அரசியல் · India

அன்புள்ள இந்தியர்களே!

வல்லமை இதழில்   இன்று வெளியான கடிதம்

 

அப்துல் கலாம் நலமாக இருக்கிறார் - வதந்திகளை நம்ப வேண்டாம்: உதவியாளர் தகவல்!

திரு அப்துல் கலாம் அவர்களின் கடிதம்:

அன்புள்ள இந்தியர்களே,

இந்த உரையை நான் ஹைதராபாத் நகரத்தில் ஆற்றிக்கொண்டிருந்தபோது ஒரு 14 வயது பெண் என் கையெழுத்து வேண்டுமென்றாள். நான் அவளிடம் அவளது எதிர்காலக் கனவு என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள்: முன்னேறிய இந்தியாவில் நான் வாழ வேண்டும் என்று. அவளுக்காக நீங்களும் நானும் இந்த முன்னேறிய இந்தியாவை உருவாக்க வேண்டாமா?

 

இந்தியா பின்தங்கிய நாடு அல்ல; மிகவும் முன்னேறிய நாடு தான் என்று நாம் பிரகடனப்படுத்த வேண்டும். எப்போது இதைச் செய்யப் போகிறோம்?

நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

 

நமது அரசாங்கம் திறமையானது அல்ல என்கிறோம்;

நமது சட்டங்கள் மிகப் பழமையானவை என்கிறோம்;

மாநகராட்சி கழிவுகளை சரிவர அப்புறப்படுத்துவதில்லை என்கிறோம்;

தொலைபேசிகள் இயங்குவதில்லை; இரயில் நிர்வாகம் ஒரு ஜோக். விமானப் போக்குவரத்து உலகிலேயே படுமட்டமான ஒன்று. தபால்கள் ஆமை வேகத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்திற்குப் போய் சேருவதே இல்லை. இன்னும் இன்னும் எத்தனையோ குறைகள் இந்த நாட்டைப்பற்றி சொல்லுகிறோம். நாம் என்ன செய்தோம் இவற்றை சரிசெய்ய?

 

இந்தியாவிலிருந்து சிங்கபூர் செல்லும் ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு உங்கள் பெயரைக் கொடுங்கள்; உங்கள் முகத்தைக் கொடுங்கள்; இப்போது அந்த ‘நீங்கள்’ சிங்கபூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறீர்கள். நன்னடத்தையின் உருவமாக அங்கு இருக்கிறீர்கள். அங்கு சிகரெட்டை பிடித்துவிட்டு மீதியை தெருவில் போடுவதில்லை நீங்கள். அவர்களது பாதாள இரயில் பற்றி அவர்களைப் போலவே பெருமிதம் அடைகிறீர்கள்; நமது மாஹிம் கடல்வழிப் பாதை போலவே அமைந்திருக்கும் ஆர்செர்ட் சாலையில் மாலை 5 மணியிலிருந்து 8 மணிவரை போக 5 டாலர்கள் (இந்தியப்பணம் சுமார் 60 ரூபாய்) கூசாமல் கொடுக்கிறீர்கள்; மால் அல்லது உணவகத்தின் வெளியில் நிறுத்தியிருக்கும் காரை எடுக்கத் தாமதமானால் அதிகப்படியான பார்க்கிங் பணத்தை செலுத்துகிறீர்கள்; சிங்கப்பூரில் இதற்கெல்லாம் நீங்கள் எதுவும் சொல்லுவதில்லை.

ரமதான் சமயத்தில் துபாயில் இருந்தால் வெளியில் சாப்பிட பயப்படுவீர்கள்;

ஜெட்டாவில் தலையை துணியால் மூடிக்கொள்ளாமல் எங்கும் செல்ல மாட்டீர்கள்;

‘என்னுடைய வெளியூர் தொலைபேசிக் கட்டணத்தை இன்னொருவருக்கு அனுப்பிவிடு’ என்று சொல்லி இந்தியாவில் தொலைபேசி ஊழியரை விலைக்கு வாங்கலாம்; லண்டனில் இது நடக்குமா? காரில் அநாயாசமாக வேக அளவை தாண்டி சென்றுவிட்டு காவல்துறை அதிகாரியிடம், ‘நான் யார் தெரியுமா?’ என்று இந்தியாவில் பெருமை பேசலாம்; வாஷிங்கடனில் முடியுமா?

