கன்னட படங்கள்

எங்க ஊரு அண்ணாவ்ரு!

சிங்காநல்லூரு புட்டஸ்வாமி முத்துராஜு தான் எங்க ஊரு அண்ணாவ்ரு என்றால் யார் இது என்பீர்கள். மேலே படியுங்கள், புரியும். இன்றைக்கு எங்க ஊரு அண்ணாவ்ருவின் பிறந்த நாள். அதற்காக இந்தப் பதிவு.

 

 

நாங்கள் இந்த ஊருக்கு வந்த புதிது. இந்த ஊரில் இருக்கும் எனது தோழி சொன்னார்: ‘எரடு கனஸு’ (இரண்டு கனவு) படம் கட்டாயமாகப் பாருங்கள்’ என்று.

 

நான் அப்போதுதான் கன்னட கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். தட்டுத்தடுமாறி பேசவும் தொடங்கிய சமயம். ‘யார் நடித்த படம்?’ என்றேன் தோழியிடம். ‘இந்த ஊரு அண்ணாவ்ரு டாக்டர் ராஜ்குமார் நடித்தது’ என்றார். ‘அப்படியென்ன அதில்?’ என்றேன் விடாமல். ‘வெளியில் எல்லோரிடமும் பேசும் கணவன் தன்னிடம் ஏன் பேசுவதில்லை’ என்று கல்பனா (இந்தப் படத்தில் ஒரு கதாநாயகி) ஒரு கத்து கத்துவார் பாருங்கள். அட, அடா! அந்த காட்சிக்காகவே பார்க்கணும், அந்தப் படத்தை!’

 

ஒரு சின்ன ஆச்சர்யத்துடன் தோழியைப் பார்த்தேன். இப்படி ஒரு விமரிசனம் யாராவது ஒரு படத்திற்கு செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. பக்கத்திலேயே இருந்த ஒரு வீடியோ கடைக்குப் போய் காசெட் வாங்கிவந்தேன். எனக்கும் திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. தோழி சொன்ன காரணம் மட்டுமல்ல; அண்ணாவ்ருவின் அசாத்தியமான நடிப்புத் திறன், பாடும் திறன், எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் கன்னட உச்சரிப்பு இவற்றில் நானும் மனதைப் பறிகொடுத்து அவரது விசிறி ஆனேன். என்ன ஒரு அழுத்தம் திருத்தம் வார்த்தைகளில்! கன்னட மொழியின் அழகு அவரது குரலில், பேசும் விதத்தில் தெரிந்தது.

 

இவரைப் பற்றி மேலே பேசுவதற்கு முன், ‘எரடு கனஸு’ படத்தின் கதையைப் பார்க்கலாமா? அண்ணாவ்ருவின் சொந்தக்காரப் பெண் மஞ்சுளா (முதல் கதாநாயகி) இருவரும் கல்யாண செய்துகொள்ளப் போகிறோம் என்ற ஆசையில் முதல் கனவை கண்டு கொண்டிருக்கும்போது இரு குடும்பத்திற்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு, வேறு வழியில்லாமல் அண்ணாவ்ரு கல்பனாவை மணக்கிறார், அம்மாவின் நச்சரிப்புத் தாளாமல். ஆனால் தனது பழைய கனவிலேயே வாழ்ந்துவரும் அண்ணாவ்ரு கல்பனாவை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அண்ணாவ்ரு ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். (இந்த சமயத்தில்தான் என் தோழி சொன்ன அந்த காட்சி வருகிறது)

 

