Uncategorized

மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!

 

 

வல்லமை குழுமம் நடத்திய கடித இலக்கியப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற எனது கடிதம்:

 

மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!

உன் நெடுநாளைய ஆசையை இன்று நிறைவேற்றியிருக்கிறேன். நீ சொல்வாயே, இந்த ஈமெயில் கொசு மெயில் எல்லாம் எனக்கு வேண்டாம். கொஞ்ச நேரம் எனக்காக செலவழித்து காகிதமும் பேனாவும் எடுத்து சற்று  மெனக்கெட்டு நாலுவரி எழுது. எனக்குத் தோன்றும் போதெல்லாம் படித்துப் பார்ப்பேன் என்பாயே, அந்த உன் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.

 

இப்போதெல்லாம் பழைய நினைவுகளே அதிகம் வருகின்றன, அம்மா. உன் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்குப் போவேனே, அந்த நினைவுகள். இன்னும் இன்னும் அந்த காலத்திய நினைவுகள் பசுமையாக மனதில் வாசம் வீசிக் கொண்டிருக்கின்றன, அம்மா.

 

‘எனக்கு ஏன் மணிவண்ணன் என்று பெயர் வைத்தாய், என் பள்ளித்தோழன் என்னை வணி மண்ணன் என்று கேலி செய்கிறான்’ என்று ஒருமுறை உன்னிடம் வந்து அழுதேன், நினைவிருக்கிறதா, அம்மா? நீ என்ன சொன்னாய் தெரியுமா? ‘அட! உன் தோழனுக்கு Spoonerism தெரியுமா? இரண்டு வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மாற்றிப் போட்டுப் பேசுவது தான் Spoonerism. உன் பெயரை அவன் என்ன அழகாக மாற்றி இருக்கிறான் பார்’ என்று இன்னும் பல ஸ்பூனரிச வார்த்தைகளைச் சொன்னாய். ‘என்.எஸ். கிருஷ்ணன் இந்த உத்தியை ‘சந்திரலேகா’ படத்தில் பயன்படுத்துவார். ‘தரையிலே உக்காரு’ என்பதை உரையிலே தக்காரு என்பார்’ என்றாய்.

 

நான் கொஞ்சம் சமாதானம் ஆனவுடன், ‘இத பாரு மணி, நம் குடும்பமே ‘மணி’ குடும்பம். மணிமணியான குடும்பம்! உன் அப்பா பெயர் மணிமாறன், என் பெயர் மணிமொழி, உன் பெயர் மணிவண்ணன். உன் அக்கா மணிமேகலை. வேறு யாருக்காவது இப்படி கிடைக்குமா?  இன்னொரு விஷயம் ஒப்பிலியப்பனை ஆழ்வார் ‘பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன்’ என்கிறார். திருமங்கையாழ்வாரும் ‘முத்தினை, மணியை, மணி மாணிக்க வித்தினை’ திருவிண்ணகர் போய் சேவித்துவிட்டு வாருங்கள்’ என்கிறார். உனக்குத் தெரிந்த திருப்பாவையில் மாலே! மணிவண்ணா! என்று கண்ணனை அழைக்கிறாள் ஆண்டாள். உன் பெயர் அத்தனை அழகான பெயர்’ என்று சொல்லிவிட்டு, ‘உன் மனைவியின் பெயரும் இதேபோல மணி என்று வரவேண்டும்’ என்றாய். நான் சின்னவன் அப்போது. ‘போம்மா’ என்று சிணுங்கிக்கொண்டு எழுந்து போய்விட்டேன். ஆனால் நீ இதைப் பற்றி எத்தனை தீவிரமாக இருந்திருக்கிறாய் என்று பிறகு தெரிந்தது. எனது மனைவி பெயர் ரமா என்றிருந்ததை நீ ரமாமணி என்று மாற்றினாய், எங்கள் திருமணத்திற்குப் பிறகு.