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கடற்கரைகளில் காலி சாக்லேட் பேப்பரை  குப்பைத் தொட்டிகளில் போடுவீர்கள், இங்கு?

டோக்கியோவின் வீதிகளில் வெற்றிலை சாற்றைத் துப்பத் துணிவீர்களா?

பாஸ்டனில் உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரை பரீட்சை எழுத வைக்கவோ, பொய் சர்டிபிகேட் வாங்கவோ உங்களால் முடியுமா?

இப்போதும் ‘உங்களைப்’ பற்றித்தான் பெசிகொண்டிருக்கிறோம்.

நீங்கள் மற்ற தேசங்களில் உள்ள சட்டதிட்டங்களுக்கு தலை வணங்குவீர்கள் ஆனால் உங்கள் தேசத்தில் இதைச் செய்ய மாட்டீர்கள்.

இந்திய மண்ணைத் தொட்டவுடன், சிகரெட் துண்டை, கையிலிருக்கும் துண்டுக் காகிதங்களை வீதியில் வீசி எறிவீர்கள். அந்நிய தேசங்களுக்குப் போய் அங்கு நடக்கும் நிகழ்வுகளில் பங்கு கொண்டு அங்குள்ளவர்களை போற்றத் தெரிந்த உங்களால் உங்கள் தேசத்தில் ஏன் அப்படி இருக்க முடியவில்லை? அமெரிக்காவில் ஒவ்வொரு நாய் சொந்தக்காரரும் தெருவில் நாயுடன் நடக்கும்போது, தங்கள் நாய் சுச்சூ, கக்கா போனவுடன் சுத்தம் செய்வார்கள். எந்த இந்தியனாவது செய்வானா?

 

தேர்தலில் ஓட்டு போட்டவுடன் நம் கடமைகள் முடிந்துவிட்டதாக நினைத்து, வீட்டில் ஹாயாக உட்கார்ந்து கொள்வோம். அரசு நமக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து தரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் நமது பங்களிப்பு வெறும் பூஜ்யம். மாநகராட்சி தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்போம், ஆனால் குப்பைகளை தெரு முழுவதும் போடுவது நம் தப்பு என்று உணர மாட்டோம். அல்லது தெருவில் கிடக்கும் ஒரு துண்டு காகிதத்தையாவது எடுத்து குப்பைத் தொட்டியில் போடமாட்டோம்.

ரயில்வே நிர்வாகம் கழிப்பறைகளை சுத்தமாக வைக்கவேண்டும் என்று நினைப்போம். ஆனால் நாம் அவைகளை சரிவர பயன்படுத்த வேண்டும் என்பது நம் பொறுப்பு என்பதை உணர மாட்டோம். விமானப் பயணங்களில் மிகச்சிறந்த உணவு கொடுக்கப்பட வேண்டும். விலையுயர்ந்த சோப்பு, ஷாம்பூ இவைகளைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. ஆனால் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும் இவைகளை திருடக்கூடத் தயங்கமாட்டோம்.

 

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வரதட்சிணை, பெண்சிசு கொலை போன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக நாம் என்ன செய்கிறோம்? வீட்டில் வரவேற்பறையில் உட்கார்ந்து கொண்டு வாய்கிழியப் பேசுவோம். வீட்டில் பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்று சிந்திப்போமா?

 

இப்படி நடந்துகொள்ள நாம் சொல்லும் சால்ஜாப்புகள் என்ன?

‘அமைப்பு மாறவேண்டும், நான் ஒருவன் மாறி என்ன ஆகப்போகிறது?’

யார் இந்த மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறார்கள்? இந்த அமைப்பில் அங்கத்தினர்கள் யார்? நம்மைப் பொறுத்தவரை இந்த அமைப்பில் இருப்பவர்கள் நமது அக்கம்பக்கத்தவர்கள், மற்ற வீடுகள், மற்ற நகரங்கள், மற்ற சமூகங்கள் இவை தவிர அரசு. நிச்சயமாக நீங்களும் நானும் இதில் இல்லை.

