நானூறு வருட சாபம்!

courtesy: Google

 

ராஜா ராணி கதைகளுக்கு இன்னும் நம்மிடையே வரவேற்பு இருப்பது போலவே, நம்மிடையே ஒரு ராஜா இருக்கிறார், நாம் அவரால் ஆளப்படுகிறோம் என்பதும் ஒரு பெருமையான விஷயமாகவே இன்றளவும் கருதப்படுகிறது. அதனால் தானோ என்னவோ 2013 டிசம்பர் மாதம் 10 தேதி மைசூரு மகராஜா ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ ஒடையார் (60) அவரது குலதெய்வமான சாமுண்டீஸ்வரி தேவியின் திருவடியை அடைந்தபோது கர்நாடக மாநிலமே சோகத்தில் ஆழ்ந்தது.

 

இவருக்கு குழந்தைகள் இல்லாததால் இவரே கடைசி அரசர். இதன் காரணமாகவே  ‘நானூறு வருட சாபம் அரச பரம்பரையை இன்றும் விடாமல் தொடர்கிறதோ?’ என்று கர்நாடக மாநிலம் முழுவதும் கேள்வி எழுந்தது. என்ன சாபம் இது என்பதைப் பார்க்கும் முன், மறைந்த மஹாராஜாவைப் பற்றிப் பார்க்கலாம்.

 

முன்னாள் மைசூரு மகாராஜா ஜெயசாமராஜேந்திர ஒடையாருக்கும், அவரது இரண்டாம் மனைவி மகாராணி திரிபுரசுந்தரி அம்மணிக்கும் 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் நாள் பிறந்தவர். ஜெயசாமராஜேந்திர ஒடையாரும் அவரது தந்தையின் தத்துப்புத்திரர் தான்.

 

‘பழமையை விடாமலும், அதேசமயம் காலத்திற்குத் தகுந்தாற்போல புதுமைகளை ஏற்றுக்கொண்டு, புதுமை விரும்பியாகவும் இரு’ என்ற தனது தாயின் வார்த்தைகளை அப்படியே கடைபிடித்தவர். ஆன்மீகத்திலும், பழைய சம்பிரதாயத்திலும் ஆழ்ந்த நம்பிக்கையும், அதே சமயம் புது யுகத்திற்கு தகுந்தாற்போல தன்னை மாற்றிக் கொண்டதால், பழமைவாதிகளும், நவநாகரீக யுவர்களும் அவரை விரும்பினார்கள். தசரா சமயத்தில் தனது ராஜ பீடத்தில் அமருபவர், ஃபாஷன் ஷோக்களையும் நடத்தினார். கர்நாடக சங்கீதத்தில் இருந்த ஆர்வத்தை மேல்நாட்டு இசையிலும், ராக் இசையிலும் கொண்டிருந்தார். நாகரீகஉடை வடிவமைப்பாளர், தொழில்துறை வல்லுநர், ஹோட்டல் அதிபர், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்று பலமுகங்கள் கொண்ட மகாராஜா  மாறிவரும் காலத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருந்தவர்.

 

அரச பரம்பரையில் இருந்தாலும், இன்றைய அரசியலையும் விட்டுவைக்கவில்லை இந்த மகராஜா. இந்திராகாந்தியின் மறைவுக்குப் பிறகு 1984 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியினால் நேரடியாக மைசூரில் நிற்க வைக்கப்பட்டு வெற்றி பெற்றார். மகாராஜா தங்கள் வீடுகளுக்கு வந்து வாக்குக் கேட்டதை மைசூரு மக்கள் இன்றைக்கும் மறக்கவில்லை. நடுவில் ஒருமுறை பா.ஜ.க விற்கு மாறியவர் மறுபடி காங்கிரசில் சேர்ந்தார்.

 

கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வெளிநாட்டுக் கார்களில் அமோக மோகம் கொண்ட இவரிடம்,  ஒரு காலகட்டத்தில் 20 சொகுசுக் கார்கள் இருந்தன. கார் ஓட்டுவதிலும் வல்லவரான இவர், மைசூரு-பெங்களூரு இடையே உள்ள தூரத்தை ஒருமுறை 90 நிமிடங்களில் கடந்தவர். பந்தயக் குதிரைகளையும் வளர்த்து மகிழ்ந்தார்.

 

இவரிடத்தில் பல அலைபேசிகள் – குடும்பத்தினருடன் பேச, நண்பர்களுடன் அளவளாவ, தனது தொழில் உறவுகளுடன் உரையாட என்று – தனித்தனியாக வைத்திருந்தார். விதம்விதமான கைகடியாரங்கள் சேமித்து வைப்பதிலும் பேரார்வம் கொண்டிருந்தார். கலை மற்றும் கலாச்சார போஷகராக இருந்தார். பிறந்த வருடமான 1953 ஐ தனது அதிர்ஷ்ட எண்ணாக நினைத்திருந்ததால், அந்த எண் தனது கார்களிலும், அலைபேசிகளிலும் வருமாறு அமைத்துக் கொண்டார்.

