ஆட்டிஸம் (Autism Spectrum Disorder)

 

autism

இன்றைக்கு ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள். ( ஏப்ரல் 2) ஆட்டிஸம் என்றால் என்ன? இது ஒரு குறைப்பாடு. குறிப்பாக ஆண் குழந்தைகளை பாதிக்கும் குறைப்பாடு.

 

இந்தக் குழந்தைகள் யாருடனும் பழகுவதையோ, பேசுவதையோ விரும்புவதில்லை. பொதுவாழ்க்கை என்பதை இவர்கள் அவ்வளவாக ஏற்றுக் கொள்ளுவதில்லை. மற்றவர்களுடன் பேசுவது, அவர்களை நேருக்கு நேர்  பார்ப்பது இதெல்லாம் அவர்களுக்கு மிகவும் கடினமான ஒரு விஷயம். நாம் வழமையான விஷயங்கள் என்று நினைப்பது அவர்களுக்கு கடினமாக இருக்கும். வெளியே அதிகம் பழகாமல் தங்களுக்குள்ளேயே வாழ நினைப்பவர்கள். இன்னொருவரால் தொடப்படுவதைக் கூட இவர்கள் விரும்புவதில்லை. தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு, முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு, தங்கள் நினைப்பிலேயே சிரித்துக் கொள்வார்கள். மாற்றம் என்பதை ஏற்றுக்கொள்வது மிகமிகக் கடினம் இவர்களுக்கு.

 

ஆட்டிஸம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கு இதுவரை பதில் இல்லை. இது பரம்பரையாக வரும் குறைபாடு.  பெற்றோர்களுக்கு இந்த பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கும் இருக்கும். பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும்  குழந்தையின் மூளை வளர்ச்சி அடைவதைப் பொறுத்து இந்த ஆட்டிஸம் ஏற்படுகிறது.  இந்தக் குறைபாட்டினை ஸ்பெக்ட்ரம் குறைபாடு என்கின்றனர். அதாவது சிலரை இந்த நோய் அதிகமாகவும், சிலரை மிதமாகவும் பாதிக்கும். மிதமான வகையை Asperger Syndrome அல்லது High functioning Autism என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களால் தங்கள் தேவைகளை தாங்களாகவே – அதாவது உடை மாற்றிக் கொள்வது, உணவு எடுத்துக் கொள்வது – பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் அலுவலகம் செல்வது, தனியாகப் பயணம் செய்வது என்பதெல்லாம் முடியாத செயல்கள். அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் யாருடைய பராமரிப்பிலாவது வாழவேண்டும்.

 

இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலர் மிகத் திறமைசாலியாக இருக்கிரார்கள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையில் – அது கணக்குப் பாடமாகவோ அல்லது பியானோ வாசிப்பாகவோ, அல்லது கால்பந்து விளையாட்டின் ஸ்கோர்களை நினைவு வைத்துக் கொள்வதாகவோ இருக்கும். ஆயிரம் நபர்களில் ஒருவரோ, இருவரோ இந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

 

இந்த பாதிப்பின் அறிகுறிகள்

தனியாக இருத்தல்:

 

இயல்பாக குழந்தைகளுக்கு மற்றவர்களைப் பார்ப்பது, பிறர் பேசுவதைக் கேட்பது, அவர்களது முகத்தை, சிரிப்பை கவனிப்பது போன்ற எதையும் ஆட்டிஸம் பாதித்தக் குழந்தைகள் செய்ய மாட்டார்கள். ஒரு நொடி யாரையாவது பார்த்தால் அடுத்த நொடி தலையை திருப்பிக் கொண்டு விடுவார்கள். யாரைப் பார்த்தும் சிரிக்க மாட்டார்கள், தங்களுக்குப் பிடித்ததை பார்த்து மட்டும் சிரிப்பார்கள்.

தனிமை இந்தக் குழந்தைகளுக்குப் பிடித்த ஒன்று. நண்பர்கள் ஆகவோ, பிறரை நண்பர்கள் ஆக்கிக் கொள்ளவோ விரும்ப மாட்டார்கள். பெற்றோர்கள் ஆசையுடன் அணைத்துக் கொண்டால் கூட ஒன்றும் நடக்காதது போல இருப்பார்கள். பெற்றோர்களைப் பிடிக்காது என்பதல்ல, இதன் பொருள். தங்களது உணர்ச்சிகளைக் காட்டத் தெரிவதில்லை இவர்களுக்கு. அதேபோல பெற்றோர்களது உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளா இயலாது இவர்களால். நாம் சிரிக்கும்போது இவர்கள் அழுவதும், நாம் அழும்போது இவர்கள் சிரிப்பதும் வழக்கமாக நடக்கும் ஒன்று.

