இந்தியா · வெப்துனியா

2 மணி நேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்குப் பறந்த இதயம்!

பெங்களூரிலிருந்து இதயம் சென்னைக்குப் பறந்தது!

வெப்துனியாவில் 17.9.2014 அன்று வெளியான எனது கட்டுரை

 

‘நிஜவாழ்க்கையில் நடப்பதைத்தான் நாங்கள் எங்கள் படங்களில் சொல்கிறோம்’ என்பார்கள் திரைப்பட இயக்குனர்கள். முதல் முறையாக திரைப்படத்தில் காட்டிய விஷயம் ஒன்று நிஜமாக நிகழ்ந்திருக்கிறது.

 

‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் காட்டியது போல உறுப்பு தானம் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்று பரபரப்பாக நிகழ்ந்து முடிந்திருக்கிறது. உறுப்பு தானமாகப் பெறப்பட்டது பெங்களூரில். அதை இன்னொருவருக்குப் பொருத்தியது சென்னையில். பெங்களூரில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒரு பெண்மணியின் இதயம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இன்னொருவருக்குப் பொருத்தப்பட்டிருக்கிறது. இரு மாநிலங்களிலும் உள்ள மருத்துவர்கள், போக்குவரத்து காவல் துறையினர், மிக மிகத் துல்லியமாக திட்டம் தீட்டி, பெங்களூருவிலிருந்து இதயம் ஒன்றை சென்னைக்கு கொண்டு வந்து இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்திருக்கிறார்கள். செப்டம்பர் 2 ஆம் தேதி விபத்து ஏற்பட்டு,  இதய மாற்று சிகிச்சை 3 ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது.

 

 

‘உடலிலிருந்து வெளியில் எடுத்த இதயத்தை நான்கு மணிநேரம் வரை குளிர்பதன சேமிப்பில் வைக்கமுடியும். ஆனால் நாங்கள் எங்களுக்கு 3 மணிநேர கெடுவை விதித்துக் கொண்டோம். கடைசியில் 2 மணி நேரத்தில் இந்த சாதனையைச் செய்துவிட்டோம்’ என்கிறார் ஃபோர்டிஸ் மலர் மருத்துவ மனையின் ஃபெசிலிட்டி இயக்குனர் திரு ஹரீஷ் மணியன்.

 

இதயத்தைக் கொடுத்தவர் யார்?

 

மூளைச்சாவிற்கு உள்ளானவர் ஒரு 32 வயது இல்லத்தரசி. இரண்டு குழந்தைகளின் தாய். இவரது கணவர் தச்சு வேலை செய்பவர். இந்தப் பெண்மணி இரு சக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து செல்லும்போது வாகனத்தின் டயர் வெடித்து வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். விபத்து நடந்த இடம் ஹோசூர். மிகவும் ஆபத்தான நிலையில் பெங்களூரு பிஜிஎஸ் குளோபல் மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளித்த போதும் பலனளிக்காமல் மூளைச்சாவிற்கு உள்ளானர். இது நடந்தது செப்டம்பர் 2 ஆம் தேதி செவ்வாய் அன்று. அந்தப் பெண்மணியின் குடும்பத்தாருடன் மருத்துவர்கள் உறுப்பு தானம் பற்றி எடுத்துச் சொன்னார்கள். இவரது இதயம், இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவற்றை தானமாகப் பெற சம்மதம் வாங்கப்பட்டது.

 

பெங்களூரு பிஜிஎஸ் குளோபல் மருத்துவ மனையில் இது போன்ற உறுப்பு தானத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு ஒரு சிறுநீரகமும், கல்லீரலும் கொடுக்கப்பட்டன. பெங்களூருவில் இருக்கும் அப்பலோ மருத்துவமனையில்  இன்னொரு நோயாளிக்கு இரண்டாவது சிறுநீரகம் அளிக்கப்பட்டது. ஆனால் பெங்களூருவில் இதயத்திற்காக காத்திருக்கும் நோயாளிகள் யாருக்கும் இந்தப் பெண்மணியின் இதயம் பொருந்தவில்லை. அதேசமயம் சென்னையில் உள்ள நோயாளி ஒருவருக்கு இந்த  இதயம் பொருந்துவது தெரிய வந்தது..

 

இந்த மாதிரியான உறுப்பு தானங்களை பொறுப்பு எடுத்து நடத்தித்தரும் கர்நாடகத்தின் மண்டல ஒருங்கிணைப்புக் குழு இரு மாநில மருத்துவமனைகளுடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு ஆக வேண்டியதை செயல்படுத்த ஆரம்பித்தது. மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆகியோர்  சேர்ந்து இதயத்தை எப்படி பாதுகாப்பாக சென்னைக்கு எடுத்துச் செல்வது என்று ஆலோசனையை ஆரம்பித்தனர்.