 

கல்லூரி நாட்களிலேயே கிரிக்கெட் விளையாடுவதில் தீவிர ஆர்வம் கொண்டிருந்த மகாராஜா  மாநில அளவில் ஆடியவர். பின்னாட்களில் இரண்டு முறை கர்நாடக மாநில கிரிக்கெட் போர்டிங் தலைவராக இருந்தவர். மிக சமீபத்தில் தான் (டிசம்பர் 1, 2013) இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

‘என்னுடைய எழுபது வயதுவரை எனது வாரிசு பற்றி யோசிப்பதாக இல்லை’ என்றவர் வாரிசு இல்லாமல் 60 வயதில் மரணமடைந்து தலக்காடு சாபத்திற்கு ஆளாகிவிட்டார் என்று  எண்ண வைத்துவிட்டார்.

 

அது என்ன தலக்காடு சாபம்? நானூறு வருட சாபமும் இதுவே.

 

விஜயநகரத்தின் தளபதி ஸ்ரீரங்கராயனிடமிருந்து ஸ்ரீரங்கப்பட்டினத்தை 1610 ஆம் ஆண்டு அன்றைய மைசூரு மகராஜா ராஜ ஒடையார் கைப்பற்றினார். ஸ்ரீரங்கராயனின் மனைவி அலமேலம்மா ஆதிரங்கனின் ஆலய நகைகளை எடுத்துக் கொண்டு தலைமறைவானபோது, ராஜ ஒடையார் அவரைப் பிடிக்க தனது படை வீரர்களை அனுப்புகிறார். அவர்களிடமிருந்து  தப்ப அலமேலம்மா தலக்காடு நோக்கி ஓடிவருகிறார். அங்கு மாலங்கி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, தப்ப முடியாத அலமேலம்மா, ‘தலகாடு மணல் மூடி போகட்டும்; மாலங்கி நதி மடுவாகட்டும்; ஒடையார் பரம்பரை வாரிசற்றுப் போகட்டும்’ என்று சாபமிட்டு விட்டு நதியில் குதித்து விடுகிறார்.

 

இப்போதும் தலகாடு மணல் மூடித்தான் இருக்கிறது. மாலங்கி நதியில் நீர் வரத்து இல்லை. இந்த இரண்டு சாபங்களும் பலித்தது போலவே ஒடையார் பரம்பரையிலும் நேர் வாரிசு என்பது இல்லை. ஸ்ரீகண்ட தத்தாவின் அந்திமக் கிரியைகளை அவரது சகோதரி மகன் காந்தராஜ் அர்ஸ் செய்தார். அவரே அடுத்த ஒடையார் பரம்பரையின் வாரிசாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

 

மறைந்த மகாராஜாவிற்கு நம் அஞ்சலிகள்.

 

 

 

 

 

11 thoughts on “நானூறு வருட சாபம்!

 1. டிசம்பர் மாதம் மறைந்தவருக்கு இப்போது அஞ்சலி? ஏன்?

  ஆனாலும் அவர் பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

  1. வாங்க ஸ்ரீராம்!
   இது ஆழம் பத்திரிக்கைக்கு எழுதியது. இரண்டு கட்டுரைகள் எழுதச் சொன்னார்கள். இந்தக் கட்டுரைக்கு இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பாவம் மகாராஜா, என் வரைவில் ரொம்ப நாட்களாக உட்கார்ந்திருந்தார். அதான் இன்றைக்கு ரிலீஸ் பண்ணிட்டேன்!
   மின்னல் வருகைக்கும், கருத்துரையில் கேட்ட சூப்பர் கேள்விக்கும் நன்றி! 🙂

 2. டிசம்பர் மாதம் இறந்தவருக்கு எனது அஞ்சலிகளும்….

  நான் கேட்க நினைத்ததை ஸ்ரீராம் கேட்டு பதிலும் பெற்று விட்டார்!

 3. ஆஹா என்ன அற்புதமான கதை போன்ற நிஜம் உடையாரைப்பற்றி தெரிந்துகொண்டோம் அவர் இறந்த அன்றே என் தோழி அவர் பற்றி கொஞ்சம் சொல்லி தானும் அவரும் ஒரே கல்லூரியில் தான் படித்தார்கள் என்று ஒரு ஜோக் கூட சொன்னாள் ஏனெனில் இருவரும் பிறந்த வருஷம் ஒன்றே என்பதால் பாராட்டுக்க்ள் ரஞ்சனி

 4. Interesting…தகவல்களுக்கு நன்றி……
  Krishnan

 5. நானும் நினைச்சேன், செத்துப் போய் ஆறு மாசமாவது இருக்குமேனு. ஶ்ரீராம் கேட்டு பதிலும் கிடைச்சுடுச்சு. இந்தக் கதையும் தெரிஞ்சது தான். 🙂

 6. மைசூர் மகாராஜாவின் கடைசி வாரிசு நான்தான் என்று சினிமாவில் ஒரு காமெடி வருமே, அதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா, மேடம்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s