ஆழம் பத்திரிக்கை

சீரழியும் பூங்கா நகரம்

              

 

 

ஆகஸ்ட் 2014 ஆழம் பத்திரிகையில் வந்திருக்கும்  எனது கட்டுரை

மண்டூர் மக்களுக்கு பெங்களூருவாசிகளின் மேல் தீராத கோபம். ‘உங்கள் நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கு சேரும் திடக்கழிவுகளை எங்கள் புழக்கடையில் கொண்டுவந்து கொட்டுவது எந்த விதத்தில் நியாயம்?’ என்று கேட்கிறார்கள். பெங்களூருவின் வெளிப்புற எல்லையில் இருக்கும் மண்டூர், தினந்தோறும் சுமார் 200 லாரி குப்பைகள்   கொட்டப்பட்டு பெங்களூரின் கழிவுத்தொட்டியாக மாறியிருக்கிறது.

 

கேள்வி கேட்பதுடன் நிற்கவில்லை மண்டூர் மக்கள். அங்கு வசிக்கும் திரு கோபால்ராவ் தலைமையில் ஒன்று சேர்ந்து தங்களுக்கு நேர்ந்திருக்கும் அநியாயத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். கர்நாடக முதல்வரை ஒரு நாள் மண்டூர் வந்து அழுகும் குப்பைகளால் அங்கு வீசும் துர்நாற்றத்தை அனுபவிக்கும்படியும், இதன் காரணமாக பல்வேறு வியாதிகளுக்கு அவர்கள் ஆளாவதையும் நேரடியாகப் பார்த்து ஆவன செய்யும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல; வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த மோசமான நிலைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற இறுதி எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்கள்.

 

பூங்கா நகரம் என்றும் வயதானவர்களின் சொர்க்கம் என்றும் அழைக்கப்பட்ட பெங்களூரு, இந்தியாவின் சிலிக்கன் வாலியாக மாற்றப்பட்டதில் சந்திக்கும்  முக்கியப் பிரச்னைகளில் இந்தக் கழிவு அகற்றும் பிரச்னையும் ஒன்று. மேடு பள்ளமான தெருக்கள், அகலம் குறைந்து வரும் நடைபாதைகள், பலமுறை காலக்கெடு தாண்டியும் முடிக்கப்படாத மெட்ரோ ரயில் கட்டுமானங்கள், மின்சாரப் பற்றாக்குறை, போதிய நீர் கிடைக்காமை, வற்றிவரும் ஏரிகள், அழிந்துவரும் பசுமை, மக்கள் வாழும் சின்னச்சின்ன தெருக்களில் கூட நெரிசலான ஆமைவேக போக்குவரத்து இவையெல்லாம் பெங்களூருவின் அதிவேக, திட்டமிடாத வளர்ச்சியின் அடையாளங்கள்.

 

பெங்களூருவின் ஜனத்தொகை ஒரு கோடியைத் தாண்டிவிட்டது. கர்நாடகாவின் ஜனத்தொகையில் ஆறுபேர்களில் ஒருவர் பெங்களூருவில் இருக்கிறார்கள். 2011 மக்கள் ஜனத்தொகை கணெக்கெடுப்பின்படி கர்நாடகாவின் மொத்த ஜனத்தொகையான 6.11 கோடியில், பெங்களூரு நகரவாசிகளின் எண்ணிக்கை 96.21 லட்சங்கள். இந்தியாவின் பெருநகரங்களின் ஜனத்தொகை பெருக்கத்தில் பெங்களூரு முதலிடம் வகிக்கிறது. கர்நாடகாவின் 10 வருட ஜனத்தொகை பெருக்கம் 16 சதவிகிதம் என்றால் பெங்களூருவின் ஜனத்தொகை மட்டும் 47 சதவிகிதம் அதிகரித்துள்ளது –பத்து வருடங்களில்.  ஜனத்தொகை பெருக்கத்தில் இந்தியாவின் தலைநகர்  டெல்லி கூட 21 சதவிகித ஜனத்தொகையுடன் இரண்டாவது இடம் தான். பெங்களூரு நகரத்தில் ஒரு சதுர கிலோமீட்டரில் 4,300 பேர்களுக்கு மேல் வாழ்கிறார்கள்.

