கன்னட இலக்கியம்

யு. ஆர் அனந்தமூர்த்தி

 

ஆழம் பத்திரிக்கை அக்டோபர் இதழில் எதிர்ப்பு இலக்கியம் என்ற பெயரில் வெளியான எனது கட்டுரை

 

 

சமீபத்தில் மறைந்த யு. ஆர். அனந்தமூர்த்தி பன்முகத் திறமை கொண்டவர். பன்முகக் கலைஞர் மட்டுமல்ல; பன்முக ஆளுமையும் கொண்டவர். சமூக ஆர்வலரும் கூட. இவரை அணுகுவது, ஆராய்வது  கொஞ்சம் கடினம்தான்.

 

சிறுகதை எழுதுவதில் வல்லவரான இவர் எழுதிய சிறுகதைகள் 35, நாவல்கள் 6.  ஐந்து கவிதை தொகுதிகள் வெளியிட்ட மாபெரும் கவிஞர். பத்து கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்ட  ஒரு தீவிரமான சமூக இலக்கிய விமர்சகர். ஐந்து  மொழிபெயர்ப்புத் தொகுப்புகள் வெளியிட்ட வெற்றிகரமான மொழி பெயர்ப்பாளர். இவை இவரது ஒரு பக்கமென்றால், இவரது வெளிப்படையான விமரிசனங்கள், பேச்சுக்கள் மூலம் பல சர்ச்சையின் நாயகனாக இருந்தது இவரது இன்னொருபுறம். பல விஷயங்களில் இவர் மேற்கொண்ட கடினமான நிலைப்பாடுகளால் பலவிதமான சர்ச்சைகளிலும் அகப்பட்டுக் கொண்டு தனது நிலையே சரி என்று வாதிடவும் செய்தவர். ‘நவீன கன்னட இலக்கியத்தின் சிற்பி’ என்று கன்னட இலக்கிய உலகிலும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அறியப்படுபவர். இந்தியாவில் இலக்கியத்திற்காகக் கொடுக்கப்படும் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருது பெற்றவர். 1998 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருது பெற்றவர். 2013 ஆம் ஆண்டு மேன் புக்கர் விருது இறுதிச் சுற்றுவரை வந்தவர்களில் இவரும் ஒருவர்.

 

இளமைப்பருவம்:  

உடுப்பி ராஜகோபாலாசார்ய அனந்தமூர்த்தி என்னும் யு. ஆர். அனந்தமூர்த்தி 1932 ஆம் வருடம், டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி கர்நாடகாவிலுள்ள தீர்த்தஹள்ளி என்ற அழகிய கிராமத்தில் பிறந்தவர்  ஆரம்பக்கல்வி தீர்த்தஹள்ளியிலுள்ள துர்வாசபுராவில் இருந்த பழமை வாய்ந்த சமஸ்கிருதப் பள்ளியில் தொடங்கியது. மைசூரு பல்கலைகழகத்தில் கலைப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றபின் அந்தப் பல்கலைகழகத்திலேயே சிறிது காலத்திற்கு ஆங்கிலத்துறையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மேல்படிப்பிற்காக அங்கிருந்து காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்பில் இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்திலுள்ள பிர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை – Politics and fiction in the 1930s என்பது இவர் எடுத்துக்கொண்ட விஷயம் – 1966 ஆம் ஆண்டு பெற்றார்.

 

மைசூரு பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைகழகத்தில் துணை வேந்தராக (1987-1991) இருந்தார். நேஷனல் புக் ட்ரஸ்ட்-இன் தலைவராக 1992 ஆம் ஆண்டிலும் சாஹித்ய அகாதெமியின் தலைவராக 1993 ஆம் ஆண்டிலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல பல்கலைகழகங்களுக்கு வருகை தரும் பேராசிரியராகவும் இருந்தார். இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருமுறை பதவி வகித்தார். கர்நாடக மாநில மத்தியப் பல்கலைகழகத்தின் முதல் வேந்தராக 2012 இல் நியமிக்கப்பட்டார். எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

 

குடும்பம்: இவரது மனைவி எஸ்தர். ஷரத் என்ற பிள்ளையும், அனுராதா என்கிற மகளும் இவருக்கு இருக்கிறார்கள்.