ஒருமுறை தன்னுடன் வேலை செய்யும் ஒரு நண்பனின் வீட்டிற்கு அவனது அழைப்பின் பேரில் அண்ணாவ்ரு போகும்போது அங்கு நண்பனின் மனைவியாக, ஒரு குழந்தைக்கு தாயாக மஞ்சுளாவை பார்க்கிறார். தனது தவறு புரிந்து, கல்பனாவைப் பார்க்க ஓடோடி வருகிறார். வீட்டில் கல்பனா இல்லாததைப் பார்த்து அவர் வழக்கமாகப் போகும் கோவிலுக்கு அவரைத்தேடிக் கொண்டு அண்ணாவ்ரு வர, கோவிலிலிருந்து வெளியே வரும் கல்பனா, தன் கணவன் தன்னை முதல்முறையாக பெயரிட்டு அழைப்பதைக் கேட்டு, கண்மண் தெரியாமல் ஓடிவர, இருவருக்கும் குறுக்கே ஒரு கார் வர……! (மீதியை வெள்ளித்திரையில் காண்க என்று சொல்லாலாம்….ஆனால் இதைப்படிப்பவர்கள் கன்னட படம் பார்ப்பார்களா, தெரியவில்லையே!) அடிபட்ட கல்பனா பிழைக்க வேண்டும் என்று அவரது தலைமாட்டிலேயே அண்ணாவ்ரு தவம் கிடக்க, ஒருவழியாக கல்பனா கண்ணைத் திறந்து பார்க்க………… ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?’ என்று கதை சுபமாக முடிகிறது. இரண்டாவது கனவு ஆரம்பமாகிறது.

 

இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். கல்பனா, மஞ்சுளா இருவருக்குமே நிஜ வாழ்க்கையில் அண்ணாவ்ரு மேல் ஒரு ‘இது’ என்பது ஊரறிந்த ரகசியம். ஆனாலும் அண்ணாவ்ரு பார்வதம்மா (அண்ணாவ்ருவின்  மனைவி) கிழித்த கோட்டைத் தாண்டாதவர் என்பதும் ஊரறிந்த விஷயம். லீலாவதி இரண்டாம் தாரம். (இதுவும் எல்லோருக்கும் தெரிந்ததே) அவர்கள் படத்தில் ரஜினியின் அம்மாவாக வருவாரே அவர்தான் இந்த லீலாவதி.  இத்தனை சொல்ல காரணம் கீழே!

 

நம் ஊர் கதாநாயகிகள் சரோஜாதேவியிலிருந்து, லக்ஷ்மி, ஜெயப்பிரதா, ஜெயந்தி, சரிதா, மாதவி, அம்பிகா, ராதா, ஊர்வசி வரை இவருடன் நடித்தவர்கள். சரிதாவுடன் நடித்த காமன பில்லு (வானவில்) படத்தில் அண்ணாவ்ரு செய்யும் யோகாசனங்கள் மிகவும் பிரசித்தம். இவரது ஆரோக்கியத்திற்கு இவர் செய்யும் ஆசனங்களே காரணம் என்று சொல்வார்கள். வீரப்பனின் பிடியில் இவர் இருந்தபோது கர்நாடகாவே ஸ்தம்பித்துப் போயிற்று.

 

ஆரம்பத்தில் இவருக்கு பின்னணி பாடியவர் பி.பி. ஸ்ரீநிவாஸ். போகப்போக அண்ணாவ்ரு தானே பாட ஆரம்பித்துவிட்டார். இப்படிச் செய்து அவரது பின்னணிப் பாடகர் வாய்ப்பை கெடுத்துவிட்டார் என்றும் கூட இவரது ரசிகர்களே சிலர் சொல்லுவார்கள். ஆனால் நாடக மேடையிலிருந்து திரைப்படத்திற்கு வந்தவர் ஆதலால் மிக நன்றாகப் பாடக் கூடிய திறமை படைத்தவர் அண்ணாவ்ரு. ‘ஜீவன சைத்ர’ படத்தில் தோடி ராக ஆலாபனை செய்து ராகமாலிகையில் ஒரு பாட்டுப் பாடுவார் பாருங்கள். மெய்மறக்கச் செய்யும் குரல் வளம், Bபாவம்!

 

நாதமய ஜீவன சைத்ர

பல சரித்திரப் படங்களிலும் நடித்திருக்கிறார் அண்ணாவ்ரு. பிரபலமான படங்களில் சில: B’பப்ருவாஹன’, ‘கவிரத்ன காளிதாசா’, ‘கிருஷ்ணதேவராய’. பப்ருவாஹன வில் அர்ஜுனன், அவன் மகன் பப்ருவாஹன என்று இரண்டு பாத்திரங்கள். இருவரும் யுத்தகளத்தில் பாடும் பாடல் மிகவும் பிரபலம்.

