Humour

நிக்கிமோ நிகாடோ

தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் பெண் ஒருவர், சீனப்பிரதமர் Xi Jinping அவர்களின் பெயரை இலெவன் (11) Jinping என்று படித்ததால் வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்று. படித்தவுடன் வாய்விட்டு சிரித்துவிட்டேன். அவர் என்ன செய்வார் பாவம்? Xi –ஐப் பார்த்தவுடன் அவருக்கு பள்ளியில் படித்த ரோமன் கணித எண் நினைவிற்கு வந்திருக்கிறது செய்தியை தயாரித்த மகானுபாவராவது அந்தப் பெண்ணிற்கு சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் – சீனப்பிரதமரின் இந்தப் பெயரை எப்படி உச்சரிப்பது என்று.

சீனர்கள் பெயர் வைக்கும் முறை தெரியுமா? ‘குழந்தை பிறந்தவுடன் ஒரு தட்டை (plate) கீழே போடுவார்களாம். அது போடும் சத்தத்தை வைத்து ‘டிங்….டாங்..பங்’ அல்லது ‘தங்….கிங் …சங்’ என்று பெயர் வைப்பார்களாம். இந்தப் பிரதமர் பிறந்தவுடன் அவரது அம்மா கீழே போட்ட தட்டு ஜீ…ய் என்று சுற்ற ஆரம்பித்து ஜிங்….பிங் என்று நின்றுவிட்டதோ என்னவோ?

நமக்கு எப்படி அவர்கள் பெயர் வாயில் நுழையவில்லையோ, அதேபோலத்தான் நம் பெயர்களும் அவர்களுக்கு வாயில் நுழையாது போலிருக்கு. சீனர்கள் மட்டுமில்லை; வெளிநாட்டுக்காரர்கள் எல்லோருக்குமே நம் பெயர்கள் விசித்திரம் தான். இல்லையென்றால் என் மகனுக்கு நான் அருமையாக வைத்த ‘மாதவன்’ என்ற பெயர் அவனது வெளிநாட்டு சகாக்களால் ‘maddy’ ஆகியிருக்குமா? நாராயணன் என்ற பெயர் நட்டு-வாகியிருக்குமா?

இதனாலோ என்னவோ வெளிநாட்டிலிருக்கும்  நம்மவர்கள் அங்கு குழந்தை பிறந்தவுடன் வெளிநாட்டுக்காரர்கள் வாயில் நுழையும் பெயராக தேடுகிறார்கள். எனது மகனின் நண்பனின் முதல் குழந்தையின் பெயர் சியா. இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது என்றவுடன் நான் கேட்டேன்: ‘குழந்தையின் பெயர் ‘மியா(வ்)?’ என்று!

எனது வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பாக கொரியன்ஸ் இந்தப் பிரச்னையை அழகாக சமாளிப்பார்கள். அவர்கள் நிஜப்பெயரை சொல்லவே மாட்டார்கள். ஜேம்ஸ், ஜான், மேரி என்று நமக்குத் தெரிந்த பெயராகச் சொல்லிவிடுவார்கள். மங்கோலியாவிலிருந்து ஒரு மாணவர். தனது பெயரைச் சொல்லிவிட்டு ‘Teacher! you can call me NUTS!’ என்றவுடன் அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன். சிறிது நேரம் நான் ஏன் இப்படிச் சிரிக்கிறேன் என்று புரியாமல் விழித்துவிட்டு அவரும் அசடு வழியச் சிரித்தபடியே வகுப்பில் உட்கார்ந்து கொண்டார்.

ஒரு பெயரை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதை நான் முதன்முதலில் தெரிந்து கொண்டது 9 ஆம் வகுப்பில் படித்த போதுதான். பள்ளி அப்போதுதான் கோடைவிடுமுறைக்குப் பின் திறந்திருந்தது. எங்கள் வகுப்பிற்கு புதிதாக ஓர் பெண் வந்திருந்தாள். நாங்களாகப் போய் அவளுடன் பேசவில்லை. வகுப்பு ஆரம்பித்து சிறிது நேரத்தில் எங்கள் வகுப்பு ஆசிரியர் லில்லி கான்ஸ்டன்டைன் ஆசிரியர் வந்தார். அவர் கையில் ஒரு காகிதம். நாற்காலியில் உட்கார்ந்தவர் ‘புது அட்மிஷன் யாரு?’ என்றார். இந்தப் பெண் மெதுவாக எழுந்து நின்றாள். தன் கையிலிருந்த காகிதத்தைப் பார்த்து  ‘பசுபாதம், (வகுப்பு முழுவதும் ‘கெக்கே பிக்கே’ என்று சிரித்தது) இன்னா பேருடி இது? பசுபாதமா? cowfoot? உம்பேரு இன்னா?’ என்றார். பாவம் அவள். கொஞ்சம் திணறியபடியே, ‘எம்பேரு பாசுபதம், டீச்சர்,’ என்றாள். ‘ஏண்டி வேற பேரே கிடைக்கலையா? முருகன், சீனிவாசன் அப்படின்னு?’ ‘டீச்சர், அதெல்லாம் ஆம்பளைங்க பேரு….!’ கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குரல்! ‘என்ன கஷ்டமோ! ஒக்காரு’ என்றபடியே பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

அன்றிலிருந்து பாசுபதம் எஸ்எஸ்எல்சி முடிக்கும்வரை லில்லி டீச்சரால் பசுபாதமாகவே கூப்பிடப்பட்டாள். எங்களுக்கெல்லாம் அவளைப் பார்த்தால் பாவமாக இருக்கும். சே! கொஞ்சம் நல்ல பேராக வைத்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் அவள் என்னவோ அப்படியெல்லாம் ‘feel’ பண்ணியதாகத் தெரியவில்லை. ‘மகாபாரதத்துல அர்ஜுனன் சிவபெருமானைக் குறித்து தவம் செய்து வாங்கிய அஸ்த்திரம் என்னோட பேரு!’ என்று பெருமிதமாகவே சொல்லிக்கொள்ளுவாள்.

