Uncategorized

கடிதம் எப்படி இருக்க வேண்டும்?

writer

 

வல்லமை இதழில் அறிவிக்கப்பட்ட கடித இலக்கியப் போட்டியின் நடுவர் திரு இசைக்கவி இரமணன் அவர்களின் முடிவுரை:

கடிதம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று எத்தனை அருமையாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை. இதை நான் என் அம்மாவிடமிருந்துதான் கற்றேன்.

 

இசைக்கவி இரமணன் 25.3.2014

 

உலகம் அழகானது. ஆனால், வாழ்க்கைக்கு அதனளவில் அழகேதும் கிடையாது. வைக்கோலைத் தின்று வெந்நீர் குடிக்கும் சுவாரசியமே உள்ள இந்த வாழ்க்கையில், பிறந்த கணத்திற்கு முன்பிருந்தே உயிரின் பிடரியை மரணம் கவ்விக் கிடக்கும் இந்தக் கணநேரக் கூத்தில் என்ன அழகு இருக்க முடியும்? வாழ்க்கை வேறு, வாழுதல் வேறு. நன்கு வாழுவதன் மூலமே ஒன்றுமற்ற வாழ்க்கை ஒளிபொருந்தியதாக மாறுகின்றது. அதுதான் வாழ்வாங்கு வாழுதல். அதற்கு இரண்டு அம்சங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று, நேயம். இன்னொன்று கலை.

 

நேயம், மனிதனை மனிதனாக்குகிறது. கலை, மனிதனுக்கும் இறைவனுக்கும் பாலம் போடுகிறது. வாழ்க்கை, காட்டாறாக இருந்தாலும், பாலத்திலிருந்து பார்க்கும்போது நமக்குப் பதற்றமில்லை. கலை, எல்லாவற்றையும் படைத்து இயக்கும் பரமசக்தியிடமிருந்தே வருகிறது. அந்தப் பரம்பொருள், மனிதனில் தன்னை நேயம் என்றே பதிவு செய்துகொண்டுள்ளது.

 

சேதி சொல்லும் இயற்கை, நியதி காட்டும் கோள்கள், பாதி சொல்லும் உயிரினங்கள், பாடம் சொல்லும் வாழ்க்கை, இவையே கலைகள் விளங்கும் தளங்கள். இயற்கையிலும் வாழ்க்கையிலும் ஏற்கனவே தென்படுவதை, நேயமென்னும் தூரிகை ஏந்தி ஓவியன் சித்திரம் தீட்டுகிறான். கவிஞன் கவிதை பாடுகிறான். இன்னொருவன் கல்லை தெய்வமாக்கிக் காட்டுகிறான்.

 

கலைகளில் கடிதமும் அடக்கம் என்பது உண்மை. பேசும் சொல்லும், பதியும் எழுத்தும் கலை வயப்படுவது இயல்புதானே? கலை மிளிரும் எழுத்தே இலக்கியம். எனவேதான், வல்லமைக் குழுமத்தார், ஒரு கடித இலக்கியப் போட்டியை அறிவித்தார்கள். வந்து குவிந்தன கடிதங்கள். வம்பாய், என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். எதையும் தட்டிக் கொடுப்பவன் எதைத் தட்டிப் பார்த்து எப்படித் தெரிந்து எதனை எடுப்பான்?

 

ஆனால், வந்து சேர்ந்த கடிதங்கள் எல்லாம் சுசீந்திரத்துத் தூண்கள் போலானதால், தட்டி மகிழ்ந்தேன். அவற்றை, நான் நன்று, மிக நன்று, மிக மிக நன்று என்றே வகைப்படுத்த முடிந்தது.

 

அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று பற்பலரும் பலவித வண்ணம் காட்டியிருக்கிறார்கள். முதலில், அவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரி, எந்த அடிப்படையில் நான் பரிசுகளுக்கு உரியவை இன்னின்னவை என்று தேர்ந்தெடுத்தேன்?

 

சொந்த அனுபவம், சற்றே அறிவு, கொஞ்சம் கற்பனை, நிறைய நேசம், இவை கலந்துவரும் கடிதங்களே மனதில் நிற்க வல்லவை. அல்லவா?

 

ஒரு கடிதத்தின் நீளம், அது தாளில் எடுக்கும் இடத்தைப் பொறுத்தல்ல, மனதில் பிடிக்கும் இடத்திற்கு ஏற்பவே நிச்சயிக்கப்படுகிறது. அமைப்பாளர்கள், இரண்டு பக்கங்கள் என்பதாக ஓர் அளவை நிர்ணயம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த அளவோடு நிறுத்திவிடுவதாலேயே அந்தக் கடிதம் சரியான நீளத்தில் இருப்பதாகக் கருதிவிட முடியாது. வளவளவென்று போகுமானால், ஒரு பக்கத்திற்கும் குறைவான கடிதம் கூட நீளமாகவே தெரியும்.

 

நமக்குத் தெரிந்தவற்றையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்னும் ஆவல் மேலிடும் போது, கடிதம் சுமையாகி விடுகிறது.

 

கட்டுரை, கடிதமாகாது. கவிதையும் அப்படித்தான்! கடிதம், உரைநடையின் தளம். அதில், கவிதையின் தறுவாய் தென்படலாம். கட்டுரையின் சாயல் தட்டுப்படலாம்.

 

நமது அனுபவத்தைச் சார்ந்திருந்து, அன்பின் அடிப்படையில் வருகின்ற சொற்கள், நேரடியான அறிவூட்டும் நடவடிக்கைகளை விட மேலானவை.

