Uncategorized

இனிய தீபாவளி வாழ்த்துகள்!

 

 

 

 

ஒரு ஊரில் ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த ஊருக்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்’எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!’ என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ”இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!”

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ”மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!”

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ”மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?”

”தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!”

”அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?”

 

”தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!”

”பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?”

”அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள் அங்கு விளைகின்றன.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!” என்றான் மன்னன்.

 

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத் தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

 

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைத்தால் அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

 

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

 

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

 

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே!

 

பதிவுலகத் தோழமைகளுக்கும், எனது பதிவுகளை தவறாமல் படிக்கும் நல்ல உள்ளங்களுக்கும்  2014 ஆம் வருட இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

 

 

Advertisements

42 thoughts on “இனிய தீபாவளி வாழ்த்துகள்!

 1. மிக அருமையான கதை ரஞ்சனி படித்தேன் ரசித்தேன் திட்டமிடுதலும் செயல்படுத்தலும் எத்தனை முக்கியம் என்பது புரிகிறது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 2. முதல் பாராவைப் படித்தவுடன், தீபாவளிக்கு அரசியல் பதிவு வருகிறதே என்று பதறிவிட்டேன். பட்டாசாகத் தொடங்கி இனிப்பாக முடிந்திருக்கிறது சிறப்புப் பதிவு.

 3. அன்புள்ள அய்யா,

  நல்ல கதையைச் சொல்லி…நாம் எப்படி திட்டமிட்டு…திட்டப்படி வெற்றி ஈட்ட வேண்டுமெனச் சொல்லியது அருமை.
  தீபாவளி வாழ்த்துகள்.
  நன்றி,
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

 4. தங்களின் கதை சரீரத்திற்கானது மட்டுமல்ல ஆத்துமாவிற்கும் இப்படியே திட்டமிட்டால் நிலைவாழ்வும் உண்டு. தீபாவளி நல் வாழ்த்துக்கள்

 5. கண்ணைக்கவரும் தீப வரிசை. மனதைச் செப்பனிடும் உதாரணக்கதை. கதையல்ல நிஜம். ப்ளான் செய்து செய்கையில்க் கொண்டு வாருங்கள்.
  நல்ல ஒரு ஆக்க பூர்வமான உத்தேசம். வாழ்த்துகள் யாவருக்கும். அன்புடன்

 6. வணக்கம்
  அம்மா.
  சிறப்பான கருத்துப்பகிர்வுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 7. மிக மிக அருமையான கதை. இது வரை கேள்விப்பட்டதில்லை. நீங்கள் அனுமதித்தால் நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொள்கிறேனே …
  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

 8. ராஜாராணி காலத்து கதையாக இருந்தாலும், இந்த காலத்திற்கும் ஏற்ற ஒரு தத்துவம் சொல்லும் கதை.
  எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  1. வாங்க தனபாலன்!
   நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

 9. மிக்க நன்றிம்மா!உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
  எப்படி இருக்கின்றீர்கள். சென்னை பக்கம் வந்தால்
  தகவல் தாருங்கள்.சந்திப்போம்.

  அன்புடன்
  ஸாதிகா

  Sent from my iPhone

  >

  1. வாங்க ஸாதிகா!
   நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை ரொம்பவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சென்னை வந்தால் நிச்சயம் தெரிவிக்கிறேன். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s