 

பேசுதல்:

ஒரு வயது ஆனாலும் சில ஆட்டிஸ குழந்தைகள் பேசுவதற்கு முயற்சி செய்ய மாட்டார்கள். விரல்களினால் சுட்டிக் காட்டவோ, அல்லது ஏதோ ஒரு விஷயம் சொல்லவோ முயற்சிக்க மாட்டார்கள். சிலருக்கு அவர்களது மொழியே புரியாது. சிலர் பேசுவதும் இல்லை. இப்படி இருக்கும் குழந்தைகளை சிறு வயதிலேயே பயிற்சி கொடுத்து பேச வைக்கமுடியும்.

 

திரும்பத் திரும்ப ஒன்றையே செய்தல்:

 

ஒரே செயலையே திரும்பத்திரும்ப மணிக்கணக்கில் செய்து கொண்டிருப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக செயல்படுவார்கள். வட்ட வட்டமாக சுற்றிக் கொண்டிருப்பார்கள்; தங்களது கட்டைவிரலை வாயில் வைத்துக் கொள்வது, அல்லது எல்லாவற்றையும் ஒழுங்கு செய்வது என்று நேரம் போவது தெரியாமல் செய்வார்கள். தங்களது விளையாட்டு சாமான்களை ஒரு வரிசையில், அல்லது ஏதாவது ஒரு வடிவில் வைத்துக் கொண்டிருப்பார்கள். நடுவில் யாராவது வந்துவிட்டால் கோபம் தலைக்கேறும்.

 

எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்க தயாராக இருக்கமாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது, குறிப்பிட்ட வகைகளையே சாப்பிடுவது, ஆடை அணிவது, வெளியில் போவது எல்லாமே ஒரே மாதிரி இருக்க வேண்டும். தங்களுக்குப் பிடித்ததை கற்றுக்கொள்ள பலமணிநேரம் செலவழிப்பார்கள்.

 

முதன்முதலாக ஆட்டிஸம் என்ற சொல் 1943 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. லியோ கனேர் என்பவர் 11 குழந்தைகளை ஆராய்ந்து அவர்கள் செய்யும் சில வழக்கமில்லாத செயல்களை கண்டுபிடித்தார். அவர் அந்த நிலையை Infantile Autism என்று பெயரிட்டார். அதே சமயம் இன்னொரு மருத்துவர் ஹான்ஸ் அச்பெர்கர் இன்னொரு ஆராய்ச்சி செய்தார். அவரது கண்டுபிடிப்பு இப்போது Asperger Sydrome என்று அழைக்கப்படுகிறது.

 

 • இந்தியாவில் சுமார் 10 மில்லியன் பேர்கள் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80% சிறுவர்கள்.
 • இது எதனால் ஏற்படுகிறது என்பது தெரியாததால், இதற்கு சிகிச்சையும் இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம்.
 • ஜாதி, இனம். மதம் என்ற பாகுபாடு இல்லாமல் யாரை வேண்டுமானாலும் இது பாதிக்கும்.

 

பெற்றோர்கள் கவனத்திற்கு:

 

 • உங்கள் குழந்தைக்கு இந்தக் குறைபாடு இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் உடனடியாக உதவியை நாடுங்கள். குழந்தை வளரட்டும் என்று பாதிப்பை கண்டறிவதில் காலதாமதம் செய்யாதீர்கள்.
 • ஆட்டிஸம் என்றால் என்ன, அது உங்கள் குழந்தையை எப்படி பாதித்திருக்கிறது என்று கண்டறிந்து குழந்தைக்கு உதவுங்கள்.
 • ஒவ்வொரு மாநில அரசும் இந்த குறைபாட்டிற்கான மையங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசீய அளவிலும் பல மையங்கள் இருக்கின்றன. ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் இந்த மையங்களின் உதவியுடன் உங்கள் குழந்தைகள் கல்வி கற்பது, தங்கள் வேலையை தாங்களே செய்துகொள்வது போன்றவற்றில் பயிற்சி கொடுக்கலாம்.
 • அவர்களுக்கென்று கொடுக்கப்படும் கல்வியால் அவர்களுக்கான வாழ்க்கை வாய்ப்புகளும் தெரியவரும்.