இதோ கேளுங்கள்:

 

யாரு திளியரு நின்ன புஜபலத பராக்ரம

கவிரத்ன காளிதாஸ படத்தை மிகவும் பாசிடிவ் ஆக முடித்திருந்தது மிகவும் ரசிக்கும் படி இருந்தது.  இதோ அந்தப் படத்தில் இவரும் வாணி ஜெயராமும் பாடும் பாடல்:

https://www.youtube.com/watch?v=1jcakqbeCQg

 

இவரைப் பற்றி இன்னும் இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். அடுத்த வருடம் எழுதுகிறேன். இப்போது ஒரு சின்ன விஷயத்துடன் முடிக்கிறேன்.

 

இவர் மறைந்த போது இங்கு உலா வந்த ஒரு SMS: தனது விசிறிகளை இவர் அபிமானி தேவர்களே என்று தான் அழைப்பார். இவர் சொர்க்கம் போய்ச் சேர்ந்து அங்கிருந்து எழுதுவது போல அமைந்த அந்த SMS இதோ:

‘அபிமானி தேவர்களே! நான் இங்கு சுகமாக இருக்கிறேன். மஞ்சுளா, கல்பனா என்னை நன்றாக கவனித்துக் கொள்ளுகிறார்கள். லீலா, நீ உடனே வா. பாரு, உனக்கு அவசரமில்லை. நிதானமாக வா!’

 

 

 

Advertisements

32 thoughts on “எங்க ஊரு அண்ணாவ்ரு!

 1. நல்ல பகிர்வு. இவரது பாடல்கள் சில நானும் கேட்டிருக்கிறேன். ‘நாகு நகுதா’ (தமிழில் அல்லது தெலுங்கில் ‘தொட வரவோ’ பாடல்) தமிழின் ‘உறவோ புதுமை’ பாடலின் கன்னடப் பாடல்.. இப்படி… அதாவது ராஜன் நாகேந்திரா இசையில் அமைந்த பாடல்கள்!

  1. வாங்க ஸ்ரீராம்!
   நகு நகுதா நீ பருவே (சிரிச்சு சிரிச்சு நீ வருவாய்!) மோசமான மொழிபெயர்ப்பு என்றாலும் இதுதான் பொருள் அந்தப் பாட்டிற்கு :))
   தமிழில் ஹிட் ஆன சில பாடல்கள் இங்கு கன்னடத்தில் கேட்டிருக்கிறேன். அதில் ஒன்று ‘பேக்கு பேக்கு’ என்று முடியும் பாடல். கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள்!
   ஓடோடி வந்து படித்து கருத்துரை போடுவதற்கு நன்றியோ நன்றி!

   1. நிறைய பாடல்களில் பேக்கு வருகிறது! என்ன பாடல் என்று கண்டுபிடிக்க முடியாத ‘பேக்கு’ நான்! தமிழில் என்ன பாடல் என்று நீங்களே சொல்லி விடுங்கள். நான் சொன்ன ‘உறவோ புதுமை’ தமிழ்ப் பாடலின் (பகடை 12 படத்தில் வரும்) கன்னட வரிகள் ‘எதிகா…எதிகா..’ என்று வரும்!

  1. வாங்க பாண்டியன்!
   எங்க ஊரு சூப்பர் ஸ்டார் இவர். உண்மையில் திறமைகள் நிறைந்த சூப்பர் ஸ்டார். நம் ஊரு சூப்பர் ஸ்டாருக்கும் இவரே (அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க) ரோல் மாடல்!

 2. நடிகர் ராஜ்குமார் பற்றி ஒரு சரித்திரமே எழுதி விட்டீர்கள் . சொர்க்கத்திலிருந்து வந்த SMS தான் உங்கள் பதிவின் பன்ச். வாழ்த்துக்கள் ரஞ்சனி….

  1. வாங்க ராஜி!
   உண்மையில் மிகத் திறமைசாலி நடிகர். மிகவும் எளிய மனிதர். வருத்தம் என்னவென்றால் இவரது பிள்ளைகள் ஒருவர் கூட இவர் அளவிற்கு திறமைசாலி இல்லை. இவர் மிகவும் எளிய நிலையிலிருந்து வந்தவர். இவரது பிள்ளைகள் born with a silver spoon! எளிமையை எதிர்பார்க்க முடியாதே!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 3. அவர் குரலில் பாக்யதா லக்ஷ்மி பாரம்மா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.. இரடு மனஸு பார்க்க வேண்டும்.. அறிமுகத்துக்கு நன்றி..