 

இலக்கிய சேவை:

எண்ணற்ற சிறுகதைகளும், நாவல்களும் எழுதிய இவரது பல கதைகள் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. சம்ஸ்காரா(நல்லடக்கம்), பவ (பிறப்பு) பாரதிபுரா, அவஸ்தே(அவலநிலை), கடஷ்ராத்த (சடங்கு) ஆகிய புத்தகங்கள் இவர் எழுதியவற்றில் புகழ் பெற்றவை என்பதுடன் கடுமையான விமரிசனங்களுக்கும் ஆளானவை.

 

 

இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் மக்களின் மனோநிலையைப் படம் பிடிப்பதாக இருக்கும். மனிதர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில், சந்தர்ப்பங்களில், காலகட்டங்களில் எப்படி மாறுபட்டு நடக்கிறார்கள் என்பது இவரது கதைகளின் முக்கியக் கருவாக இருக்கும். தனி மனிதர்களின் செயற்கைத்தனம், வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளை எழுதுவது இவருக்குக் கை வந்த கலை. சமூக அரசியல் பொருளாதார மாற்றங்கள் எப்படி பழமையான ஹிந்து சமூகங்களை பாதிக்கின்றன என்றும் அந்த பாதிப்பினால் அப்பா – மகன், கணவன்-மனைவி, தந்தை-மகள் இவர்களிடையே ஏற்படும் கருத்து மோதல்கள், எத்தனை கருத்து மோதல்கள் இருந்தாலும் இவற்றின் ஊடே மெல்லிய இழை போல ஓடும் அன்பு, பாசம் இவை இவரது கதைகளில் நிறையச் சொல்லப்படுகிறது. அதேபோல பிராமண சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்கள், அதன் பின்விளைவுகளான மாறுதல்கள் முதல் அரசு அதிகாரிகளுக்கு அவர்களது தொழில்துறையில் அரசியல்வாதிகளால் ஏற்படும் நெருக்கடி வரை இவரது படைப்புகளில் அலசப்படும் விஷயங்கள் பலபல வகைப்பட்டவை.

 

சம்ஸ்கார: பிர்மிங்காமில் முனைவர் பட்டத்திற்காக அவர் படித்துக் கொண்டிருந்த போது 1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நாவல் இது. வெளிவந்த  காலத்திலேயே பலமான சர்ச்சைகளைக் கிளப்பிய நாவல் இது.  ‘கர்நாடகத்தில் இருக்கும் மாத்வ பிராம்மணர்களுக்கு எதிராக எழுதப்பட்ட நாவல் இது’ என்றார் சிறுகதை எழுத்தாளரான மாஸ்தி வெங்கடேச ஐய்யங்கார். வி.எஸ். நைபால் ‘ஹிந்துக்களுக்கு எதிரானது இந்தக் கதை’ என்றார். இந்திய மொழிகள் பலவற்றிலும், பல அந்நிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட கதை இது.

 

ஒரு பிராமண அக்ரஹாரத்தையும் அதில் வசிக்கும் ஒரு பிராமணரின் மரணத்தையும் சுற்றி வரும் கதை. இதில் வரும் பிராணேஷாச்சார்யாவும், நாராயணப்பாவும் அவர்களது குணாதிசயங்கள் மூலம் நம்மை கவர்பவர்கள். பிராமணராகப் பிறந்தும் மாமிசம் சாப்பிட்டும், விலைமகளிர் மனைக்குப் போவதும், இஸ்லாமியரை தன் வீட்டுக்கு அழைத்துவருவதுமாக வாழ்க்கை நடத்தும் நாராயணப்பா குழந்தை இல்லாமல் இறக்கிறார். தான் பிறந்த பிராமணக் குலத்தின் எல்லா விதிகளையும் மீறும் அவர் பிராமணரா என்ற கேள்வியுடன், அவரது கடைசிக் காரியங்களை யார் செய்வது என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நாவல் பழமைவாதிகளிடையே ஒரு பெரும் புயலை உருவாக்கியது. ஆனால் அனந்தமூர்த்தி இந்த நாவல் மூலம் இந்திய, கன்னட இலக்கியத்தின் திசையை மாற்றிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