 

‘ப்ராண்ட் பெங்களூரு’ ஒருங்கிணைந்த உலகளாவிய பொருளாதார சேவைக்கு முன்னோடி நகரமாக பார்க்கப்பட்டது. ஏற்கனவே இங்கு திறமை வாய்ந்த நபர்கள் நிறைந்திருந்தனர். தொழில்நுட்பதுறையின் வளர்ச்சி நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் திறமைசாலிகளை பெங்களூருவிற்குள் வரவழைத்தது. இன்றைய தேதியில் சுமார் 10 லட்சம் நபர்கள் நேரடியாக தகவல் தொழில்நுட்பத் துறையிலும், அதைச் சார்ந்த துறைகளிலும் வேலை செய்கிறார்கள்.

 

இவர்களைத் தவிர ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை செய்யும் இளம் பெண்கள் (விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அந்தக் குடும்பங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு தள்ளப்படுபவர்கள்), பெருகி வரும் பல மாடிக் கட்டிடங்களில் வேலை செய்யும் கட்டிடப் பணியாளர்கள், வேலை தேடி வருபவர்கள், தங்கள் ஊர்களைவிட்டு புலம் பெயர்ந்து வருபவர்கள் என பெங்களூருவின் தொழிலாள ஜனத்தொகை பல்வேறு வகையினர்.

 

பெங்களூருவில் பங்களாக்களும், தனி வீடுகளும் பெருகி வந்தாலும் குடிசைகளுக்கும் குறைவில்லை. இரண்டாம் நிலை நகரங்கள் என்று சொல்லப்படும் அஹமதாபாத், கொச்சி, விசாகப்பட்டினம், கோயமுத்தூர் ஆகியவை அந்தந்த மாநிலங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும்  நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மட்டுமே மொத்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இரண்டாவது நிலை நகரங்கள் 26 இருந்தபோதிலும் பெங்களூருக்கு சரிசமமாக எந்த நகரமும் ஜனத்தொகை பெருக்கத்தை காட்டவில்லை. கர்நாடகாவின் இரண்டாவது பெரிய நகரமான ஹூப்ளி-தார்வாட்டின் கடந்த பத்து வருட ஜனத் தொகைப் பெருக்கம்  1.57 லட்சம் மட்டுமே.

 

கர்நாடகாவின்  முக்கியமான ஏற்றுமதி மென்பொருள். இதன் ஏற்றுமதி  பற்றிய புள்ளிவிவரங்கள் பெங்களூருவின் சரிசமநிலையற்ற வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். 2013-14 ஆண்டில் கர்நாடகாவின் தகவல் தொழில்நுட்ப பொருட்களின் ஏற்றுமதி 1.51 லட்சம் கோடி (அதாவது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 37 சதவிகிதம்). இதில் 95 சதவிகிதம் பெங்களூருவிலிருந்து மட்டுமே. இரண்டாம் நிலை நகரங்களான மைசூரு, மங்களூரு, ஹூப்ளி-தார்வாட் பகுதியிலிருந்து ஏற்றுமதி ஆகியிருப்பது  சின்னஞ்சிறு அளவே.

 

 

பெங்களூருவை மட்டுமே இலக்காக கொண்டு பலரும் இங்கு வர ஆரம்பித்த பின்னர் நிலம், வீட்டுமனை, வீடு போன்ற அசையாச் சொத்துக்களின் விலை வானுயரத்திற்கு உயர்ந்தது. மும்பை, தில்லி நகரங்களுக்குப் பிறகு நிலம், வீடு வாங்க, சொத்து சேர்க்க பெங்களூரு என்ற நிலை உருவாயிற்று. இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக்கொண்ட நிலச்சுரண்டல்காரர்கள்  அரசியல் செல்வாக்குடன் மனைகளை வாங்கி விற்க ஆரம்பித்தனர்.  அடுக்குமாடிக் கட்டிடக் கலாச்சாரம் இங்கும் பரவ ஆரம்பித்தது. பசவனகுடி, சாம்ராஜ் பேட், நரசிம்ம ராஜா காலனி போன்ற பெங்களூருவின் பழைய இடங்களில் இருந்த பிரம்மாண்டமான தனி பங்களாக்கள் பலமாடிக் கட்டிடங்களாக மாறத் தொடங்கின. நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருக,  தெருக்களை அகலப்படுத்தபடுவதற்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்களை கட்டவும், பல நூறுஆண்டுகளாக வளர்ந்து நிழல் கொடுத்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. வானிலை மாறியது. மழை குறைந்தது. வெயில் கொளுத்த ஆரம்பித்தது. காற்றின் தூய்மை குறைந்தது.