  1. வாங்க பந்து!
   இவரது குரலில் ‘இந்து எனகே கோவிந்தா’ கேட்டிருக்கிறீர்களா? பைரவியில் ஸ்ரீ ராகவேந்திரா’ படத்தில் பாடியிருப்பார்.
   எரடு கனஸு நிச்சயம் பாருங்கள்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 4. ஏற்கனவே நடிகர் ராஜ்குமார் பற்றி எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் மாணவனாக இருந்த போது, நடிகர் ராஜ்குமாரின் தமிழ் டப்பிங் (ஜேம்ஸ் பாண்ட்) படங்களைப் பார்த்து இருக்கிறேன். பதிவின் மூலம் அண்ணாவ்ரு ராஜ்குமாரின் ரசிகை நீங்கள் என்று தெரிகிறது.. சினிமா பத்திரிகை நிருபர் போல படிக்க ஆர்வமான தகவல்களைத் தந்ததற்கு நன்றி!

  ஆனாலும் அண்ணாவ்ரு நம்ம தமிழர்களை ரொம்பதான், படுத்தி விட்டாரு

  1. வாங்க தமிழ் இளங்கோ ஸார்!
   இதுதான் இவர் பற்றி நான் எழுதும் முதல் பதிவு. நீங்கள் சொல்வது போல பயங்கரமான விசிறி நான். இவரது படங்களில் கதை, பாடல்கள் எல்லாம் மிக மிக நன்றாக இருக்கும். குழந்தைகளுடன் தைரியமாக பார்க்கலாம்.
   எல்லா தரப்பிலும் இவருக்கு விசிறிகள் உண்டு. என் மகளுக்குத் திருமணம் ஆனபின் என் மாப்பிள்ளை இவர் நடித்த பல படங்களின் DVD வாங்கிக் கொடுத்தார்.
   இன்னும் நிறைய சொல்லலாம். இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறேன். :))
   //ஆனாலும் அண்ணாவ்ரு நம்ம தமிழர்களை ரொம்பதான், படுத்தி விட்டாரு// ரொம்ப ரொம்ப நிஜம். நாங்கள் வெளியில் போனால் தமிழில் பேசக்கூட மாட்டோம். என் கணவர் தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ளும் ஸ்ரீசூர்ணத்தை இட்டுக் கொள்ள வேண்டாம் என்று சொன்னோம். தமிழர் என்று காட்டிக் கொள்ளவே பயந்தோம்.

   இன்னொரு பதிவு ஆகிவிடும் போலிருக்கிறதே! ஸ்டாப் ஸ்டாப்!!!

   வருகைக்கும் சுவாரஸ்யமான கருத்துரைக்கும் நன்றி!

 5. பதிவின் கடைசி வரி சரியான பஞ்ச்! இத்தனை விபரங்கள் எல்லாம் தெரியாது. தமிழ்நாட்டு நடிகர்கள் பற்றியும் தான்! :))) நல்ல தொகுப்பு. ராஜ்குமாரைப் பற்றியே வீரப்பன் பிடிச்சுண்டு போனப்போத் தான் கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சுண்டேன். இப்போ உங்க மூலம் நன்றாய்த் தெரிந்து கொண்டேன். இதிலே வர மஞ்சுளா, தமிழிலேயும் நடிச்சு சமீபத்தில் இறந்து போன மஞ்சுளாவா? இல்லை இது கன்னடத்திலே வேறே மஞ்சுளாவா? கல்பனா பத்திக் கேள்விப் பட்டிருக்கேன். ராஜ்குமாருக்கு இரு மனைவிகள் என்பதும் இப்போத் தான் தெரியும். அவர் வீரப்பனிடம் மாட்டிட்டு இருந்தப்போ பர்வதம்மா தான் தொலைக்காட்சிச் செய்திகளில், பத்திரிகைகளில் இடம் பெற்றிருந்தாங்க. 🙂

