமூகத்தின் தரத்தை மதிப்பிடமுடியும்”
    முத்தாய்ப்பான முற்றுப்புள்ளி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s