இயற்கையெல்லாம் சுழலுவதேன்?

 

https://www.youtube.com/watch?v=8emUszS4fXI

எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி பாடும் அருமையான எனக்கு மிகவும் பிடித்த  பாடல் இது.

‘என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்? உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்?’

 

என்னருகே யாருமில்லாமலேயே ஒரு வாரமாக சுழன்று கொண்டே இருக்கிறது, என்னைச் சுற்றி இருப்பதெல்லாம். காலையில் தலையணையிலிருந்து தலையை உயர்த்தியவுடன் ‘கிர்ர்ர்ரர்ர்ர்ரர்….’. மறுபடி தலையணையில் முகம் புதைத்தேன். மறுபடி எழுந்தால்….மறுபடி கிர்ர்ர்ரர்ர்ர்ரர்….. இந்த முறை அப்படியே அனந்தசயன ஆசனத்தில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு மெதுவாக சமாளித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தால் மறுபடியும் ‘கிர்ர்ர்ரர்ர்ர்ரர்..’ நிதானமாக சுவற்றைப்பிடித்துக் கொண்டு, எழுந்து நின்றால் உடம்பு ஒரு ஆட்டம் ஆடி நிற்கிறது. நி………..தா……..ன……..மா…….க…… வலதுகால், இடதுகால் என்று ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து ஒரு கையால் சுவற்றைப்பிடித்துக் கொண்டே…… (பிற்காலத்துல பேசறதுக்கு வசனம் ரெடி: இந்த ரூம்ல இருக்குற ஒவ்வொரு செங்கலும் எனக்குத் தெரியும்!!!)

 

கடவுளே! என்னாவாயிற்று எனக்கு? தலைக்குள் ஏதோ புகுந்துகொண்டாற் போல….

 

‘தலையைத் தூக்கினா ரூம் எல்லாம் சுத்தறது……!’

‘பேசாம படுத்துக்கோ…!’

 

‘இன்னிக்கு உங்களுக்குப் பிறந்தநாள். கோவிலுக்குப் போகலாம்னு நினைச்சேன்……’

‘சும்மா இரும்மா….வீட்டுலேயே தலை சுத்தறது. இன்னும் கோவிலுக்கு வேற போகணுமா? அங்கே போய் 108 தடவை அனுமாரை சுத்தணும்னு வேண்டுதலா?’ பிள்ளையின் கோபம் புரிந்தது.

 

‘இன்னிக்கு அம்மாவை கோவிலுக்கு அழைச்சுண்டு போகலாம். எப்பவும் அம்மா கோவிலை பிரதட்சணம் பண்ணுவா. இன்னிக்கு கோவில்ல போய் அம்மா நின்னா போதும். கோவில்  அம்மாவை சுத்தும்……!’ கணவர் கோபத்தை அடக்கிக் கொண்டு ஜோக் அடிப்பதும் புரிந்தது.

 

(கணவரின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு) மருத்துவரிடம் போனேன். என்னுடைய சோகக்கதையைக் கேட்டுவிட்டு, இரத்த அழுத்தம் பார்த்தார். ‘பி.பி. நார்மலா இருக்கே!’ என்று சொல்லிக்கொண்டே, இல்லாத தனது குறுந்தாடியை தடவிக்கொண்டு யோசித்தார். பிறகு சட்டென்று முகம் மலர்ந்து, ‘இது வெர்டிகோ…!’ (வியாதியின் பெயர் கண்டுபிடித்த சந்தோஷத்தில்) என்னைப்பார்த்து சிரித்தார். எனக்கு சிரிப்பு நின்று போயிருந்தது. இது என்ன புது கஷ்டகாலம்?