 

ஆம்புலன்ஸ் வண்டியின் பாதையில்:

முதல் வேலையாக மூளைச்சாவு ஏற்பட்ட பெண்மணியிடமிருந்து எடுக்கப்பட்ட இதயத்தை சென்னைக்குக் கொண்டு போகவேண்டும். பெங்களூரு பிஜிஸ் குளோபல் மருத்துவமனை இருக்கும் இராஜராஜேஸ்வரி நகரிலிருந்து பெங்களூரு கெம்பேகௌட விமான நிலையம் 55 கி.மீ. எவ்வளவு சீக்கிரம் இந்த தூரத்தைக் கடக்க முடியும்? பொதுவாக ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் ஆகும். ஆனால் இந்த முறை இந்த தூரத்தை 45 நிமிடத்தில் கடந்தது ஆம்புலன்ஸ் வாகனம். எப்படி?

 

டெபுடி கமிஷனர் போக்குவரத்து (வடக்கு) திரு எஸ். கிரீஷ் கூறுகிறார்.

“வழக்கம்போல காலையில் என் வேலைகளைத் தொடங்கினேன். ஆனால் அது ஒரு வித்தியாசமான நாளாக அமைய போகிறது என்று பிஜிஎஸ் குளோபல் மருத்துவ மனையிலிருந்து வந்த தொலைபேசி செய்தி கூறியது. செய்தி இதுதான்: ‘மருத்துவ மனையிலிருந்து இதயம் ஒன்று மின்னல் வேகத்தில் சென்னையை அடைய வேண்டும். இதற்கு உங்கள் உதவி தேவை.  ஆம்புலன்ஸ் வண்டி மருத்துவ மனையிலிருந்து மதியம் 1.30 மணிக்கு கிளம்ப உள்ளது’

 

‘தடைகள் – இல்லாத அதே சமயம் ஆம்புலன்ஸ் வண்டி அதிவேகமாக செல்லக்கூடிய வழியை, பாதையை தேர்ந்தெடுக்க காலை 8.30 மணிக்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் 50 பேர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தேன். குறுகலான சாலைகளைத் தவிர்த்தோம். ஒரு டெபுடி கமிஷனர், ஒரு உதவி கமிஷனருடன் இணைந்து ஆம்புலன்ஸ் வண்டியின் ஓட்டத்தை எங்கள் அலுவலகத்திலிருந்தே கவனிக்க ஏற்பாடு செய்தேன். நான் தேர்ந்தெடுத்த பாதையில் மொத்தம் 30 சாலை சந்திப்புகள். ஆன்புலன்ஸ் வண்டி ஒரு இடத்தைக் கடப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே போக்குவரத்தை தடையில்லாமல் விலக்க சாலை சந்திப்புகளில் சுமார் 15 அதிகாரிகள் நிறுத்தப்பட்டனர்.  ஒவ்வொரு சந்திப்பிலும் 25க்கு மேற்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் வரும் வழியை கண்காணித்தும் தொடர்ந்து அதன் ஓட்டத்தை குழுவிலிருப்பவர்களுக்கு அறிவித்துக் கொண்டும் இருந்தனர்’.

 

‘மதியம் ஒன்றரை மணிக்கு ஆம்புலன்ஸ் வண்டி மருத்துவ மனையை விட்டு கிளம்பியதும் எங்கள் வயர்லஸ் கருவிகள் உயிர் பெற்றன. ஆம்புலன்ஸ் வண்டிக்கு முன்னும் பின்னும் எங்கள் வண்டிகள் வந்து கொண்டிருந்தன. ஆம்புலன்ஸ் வண்டியில் இதயம் வைக்கப்பட்டிருந்த நீலப்பெட்டியுடன் நான்கு அறுவை சிகிச்சை மருத்துவர்களும் இருந்தனர்.

 

ஆம்புலன்ஸ் வண்டி விமான நிலையத்தை 47 நிமிடத்தில் அடைந்தது. அங்கிருந்த ஏர் இந்தியா விமானத்தில் இதயம் வைக்கப்பட்டிருந்த நீலப் பெட்டி ஏற்றப்பட்டு சென்னையை அடைந்தது. சென்னை விமான நிலையத்திலிருந்து போர்டிஸ் மருத்துவ மனையை 7 நிமிடத்தில் அடைந்திருக்கிறது ஆம்புலன்ஸ் வாகனம். பெங்களூருவில் செய்தது போலவே இங்கும் போக்குவரத்துத் துறையினர் பாராட்டத்தக்க வகையில் இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்கள்.

 

முதல்முறையாக:

இரு மாநிலங்களுக்கு இடையே உறுப்பு தானம் மற்றும் இதய மாற்று சிகிச்சை என்பது இதுவே முதல்முறை. அதுவும் இப்படி பெங்களூருவில் நடப்பதும் இதுவே முதல் முறை. நோயாளிகள் ஒரு மருத்துவ மனையிலிருந்து இன்னொரு மருத்துவ மனைக்கு மாற்றப்படுவது உண்டு. ஆனால் முதல்முறையாக இதயத்தை தாங்கி வரும் ஆம்புலஸ் வாகனம் செல்வதற்கு சிக்னல்கள் – இல்லா பாதையை வடிவமைத்தார்கள், போக்குவரத்துத் துறையினர். ஆம்புலன்ஸ் வரும் நேரத்தில் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு எதுவும் இருக்கவில்லை.

