மரணம் என்பது என்ன?

kushwant singh

 

4tamilmedia.com – தளத்தில் இன்று பிரசுரம் ஆகியிருப்பது

20.3.2014 அன்று மறைந்த பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்களின் Absolute Kushwant: The Low-Down on Life, Death & Most Things In-Between – என்ற  புத்தகத்திலிருந்து:

இறப்பு என்பதை நம் வீடுகளில் அவ்வளவாக பேசுவதில்லை. நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்ததுதானே – மரணம் என்பது வந்தே தீரும்; தவிர்க்க இயலாதது என்று. பின் ஏன் மரணத்தைப் பற்றிப் பேசுவது இல்லை என்று நான் வியப்பதுண்டு. உருது கவிஞர் யஸ் யகானா சாங்கேசி (Yas Yagana Changezi) வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘கடவுள் இருப்பதைநீ  சந்தேகிக்கலாம்; சந்தேகிக்காமல் இருக்கலாம். ஆனால் மரணம் என்பதன் நிச்சயத்தன்மையை நீ சந்தேகிக்க முடியாது’. மரணத்திற்கு ஒருவர் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும்.

 

இந்த 95வது வயதில் மரணத்தைப் பற்றி நான் நினைக்கிறேன். அடிக்கடி நினைக்கிறேன். ஆனால் அதை நினைத்து என் தூக்கத்தை இழப்பதில்லை. மறைந்து போனவர்களைப் பற்றி நான் நினைக்கிறேன். எங்கு இருப்பார்கள்? எங்கு போயிருப்பார்கள்? எங்கு இருக்கக்கூடும்? என்னிடம் விடைகள் இல்லை. எங்கு போகிறோம்? மரணத்திற்குப் பின் என்ன?

உமர் கய்யாம் சொல்லுகிறார் ‘எங்கிருந்தோ இந்த பூமியில் ஏன் என்று தெரியாமலேயே… மெல்ல ஓடும் நீர் போல…..’

‘அதோ ஒரு கதவு என்னிடம் திறவுகோல் இல்லை;

அதோ ஒரு திரை என்னால் ஊடுருவி பார்க்கமுடியவில்லை;

என்னைப் பற்றியும் போனவர்களைப் பற்றியும்

சின்ன சின்ன பேச்சு சில காலத்திற்கு

பிறகு பேச்சு நான், அவர்கள் யாரும் இருப்பதில்லை…..’

 

ஒருமுறை தலாய் லாமாவைக் கேட்டேன்: மரணத்தை ஒருவன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று. அவர் தியானத்தை அறிவுறுத்தினார். மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. அது என்னை பயமுறுத்துவதும் இல்லை. மரணம் தவிர்க்கமுடியாதது. மரணத்தைப் பற்றி நான் அதிகமாக நினைத்தாலும் அதை நினைத்து நினைத்து மாய்வதில்லை. மரணத்திற்கு நான் என்னைத் தயார் செய்துகொள்ளுகிறேன்.

 

அசதுல்லாகான் காலிப் சரியாகச் சொன்னார்:

‘வயது நாலுகால் பாய்ச்சலில் பிரயாணம் செய்கிறது;

யாருக்குத் தெரியும் அது எப்போது நிற்கும் என்று?

அதன் கடிவாளம் நம் கைகளில் இல்லை

நம் கால்களும் அதன் வளையத்தில் இல்லை’

 

என் வயதொத்தவர்கள், சமகாலத்தவர்கள் – இந்தியாவில், இங்கிலாந்தில், பாகிஸ்தானில் – எல்லோரும் போய்விட்டார்கள். இன்னும் இரண்டொரு வருடத்தில் நான் எங்கிருப்பேன் என்று எனக்குத் தெரியாது. மரணத்திற்கு அஞ்சவில்லை; ஆனால் நான் பயப்படுவது ஒரு நாள் கண் தெரியாமல் போய்விட்டால்? வயதானதால் இயலாதவனாகிவிட்டால்? இப்படி ஒரு நிலையில் இருப்பதை விட இறப்பது மேல். ஏற்கனவே என் பெண் மாலாவிற்கு நான் பாரமாகவிட்டேன். மேலும் சுமக்க முடியாத பாரமாக விரும்பவில்லை.

 

நான் வேண்டுவது எல்லாம் மரணம் வரும்போது அது சடுதியில் வரட்டும்; அதிக வலி இல்லாமல், ஆழ்ந்த தூக்கத்திலேயே மறைவது போல. அதுவரை நான் வேலை செய்து கொண்டே ஒவ்வொரு நாளையும் அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ விரும்புகிறேன். இன்னும் நான் செய்து முடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதனால் நான் ‘பெரிய அண்ணா’ (கடவுளை இப்படித்தான் குறிப்பிடுகிறேன்) விடம் சொல்ல விரும்புவது இது தான்: ‘நான் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு வரும்வரை நீ எனக்காக காத்திரு’.