 

திரு ஏ.டி. ராமசுவாமி தலைமையில் கூட்டு சட்டமன்ற குழு ஒன்று நிலச் சுரண்டல்களை கண்டுபிடிக்கவும், முன்னாள் அதிகாரி திரு வி. பாலசுப்பிரமணியம் தலைமையில் செயல்குழு ஒன்று சுரண்டப்பட்ட நிலங்களை மீட்கவும் அமைக்கப்பட்டன. பெங்களூரிலும், அதைச்சுற்றி இருக்கும் முக்கியப் பகுதிகளில் உள்ள நிலங்களும், ஏரிக்கரைகளும் அரசியல் செல்வாக்குப் பெற்ற பெரிய தலைகளின் உதவியுடன் சூறையாடப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 27,336 ஏக்கர் நிலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று இந்த குழுக்கள் தகவல் தெரிவித்தன.

 

‘அழுகி நாற்றமடிக்கும் குப்பை மலைகளும், கூடிய விரைவில் தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது என்பதை காட்டும் குறைந்து கொண்டே வரும் நிலத்தடி நீரின் அளவும்  நமக்கு அடிக்கப்படும் எச்சரிக்கை மணிகள். இவை யாருக்குமே கேட்கவில்லையா? திடீரென வளர்ந்த பெங்களூரு நகரம் இப்போது எதிர்பாராத சரிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதைப்   பற்றி யாருமே கவலைப்படவில்லையே!’ என்று அங்கலாய்க்கிறார் திரு பாலசுப்பிரமணியம்.

 

ஆனால் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியும், மனித வள தலைமைப் பொறுப்பாளர் மற்றும் கர்நாடக தகவல் தொடர்பு தொழில்நுட்ப குழுவில் ஒருவருமான திரு மோகன் பை ‘பெங்களூரு நகரம் இந்தப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வரும்’ என்ற நம்பிக்கையை முன்  வைக்கிறார். ‘பெங்களூருவின் சவால் அதன் முன்னேற்றம்தான். கர்நாடகாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவிகிதமும், வரிகள் மூலம் வரும் வருமானத்தில் 65 சதவிகிதமும் பெங்களூரிலிருந்தே கிடைக்கிறது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் வேண்டுமென்றே பெங்களூருவின் உள்கட்டமைப்பில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டன’ என்கிறார்.

 

குருவியின் தலையில் பனங்காய் என்பதுபோல சிறிய நகரமான பெங்களூரு இந்த திடீர் அசுர வளர்ச்சியில் – சரியான உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் – திணறுகிறது. கர்நாடக தகவல் தொடர்பு தொழில்நுட்ப குழு சில பரிந்துரைகளை முன்வைக்கிறது.

  • பெங்களூரின் நகர வருமானம், மாநில வரிப் பணத்தில் ஒரு பங்கு, கடனுதவி இவைகளைக் கொண்டு அடுத்த 15 ஆண்டுகளில் 2,55,00 கோடி ரூபாய் பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவழிக்க வேண்டும்.
  • பெங்களூரைத் தவிர்த்து கர்நாடகாவிலுள்ள புதிதாக வளர்ந்து வரும் 7 தகவல் தொழில் நுட்ப மையங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.

 

தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தின் பேராசிரியர் திரு நரேந்தர் பணி சொல்கிறார்: ‘நகரத்தின் வரிவருமானத்தை நகரத்தின் வளர்ச்சிக்கே பயன்படுத்த வேண்டும் என்பது இயலாத காரியம். வருமானவரி, மக்களின் மற்ற நலன்களுக்காகவும் பயன்படுத்தப் பட வேண்டும். பெங்களூருவிலிருந்து வரும் அபரிமிதமான வரி, மற்ற நகரங்களின் பொருளாதார வருமானத்திறன் மேம்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. இதை முதலில் சரி செய்ய வேண்டும்’.