 

பொதுவான சில விஷயங்கள்

மூளைச்சாவு என்றால் என்ன?

மூளையில் பலமான அடிபட்டோ  அல்லது மூளையின் உள்ளே இரத்தப்போக்கோ ஏற்பட்டு மூளை செயல் இழந்து போகும் நிலையே மூளைச்சாவு. சாலை விபத்தின் போது அல்லது பக்கவாதம் ஏற்பட்டு மூளையின் உள்ளே இரத்தப்போக்கு ஏற்படும் போது இதைப்போல ஏற்படும். பலவிதமான பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே மூளைச்சாவு நிர்ணயிக்கப்படும். இந்தக் காலக்கட்டத்தில் ஆதரவுக் கருவிகள் மூலம் உடலின் முக்கியமான உறுப்புகள் இயங்க வைக்கப்படும்.

 

உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட இதயம் எப்படிப் பாதுகாக்கப்படுகிறது?

 

வெளியே எடுக்கப்பட்ட இதயம் வெப்ப நிலையை சமமாக வைக்கும் பெட்டியினுள் உறுப்பு பாதுகாக்கும் திரவத்தில் வைக்கப்படுகிறது. பெட்டியினுள் சுற்றிலும் நிறைய பனிக்கட்டிகள் வைக்கப்பட்டு வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழே இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் இதயத்தை 6 மணிநேரம் பாதுகாக்கலாம். இந்த பெட்டி மிக மிக பத்திரமாகக் கையாளப்படுகிறது.

 

தானம் செய்பவரின் குடும்பத்தை சமாதானம் செய்வது என்பது எப்போதுமே கடினமான விஷயம். அதுவும் மூளைச்சாவு என்பதைப் புரிய வைப்பது மிகமிக சிக்கலானது. அதுவும் இந்த முறை இரண்டு குழந்தைகளின் தாய், வயதில் சிறியவர் என்பதெல்லாவற்றையும் மனதில் கொண்டு அந்தக் குடும்பத்தை உறுப்பு தானத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டிவந்தது.

 

2014 ஆம் வருடம் கர்நாடக மண்டல ஒருங்கிணைப்புக்  குழுவினரால் செய்யப்படும் 23வது உறுப்பு தானம் இது.

 

இந்த நிகழ்வு ஆரம்பித்து நடந்து முடிய மொத்தம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் ஆகியிருக்கின்றன. இந்த நேரம்  முழுவதும் தானம் செய்தவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட இதயம் விடாமல் துடித்துக் கொண்டே இருந்திருக்கிறது. தானம் கொடுத்தவர் அமைதியாக உறங்கும் வேளையில் இந்த இதயத்தை பெற்றவருக்கு புதிய வாழ்க்கை கதவு திறந்திருக்கிறது.

 

 

உறுப்பு தானத்திற்காக காத்திருப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. இந்த மாதிரி நிகழ்வுகளை ஊடகங்களின் மூலம் வெளிக் கொண்டுவருவது பொதுமக்களிடையே பரவலான விழிப்புணர்வைக் கொண்டு வரும் என்பது உண்மை.

 

 

 

 

 

 

 

Advertisements

3 thoughts on “2 மணி நேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்குப் பறந்த இதயம்!

  1. மனித உயிரின் மதிப்பை அறிந்து அதற்கு ஒத்துழைத்த பொது மக்களையும் சொல்ல வேண்டும். சென்னையில் ஒருநாள் திரைப்படம் கூட ஏற்கெனவே நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதானே. ஹிதேந்திரன் என்று நினைவு.

    இப்போது எல்லோராலும் சொல்லப் படும் யோசனை என்ன என்றால் எல்லா சிறப்பு மருத்துவமனைகளிலும் மொட்டை மாடியில் ஒரு இடம் ஒதுக்கி ஹெலிபாட் அமைத்து வான் வழியாக விரைவாக ஹெலிகாப்டர் மூலம் இந்தப் பணியை செய்யலாம் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது.

    செய்யலாம்.

    ஆமாம், ஹெலிகாப்டருக்கு தமிழில் என்ன சொல்ல வேண்டும்? :)))

  2. மூளைச்சாவு என்றால் என்ன என்பதைப் பற்றி விளக்கினீர்கள். என் பயமெல்லாம், நல்ல மனங்களும், வியாபார மனிதர்களும் நிறைந்த மருத்துவ உலகில் தவறு நடக்கக் கூடாது என்பதே. ுறுப்பி தானங்கள் காசுக்காக நடக்க்க்கூடாது என்பதை மீறி ஒருத்தர் உறுப்பை இன்னொருத்தருக்கு மாற்றும் பூமி நம்நாடு என்பதை ஏற்கனவே உணர்ந்திருக்கிறோம். நல்லது நடக்குமென்று நம்புவோமாக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s