 

எப்படியம்மா நீ ஸ்பூனரிசம் பற்றியும் பேசுகிறாய், திவ்யபிரபந்தம் பற்றியும் பேசுகிறாய் என்று வியந்து நின்றேன் மனதிற்குள். இப்போதும் அந்த வியப்பு மாறவில்லை அம்மா!

 

எனக்கு உன்னையும் அப்பாவையும் நன்றாக நினைவிருக்கிறது. நீ கொஞ்சம் கருப்புதான் ஆனாலும் ரொம்பவும் அழகு. அப்பா நல்ல நிறம். சட்டென்று பார்த்தால் நீதான் உயரம் போலத் தோன்றும். உன் ஆளுமை அப்படி. உன் பெயர் போலவே நீ சொல்லும் மொழிகளும் மணிதான். பேசும்போதே உன் குரலின் மென்மை மற்றவர்களை வசீகரிக்கும். வார்த்தைகளையும் அப்படித்தான் தேர்ந்தெடுத்துப் பேசுவாய். கோவம் என்பதே வராது உனக்கு. மென்மையான குரலில் நீ பாடும் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறதம்மா. கடிதம் எழுதுவதும் நான் உன்னிடமிருந்து கற்றதுதான். குட்டிகுட்டியாக உன் எழுத்துக்கள் ஒரு சீராக மணிமணியாக இருக்கும். உன் அப்பா நீ இப்படித்தான் இருப்பாய் என்று அகக்கண்களால் உணர்ந்து  இப்படி ஒரு பெயர் வைத்தாரோ? உன் கடிதங்களைப் படிக்கும்போது உன் வார்த்தைகள் அருவமாக நின்று மனதை வருடிக் கொடுக்கும்.

 

உன்னையும் அப்பாவையும் பலமுறை இங்கு வந்து என்னுடன் இருக்கும்படி சொன்னேன். ஏனோ இருவருக்கும் இங்கு வர விருப்பம் இல்லை. அக்காவிற்கும், எனக்கும் திருமணம் ஆகி இருவரும் வேறு வேறு ஊர்களில் இருந்தோம். நீங்கள் இருவரும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு திவ்ய தேசம்  போய் அங்கு தங்கி எல்லா உற்சவங்களும் சேவித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லி கிளம்பிவிட்டீர்கள். எனக்கு மிகவும் வருத்தம். ஒருமுறை நீங்கள் இருவரும் திருக்கண்ணபுரத்தில் இருந்தபோது நான் மனைவி குழந்தைகளுடன் அங்கு வந்திருந்தேன். இரவு முநியதரையன் பொங்கல் வாங்கி வரச்சொல்லி எங்களுக்குக் கொடுத்தாய். இரவு நாமிருவரும் மெல்லியதாக அலையடித்துக் கொண்டிருந்த மிகப்பெரிய குளக்கரையில் உட்கார்ந்திருந்தபோது சொன்னாய்: ‘ஸ்ரீரங்கத்தில் பிறக்க வேண்டும்; திருக்கண்ணபுரத்தில் பரமபதிக்கவேண்டும். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? ஸ்ரீரங்கத்தில் பிறந்துவிட்டேன்.

‘சரணமாகும் தனதாளடைந்தார்கெல்லாம்

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’

 

எனக்கு இந்த பாக்கியத்தைக் கொடுப்பாரா?’ என்றாய். என்னுடன் வர மறுத்துவிட்டாய்.

 

நீ இங்கு வரவேண்டும் அம்மா. வந்து என் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லவேண்டும். சௌரிபெருமாள் பக்தனுக்காக கூந்தல் வளர்த்தது, தவிட்டுப் பானை தாடாளன், ஸ்ரீரங்கம் பெருமாளின் ஈரவாடை வண்ணான் சேவை – ஆ! மறந்துவிட்டேனே, திருவரங்கனின் உலா பற்றி நிச்சயம் சொல்லவேண்டும். இதைப்போல சரித்திர நிகழ்வுகளை நம் அடுத்த தலைமுறைக்கு நாம்தானே சொல்லவேண்டும் என்று நீதானே அடிக்கடி சொல்லுவாய்?