1970 ஆம் ஆண்டில் இந்த நாவல் திரைப்படம் ஆக எடுக்கப்பட்டது. பல விருதுகளை வென்றது. முதலில் தடை செய்யப்பட்டாலும் பின்னர் வெளியிடப்பட்டது. கன்னட திரைப்படங்களின் மறுமலர்ச்சி இந்தப் படத்தின் மூலம் வெளியுலகிற்கு அறிவிக்கப்பட்டது.

 

சர்ச்சைகள்:

சர்ச்சைகளுக்கும், அனந்தமூர்த்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவரது கதைகளில் வரும் சம்பவங்கள், கதை மாந்தர்களால் வரும் சர்ச்சைகளைத் தவிர இவர் சிலசமயங்களில் பேசும் பேச்சுக்களினாலும் சர்ச்சைகள் ஏற்படுவது உண்டு.

 

இவரைப்போலவே புகழ் வாய்ந்த இன்னொரு கன்னட எழுத்தாளர் பைரப்பா எழுதிய ‘ஆவரண’ புத்தகத்தைப் பற்றிய இவரது விமரிசனம் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. கதையைப் பற்றிய விமர்சனத்தை விட ‘பைரப்பாவிற்கு நாவல்கள் எழுதுவது எப்படி என்று தெரியாது’ என்று இவர் சொன்னது பல சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்த சர்ச்சைகளின் காரணமாக இனி இலக்கிய விழாக்களில் பங்கேற்பது இல்லை என்று இவர் சபதமெடுத்தார். மகாபாரதத்தில் பிராமணர்கள் புலால் உண்பதைப் பற்றிய குறிப்பு இருக்கிறது என்கிற இவரது கூற்று பல ஹிந்து மதத் தலைவர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியது.

 

ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா கட்சி இரண்டுமே இவரது கடுமையான விமரிசனத்திற்கு ஆளானவை. சுமார் 50 வருட காலமாக இந்த இரண்டு அமைப்புகளையும் கண்டித்து வந்தவர், 2014 இல் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து மோதி பிரதமராக வருவதை கொஞ்சமும் விரும்பாததால் மோதி பிரதமராக இருக்கும் நாட்டில் தான் வாழ விரும்பவில்லை என்று அறிக்கை விட்டார். இந்த அறிவிப்பு பலத்த சர்ச்சையைக் கிளப்பியதுடன், கொலை மிரட்டல்களும் வரவே, இவருக்கு சிறப்புப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. எதிர்ப்பின் சூட்டைத் தாங்கமுடியாமல் ‘மிகவும் உணர்ச்சி வசப்பட்டு’ அப்படிக் கூறியதாகவும், இந்தியாவை விட்டு வெளியே போகும் முடிவு இல்லை என்றும் விளக்கமளித்துப் பின்வாங்கினார். மோதி பிரதமரானவுடன் மோதி பிரிகேட் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் மோதி ஆதரவாளர்கள் சிலர் இவருக்கு பாகிஸ்தான் போவதற்கு இலவச விமான பயணச்சீட்டு அனுப்பினர். இவரது மறைவுச் செய்தி வெளியானபின் பாஜக கட்சியினர் பலரும், ஹிந்து ஜாகரண வேதிகையை சேர்ந்தவர்களும் பட்டாசு வெடித்து இவரது மறைவைக் கொண்டாடினார்கள்.

 

தனது சுயசரிதத்தை ‘சுரகி’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். சுரகி என்பது இவர் பிறந்த மலைநாட்டில் பூக்கும் ஒரு மலர். வாடினால் கூட இதன் மணம் மாறாது. தனது வீட்டின் பெயரையும் சுரகி என்றே வைத்திருந்தார் அனந்தமூர்த்தி.