 

உண்மையில் நமக்கு இந்த சமூகத்தை மாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று வைத்துக்கொள்வோம். ஏதாவது நேர்மறையாக நமது பங்களிப்பை கொடுப்போமா? குடும்பத்துடன் பத்திரமான இடத்திற்கு போய், ஒரு கூண்டுக்குள் ஒளிந்துகொண்டு விடுவோம். யாரோ ஒரு திருவாளர் ‘சுத்தம்’ வந்து தனது கையை ‘விஷுக்’ கென்று வீசி ஏதாவது அற்புதங்கள் செய்ய வேண்டும். அல்லது நாம் வேறு ஏதாவது வெளிதேசத்திற்கு கோழைகள் போல ஓடிவிடுவோம். அமெரிக்காவிற்கு சென்று அவர்களது நாட்டின் அமைப்பைப் புகழுவோம் அவர்களது பெருமையில் குளிர் காய்வோம். நியூயார்க் நகரம் பாதுகாப்பானதாக இல்லையா, ஓடு இங்கிலாந்திற்கு; இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டமா, அடுத்த விமானத்தைப் பிடித்து ஓடு வளைகுடா நாட்டிற்கு; வளைகுடா நாடுகளில் போர் அபாயமா? உடனே இந்திய அரசு ஓடிவந்து உங்களை காப்பாற்றவேண்டும்!

 

இங்கிருப்பவர்கள் எல்லோரும் இந்த நாட்டை தூற்றவும், மோசமாகப் பேசவும் தான். யாருக்குமே இந்த நாட்டின் அமைப்பின் மீது அக்கறை இல்லை. நமது மனசாட்சியை பணத்திற்கு அடமானம் வைத்துவிட்டோம்.

 

அன்புள்ள இந்தியர்களே, இந்த கட்டுரை உங்களை சிந்திக்க வைக்கவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து கொள்ளவும்தான் எழுதப்படுகிறது. இந்தக் கேள்விகள் உங்கள் மனசாட்சியை கொஞ்சமாவது தட்டி எழுப்பும் என்றுதான்.

 

ஜான் எப் கென்னடி சொன்னதை நானும் திரும்பச் சொல்லுகிறேன்: ‘இந்த நாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும், என்ன செய்தால் அமெரிக்காவும் பிற நாடுகளும் இன்றிருக்கும் நிலைமைக்கு இந்தியா வரமுடியுமோ அதைச் செய்வோம்.’

 

இந்தியாவிற்கு என்ன தேவையோ அதைச் செய்வோம். இந்தக் கடிதத்தை ஒவ்வொரு இந்தியனுக்கும் அனுப்புங்கள் – ஜோக்குகள் அனுப்புவதற்குப் பதிலாக!

 

நன்றியுடன்,

அப்துல் கலாம்.

Advertisements

10 thoughts on “அன்புள்ள இந்தியர்களே!

 1. மிக உண்மையான விஷயங்கள். சுட்டும் விரல் எதிரே இருப்பவரைக் காட்டுகையில் மற்ற மூன்று விரல்கள் நம் மார்நினைக் காட்டுவதை நாம் கண்டு கொள்வதில்லை. தனி மனித சுய கட்டுப்பாடு என்று இங்கு மலர்கிறதோ, அன்றுதான் நல் இந்தியா மலரும். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய விஷயங்கள். ஆனால் படித்த உடன் மறந்து விடுகிறோம், என்னையும் சேர்த்து. திரு கலாமின் இந்தக் கடிதம் எப்போது, எங்கு, எதற்காக எழுதப்பட்டது?

 2. அனைவரும் அவர்களைப் பார்த்தே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி.

