சரியாத்தான் சொன்னாரு ‘குஷ்’

 

 

2014 ஏப்ரல் சினேகிதி (திருமதி மஞ்சுளா ரமேஷ்) இதழில் வெளியான கட்டுரை

 

 

நிறைய எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்தாலும், ஒரு சிலரது எழுத்துக்கள் நம்மை மிகவும் கவர்ந்து விடுகின்றன. அந்த சிலரில் இன்று மறைந்த குஷ்வந்த் சிங் என்னைக் கவர்ந்தவர்களில் ஒருவர். நிறைய எழுதியிருக்கிறார். இவரது எழுத்துக்களில் கிண்டலும் கேலியும் அதிகமாக இருக்கும். எல்லோரையுமே நகைச்சுவை கலந்து சாடியிருப்பார். அதுவே இவரது எழுத்துக்களுக்கு சுவாரஸ்யம் கூட்டியது என்று சொல்லலாம். சம்பந்தப்பட்டவர் படித்தால் கூட நிச்சயம் சின்ன புன்னகையாவது செய்வார். பிறகுதான் கோபித்துக் கொள்வார். அவருக்கும் கூட சிலசமயம் இவர் எழுதுவது ‘நிஜம்தானே?’ என்று தோன்றலாம்!

 

இவர் எழுதும் பெரிய நூல்களை விட தினசரியில் இவர் எழுதி வந்த சின்ன சின்ன பத்திகள் மிகவும் சுவாரஸ்யம் வாய்ந்தவை. மற்றவர்களைப் பற்றி மட்டுமல்ல; தனது தவறுகளையும் வெளிப்படையாக பேச இவர் எப்போதும் தயங்கியது இல்லை. இவர் எழுதிய பத்திகளில் நான் படித்தவற்றில் எனக்கு நினைவு இருப்பது இதோ:

 

வெளிநாடு போயிருந்தபோது ஒருமுறை வயிற்று உபாதைக்காக ஒரு மருத்துவரிடம் சென்றாராம். மருத்துவர் இவரைப்பார்த்து, ‘கடந்த ஒரு வாரத்தில் என்னவெல்லாம் சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்டுவிட்டு இவர் சொல்வதைக் குறித்துக் கொண்டாராம். மருந்து எழுதிக்கொடுத்துவிட்டு, ‘ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

 

ஒருவாரம் கழித்து இவர் மருத்துவமனைக்குப் போனபோது அங்கு ஒரு பெரிய கண்ணாடி ஜாடி ஒரு மேஜையின் மேல் இருந்ததாம். அதனுள் நிறைய திரவம், நிறைய திடப்பொருள் என்று ஒரு கலவை. அதைப்பார்க்கவே இவருக்கு ஒரு மாதிரி இருந்ததாம். மருத்துவர் சொல்லும்வரை காத்திருக்காமல், இவரே கேட்டாராம்: ‘அந்த ஜாடிக்குள் என்ன?’ என்று. ‘நீ ஒரு வாரமாக என்னென்ன சாப்பிட்டாயோ அதெல்லாம் அந்த ஜாடிக்குள் இருக்கிறது’ என்று பதிலளித்தாராம் மருத்துவர். ‘வயிறு என்பதை வயிறாக நினை. இதைபோல ஒரு கண்ணாடி ஜாடி என்று நினைத்து கிடைத்ததை எல்லாம் அதற்குள் போடாதே!’ என்றாராம் மருத்துவர்.

 

அவரது பெயரைப்போலவே மிகவும் ஜாலியானவர். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அவரது எழுத்துக்களுக்கு ரசிகர்கள் உண்டு. 99 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்த அவர் ஒரு மனிதனின்  என்ன தேவை என்று பட்டியலிடுகிறார்:

 