 

‘சட்டென்று எழுந்து நிக்காதீங்க., தலையை ‘வெடுக்’கென்று திருப்பாதீங்க., தலையை ரொம்ப அசைக்காதீங்க….’ என்று சொல்லிவிட்டு, ‘இதுக்கு மருந்து எதுவும் கிடையாதும்மா….தானா வரும், தானா போகும்..(ரஜினிகாந்த் வசனம் இவர் பேசறாரே!) எப்போ வரும்ன்னு சொல்லமுடியாது…. உயிருக்கு அபாயமான வியாதி இல்ல… ஆனா ஒரு மாதிரி இன்செக்யூர்டு ஃபீலிங்ஸ்… இருக்கும்….!’  நீளமா வசனம் பேசிட்டு தன்னுடைய லெட்டர்ஹெட் எடுத்து ஏதோ ஒரு மருந்து எழுதிக்கொடுத்தார். ‘நிறைய தண்ணீர் குடிங்க. ரெஸ்ட் எடுத்துக்கோங்க….!’

 

வீட்டிற்கு வந்தவுடன் ஆரம்பித்தது எனக்கு உண்மையான கஷ்டகாலம். வழக்கமாக நான் உட்காரும் இடத்தில் உட்கார்ந்ததும், ‘அந்த லாப்டாப் – ஐத் தொடாதே!’ முதலில் இடி. தொடர்ந்து மின்னல், மழை. ‘எப்போ பார்த்தாலும் ஏதோ அதுல பண்ணிண்டே இருக்க….! மாதவா! அதுல அம்மாவுக்கு இணையம் வராதபடி பண்ணிடு….!’ என்ன நல்ல எண்ணம்!

 

நல்ல கணவர்தான். எனக்கு ஒரு சின்ன தலைவலி என்றாலும் உடனே அவருக்கு என்னையும் என் லேப்டாப் –ஐயும் பிரித்தே ஆக வேண்டும். அதுதான் என்னுடைய உடல் கோளாறுகளுக்கு காரணம் என்று படு ஸ்ட்ராங்காக நம்புபவர். மகள், மகன் எல்லோரும் எனக்கு எதிர்கட்சியில் இப்போது. வாயைத் திறக்காமல் இருந்தேன்.

 

‘பாட்டு கேட்கிறாயா?’ தலையைத் திருப்பாமல் ‘ஊம்’ என்றேன். ‘என்னைப் பார்த்து சொல்லேன்….!’

‘உங்கள பார்த்தால் தலையை சுத்தறது….!’ (அவரது முகத்தில் ஒரு ‘பளிச்!’ – இந்த வயதிலும் உன்னை கிறுகிறுக்க வைக்கிறேன் பார், என்பது போல!!!) அவசர அவசரமாக ‘தலையைத் திரும்பி உங்களை பார்த்தால் தல சுத்தறது…!’ என்றேன்.

‘ஜெயா மேக்ஸ் போடட்டுமா? இப்போ ஏதோ ஒரு நிகழ்ச்சி வருமே…. ரெண்டு கையையும் விரிச்சு பத்து அப்படின்னு காமிச்சுண்டு…..? ஒரே நடிகர், நடிகையோட பாட்டு பத்து போடுவாங்களே? அது பேர் என்ன?’

‘பத்துக்குப் பத்து….!’ தலை சுத்தினாலும், நினைவு நன்றாக இருக்கிறது என்று ஒரு அல்ப சந்தோஷம்!

‘சுத்தி சுத்தி வந்தீஹ…..!’

ரஜினிகாந்த்தை சுத்தி சுத்தி சௌந்தர்யா பாடிக் கொண்டிருந்தார். கடவுளே! இங்கேயும் சுத்தலா? கண்களை மூடிக்கொண்டேன்.

‘வேற போடட்டுமா?’

‘அந்த ஒரு சானல்ல போட்டி எல்லாம் நடந்ததே, எப்பவும் வெள்ளை புடவையிலேயே வரும் ஃபேமஸ் பாடகி நேரா மேடைக்குப் போயி அந்த பெண்ணை கட்டிண்டு……ரொம்ப பிரமாதமா பாடற என்றாங்களே….அதப் போடட்டுமா?’

 

‘சரி…….!’ (நல்லகாலம்…. சானல் பெயர், நிகழ்ச்சியின் பெயர், பாடகியின் பெயர், போட்டியாளரின் பெயர் என்று கேட்காமல் விட்டாரே!)

