எங்க ஊரு… திருக்கண்ணபுரம்

தென்றல் சசிகலா அவர்கள் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்தார் மார்ச் மாதத்தில். இப்போதுதான் எழுத முடிந்தது எங்க ஊரு பற்றி. சசியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன் இத்தனை தாமதமாக இதை எழுதியதற்கு.

DSCN0010

முதன்முதலில்1974 ஆம் ஆண்டுதான் இந்த ஊர் பற்றி எங்கள் வீட்டில் அதிகம் பேசப்பட்டது. அந்த வருடம் என் பெரியம்மா பெண்ணின் திருமணம். மாப்பிள்ளையின் அம்மாவின் ஊர் திருக்கண்ணபுரம். ‘திருக்கண்ணபுரத்திலிருந்து சம்மந்தி என்றால் கொடுத்து வைத்திருக்கணுமே’ என்று எங்கள் வீட்டில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். அப்போது தெரியாது அடுத்தவருடம் நானும் அங்கேதான் வாழ்க்கைப்படப் போகிறேன் என்று.

 

திருமணத்திற்கு முன் திருக்கண்ணபுரம் போனதில்லை. திருமணம் ஆனவுடன் போகவேண்டும் என்று சொன்னபோது என் மாமியார் சொன்னார்: ’சௌரிபெருமாளை அத்தனை சீக்கிரம் நீ சேவிக்க முடியாது. பெருமாளே பார்த்து இவள் என்னை வந்து சேவிக்க வேண்டும் என்று மனசு வைத்தால் தான் நடக்கும்’ என்றார். திருமணம் நடந்தவுடன் கும்பகோணம் போய் உப்பிலியப்பனை சேவிக்கப் போனோம். என் கணவரிடம் அப்படியே திருக்கண்ணபுரம் போகலாம் என்று சொன்னேன். ‘அவ்வளவு சுலபமில்லை அது. சரியா பஸ் வசதி ஒண்ணும் கிடையாது. மெயின் ரோடுல இறங்கி ரொம்ப தூரம் நடக்கணும்’ என்றார். ரொம்பவும் ஏமாற்றமாக இருந்தது. இனி பெருமாள்தான் மனசு வைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

 

அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஒரு நாள் போனோம். அந்த முதல் விஜயம் பற்றி கணபுரத்தென் கருமணியே என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். ரொம்பவும் சின்ன ஊர். இப்போது இங்கிருந்தவர்கள் எல்லோரும் இந்த ஊரை விட்டு வெளியே போய்விட்டார்கள். மிகப்பெரிய குளம். குளத்தை சுற்றி நாலு மடிவளாகம் என்ற வீதிகள். அவ்வளவுதான் ஊர். ஊரில் நுழையும் முன் ஓர் பெரிய வளைவு. அருள்மிகு ஸௌரிராஜப்பெருமாள் திருக்கோவில் என்று எழுதியிருக்கும். 1991 இல் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. அப்போது நாங்களிருவரும் போயிருந்தோம். ஊர் நிரம்பி வழிந்தது சந்தோஷமாக இருந்தது.

 

இங்கு எப்படிப் போவது என்று கேட்பவர்களுக்கு:

 

மாயவரம் என்னும் மயிலாடுதுறைக்குப் போய் அங்கிருந்து நாகபட்டினம் போகும் பேருந்தில் போகலாம்.இன்னொரு வழி. திருவாரூரிலிருந்தும் வரலாம். உங்கள் பக்கம் அதிருஷ்டம் இருந்தால் திருக்கண்ணபுரம் உள்ளேயே வரும் பேருந்தும் கிடைக்கலாம் திருவாரூரிலிருந்து!

 

இல்லையென்றால், மாயவரம்-காரைக்கால் பேருந்தில் ஏறி திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். இடது பக்கம் போனால் திருப்புகலூர். வலது பக்கம் திருக்கண்ணபுரம். பேருந்து செல்லும் முக்கிய பாதையிலிருந்து 3 அல்லது 4 கிலோமீட்டர் உள்ளே நடக்க வேண்டும். பேருந்திலிருந்து இறங்கியவுடன் உங்களை வரவேற்பது காவிரி ஆறு. நீரில்லாத ஆறு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் நிறைய நீர் ஓடியிருக்க வேண்டும். ஆற்றின் மேல் இருக்கும் பாலம் இதற்கு அத்தாட்சி! இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று வயல்வெளிகள். சுவாசிக்குபோதே புத்துணர்ச்சி பரவும். இதையெல்லாம் அனுபவித்தால்தான் புரியும்.