  இன்னுமொரு விசியம் இதில் சொல்லப்படவேண்டும். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை, இந்தியாவின் பிரதிநிதிகளாகத்தான் பிற நாட்டவர் பார்க்கின்றனர். ஒருவேளை வெளிநாட்டின் அதிபர்கள், நமது தூதரை இந்தியப் பிரதிநிதிகளாகப் பார்ப்பார். சக வெளிநாட்டுக்காரன் ரயிலிலோ, பேருந்திலோ அருகில் இருக்கும் இந்தியனை இந்தியநாட்டின் பிரதிநிதியாகத்தான் பார்ப்பான். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இவர்கள் நடந்து கொள்ளும் விதம் இந்தியாவை இவர்களே அசிங்கப்படுத்தும் வகையில் இருக்கும்.

  வருத்தம். ஆனால் உண்மை. இந்தியர்களை விட வெளிநாடு வாழ் இந்தியர்களில் வகுப்பு வாதம் அதிகம். 1000 ரூபாய் சம்பளம் வாங்குபவன் 500 ரூபாய் சம்பளம் வாங்கும் இந்தியனிடம் முகம் கொடுத்துப் பேசமாட்டான்(ள்).

  துபாயின் குடியேரலில் பிச்சைக்காரர்கள் கணக்காக வரிசையில் நிற்பான். சென்னையில் நிற்க அவனுக்குக் கை கூசும்.

  இவ்வளவு நியாயம் பேசும் வெளிநாடு வாழ் இந்தியன், கிடைக்கும் கொஞ்சம் அதிகப் பணத்திற்காக நகையை தன்னால் இயன்ற வகையில் கடத்துவான்(ள்). தொழில்முறையாக நடப்பது மட்டுமே பேப்பரில் வருகிறது. ஆனால் அவரவரும் அவரால் முடிந்த வரையில் சட்டத்தை மீறவே செய்கின்றனர்.

  இது வரை நான் எனக்கும் என் பெற்றோருக்குமாக இரண்டு எல்ஈடி டிவிக்களை வாங்கினேன். ஒன்று சென்னையிலும், இன்னொன்னு புதுகையிலும். உங்களுக்கு ஏதாவது இருக்கா. சிங்கப்பூரில் வாங்குவது விலை குறைவுதானே என்று கிண்டலடிப்பவன்(ள்)தான் சக இந்தியன். ஏம்பா. இறக்குமதி வரிபோடுவானே என்றால், குடியேற்றல் துறை அதிகாரியிடம் என் நண்பன் 3000 லஞ்சம் கொடுத்திட்டு எடுத்திட்டுப்போயிட்டான். அது மாதிரி கொண்டு போ என்று அறிவுரை கொள்பவர்கள்தான், இந்தியாவை அங்கலாய்த்துக்கொள்ளும் பணத்திற்காக இந்தியர்கள்.

  தமிழ் அடுத்த தலைமுறைக்கு வாழாது என்பான். தன் பிள்ளை ஆங்கிலத்தில் மட்டுமே பேசவேண்டும் என்று பெருமுயற்சி செய்வான். சக வெளிநாட்டினர் போல இரவல் அந்தஸ்து பெறவேண்டும் என்று முயல்வான்.

  உள்நாட்டு பிரகஸ்பதிகள் அதை விட. வெளிநாட்டினர் சாலை விதிகளைப் பின்பற்றுவதை சிலாகித்துப் பேசிக்கொண்டே, சிவப்பு எரிகையில் வாகனத்தைச் செலுத்துவான். அதைத் தட்டிக்கேட்டால் சண்டைக்கு வருவான். நான் தவறாகச் சென்றாலும், அதை நீ எப்படித் தட்டிக்கேட்கலாம். வரைமுறை இல்லாத சுதந்திரம் எனக்கு உண்டு என்று எதிரில் வரும் அப்பாவி மீது மோதி, உலகத்திலேயே சாலை விபத்துகள் இந்தியாவில்தான் அதிகம் என்று இந்தியாவிற்குப் பெயர் பெற்றுக்கொடுப்பவனும் இந்தியனே.

  இவனை(ளை) வைத்துக்கொண்டு இந்தியா என்ன செய்யும், பாவம்!

  சாட்டையடிக் கடிதத்தை சூடாக மொழி பெயர்த்தமைக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s