 

‘தரிகிடதோம்…..தரிகிடதோம்…..!’ (நிஜமாகவே தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது!) எதற்கு இந்தப் பெண் இத்தனை வேகமாகப் பாடுகிறாள், தலை சுற்றாதோ  என்று தோன்றியது.

 

‘இந்த பெண் பெயர் என்னம்மா…..?’

 

‘சோனியா…’ என்றேன் தீனமாக.

 

‘நீ பேசாம ரெஸ்ட் எடுத்துக்கோ….!’ பேசாமல் ரெஸ்ட் எடுத்துக்கலாம். வேலை செய்யாமல் ரெஸ்ட் என்பது கொஞ்சம் சிரமமாயிற்றே!

 

படுத்திருந்தவள் மெல்ல எழுந்திருக்க…….’படுத்துக்கோ படுத்துக்கோ…..நான் இன்னிக்கு சமையல் பண்றேன்…..! நான் சூப்பரா பண்ணுவேன்…..’ என்று மகன், மகள் இருவரையும் பெருமையுடன் பார்த்தபடியே, ‘என்ன பண்ணலாம் சொல்லு….?’

 

‘நேத்திக்கு கீரை வாங்கிண்டு வந்தீங்களே….அப்புறம் வாழத்தண்டு…..!’

 

‘கீரை சுலபமா கட் பண்ணிடலாம்….இந்த வாழைத்தண்டு தான்….கஷ்டம்… வட்டமா கட் பண்ணிட்டு நடுவுல இருக்கற நாரை கையிலே சுத்திண்டு சுத்திண்டு…..!’

 

கண்ணை மூடிக்கொண்டேன் , காதில் விழாத மாதிரி. மறுபடி வந்து படுக்கையில் படுத்து, ஒரு நொடி சுற்றிய தலையை சமாளித்து, ‘ஏதாவது புக் கொடுங்களேன்……!’

நல்லகாலம் ஒண்ணும் சொல்லாம….’அந்த பொன்னியின் செல்வன் கொடுக்கட்டுமா?’

‘ஆஹா! கொடுங்கோ….!’

‘ஐந்து இருக்கே….!’

‘ஏதாவது ஒண்ணு கொடுங்கோ….!’

கொண்டுவந்து கொடுத்தார். பிரித்தால்…..சுழல் காற்று!

 

ஆயாசமாக கண்ணை மூடிக்கொண்டேன். கொஞ்ச நேரம் கழித்து எழுந்து வந்தேன். ‘முரசு போடட்டுமா?’

 

‘என்னருகே நீயிருந்தால்……இயற்கையெல்லாம் சுழலுவதேன்?’

எம்ஜிஆர் சரோஜாதேவியைக் கேட்டுக் கொண்டிருந்தார். பதிலுக்கு சரோஜாதேவி ‘உன்னருகே நானிருந்தால் உலகமெல்லாம் ஆடுவதேன்?’ என்று பாடிக்கொண்டிருந்தார்.

 

அப்படியே கண் அசந்துவிட்டேன், போலிருக்கிறது. ‘சாதம் ரெடி. எழுந்துக்கோ. சூடா பிசைந்து கொண்டுவரேன்..!’ கணவரின் குரல் கேட்டு எழுந்தேன்.

 

‘இளைமையிலே காதல் வரும்? எதுவரையில் கூட வரும்?’

முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும்’

 

பாடல் மனதில் ஒலித்தது.

 

என்னவருக்கு ஏப்ரல் 13 பிறந்தநாள். பங்குனி உத்திரம். இப்படியே நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணையாக (கேலியானாலும், கோவமானாலும்) இருக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகளிடம் விண்ணப்பம் செய்துகொண்டேன்.

 

 

 

 

 

34 thoughts on “இயற்கையெல்லாம் சுழலுவதேன்?

 1. சுத்தல் ஒரு வழியா நின்னு போச்சா? ஆமாம், ‘தனிக்குடித்தனம்’ நாடகம் பார்த்திருக்கீங்களோ?