 

பெருமாள் திருநாமம் சௌரிராஜன்; தனிக்கோவில் நாச்சியார்  கண்ணபுர நாயகி. வருடத்திற்கு ஒருமுறை பத்மினித் தாயாருடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

 

முதல்முறை போயிருந்தபோது அங்கிருந்த ஒரு குடும்பத்துடன் அறிமுகம் ஏற்பட்டது. இன்றுவரை எப்போது திருக்கண்ணபுரம் போனாலும் அவர்கள் வீட்டில் தான் தங்குவோம். முதல்முறை போனபோது மாமா, மாமி இருவரும் இருந்தனர். இப்போது இருவருமே பரமபதித்துவிட்டனர். ஆனாலும் எங்களுக்கு அந்தக் குடும்பத்தின் இளைய தலைமுறையுடன் ஆன உறவு தொடர்கிறது.

 

முதல்முறை போனபோது இரவு பெருமாளுக்கு தினம்தோறும் அமுது செய்யும் முநியதரையன் பொங்கல் கிடைத்தது. ஐந்து அரிசி, மூன்று பச்சைபயறு, இரண்டு நெய் என்ற அளவில் செய்யப்படுகிறது இந்தப் பொங்கல். அரிசியும் பருப்பும் நன்றாகக் குழையக் குழைய வேக வைக்கப்படுகிறது. பயறு அதில் இருப்பது தெரியவே தெரியாது.  அதில் நெய்யை ஊற்றி ஐந்து உருண்டை செய்கிறார்கள். ஒரு உருண்டையை மூன்று நான்கு பேர்கள் சாப்பிடலாம். கொஞ்சம் சாப்பிடும் போதே வயிறு நிரம்பிவிடும்.

 

மிகப்பெரிய கோவில். சேவிக்கத்தான் ஆளில்லை. ஒவ்வொருமுறை போகும்போதும் அங்கேயே தங்கிவிடலாம் என்று தோன்றும். அப்படி ஒரு அமைதி; ஒரு மன நிறைவு. எப்போதும் நீர் நிறைந்திருக்கும் திருக்குளம். ஒவ்வொருமுறை போகும்போதும் அங்கு நிச்சயம் தீர்த்தமாடுவோம்.

 

பெருமாளுக்கென்று நிறைய நிலபுலங்கள் இருக்கின்றன. ஆனால் விளைச்சலைக் கொடுக்க மனிதர்களுக்கு மனம் வருவதில்லை.

 

நித்ய புஷ்கரிணியில் எப்படி இவ்வளவு நீர் என்ற என் கேள்விக்கு மாமியிடமிருந்து பதில் கிடைத்தது. காவிரியில் நீர் வரத்து மிகும் போது அந்த உபரி நீர் இங்கு வரும்படியாக செய்திருந்தனர். அதைத்தவிர மழை பெய்யும்போது கோவிலில் விழும் நீர் நேரடியாக திருக்குளத்தில் வந்து சேருமாறு அமைத்திருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே மழை நீர் அறுவடை! திருக்குளத்தில் பெருமாளுக்கு தெப்போற்சவம் உண்டு.

 

திருவிழா சமயங்களில் வரும் பாகவதர்களின் கூட்டம் அப்படியொரு பக்தியில் திளைக்கும். ஆட்டம், பாட்டம் என மெய்மறந்து பெருமாளை சேவிப்பார்கள். குலசேகர ஆழ்வாரின் ‘மன்னுபுகழ் கோசலைதன்’ பாடலைப் பாடி ஆடியபடியே வீதிவலம் வருவார்கள்.

 

பெருமாள் வீதி உலா முடித்துவிட்டு திரும்பவும் கோவிலுக்குள் வரும்போது பெருமாளுக்கு வெந்நீரில் திருவடித் திருமஞ்சனம் நடைபெறும். வெளியே போய்வந்த அலுப்பு தீர இந்த உபசாரம். உடனே தோசை அமுது செய்யப்படும். அந்த தோசையின் ருசி ஆஹா!