 

‘இவருக்கு நண்பர்கள் வேண்டாம், முகவரிகள் போதும்!’ என்று சொல்லும் அளவுக்குச் சில கடிதங்கள் இருக்கின்றன. சொல்ல நினைத்ததைச் சொல்வதற்கு பதிலாக, என்ன கேட்க விரும்புவார்கள் என்று அன்பார ஊகித்தல் கடிதங்களை அழகாக்கும்.

 

இவ்வளவு சொன்னால் போதும் என்று தோன்றுகின்றது.

 

எப்படி இருப்பினும், என்னுடைய தேர்ந்தெடுப்பு என்னுடைய ரசனை, புரிதல், அறிவு இவற்றிற்கேற்பத்தான் இருக்குமே அன்றி, இதுதான் சரியான முடிவு என்பதாக இருக்க முடியாது. ஏனெனில், நான் சராசரிக்கும் குறைவான சாதாரண மனிதன்.

முதற்பரிசு:கவாகம்ஸ்

கடிதத்தின் இறுதியில்தான் அது ஒருவர் தனக்கே எழுதிக்கொண்ட கடிதம் என்பது விளங்குகிறது. ஓர் அறிவியல் புனைவும், ஆழமான காதலும் கலந்து மிகவும் விறுவிறுப்பாகவும் மிளிர்கின்றது இந்தக் கடிதம். கொஞ்சம் கூட சுருதி விலகாத பாடல் போன்று இருக்கின்றது.

 

இரண்டாம் பரிசு: மாதவன் இளங்கோ

இது தனது ரசிகைக்கு ஓர் ஓவியர் எழுதிய கடிதம். இந்தக் கோணமே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஒரு கலைஞனின் மனம், அவனுடைய படைப்பைக் காட்டிலும் எத்தனை நுண்மையானது, பரிசைக் காட்டிலும் அவன் எப்படி ரசனையைத்தான் நம்பி வாழ்கிறான் என்பதெல்லாம் இந்தக் கடிதம் சிறப்பாக உணர்த்துகின்றது.

 

மூன்றாம் பரிசு :ரஞ்சனி நாராயணன்

அம்மாவுக்கு மகன் எழுதிய கடிதம். நெஞ்சைத் தொட்டது.

 

எழுதுகோலை எடுக்கும் முன்பே, இதயத்தைத் திறந்துவிடுவோம்! அன்பு காட்டும் வழியில் வந்து விழட்டும் சொற்கள்!அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

வாய்ப்பளித்த வல்லமைக்கு வணக்கம் கலந்த நன்றி.

அன்புடன்,

ரமணன்

********************************************************************************************************

 

மேலும் பரிசு பெற்றவர்கள் விவரங்கள், எழுதிய கடிதங்கள் இங்கே

 

மகிழ்ச்சியான செய்தி இன்னும் ஒன்றையும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது வலைப்பதிவுத் தோழிகள்

 1. கீதா மதிவாணன்: அம்மா, தன் மகனுக்கு எழுதிய அழகான கடிதம்
 2. ராஜலஷ்மி பரமசிவம் : தோழிக்கு எழுதிய கடிதம்

இருவரும் பரிசு பெற்றிருக்கிறார்கள். அவர்களது கடிதங்களையும் மேல்கண்ட சுட்டியில் படிக்கலாம்.

 

எல்லாக் கடிதங்களையும் படிக்க இங்கே:

 

வல்லமை இதழுக்கு நன்றி.

 

எனது பதிவில் : மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே 

 

Advertisements

8 thoughts on “கடிதம் எப்படி இருக்க வேண்டும்?

 1. வணக்கம்
  அம்மா.

  கடிதம் எழுதும் முறை பற்றி நல்ல விளக்கம் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. பரிசுக்கு வாழ்த்துக்கள் ரஞ்சனி.
  என் கடிதத்தின் சுட்டியை உங்கள் பதிவில் கொடுத்து என்னை பெருமை படுத்தி விட்டீர்கள் ரஞ்சனி. . மனம் நெகிழ்ந்து போனேன்.உங்கள் பதிவில் என் எழுத்துகளுக்கான சுட்டி இருப்பதால் சென்றடையும் வாசகர்களின் எண்ணிக்கை எக்கசக்கமாகும் . இதற்கு நன்றி என்கிற ஒற்றை சொல்லால் என் உணர்வுகளை வெளிக் கொணர முடியாது. .வேறு எப்படி சொல்வது என்று தெரியாததால் நன்றி என்றே சொல்லிக் கொள்கிறேன்.

 3. தாளில் எவ்வளவு நீளம் எழுதுகிறோம் என்பதல்ல, தெரிந்ததை எல்லாம் எழுதி விட வேண்டும் என்று நினைப்பது சுமை, கட்டுரை கடிதமாகி விடாது…

  இன்னும் பலப்பல வரிகளில் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

  வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  அப்பாதுரை சொல்வது போல வல்லமை பார்க்க மறந்து விடுகிறது!

 4. நமது அனுபவத்தைச் சார்ந்திருந்து, அன்பின் அடிப்படையில் வருகின்ற சொற்கள், நேரடியான அறிவூட்டும் நடவடிக்கைகளை விட மேலானவை.

  பட்டை தீட்டிய வைரமாய் ஒளிரும் வரிகள்..

  பரிசு பெற்ற அனைவருக்கும் இனிய் நல்வாழ்த்துகள்..!

 5. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  ராஜலக்ஷ்மிபரம்சிவம் அவர்களுடையதை படித்து விட்டேன், கீதமஞ்சரி, மற்றும் உங்கள் கடிதத்தை படித்து விட்டு மறுபடியும் வருகிறேன்.
  வாழ்த்துக்கள் அனைவருக்கும்.வருகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s