 1. முதல் தேவை: பரிபூரண ஆரோக்கியம். சின்ன நோய் என்றால் கூட உங்கள் சந்தோஷத்தை அது பாதிக்கும்
 2. இரண்டாவது தேவை: போதுமான அளவு வங்கித் தொகை: இது லட்சக்கணக்கில் இல்லாமல் போனாலும், வாழ்க்கையின் வசதிகளை அளிக்க வல்லதாக இருக்கவேண்டும். வெளியில் போய் சாப்பிடுவதற்கும், அவ்வப்போது திரைப்படங்கள் பார்ப்பதற்கும், பிடித்த இடங்களைப் போய் பார்த்து வருவதற்கும், விடுமுறையை மலை வாசஸ்தலத்திலோ அல்லது கடற்கரை அருகிலோ கழிக்கவும் உதவுவதாக இருக்க வேண்டும். பணப்பற்றாக்குறை உங்களை நிலைகுலையச் செய்யும். கடன் வாங்குவது, கிரெடிட் கார்டுகளில் வாழ்வது தவறான பழக்கம். நம்மைப் பற்றிய பிறரது கணிப்பில் நம் மதிப்பு குறையும்.
 3. மூன்றாவது தேவை: சொந்தவீடு. நம் வீட்டில் கிடைக்கும் சுகம் வாடகை வீடுகளில் கிடைக்காது. சின்னதாக ஒரு தோட்டம். நம் கையால் விதை போட்டு சின்னஞ்சிறு செடிகள் முளைத்து பூக்கள் மலருவதைப் பார்ப்பதும், அவற்றுடன் ஒரு நட்புணர்வை வளர்த்துக் கொள்வதும் அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும்.
 4. நான்காவது தேவை: நம்மைப் புரிந்துக்கொண்ட ஒரு மனைவி/கணவன்/ ஒரு நண்பன். புரிதல் இல்லாத வாழ்வில் சேர்ந்து இருந்து, ஒருவரையொருவர் கடித்துக் குதறிக் கொள்வதை விட மணவிலக்கு எவ்வளவோ மேல்.
 5. ஐந்தாவது தேவை: நம்மைவிட நல்ல நிலையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து பொறாமை கொள்ளாமல் இருத்தல்: பொறாமை உங்களை அரித்துவிடும். மற்றவருடன் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.
 6. ஆறாவது தேவை: விலகி இருத்தல். வதந்திகளைப் பரப்புபவர்களை கிட்டே நெருங்க விடாதீர்கள். அவர்களது வார்த்தைகள் உங்களை செயலிழக்கச் செய்வதுடன், உங்கள் மனதையும் விஷமாக்கும்.
 7. ஏழாவது தேவை: உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். தோட்டவேலை, புத்தகம் படித்தல், எழுதுதல், படங்கள் வரைதல், விளையாடுதல் அல்லது இசையைக் கேட்டல் என ஏதாவது உங்களுக்கென்று வேண்டும்.
 8. எட்டாவது தேவை: தினமும் காலையும் மாலையும் 15 நிமிடங்கள் சுயபரிசோதனைக்கு ஒதுக்குங்கள். காலை பத்து நிமிடங்கள் மனதை அமைதிப்படுத்தவும், 5 நிமிடங்கள் இன்று என்ன செய்யவேண்டும் என்று திட்டமிடவும் ஒதுக்கவும். அதேபோல மாலை 5 நிமிடங்கள் மனதை நிலைநிறுத்தவும், பத்து நிமிடங்கள் என்னென்ன செய்து முடித்தீர்கள் என்று பார்க்கவும் நேரத்தை செலவிடுங்கள்.
 9. கடைசியாக கோபம் கொள்ளாதீர்கள். முன்கோபம், பழி வாங்கும் எண்ணம் வேண்டவே வேண்டாம். உங்களின் நண்பர் கடுமையாகப் பேசினால் கூட சட்டென்று அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுங்கள்.

 

இவையெல்லாவற்றையும் விட மிகவும் தேவையான ஒன்று:

இறக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய வருத்தங்களோ, உறவினர்கள், நண்பர்கள் பற்றிய எந்தவிதமான மனக்குறைகளோ இல்லாமல் மரணிக்க வேண்டும். பாரசீக மொழியில் கவிஞர் இக்பால் சொல்லுவதை நினைவில் கொள்வோம்: ‘உண்மையான மனிதனின் லட்சணங்கள் என்ன தெரியுமா? மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்பதுதான்’.

 

2014 மார்ச் மாதம் 20 நாள் மரணத்தைத் தழுவிய இந்த மனம்கவர் எழுத்தாளருக்கு நம் அஞ்சலிகள்!

 

இதையும் படிக்கலாமே!

மரணம் என்பது என்ன? 

 

 

 

 

 

23 thoughts on “சரியாத்தான் சொன்னாரு ‘குஷ்’

  1. வாங்க உஷா ஸ்ரீகுமார்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 1. சினேகிதி இதழில் கட்டுரை வெளியானதற்குப் பாராட்டுகள். நிறைவான வாழ்க்கைக்கான அவரது தேவைகள் லிஸ்ட் அருமை.

  1. வாங்க ஸ்ரீராம்!
   வருகைக்கும் படித்து ரசித்ததற்கும் உங்கள் பாராட்டுகளுக்கும் நன்றி!

 2. வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கவேண்டும். ஆரம்ப நிலை வாசகர்களுக்கு அவருடைய படைப்புகளில் உங்களது பரிந்துரைகள் என்ன?