 

குலசேகர ஆழ்வார் இந்தப் பெருமாளை ஸ்ரீராமனாக நினைத்து தாலாட்டுப் பாடினார். திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் இந்தப்பெருமாளை நினைத்து உருகுகிறார். பெருமாள் சந்நிதிக்கு பின்னால் திருமங்கையாழ்வார் சந்நிதி இருக்கிறது. விளகேற்றக்கூட ஆள் இல்லை.

 

மாசிமகத்தன்று பெருமாள் தீர்த்தவாரிக்கு திருமலைராயன் பட்டினத்திற்கு (கடற்கரை ஊர்) எழுந்தருளுவார் பெருமாள். அங்கு மீனவர்களின் மாப்பிள்ளையாக பெருமாளுக்கு ஏகப்பட்ட உபசாரம் நடக்கும். பெருமாள் தங்கள் ஊருக்கு எழுந்தருளும் ஆனந்தத்தை கொண்டாட பெருமாளை அப்படியே தூக்கித் தூக்கிப் போட்டு தங்கள் தோள்களில் பிடிப்பார்களாம். இதுவரை சேவித்தது இல்லை.

 

வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் பெருமாளை சேவித்துவிட்டு வாருங்கள். அந்த அழகு உங்களை மறுபடி மறுபடி அழைக்கும்.

 

இதைத் தொடர நான் அழைக்க விரும்புபவர்கள்:

திருமதி சித்ரா

திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் 

திரு பாண்டியன் 

திருமதி ராதா பாலு 

 

என் அழைப்பை ஏற்று எழுத வருமாறு அழைக்கிறேன்.

 

தொடர்புடைய பதிவுகள்: என்னுடைய இன்னமுதே

ராகவனே தாலேலோ 

 

45 thoughts on “எங்க ஊரு… திருக்கண்ணபுரம்

 1. ஆஹா……… மாட்டி விட்டு விட்டீர்களே ரஞ்சனி. எழுதிவிடுகிறேன். நீங்கள் எழுதியிருக்கும் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்கிற ஆவல் எனக்கும் இருக்கு. நீங்கள் சொல்வது போல் பெருமாளல்லவா மனம் இரங்கி எனக்குத் தரிசனம் தர வேண்டும்.தரிசனம் கிடைக்குமென நம்புகிறேன்.

  1. வாங்க ராஜி!
   நிச்சயம் தரிசனம் கொடுப்பார், கவலையே வேண்டாம்.
   மின்னல் வேகத்தில் வந்து அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!

  2. மாட்டுப்பெண்ணான நினைவுகளை இப்படி மாட்டிவிட்டால் தானே எழுதுவீர்கள்.ஹஹஹ விரைவில் எழுதுங்க வாசிக்க காத்திருக்கிறேன்.

 2. நீங்கள் கல்யாணமாகி உப்பிலியப்பன் கோவில் சென்றீர்கள். என் கல்யாணமே அங்குதான்!! எனக்கு 2 மகன்கள். இருவரும் திருவோண நட்சத்திரம்!

  ஊர் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஏகாந்தமாய் இருக்கும் கோவில்களுக்கே தனி அழகு.

  சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘கண்ணபுரம் சென்றேன்… கவலையெல்லாம் மறந்தேன்..’ பாடல் இந்த ஊர் பற்றிதானே?

  1. வாங்க ஸ்ரீராம்!
   சீர்காழி பாடியிருப்பது எங்க ஊரைப் பற்றித்தான்.
   உங்களைக் கூப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதானே கல்யாண மகாதேவி பற்றி எழுதியிருந்தீர்கள் என்று விட்டுவிட்டேன்.
   திருவாரூர் போனால் அடுத்தமுறை இங்கும் போய்விட்டு வாருங்கள்.

   நன்றி!

  2. சீர்காழி பாடிய கண்ணபுரம் இங்கே உள்ள சமயபுரம். சமயபுரமும் கண்ணனூர் என அழைக்கப்பட்டது. 🙂

   1. வாங்க கீதா!
    திருக்கண்ணபுரம் செல்வேன் என்றல்லவா பாடியிருக்கிறார், சீர்காழி. நித்ய புஷ்கரிணி, உத்பலாவதக விமானம் என்றெல்லாம் பாடியிருக்கிறாரே.