 

குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி இருப்பது எத்தனை பெரிய பாக்கியம்? இன்னும் ஒரு விஷயம், அம்மா. சீர்காழியில் இருக்கும் நம் பூர்விக வீட்டை விற்றுவிட வேண்டாம். நாங்கள் சின்ன வயதில் கோடைவிடுமுறை என்றால் ஸ்ரீரங்கத்தில் இருந்த பாட்டி வீட்டிற்குத் தான் போவோம். மறக்கமுடியாத நாட்கள்! கொளுத்தும் வெயில் எங்களை ஒன்றுமே செய்யாது. காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு (அப்போதெல்லாம் காப்பி தான் எங்களின் ஆரோக்கியபானம்) கொள்ளிடத்திற்குப் போவோம். நாங்களாகவே நீச்சல் கற்றுக் கொண்டோம். வேடிக்கை என்ன தெரியுமா, அம்மா? என் பிள்ளைகளுக்கு பயிற்சியாளர் வந்து நீச்சல் சொல்லிக் கொடுப்பார். சிறுவயதில் ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கேற்ப ஆடிபெருக்கன்று ரயில் பாலத்தின் மேலிருந்து கொள்ளிடத்தில் குதித்து நீந்திக் கரை சேர்ந்ததை அவர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்படுவேன். என் குழந்தைகளுக்கும் பாட்டி வீடு என்கிற சொர்க்கத்தைக் காட்ட விரும்புகிறேன்.

 

என் ஞாபகசக்தி உனக்கு வியப்பாக இருக்கிறது, இல்லையா? ஆனால் ‘வர வர இப்போது நடப்பதெல்லாம் உங்களுக்கு நினைவே இருப்பதில்லை’ என்று ரமாமணி சொல்கிறாள் அடிக்கடி. டாக்டர் வருகிறார். ஏதேதோ மருந்துகள் கொடுக்கிறார். இதோ இப்போதும் என் காலடியில் ஒரு சின்னப் பையன் உட்கார்ந்திருக்கிறான். என்னை தாத்தா, தாத்தா என்கிறான். யார் என்றே தெரியவில்லை.

 

உன்னுடன் செலவழித்த நாட்கள் மட்டுமே நினைவில் இருக்கின்றன. உனக்கு தினமும் பல பல கடிதங்கள் எழுதுகிறேன்.

 

மணிமொழியாகிற என் அம்மா…..என் அம்மா…..

 

Spoonerism பற்றிய எனது பதிவு இங்கே 

Advertisements

10 thoughts on “மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!

  1. wow… ரொம்ப அழகாக தீட்டி இருக்கீங்க.. ஒரு ஓவியம் போல.. கடைசியில் கண் கலங்க வைத்து விட்டீர்கள்!!!!

    அம்மா என்ற சொல்லுக்கு தான் எவ்ளோ சக்தி!!!

  2. ——– என் குழந்தைகளுக்கும் பாட்டி வீடு என்கிற சொர்க்கத்தைக் காட்ட விரும்புகிறேன் ——- 👌👌 பலபேருக்குப் புரியமாட்டேன்கிறது

  3. கடித இலக்கியப் போட்டியில் மூன்றாம் பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் !! ஃபோனிலேயே எல்லாவற்றையும் முடித்துக்கொள்ளாமல் ஈ மெயில், மெஸேஜ் இவைகூட கடிதத்திற்கு பதிலாக ஏதோ கொஞ்சம் உதவுகின்றன.

    உங்களை ஆணாக நினைத்துத்தான் எழுதியிருப்பதாக நினைக்கிறேன். கடிதத்தை வாசிக்கும்போது என் அம்மாவின் நினைவுகளும் மனதில் நிழலாடி, தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s