  1. வாங்க பாண்டியன்!
   அவருடைய புத்தகங்கள் எதையும் நான் படித்ததில்லை பாண்டியன்.
   ஆனால் அவரது கட்டுரைகள் டெக்கன் ஹெரால்ட் – இல் நிறைய படித்திருக்கிறேன். நான் எழுதிய மரணம் பற்றிய அவரது கட்டுரை கூட அவுட் லுக்கில் படித்ததுதான்.
   இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் நிறைய படித்திருக்கிறேன். Train to Pakistan படிக்க வேண்டும் என்று ஆசை. அவரது கட்டுரைகளில் காணப்படும் கேலி கிண்டல்கள் ரொம்பவும் பிடிக்கும்.

   இந்த இணைப்பில் இருக்கும் புத்தகங்களைப் பாருங்கள்:
   http://timesofindia.indiatimes.com/life-style/photo-stories/photo-stories-do-not-make-active/Khushwant-Singhs-10-most-talked-about-books/photostory/32359700.cms

   என்னுடைய பரிந்துரையை கேட்டதற்கு நன்றி!

   1. டிரெயின் டு பாகிஸ்தான்.. ம். உங்க கணக்கில குறித்துக்கொள்கிறேன்.

    நன்றி!

 3. சினேகிதி இதழில் உங்கள் கட்டுரை வெளியானதற்கு வாழ்த்துக்கள்.
  திரு. குஷ்வந்த்சிங்கின் பத்து ஆலோசனைகளும் மிகவும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, அவர் எழுத்துக்களின் விசிறி நான்.

  1. வாங்க ராஜி!
   நீங்களும் அவரோட விசிறியா? நானும் அதே! அதனாலேயே அவருடைய கட்டுரைகளைத் தேடித் தேடி படித்து தமிழிலும் எழுதுகிறேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 4. அவர் எழுத்தைப் படிக்கும் போது நான் நினைப்பதுண்டு ,இவர் குஷ்வந்த் சிங் அல்ல …குஷி வந்த சிங்கம் என்று !

  1. வாங்க பகவான்ஜி!
   உண்மைதான் அவரது எழுத்துக்களில் இருக்கும் நையாண்டிதான் எனக்கும் பிடித்த அம்சம்.

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 5. திரு சோ ராமசாமி எழுத்துக்களும் இப்படித்தான் கேலியும் கிண்டலுமாக இருக்கும் ஆனால் அதில் அரசியல் வாசனை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் குஷ்வந்த் சிங்கும் மிக மிக அருமையாக எழுதுவார் நானும் நிறைய படித்திருக்கிறேன். தேவைகள் அனைத்தும் அருமை பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள். ரஞ்சனி

 6. ஒன்பது வழிகாட்டலுடன்
  ஓர் இலக்கு – அது
  ‘உண்மையான
  மனிதனின் லட்சணங்கள்
  என்ன தெரியுமா?
  மரணத்தைப் புன்னகையுடன்
  வரவேற்பது தான்’. என்பதும்
  பயனுள்ள தகவல்!

  1. வாருங்கள் யாழ்பாவாணன்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 7. He had the greatest virtue of laughing at himself.
  எத்தனை முறை படித்தாலும் திகட்டாத நகைச்சுவையுடன் கூடிய
  அவர் கட்டுரைகள் நான் அவர் illustrated weekly ஆசிரியர் ஆக இருந்தபோது படித்து இருக்கிறேன்.

  அவர் சொன்ன சர்தார்ஜி ஜோக்குகள் மிகவும் பிரசித்தம்.

  மரணம் பற்றிய அவர் நினைப்பு இரண்டு கோணங்களில் பார்க்கத்தகுன்தது.

  ஒன்று உடலை விட்டு உயிர் நீங்குகிறது. நீங்கும் என்பது நிச்சயம். அந்த உடலை செய்வார்கள் ?
  எரிப்பார்களா புதைப்பார்களா என்று அதற்கான ஒரு ப்ளான் போட்டுத் தரும் அளவுக்கு ஒரு ப்ராக்மாடிக் சிந்தனை ஆளர்.

  இறப்பு பற்றி சாமர் செட் மாம் கூறியது :
  Death is nothing but deprivation of senses, and there is nothing terrible in not living.

  சுப்பு தாத்தா.

  1. வாருங்கள் சுப்பு ஸார்!
   உங்கள் கருத்துரைகள் எப்பவுமே கட்டுரைக்கு சுவை கூட்டுபவை.
   சாமர்செட் மாம் சொல்லியிருப்பது ரொம்பவும் சிந்திக்க வைக்கிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வா ஜெயந்தி!
   நாம் தீவிரமாகப் பேசும் விஷயத்தை அனாயாசமாக வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார், இந்த குஷி சிங்!
   நன்றி ஜெயந்தி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s