    இதோ பாடல்:

    கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்.
    கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்.

    திருக்கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்.
    வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
    எண்ணமெல்லாம் அவனின் இணையடியே என்பேன்.

    கண்ணபுரம்…

    நித்திய புஷ்கரனி நீரினிலே குளிப்பேன்
    நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
    உத்பலாவதக விமானத்தை நினைப்பேன்
    உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன்.

    கண்ணபுரம்…

    கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
    கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்.
    பெருமான் சன்னிதி முன் பித்தாகி நின்றிடுவேன்
    பிறவிப் பிணி அறுத்து உலகை வென்றிடுவேன்.

    கண்ணபுரம்..

    எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன்.
    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா என்ற
    என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்.
    கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன்.
    கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன்.

    கண்ணபுரம்..

   2. இந்தப் பாடல் குறித்து இன்னிக்குத் தான் பார்க்கிறேன் ரஞ்சனி. சீர்காழி இதைப் பாடி நான் கேட்டதில்லை. 😦

    பரவாயில்லை கீதா. இதோ இணைப்பு கொடுக்கிறேன், கேட்டுப்பாருங்கள்
    http://kannansongs.blogspot.in/2007/09/67.html

  1. வாங்க தனபாலன்!
   வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. ஒருமுறை போய்வாருங்கள்.

 3. உங்களுக்கே உரிய எளிய நடையில் திருக்கண்ணபுரம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். உங்களது பழைய பதிவை ஏற்கனவே படித்து கருத்துரை தந்துள்ளேன். மீண்டும் இப்போது படித்தேன். உங்கள் பதிவில் இருந்தே அமைதியான ஊர் என்று தெரிகிறது

  1. வாங்க தமிழ் இளங்கோ ஸார்!
   ரொம்பவும் அமைதியான ஊர். ஒருமுறை போய்வாருங்கள்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. // ’சௌரிபெருமாளை அத்தனை சீக்கிரம் நீ சேவிக்க முடியாது. பெருமாளே பார்த்து இவள் என்னை வந்து சேவிக்க வேண்டும் என்று மனசு வைத்தால் தான் நடக்கும்’ //

  ரொம்பச்சரி! நாகை போகும்போது சேவிக்கணும் என்று கொள்ளை ஆசை. ஆனால் வழி தவறிப்போச்சு:(

  நாகை சௌந்திரராஜனை சேவித்த கையோடு பெரியத்தைக்கு ஃபோன் செய்தால் (எங்க வீட்டு வேளுக்குடிக்கு தாம்பரம் அத்தை ) தரிசனம் நல்லபடி கிடைச்சதுன்னு சொன்னப்ப, அங்கே பக்கத்துலேதான் திருக்கண்ணபுரம் இருக்கு. அதையும் விட்டுறாதேன்னாங்க. வண்டியை நிறுத்தி விசாரிச்சால் வந்த வழியே 30 கிமீ போகணுமாம்.

  நமக்கு பாக்கியம் இல்லைன்னு மனசைத் தேத்திக்கிட்டேன்.

  அடுத்தமுறை கூப்புடறானான்னு வேண்டணும். வேற வழி?

  அருமையான ஊர்ப்பதிவு.

  நீங்க சொல்வதைப்பார்த்தால் கூட்டமே இல்லாத ஊரா இருக்குமோ? பேசாம அங்கே வந்து செட்டில் ஆகிடலாமான்னு இருக்கு.

  1. வாங்க துளசி!
   ஆளரவமே இருக்காது, துளசி. நீங்கள் வருவதானால் சொல்லுங்கள். நிறைய வீடுகள் விற்பனைக்கு இருக்கின்றன. நாங்களும் வருகிறோம். நிம்மதியாக சௌரிபெருமாளை சேவித்துக் கொண்டு காலத்தைக் கழிக்கலாம்.
   ப்ளாகர் மீட் அங்கு வைத்துக் கொள்ளலாம். சரியா?

   நிச்சயம் அடுத்த தடவை கூப்பிடுவார் சௌரிபெருமாள், கவலை வேண்டாம்.

   வருகைக்கும், அருமையான ஒரு யோசனைக்கும் நன்றி!

   1. வீடு விலைக்கு இருந்தால் சொல்லவும். கண்ணபுரத்து அம்மானை ஸேவித்துக்கொண்டே இருக்கலாம். எனக்குத் தேரழுந்தூர் பூர்வீகம்.