  1. வாங்க கீதா!
   இந்த ஊரில் கிட்டத்தட்ட ஒரு தலைமுறையாக (30 வருடம்!) இருப்பதால், மொழியும் தெரியுமாதலால் இவ்வளவு சங்கதிகள் சொல்ல முடிந்தது.
   இந்த மஞ்சுளா வேறு. இவரும் ஏதோ ஒரு தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். படம் பெயர் தெரியவில்லை.
   பர்வதம்மா தான் சட்டரீதியான மனைவி. லீலாவதிக்கும் அவரது பிள்ளைக்கும் அண்ணாவ்ரு-வின் சொத்தில் பங்கு வேண்டும் என்றெல்லாம் கூட செய்திகள் வந்தன. ஆனால் லீலாவதி ரொம்பவும் டீசன்ட். அனாவசியமாக தனது சொந்த விஷயம் பற்றிப் பேசவே மாட்டார்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  1. நீங்கள் ஒரு தடவை போட்டு நான் அப்ரூவ் செய்துவிட்டால் வந்துவிடும் என்று நினைக்கிறேன். வேர்ட்ப்ரெஸ் – இல் இது ஒரு பிரச்னை என்று பலரும் சொல்லுகிறார்கள். ஆனால் இங்கேயே எனக்குப் பழகிவிட்டதால் தொடர்ந்து இங்கேயே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 6. காட்டில் வீரப்பனுடன் இருந்தபோதுதான் இவரைப்பற்றி தெரிய வந்ததே. படங்கள் எதுவும் பார்த்ததில்லை. இவரது படங்களை எவ்வளவு ரசிச்சு பார்த்திருக்கீங்க என்பது பதிவின் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது. SMS ஐ மறக்காம போட்டதுக்கு நன்றிங்க‌.

  1. வாங்க சித்ரா!
   நிறைய படங்கள் பார்த்திருந்தாலும் ஒரே ஒரு படம் தான் திரை அரங்கில் பார்த்தது. மற்றதெல்லாம் DVD தான். இவரது படங்கள் சுலபத்தில் DVD யிலும் கிடைக்காது.
   பாடல்கள் கேளுங்கள். அப்புறம் எரடு கனஸு பாருங்கள்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க துரை!
   வீரப்பன் பிடியில் இருந்தபோது பாடியது மட்டுமில்லை; வீரப்பனுக்கு யோகாசனமும் கற்றுக் கொடுத்ததாக இங்கு செய்திகள் வந்தன!
   அண்ணாவ்ரு அப்போது ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் வயப்பட்டதாகவும் கேள்வி!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 7. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  http://www.Nikandu.com
  நிகண்டு.காம்

 8. அம்மா நலமா?

  SMS அருமை!! இவரை பற்றி கேள்வி பட்டதுடன் சரி.. இதுவரை எந்த படமும் பார்த்ததில்லை… இப்போது நீங்கள் குறிப்பிட்ட படம் பார்க்கும் ஆவல் வந்து விட்டது.. மொழி புரியுமா என்பது தான் சந்தேகம்… நன்றி அம்மா….

  1. வா சமீரா!
   எத்தனை நாளாயிற்று உன்னைப் பற்றி செய்தியே இல்லையே என்று இன்று காலை நினைத்துக் கொண்டேன். டெலிபதி!
   கன்னட மொழி தமிழ் போலவே இருக்கும் அதனால் சுலபமாகப் புரியும்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 9. நடிகர் ராஜ்குமார் பற்றி எதுவும் அதிகம் தெரியாது வீரப்பன் அவரை பிடித்து வைத்தபோதுதான் செய்திகள் பார்த்து கொஞ்சமே தெரிந்துகொண்டோம். மிக அழகாக அவரைப்பற்றி எழுதியதுடன் ஒரு படக்கதையையும் எழுதித் தள்ளிவிட்டீரகள் நன்றி ஒரு கன்னடபடமும் உங்கள் பதிவில் பார்த்துவிட்டேன் பாடலும் கேட்டுவிட்டேன் ஜாக்பாட் பதிவுதான். பாராட்டுக்கள் ரஞ்சனி

  1. வாங்க விஜயா!
   பாடல்களையும் கேட்டுவிடுங்கள். அண்ணாவ்ரு மிகச்சிறந்த பாடகரும் கூட!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s