சமீபத்தில் நாங்கள் ஜோக் செய்து சிரித்த பெயர்: குனால் கெம்மு. ‘கெம்மு என்றால் கன்னட மொழியில் ‘இருமல், இருமு’ என்று அர்த்தம்! அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் கெம்முவார்கள் போலிருக்கு என்று சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம்.

சரி, தலைப்புல என்னவோ சொல்லிட்டு இப்ப என்னவோ பேசிகிட்டு இருக்கீங்களே என்கிறீர்களா? இதோ ஒரு ஜோக்:

ஜப்பானியர்களும், தமிழர்களுமாகச் சேர்ந்து ஒரு கட்டிடம் கட்டுகிறார்கள். பாதிவரை நன்றாக நிமிர்ந்து நின்ற கட்டிடம் பாதி கட்டியபின் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது பைசா கோபுரம் போல. ஜப்பானிய பொறியாளர் சொன்னார்: ‘இப்படி ஒரு பக்கமாக சாய்கிறதே! எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் போல இருக்கு. சீக்கிரமா இதற்கு ஒரு பெயர் வைத்துவிடலாம். பாதி ஜப்பான் பெயராகவும், பாதி தமிழ் பெயராகவும் இருக்க வேண்டும்’ என்று. நம்மாளு சொன்னார் பட்டென்று: ‘நிக்கி(கு)மோ நிகாடோ(தோ)!’

Advertisements

8 thoughts on “நிக்கிமோ நிகாடோ

 1. .ஹா..ஹா…

  இது போன்ற பெயர்க் குழப்பங்கள் உள்ளூர்ப் பெயர்களிலேயே எனக்கும் வந்ததுண்டு. மலேஷியாவிலிருந்து ஒரு புது மாணவன் எங்கள் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்திருந்தான். ஆசிரியர் அவன் பெயரைக் கேட்டபோது ‘கோமேதகவேலு’ என்று சொன்னது, அது மாதிரி ஒரு பெயரை அதுவரை கேள்விப் பட்டிராத என் காதுகளில், ‘ஓமே சகாயராஜ்’ என்று விழுந்தது. இடைவேளையில் அப்படிக் கூப்பிட்டதும் அவன் சிரித்து அவன் சரியான பெயரைச் சொன்னான்! இதுபற்றி எங்கள் ப்ளாக்கிலும் முன்னர் ஒரு பதிவிட்டிருந்தேன்!

 2. வணக்கம்
  அம்மா.

  தாங்கள் சொல்வது உண்மைதான்… தழிழ்பெயர்கள் இப்போது அருகி விட்டது. இப்போது உள்ள பிள்ளைகளின் பெயரை சொல்லி கூப்பிட வேண்டும்மென்றால். நமது நாவினை சுத்தப்படுத்த வேண்டும்…. பல தடவை…….

  தலைப்புக்கு ஏற்றமாதிரி இறுதியில் நல்ல நகைச்சுவை ஒன்றையும் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி அம்மா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 3. சீனப்பெயரில் ஆரம்பித்து ஜப்பான் பெயர் வரை நன்றாகவே ஆராய்ச்சி செய்துள்ளீரகள் பிடியுங்கள் டாக்டர் பட்டத்தை ரஞ்சனி நல்ல நகைச்சுவையான பதிவு பாராட்டுக்கள்

 4. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நகைச்சுவை பதிவு! ரசித்து படித்தேன் அம்மா! நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என் வகுப்பு ஆசிரியர் பெயர் முப்புலியான் பிள்ளை .. அவரை குறிப்பிட்டு பேசும் போது மாப்பிள்ளை சார் என்று சொல்வதுண்டு பெயர் வாயில் நுழையாத காரணத்தினால்!

 5. நல்ல நகைச்சுவையானப் பதிவு. . சீனப் பிரதமர் வந்ததில் பாவம் நம்மர் ஒருவருக்கு வெளி போயிற்று. சீனப் பிரதமருக்குத் தெரிந்தால் என்ன நினைப்பாரோ ? நல்ல பெயர் அலசல் பதிவு. நிக்குமோ? நிக்காதோ? நல்ல நகைச்சுவை.
  மீண்டும் உங்கள் பதிவுகள் உங்களின் பழைய உற்சாகத்தைத் தாங்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

 6. [no tamil keyboard!] This nikumo nikado joke is very popular in my childhood days!! Coming back to the core of this post – Chinese naming convention is a traditional behaviour of chinese. As Tamilians got spoiled by north Indian names ends with ….sh, most of the chinese persons now a days, has Christian names for no reason. I can point some peculiar behaviour in Singapore Chinese Community. They will try to show as if they marry as traditional chinese. But they will weat Coat and Wedding gown as Christians. A non-native chinese, with chinese and christian name, in buddist community, searching for Christian wedding outfits! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s