 5. செளரிராஜப் பெருமாளைப் பார்க்க இத்தனை கஷ்டப்படணும்னு எல்லாம் தெரியாது. எங்களுக்கு வெகு எளிதாக தரிசனம் கொடுத்தார். 1997 ஆம் ஆண்டு ஜனவரி-பெப்ரவரி தை அமாவாசையில் அந்தப் புஷ்கரிணியில் தான் ஸ்நானம். ஒவ்வொரு படித்துறையிலும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுத்தோம். ஊரில் பழைய மனிதர்களும் இருந்தாற்போல் தான் தெரிந்தது. நீங்க சொல்றாப்போல் மடைப்பள்ளி தோசையும், புளிக்காய்ச்சலும் அருமையாகத் தான் இருந்தது. அங்கே உள்ள ஶ்ரீராமர் சந்நிதியும் பிரபலம் ஆனது. அதுக்கப்புறமாப் போக வாய்ப்புக் கிடைக்கலை. நாங்க நாகப்பட்டினத்தில் தங்கி அங்கிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு போனோம்.

  1. @அப்பாதுரை, தினம் இரவு மன்னனுக்கு இறைவனுக்குச் சூட்டும் மாலை அனுப்பி வைக்கப்படும் பிரசாதங்களோடு. ஒரு நாள் பட்டாசாரியார் மன்னன் இல்லை எனக் கருதியோ அல்லது தவறுதலாகவோ அல்லது தன் காதலியின் நினைவிலேயே இருந்ததாலோ அந்த மாலையைத் தன் அருமைக்காதலியான நாட்டியமாடும் நங்கை ஒருத்திக்கு அனுப்பி விடுகிறார். மன்னன் பிரசாதங்களில் மாலை இல்லையே எனக் கேட்க, பட்டரைக் கேட்கின்றனர். பட்டர் தன் காதலியிடமிருந்து அந்த மாலையைக் கெஞ்சிக் கேட்டுப் பெற்று மன்னனுக்கு அனுப்புகிறார்.

   மன்னனுக்குச் சென்ற மாலையில் நீளமான தலைமுடி ஒன்றைக் கண்டெடுக்கிறான் மன்னன். பட்டரைக் கேள்விகள் கேட்க, அவரோ பயத்திலும், குழப்பத்திலும் ஆழ்ந்து போய்த் தப்பிக்க வழி தேடி, பெருமாளுக்கு நீண்ட செளரி முடி உண்டு எனப் பொய் சொல்லி விடுகிறார். மறுநாள் காலை மன்னன் தாம் அதைக்காண விரும்புவதாய்ச் சொல்லி பட்டரிடம் செளரி முடியைக் காட்டச் சொல்லிக் கேட்க, பட்டர் பயத்துடன் பெருமாளின் பின்பக்கம் மன்னனை அழைத்துச் சென்று காட்டினால் நீண்டதொரு பின்னலோடு கூடிய செளரி முடி அங்கே காணப்பட்டது.

   தன் பக்தனுக்காக ஒரே இரவில் செளரியை வரவழைத்துக் கொண்ட பெருமாள் அன்று முதல் செளரிராஜப்பெருமாள் என அழைக்கப்பட்டார்.

   இதில் முதல் பத்தியில் பட்டர் மாலையைத் தன் காதலிக்கு அனுப்பவதன் சரியான காரணம் என்னவென மறந்துட்டேன். ரஞ்சனியோ அல்லது தெரிஞ்சவங்க யாரேனுமோ வந்து திருத்தலாம். :)))

   1. @அப்பாதுரை
    கீதா சொன்ன இந்தக் கதை பலராலும் சொல்லப்படுகிறது. ஆனால் சௌர்ய (शौर्य )
    என்கிற வடமொழிச் சொல்லுக்கு உண்மையான பொருள் பராக்கிரமசாலி என்பதுதான். பெருமாளின் பல குணங்களுள் இதுவும் ஒன்று அதனால் சௌரிராஜன் என்று பெயர்.
    நன்றி கீதா, நன்றி அப்பாதுரை.