  உங்களவர் பிறந்தநாளுக்கு எங்கள் வாழ்த்துகள்.

  1. வாங்க ஸ்ரீராம்!
   ஒருவழியாக நின்னு போனது. அப்பாடா!
   தனிக்குடித்தனம் ஆ.வி.யில் வந்தபோது படித்திருக்கிறேன். அதுக்கும், என் பதிவுக்கும் சம்மந்தம் இருக்கிறதா?
   பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி, ஸ்ரீராம்.

   1. பெரிய சம்பந்தம் இல்லை. அதில் கதாநாயகி தனது உடல்நிலை பற்றி பூர்ணம் விஸ்வநாதனை டாக்டரிடம் சொல்லச் சொல்வார். “ஏன்னா… நின்னா தலை சுத்தறதுன்னு சொன்னேளா?” பூர்ணம் : “சொன்னேன்.. பட்டுன்னு உட்காரச் சொன்னார்” மனைவி : “ஏன்னா… உட்கார்ந்தால் முதுகு வலிக்கரதுன்னு சொன்னேனே… சொன்னேளா?” பூர்ணம் : “சொன்னேன்… படக்குன்னு படுக்கச் சொல்லிட்டார்…” “ஏன்னா… படுத்தா கால் இழுக்கறதுன்னு சொன்னேனே… அதைச் சொல்லலியா…? பூர்ணம் : ஓ… சொன்னேனே… உடனே எழுந்து நிக்கச் சொல்லிட்டார்..!”

    இது நினைவுக்கு வந்தது!

  1. வாங்க கோபு ஸார்!
   எனது தலைசுத்தல் உங்களை இங்கு வரவழைத்துவிட்டதே!
   வருகைக்கும், ரசித்துப் பாராட்டியதற்கும் நன்றி!

 2. படித்து முடித்தவுடன் எனக்கும் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. நடந்ததெல்லாம் நிஜமா? கற்பனையா? நகைச்சுவையா? ஒரே சுற்றல்தான்
  எப்படியோ இருவரும் இப்படியே நகைச்சுவையோடு நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன்

  1. வாங்க விஜயா?
   நூறு சதவிகிதம் உண்மை!
   வருகைக்கும், உங்கள் பிரார்த்தனைகளுக்கும் நன்றி!

 3. உடல்நிலை பரவாஇல்லையா…நலம்பெற இறைவனை வணங்குகிறேன் !

  1. வாங்க பவானி!
   இப்போ ரொம்ப ரொம்ப பரவாயில்லை. பிரார்த்தனைகளுக்கு நன்றி!

 4. ———-
  ‘சும்மா இரும்மா….வீட்டுலேயே தலை சுத்தறது. இன்னும் கோவிலுக்கு வேற போகணுமா? அங்கே போய் 108 தடவை அனுமாரை சுத்தணும்னு வேண்டுதலா?’ பிள்ளையின் கோபம் புரிந்தது.
  ————
  🙂 🙂
  உங்களுக்கு மேல இருப்பார் போல!!

  1. வாங்க பாண்டியன்!
   என் பிள்ளை நகைச்சுவையில் என்னை மிஞ்சி விடுவான். இந்தக் கேலியும் கிண்டலும்தான் துன்பங்கள் மனதை அதிகம் பாதித்துவிடாமல் காக்கிறது.
   வருகைக்கும், ரசிப்பிற்கும் நன்றி!

 5. வணக்கம்
  அம்மா.

  பிறந்த நாள் மலரும் தங்களின் கணவருக்கும்
  தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் அம்மா.
  என்றென்றும் இறைவன் அருள்புரிவான்…

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  1. வாங்க ரூபன்.
   நீண்ட நாளைக்குப் பிறகு உங்கள் வருகை மகிழ்ச்சியைத் தருகிறது.
   உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!