 

‘சுரகி’ யில் இவர் கூறும் கருத்துக்கள் சில:

‘எந்தக் கேள்வியும் கேட்காமல் நாம் சில நம்பிக்கைகளை ஒப்புக்கொண்டு அதை பிரச்சாரம் செய்யவும் ஆரம்பித்துவிடுகிறோம். ஒரு அமைப்பின் அங்கமாக இருந்துகொண்டே அதற்கு எதிரான புரட்சியிலும் ஈடுபடுவது  இங்கு சாத்தியம்’. இந்தக் கருத்தைக் கொண்டிருந்ததாலோ என்னவோ பிராமண குலத்தில் பிறந்தும் தனது நாவல்களில் பிராமண சமூகத்தையும், அங்கு நிலவும் சில மூட பழக்கவழக்கங்களையும் எதிர்த்து வந்தார். அதனால் பிராமணர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்தார்.

 

தனது மனைவியை சந்தித்தது பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்: ‘என்னிடம் டியூஷன் படிக்க வந்த எஸ்தருக்கு நான் ஒரு வீட்டுப்பாடம் கொடுத்தேன். ‘உனக்குப் பிடித்த அல்லது பிடிக்காத ஒருவரைப் பற்றி எழுது’ என்று. அவள் எனது பாடம் கற்பிக்கும் பாணி பற்றியும், பாடம் சொல்லித் தரும்போது நான் செய்யும் சில செய்கைகள்  பற்றியும் கேலி செய்து எழுதியிருந்தாள். அதைப்படித்தவுடன் எனக்கு அவள் மேல் ஒரு சுவாரஸ்யம் எழுந்தது. அவளது அப்பாவித்தனம் என்னை ஈர்த்தது. அதுவே காதலாக மாறியது. என்னைப்புகழ்ந்து பேசும் ஒரு பெண் எனக்கு தேவையாய் இருக்கவில்லை. எனக்கு ஒரு துணை வேண்டியிருந்தது’.

 

புகழ் பெற்ற எழுத்தாளர் திரு ராமச்சந்திர குஹா, இவரைப் பற்றிக் கூறுகிறார்: ‘சிலர் சொல்லுகிறார்கள் அனந்தமூர்த்தி தனது வீட்டிற்கு சுரகி என்று பெயர் வைத்தது தன்னை அந்த மலருக்கு சமமானவன் என்று காண்பித்துக் கொள்ளத்தான் என்று. எனக்கென்னவோ அவர் அத்தனை அடக்கமில்லாதவர் என்று தோன்றவில்லை. அவரது நாவல்கள் சம்ஸ்கார, பாரதிபுரா இரண்டும் கன்னட இலக்கியத் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துக் சென்றவை. அவர் கன்னடத்தில் எழுதும் பத்திகளைப் படிக்கவென்றே பல வாசகர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். ஒரு முன்னோடி ஆங்கில ஆசிரியராக அவர் பல தலைமுறை எழுத்தாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களை மிகவும் ஊக்குவிப்பார். தன்னை விட வயதில் இளையவர்களிடம் விவாதம் செய்வது அவருக்குப் பிடித்த விஷயம். அவரது மறைவிற்குப் பின் அவரது எழுத்துக்கள் கர்நாடக மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிலும் விவாதிக்கப்படும்’.

 

தனது வாசகர்களோடும், பொதுமக்களோடும் மிக நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருந்தவர் அனந்தமூர்த்தி. கன்னட இலக்கிய உலகிற்கும், இந்திய இலக்கியத்திற்கும் அனந்தமூர்த்தியின் பங்களிப்பு மிகப்பெரிய கொடை என்பது மறுக்க இயலாத ஒன்று. அவரது மறைவு கன்னட இலக்கிய உலகில் ஈடு செய்ய இயலாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது என்பது நூறு சதவிகிதம் உண்மை.

Advertisements

5 thoughts on “யு. ஆர் அனந்தமூர்த்தி

 1. வணக்கம்
  அம்மா

  அறிய முடியாத ஒரு மா மனிதன் பற்றி தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s