  1. வாங்க இராஜராஜேஸ்வரி!
   திருக்கண்ணபுரம் என்றதும் உங்களுக்கு திருக்கண்ணமுது நினைவுக்கு வந்ததோ?
   எனக்கும் இந்த ஊர் என்றைக்கும் தித்திக்கும் நினைவுகளையே கொடுக்கிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 6. திருக்கண்ணபுரம் நினைவுகளை இனிமையான பதிவாகத் தந்திருக்கிறீர்கள். நன்றி.
  ///
  பெருமாளுக்கென்று நிறைய நிலபுலங்கள் இருக்கின்றன. ஆனால் விளைச்சலைக் கொடுக்க மனிதர்களுக்கு மனம் வருவதில்லை.
  ////
  கோவிந்தாவுக்கே கோவிந்தா போட்டுவிட்டார்கள் போல.

  தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி. விரைவிலேயே தந்துவிடுகிறேன்.

  1. வாங்க பாண்டியன்!
   தொடர் பதிவு எழுத சம்மதித்ததற்கு நன்றி!

   1. ஒரு வழியா எழுதிட்டேன்.
    கிளாசுக்கு லேட்டா வந்த பையனா நினைச்சு என்னை மன்னிக்கவும்!!

 7. ரொம்பவும் சின்ன ஊர். இப்போது இங்கிருந்தவர்கள் எல்லோரும் இந்த ஊரை விட்டு வெளியே போய்விட்டார்கள். மிகப்பெரிய குளம். குளத்தை சுற்றி நாலு மடிவளாகம் என்ற வீதிகள். அவ்வளவுதான் ஊர். ///// அவ்வளவு தான் என்று சொன்னாலும் அதன் அழகு மனதில் பதிந்து எங்களையும் காண அழைக்கிறதே!
  தாமதம் என்றாலும் நான்அழைத்தது நினைவில் வைத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றிங்க அம்மா. பதிவிடும் நேரம் தங்களை அந்த நாட்களின் நினைவில் அழைத்து சென்ற நிம்மதி எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு எனது மனமார்நத நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  1. வாங்க சசிகலா!
   மறந்த போன பல நினைவுகள் உங்கள் மூலம் வெளியே வந்திருக்கிறது. மிகவும் அருமையாக பலரின் கருத்துரைக்கும் பதில் சொல்லியிருக்கிறீர்கள். தொடர் பதிவு எழுத அழைத்ததற்கும், நான் எழுதியவுடன் வந்து படித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 8. என்னுடைய தாத்தா காரைக்கால் அருகே உள்ள குரும்பகரம் என்ற கிராமத்தில் பள்ளி தலைமையாசிரியராக இருந்தவர். நான் என் பாட்டியுடன் இந்த ஊருக்கு சென்றிருக்கிறேன் அப்போது எனக்கு நாலு அல்லது ஐந்து வயதிருக்கலாம் சுவாமியை தரிசித்திருக்கிறேன் ஆனால் இப்போது நினைவில்லை கண்ணபுரம் சென்றேன் ஆனால் ஐந்து வயதில் எனக்கு என்ன கவலை இருக்கும் எனக்கு மறப்பதற்கு இப்போது ஒரு முறை போய்வந்தால் கவலையில்லாம் போகுமே என்னவோ பார்பபோம் பெருமாள் கூப்பிடுகிறாரா என்று நல்ல பகிர்வு பாராட்டுக்கள் ரஞ்சனி

  1. வாருங்கள் விஜயா!
   இப்போது ஒருமுறை போய்விட்டு வாருங்கள். நிச்சயம் பெருமாள் கூப்பிடுவார்.
   நன்றி!

 9. திருக்கண்ணபுரம் பற்றி அறிந்தோம். அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  1. வாங்க மாதேவி!
   வருகைக்கும், படித்து ரசித்து எழுதிய கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க ஹாசன் உத்தின்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 10. “கண்ணபுர நாயகியே மாரியம்மா” ______ என்ற எல்.ஆர். ஈஸ்வரியின் பிண்ணனிக் குரலில் ஒலிக்கும் ஊர் இதுதானோ !

  உங்க ஊருக்குப் போகும் வழி முதற்கொண்டு எல்லாவற்றையும் தெளிவா சொல்லியிருக்கீங்க. எப்போதாவது நவக்கிரகக் கோவில்களுக்குப் போகும்போது இங்கும் சென்று வரப் பார்க்கிறேன். அதற்கு ஸௌரிராஜப்பெருமாள் மனம் இறங்க வேண்டும்.