 6. வித்தியாசமான பிறந்த நாள் பரிசு போலிருக்கே! enjoy!
  இந்த ஆதர்ச தம்பதிகள் மிக நீண்ட காலம் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவனைப் பிரார்திக்கிறேன்.

  உடல் நலம் தானே இப்பொழுது ரஞ்சனி.
  வாழ்த்துக்கள்…….

  1. வாங்க ராஜி!
   இப்போது உடல் நலமாக இருக்கிறேன்.
   பிரார்த்தனைக்கு நன்றி!

 7. பின்னூட்ட‌ங்களை வைத்துப் பார்க்கும்போது ‘வெர்டிகோ’ வந்து & போனது தெளிவாகியிருக்கிறது. மருந்து மாத்திரை இல்லாமல் இதற்கென சில பயிற்சிகள் உண்டு. எது எப்படியோ போய்விட்டதே, அதுவரைக்கும் நிம்மதி.

  உங்களவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும், நீங்கள் இருவரும் இப்படியே இணைபிரியாமல் இருக்க இறைவனிடம் எங்களின் வேண்டுதல்களும் உண்டு.

  1. வாங்க சித்ரா!
   //மருந்து மாத்திரை இல்லாமல் இதற்கென சில பயிற்சிகள் உண்டு. //
   என்ன மாதிரியான பயிற்சிகள் என்று சொல்ல முடியமா? எனக்கும் என்னைபோல (கடைசியில் பட்டு கூடச் சொல்லியிருக்கிறார், பாருங்கள்) இன்னும் பலருக்கும் பயன்படும். இணையத்தில் விவரங்கள் கிடைத்தால் கூடச் சொல்லுங்கள், ப்ளீஸ்!
   உங்களது வேண்டுதல்களுக்கு (அருமையான வேண்டுதல்!) நன்றி!

 8. அதுல அம்மாவுக்கு இணையம் வராதபடி பண்ணிடு….!’ என்ன நல்ல எண்ணம்!

  உங்களவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  1. வாங்க இராஜராஜேஸ்வரி!
   வருகைக்கும் ரசித்ததற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

 9. ////நல்ல கணவர்தான். எனக்கு ஒரு சின்ன தலைவலி என்றாலும் உடனே அவருக்கு என்னையும் என் லேப்டாப் –ஐயும் பிரித்தே ஆக வேண்டும். அதுதான் என்னுடைய உடல் கோளாறுகளுக்கு காரணம் என்று படு ஸ்ட்ராங்காக நம்புபவர்////

  எல்லா இடத்திலும் சேம் சேம் அச்சுக்கிள்ளுதான் ரஞ்சனிம்மா!.. ரொம்பவே சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்..

  தங்கள் கணவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்களும் நமஸ்காரங்களும்.. நானும் தங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்!.

  1. வாங்க பார்வதி!
   உங்கள் கணவரும் இப்படித்தானா? எல்லார் வீட்டிலும் இப்படித்தான் போலிருக்கு.
   உங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது, பார்வதி.
   உங்கள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி!

 10. ஓ! உங்களுக்குமா? சீனியர் சிடிசன் பெண்களுக்கு அதிகம் தாக்குகிறது என்று சொல்லப்படுகிறது. அனுவிப்பது நாம் தானே. எனக்கு ஆஸ்பிடல் போக வேண்டி வந்தது.;-(

  Please take care.

  1. வாங்க பட்டு!
   எல்லா வயதினருக்கும் இது வருகிறது என்று எங்கள் டாக்டர் சொல்லுகிறார். நானும் ஜனவரியில் ஒருமுறை ஆஸ்பிடல் போய்வந்தேன்!

   நிச்சயம் பார்த்துக் கொள்ளுகிறேன்.
   உங்கள் அக்கறைக்கு நன்றி!

 11. ஆஹா….. ரஞ்சனி, உங்களவருக்கு, பிறந்தநாளுக்கான எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

  இந்த வெர்ட்டிகோ எனக்கு இதுவரை மூணுமுறை வந்து போயிருக்கு!