மேலும் விவரங்களுக்கு : ஆட்டிஸம்

மேற்கண்ட இணைப்பில் உள்ள திரு பாலபாரதி அவர்களின் வலைத்தளத்தில் இந்தக் குறைபாடு பற்றிய பல விஷயங்களை அறியலாம். பெற்றோர்களுக்கு உதவ: ஆட்டிஸ நிலையாளர்களின் பெற்றோர் ஒன்று கூடல் அழைப்பிதழ் ஏப்ரல் 5, 2014

 

 

 

10 thoughts on “ஆட்டிஸம் (Autism Spectrum Disorder)

 1. இன்று ஆட்டிஸம் நாள் என்று செய்தித் தாளில் படித்தேன். எங்கள் வீட்டுக்கருகில் கூட ஒரு குழந்தை இப்படி இருக்கிறது. அவர்கள் பெற்றோர்களும் உடன்பிறந்த சகோதரியும் அந்தப் பெண்ணை கவனித்துக் கொள்வது சிறப்பாக இருக்கும். சிறப்பான பதிவு.

 2. விரிவான தகவல்களுடன் தேவையான பகிர்வு. இத்னால் பாதிப்படைந்த குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களின் எதிர்காலத்தை எண்ணி மனம் நைந்து போகிறது,

 3. நல்லதொரு பகிர்வு அம்மா! இந்த ஆட்டிசம் குறித்த செய்திகளை தேடி தேடி நானும் படித்து கொண்டிருக்கிறேன்.ஏனெனில் நானும் ஒரு ஆட்டிச குழந்தைக்கு தாய். முதலில் கண்டறிந்த போது சிறிது அதிர்ச்சியாக தான் இருந்தது. இப்பொழுது என் குழந்தையை எப்படியாவது ஒரு நல்ல வழிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற குறிகோளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான்கு வயது வரை சரி வர பேச இயலாத என் குழந்தை இப்பொழுது ஸ்பீச் தெரபி குடுக்க ஆரம்பித்த உடன் சிறிது பேச ஆரம்பித்து விட்டான். இன்னும் நாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாதை நிறைய இருக்கிறது. கடந்து செல்வோம் என்ற நம்பிக்கையும் நிறையவே இருக்கிறது. நான் ப்ளாக் எழுத ஆரம்பித்ததின் பின்னணியும் அவனே. மனது மட்டும் எந்த ஒரு நாளும் வெறுத்து போய் விட கூடாது. இதை எல்லா ஆட்டிச பெற்றோரும் உணர்ந்து ஆரம்பத்தில் இருந்தே தத்தம் குழந்தைகளை இரு கரம் பற்றி நல் வழி காட்டி கொண்டே செல்லுங்கள், ஒரு நாள் கண்டிப்பாக கரை ஏறி விடுவான் என்ற நம்பிக்கையோடு 🙂

  1. அன்புள்ள மஹா,
   உங்கள் தைரியத்தை, தன்னம்பிக்கையை மிகவும் பாராட்டுகிறேன். இந்த கருத்துரைக்கு என்னால் எந்தவித பதிலும் அளிக்க முடியவில்லை என்பது தான் இவ்வளவு தாமதமாக பதில் எழுதக் காரணம்.
   இறைவன் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் எல்லாவித நன்மைகளையும் கொடுக்காததும். இப்போதுதான் ஆட்டிஸம் பற்றி இன்னொரு பதிவு படித்தேன். அங்கு கொடுத்திருந்த இணைப்பை உங்களுக்கு அனுப்புகிறேன். பயன்படும் என்ற நம்பிக்கையில்:
   http://thealternative.in/inclusivity/living-with-autism-a-family-in-the-spectrum/

   1. மஹா, தங்களின் ப்ளாக் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. தர முடியுமா?

   2. வணக்கம் அம்மா! இணைப்பை சொடுக்கி படித்து பார்த்தேன்! என் சொந்த அனுபவங்களை தொகுத்தது போல ஒரு உணர்வு! நிஜமாகவே நம்பிக்கை அளிக்க கூடிய தகவல்கள்! உங்கள் கருணைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி அம்மா 🙂

 4. நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு. கடவுளின் படைப்பில் தான் எத்தனை விந்தைகள் . பெற்றோர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருந்தால் குழந்தைகளும் நம்பிக்கைப் பெறுவார்கள. நம்பிக்கைத் தருகிறது உங்கள் பதிவு ரஞ்சனி.
  திரு. பாலபாரதி அவர்களின் பதிவில் இந்த குறைபாட்டைப் பற்றிய முழு விவரங்களும் கிடைக்கிறது. நல்லதொரு சேவை . அதை வெளிச்சம் போட்டுக் காட்டிய உங்களுக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s