  தொடர் பதிவெழுத அழைப்பு விடுத்தமைக்கு நன்றிங்க.

  1. வாங்க சித்ரா!
   நான் சொல்லியிருக்கும் பாடல் வேறு. இங்கேயே இணைப்புக் கொடுத்திருக்கிறேன், கேட்டுப்பாருங்கள். நிச்சயம் ஒருமுறை போய்விட்டு வாருங்கள். ரொம்பவும் பிடித்துவிடும்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க சேகர்!
   நீங்கள் சொல்வது ரொம்பவும் உண்மை. மறுபடி மறுபடி வரச் சொல்லுவார் பெருமாள்!
   வருகைக்கும், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

 11. நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள். நான் திருக்கண்ணபுரம் கோயிலுக்கு ஒரு முறை வந்துள்ளேன்.
  http://www.drbjambulingam.blogspot.in
  http://www.ponnibuddha.blogspot.in

 12. திருக்கண்ணபுரத்திற்கு ஒரு முறை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் சில வருஷங்கள் முன்பு கிட்டியது. நீங்கள் விவரித்தது யாவும் உண்மை. பாராட்டுக்கள். ஸ்ரீ பெருமாள் தரிசனம் மன நிறைவை கொடுத்தது. கோயிலுக்கு நுழையும் முன்பும் பிறகு உட்புறமும் இந்த கோயில் பற்றி நிறைய, வியப்பு அடையும்படியான செய்திகள் கொடுத்துள்ளார்கள். அதன் மூலம் ஸ்ரீ பெருமாளின் பெருமைகளை உணரமுடிகிறது. நாங்கள், முதலில் கும்பகோணத்தில் உள்ள ‘உப்பிலியப்பனை’ தரிசனம் செய்தபிறகு, அங்கிருந்து ‘திருக்கண்ணபுரம்’ பயணம் (car travel) செய்தோம். எங்களுடன் இரு வைணவ தம்பதிகள் வந்தனர். அதில் இளையவரானவர் கோயில் வந்ததும் அவசரம், அவசரமாக (கோயிலுக்கு போகும் முன்) அந்த குளத்தில் அவர் தம் பாதங்களை சுத்தம் செய்ய அங்கு படிக்கட்டில் கால்களை வைத்தார். பாசி நிரம்ப படிந்திருந்த படியால் அவர் வழுக்கி குளத்திலேயே விழப்போகும் தருணம் ஏற்கனவே நின்றுகொண்டிருந்த ஒரு அன்பர் அவர் கையை, பெருமாள் அருளால், பிடித்து காத்து விட்டார். பிறகு நாங்கள் அனைவரும் சர்வ ஜாக்கிரதையாய் படிக்கட்டில் இறங்கி பாதங்களை சுத்தபடுத்தி கொண்டோம். கோயிலுக்குள் சென்றோம். ஏன் இதை சொல்கிறேன் என்றால்…என் ஆச்சர்யம் என்னவென்றால்…”ஏன் இந்த குளத்தை HR&CE நன்கு நிர்வகிக்கவில்லை என்பது தான்”….அதுவும் நிறைய பக்தர்கள் தினமும் பெருமாளை சேவிக்க வருகிறார்கள் வெளியூர்களில் இருந்து. ‘தென்றல் சசிகலா’ இந்த விஷயத்தை, ஒரு சூராவளி போல் கருதி, அவரால் முடிந்த ‘action’-ஐ எடுப்பார்களா? நன்றி.

  ‘Manian’

  ‘Manda Manian’
  USA.
  [manianmanda@ymail.com]

 13. திருக்கண்ணபுரம் பற்றிய பதிவு மிக அருமை! உங்கள் புகுந்த வீடு பற்றி குறிப்பு தந்தால் யார் என்பதை புரிந்து கொள்வேன்.
  திருக்கண்ணபுரத்தின் கதை- என்று வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.
  இன்னும் கூடுதலாக எழுத குறிப்புகள் இருக்கிறது.
  அதையும் எழுதி, ஒழுங்கு படித்து, அழகாக படத்துடன் லேவுட
  ் செய்து மீள்பதிவு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். நேரம் கிடைக்கட்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s