  காதுக்குள்ளே (மிட் இயர்) இருக்கும் திரவம் ஒன்னு பேலன்ஸ் இல்லாம போயிருச்சுன்னால் தலை சுத்தோ சுத்துதான்!

  vestibular system ஃபெய்லியர், கேட்டோ!!!

  ஒரு மருந்து எழுதிக்கொடுத்தாங்க. மூணுநாளில் சரியாச்சு.

  டேக் கேர்!

  நல்லா ஜாலியா எழுதி இருக்கீங்க. ரசித்தேன்.

  1. வாங்க துளசி!
   உங்கள் வாழ்த்துகளை அவரிடம் சொல்லிவிட்டேன்.
   நீங்க சொன்னதை தேடித் பிடித்து படித்து விட்டேன்.
   மனதில் இளமை இருந்தாலும் சிலசமயம் உடல் வயதானதைக் காட்டுகிறது, என்று தோன்றுகிறது.
   நிறைய ஓய்வு தேவைபடுகிறது. இப்போதெல்லாம் மதியம் கட்டாய தூக்கம் தூங்கிவிடுகிறேன். இரவு வரை புத்துணர்வுடன் இருக்க முடிகிறது. உடல் மொழியை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
   வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி!

 12. vertig-விலே பழம் தின்னுக் கொட்டையெல்லாம் போட்டாச்சு! நம்மவருக்கு ஆஃபீஸ்ஸு போறச்சேயே அதுவும் ஸ்கூட்டரிலே போறச்சே வெர்டிகோ வந்து, ஆஃபீஸிலே இருந்து இவரைக்காணோமேனு ஃபோன் வந்து, நான் பதறிப் போய்! எல்லா அமர்க்களமும் ஆயாச்சு. இப்போவும் நான் இருக்கேன்னு அப்போப்போ, என்னை மறக்க வேண்டாம்னு சொல்லிட்டுப் போகும். :)))) நல்ல அனுபவம் தான். மருந்து போட்டாலும், போடாட்டியும் அதுக்கு எப்போ இஷ்டமோ அப்போத் தான் சரியாகும். சிலருக்கு வாந்தியும் வரும். நல்லவேளை அதெல்லாம் இல்லைங்கறதாலே பிழைச்சீங்க! :))))

  படுத்துக்கும் பொசிஷன் முக்கியம் இதுக்கு. தூங்கறதுக்கு முந்தி ஐந்து நிமிஷப் பிராணாயாமம் பலனளிக்கும். எந்த பொசிஷன்லே படுத்தால் வெர்டிகோ வரதில்லை என்பதைக் கண்டு பிடிங்க. அதே பொசிஷனைத் தொடருங்க. தலையணையும் ஒரு காரணம். தலையணை இல்லாமல் படுத்தால் சில சமயம் சரியாகிறது.

 13. ரெண்டு தரம் கொடுத்தேன். போனதாத் தெரியலை. உங்கள் கணவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள், வணக்கம்.

  1. வாங்க கீதா!
   உங்கள் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் அவரிடம் தெரிவித்துவிட்டேன்.
   நீங்கள் சொன்னதுபோலவே நானும் தலை சுற்றல் வரும் பொழுதுகளை தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். இரவு அதிக நேரம் (பத்து மணிக்கு மேல்) விழித்திருக்காமல், மதியமும் சிறிது நேரம் தூங்கி எழுவது நல்ல பலனைக் கொடுக்கிறது.
   தலையணை, தலை வைக்கும் பொசிஷன் இவற்றையும் கவனிக்கிறேன்.

   உங்கள் வார்த்தைகள் நிறைய தைரியத்தைக் கொடுக்கின்றன.
   வருகைக்கும் நீங்கள் கொடுக்கும் தைரியத்திற்கும் நன்றி!

 14. பிராணாயாமம் செய்கிறேன், கீதா.
  வேர்ட்ப்ரஸ் தளத்தில் கருத்துரை போடுவது சற்று சிரமம் தான். சலித்துக்கொள்ளாமல் வந்து போட்டதற்கு நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s