 

‘இந்தியாவின் நகரமயமாக்குதலில் சில குறிப்பிட்ட பாணிகள் தெளிவாக   காணக் கிடைக்கின்றன. கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் ஒரே ஒரு நகர வளர்ச்சியை மட்டுமே பார்க்கமுடியும். கடந்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் பெங்களூருவும் ஹைதராபாத்தும் அடைந்திருக்கும் வளர்ச்சி அந்த நகரங்களுக்கே பாதகமாக அமைந்திருக்கிறது. தெலுங்கானா மாநில உதயம் ஹைதராபாத்தை இந்த நிலையிலிருந்து வெளிக் கொண்டுவந்து விடும். பெங்களூருவை மையப்படுத்தி ஏற்படும் வளர்ச்சியிலிருந்து கர்நாடகா வெளிவர இன்னும் பல ஆண்டுகள் ஆகும்’ என்கிறார் நரேந்தர் பணி.

 

பெங்களூருவின் இன்னொரு பிரச்னை குற்றங்கள் பெருகி வருவது. எந்த வேலையானாலும் சரி, பெங்களூரு வந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற மனநிலையில் வரும் இளைஞர்கள் சிறிது காலத்தில் தாங்கள் நினைத்தபடி இங்கு வேலை கிடைப்பது சுலபமில்லை என்று புரிய சின்னச்சின்ன குற்றங்களில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். இந்த சிறு குற்றங்கள் நாளடைவில் பெரிய குற்றங்களாக மாறுகின்றன. வீட்டில் தனியே இருக்கும் பெண்கள், முதியவர்கள் கொல்லப்படுவது, ஏடிஎம் கொள்ளைகள், பெருகி வரும் பாலியல் குற்றங்கள் என்று பெங்களூரு இன்று பாதுகாப்பு இல்லாத நகரமாகவும் மாறி வருகிறது.

 

பெங்களூரு பற்றிய சில புள்ளி விவரங்கள்: (2011 மக்கள் தொகைக் கணெக்கெடுப்பின்படி)

  • பெங்களூரு நகர கோட்டத்தின் ஜனத்தொகை: 9,621,551 (இப்போது ஒரு கோடியைத் தாண்டிவிட்டது).
  • பத்து வருட ஜனத்தொகை அதிகரிப்பு: 47.18 சதவிகிதம். (2001 லிருந்து 2011 வரை)
  • மக்கள் நெருக்கம்: ஒரு சதுர கி. மீ.க்கு 4,381 நபர்கள். (2001 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2,985 ஆக இருந்தது.)
  • குழந்தைகள்: 1000 ஆண் குழந்தைகளுக்கு 944 பெண் குழந்தைகள். இந்த எண்ணிக்கை 2001 இல் 943 ஆக இருந்தது.
  • படித்தவர்களின் எண்ணிக்கை: 87.67 சதவிகிதம். பெண் படிப்பாளிகள் 96 சதவிகிதம்

 

‘ஒரு காலத்தில் இந்த நகரத்தில் நிலவும் பருவ நிலைக்காகவே பெயர் பெற்ற பெங்களூரு, இன்று அளவிற்கு அதிகமான போக்குவரத்தாலும், அவற்றால் ஏற்படும் புகை, தூசி முதலியவைகளாலும் பருவநிலை முற்றிலும் மாறிய நிலையில் மூச்சு விடமுடியாமல் திணறுகிறது’ என்கிறார் ஞானபீட பரிசு பெற்ற எழுத்தாளர் யு.ஆர். அனந்த மூர்த்தி. பெங்களூர் என்ற பெயரை பெங்களூரு என்று மாற்ற வேண்டும் என்ற யோசனையை முன் வைத்தவர் இவரே.

 

1990 வரை சிறிய நகரமாக குளுகுளு வானிலையுடன், இருபுறமும் மரங்கள் நிறைந்த தெருக்களும், வண்ண வண்ண ரோஜாப் பூக்கள் பூத்துக் குலுங்கும் வீடுகளும், நீர் நிறைந்த ஏரிகளும், பெரிய பெரிய பங்களாக்களும், அமைதியும் சாந்தமும் நிலவும் இடமாக இருந்த பெங்களூருவின் பழைய தலைமுறைகள் தங்கள் கண் முன்னாலேயே இந்த நகரம் அழிவதை பார்த்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லையா என்று குமுறுகிறார்கள். முன்னேற்றம் வேண்டும் அதற்காக ஒரு நகரம் தனது பழம் பெருமைகளை, எழிலை இழக்கலாமா என்பது இவர்களின் கேள்வி.

 

பெங்களூருவை எப்படிக் காப்பாற்றுவது என்ற விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மண்டூர் மக்களுக்கு பெங்களூருவாசிகளின் பதில் என்ன என்பதும் விவாதத்திற்குரியது தான்.

Advertisements

8 thoughts on “சீரழியும் பூங்கா நகரம்

  1. வளர்ந்து வரும் பல நகரங்களின் பிரச்னைகள் இது. கழிவுகள் கொட்டப்படுவது தமிழக எல்லையிலும் கொட்டப்படுவதாக முன்பு ஒரு செய்தி படித்த நினைவு இருக்கிறது. மற்றபடி கான்க்ரீட் காடுகளாகும் நிலை, நிலத்தடி நீர்ப் பிரச்னை, மக்கள் தொகை உயர்வு ஆகியவை இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் பொதுவானது. விகிதாச்சாரத்தில் முன்ன பின்ன இருக்கும் அவ்வளவுதான்! :))

  2. பூங்கா நகரம் பாழ்பட்டுப் போயிருப்பது மிகவும் வருத்தமே. ஸ்ரீராம் சார் சொல்வது போல் இந்தியாவின் முக்கால வாசி மாநிலங்கள் எல்லாமே ஏதோவொரு பிரச்சினை இருந்து கொண்டே தான் இருக்கின்றன். நாமும் ஓட்டுப் போட்டதோடு நம் கடமை முடிந்தது என்கிறோம். அவர்களும் இன்னும் ஐந்து வருடம் இருக்கிறதே என்று நினைக்கிறார்கள்.

    என்ன செய்வது நாம் அங்கலாய்ப்பதைத் தவிர.

  3. ஒரு பூங்கா நகரம் என்ன நம் நாட்டின் அனைத்து மானிலங்களிலும் உள்ள ஒற்றுமையான ஒரே பிரச்னை இந்த பெருகி வரும் குப்பைக்கூளங்கள்தான். புலம்புவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும் கவனிக்கவேண்டியவர்கள் கண்களில் இது படுவதில்லையோ என்னவோ?

  4. எங்கஊரு பெங்களூரு என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்படியான ஊராக இருந்தது. சின்ன வயதில் ஊரைப் பார்த்து பிரமித்ததுண்டு. என்ன அழகான
    வீதிகள்,சாலையோர மரங்கள், சீதோஷ்ணம் எல்லாமே. வரவர எல்லாமே குறைந்து ஜனத்தொகை அதிகமாகிக் கொண்டு வருவதையும் பார்க்க முடிந்தது.
    ஸரியான திட்டமிடப்படவில்லை. உங்கள் கணக்கைப் பார்க்கும்போது எல்லா நகரங்களுமே இம்மாதிரி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்ட பிறகுதான், வேறு வழி
    யோசிப்பார்கள்.. ஐயோ பாவம் பெங்களூரு. அன்புடன்

  5. முன்னேற்றம் வேண்டும் அதற்காக ஒரு நகரம் தனது பழம் பெருமைகளை, எழிலை இழக்கலாமா என்பது இவர்களின் கேள்வி.//

    பெங்களூரில் மட்டும் இல்லை ரஞ்சனி எங்கும் , இங்கும் இதே நிலை.
    நாகரீகம் என்ற பெயரில் பழைய ஓட்டு வீடு இருந்த வீட்டில் இப்போது அடுக்குமாடி குடியிருப்பு. தண்ணீருக்கு ஆழ்துளைகுழாய் கிணறு என்று போட்டுக் கொண்டே போகிறார்கள். குப்பைகூளங்கள் எங்கே போடுவது இதுதான் இப்போதைய பிரச்சனை.

    நான் முன்பு பார்த்த பெங்களூர் இப்போது இல்லை. அந்த குளிர், சுத்தமான காற்று இப்போது இல்லை என்பது உண்மைதான்.

    அருமையான கட்டுரை.

  6. பூங்கா நகரின் இன்றைய நிலையை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள். எல்லா இடங்களுமே இப்படித் தான் ஆகிக் கொண்டிருக்கிறது. மனம் வருந்த வேண்டிய செய்தி..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s