 

ஜெயின் தத்த்வத்தில் மரணத்தை கொண்டாட வேண்டும் என்கிறார்கள். நானும் இதை நம்புகிறேன். முன்பெல்லாம் உற்சாகம் குறைந்தால் நான் சுடுகாட்டிற்குப் போவதுண்டு. மனதை தூய்மைபடுத்தி, எனது மனவருத்தத்திற்கு சிகிச்சையாக இது இருக்கிறது.  பல வருடங்களுக்கு முன்பே எனக்காக நான் ஒரு கல்லறை வாசகம் எழுதினேன்.

இங்கே உறங்குகிறான் ஒருவன்

மனிதனையும், ஏன் இறைவனையும் கூட

சாடத் தயங்காத ஒருவன்

இவன் ஒரு பதர்,  இவனுக்காக உங்கள் கண்ணீரை வீணாக்காதீர்கள்

மோசமாக எழுதுவதை நகைச்சுவை என்று நினைத்தவன்

பாவி மகன் ஒழிந்தான் என்று கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்

 

1943 ஆம் வருடத்திலேயே (எனது இருபது வயதுகளில் இருந்தேன் அப்போது) என்னுடைய நினைவுநாள் செய்தி எழுதினேன். பல வருடங்களுக்குப் பின் இது ‘இறப்பிற்குப் பின்’ என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பில் வெளியானது. என்னுடைய மறைவு ‘டிரிப்யூன்’ பத்திரிகையில் இப்படி வருகிறது:

முதல் பக்கத்தில் ஒரு சின்ன புகைப்படத்துடன்: ‘சர்தார் குஷ்வந்த் சிங் மறைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஒரு இளம் விதவையையும், இரண்டு சின்னக் குழந்தைகளையும், ஏராளமான நண்பர்களையும், நேசித்தவர்களையும் விட்டுவிட்டுச் சென்று விட்டார், செய்தி அறிந்து சர்தாரின் வீட்டிற்கு வந்தவர்கள் தலைமை நீதிபதி, பல மந்திரிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரின் உதவியாளர்கள்’.

 

என் மனைவி இறந்த போது மரணத்தை நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நான் ஒரு லோகாயுதவாதி. மதம் சார்ந்த சடங்குகளில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. நான் ஒரு தனிமை விரும்பி ஆதலால் என் நண்பர்கள், உறவினர்கள் என்னை சமாதனப்படுத்த வருவதை தவிர்த்தேன். மனைவி இறந்த அன்று இரவு தனிமையில் இருட்டில் எனது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே அந்த இரவுப் பொழுதை கழித்தேன். சிலசமயம் அடக்க முடியாமல் அழுதேன். வெகு சீக்கிரம் தேறினேன். ஓரிரு நாட்களில் எனது மாமூல் வாழ்க்கையை ஆரம்பித்தேன். விடியலிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை உழைத்தேன். இனி தனிமையில்தான் வாழவேண்டும் என்ற நிதர்சனத்தை, காலி வீட்டில் எனது மீதி வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும் என்ற நிலையை என் மனதிலிருந்து மறக்க இந்த உழைப்பு உதவியது. நண்பர்கள் வந்து எனது சமநிலையை கெடுப்பதற்குமுன் கோவாவிற்குச் சென்றுவிட்டேன்.

 

இறந்த பின் புதைக்கப்படுவதையே விரும்பினேன். எந்த மண்ணிலிருந்து வந்தோமோ அதே மண்ணுக்குப் போகிறோம், புதைக்கப்படுவதால். பஹாய் முறையில் நம்பிக்கை கொண்ட நான் இறந்த பின் என்னைப் புதைக்க முடியுமா என்று கேட்டேன். முதலில் ஒப்புக்கொண்ட அவர்கள், பிறகு ஏதேதோ சட்டதிட்டங்களுடன் வந்தார்கள். ஒரு மூலையில் புதைக்கப்பட்டு எனது புதைகுழி அருகே ஒரு அரச மரம் நடவேண்டும் என்றேன். இதற்கும் சரி என்றவர்கள் பிறகு வந்து எனது புதைகுழி ஒரு வரிசையின் நடுவில் இருக்குமென்றும், மூலையில் இருப்பது சாத்தியம் இல்லையென்றும் சொன்னார்கள். எனக்கு இது சரிவரவில்லை. இறந்தபின் எல்லாம் ஒன்றுதான் என்று தெரிந்தாலும் ஒரு மூலையில் புதைக்கப்படுவதையே விரும்பினேன். இன்னொன்றும் அவர்கள் சொன்னார்கள் நான் இறந்தபின் சில பிரார்த்தனைகளை சொல்வார்கள் என்று. இதற்கும் நான் ஒப்பவில்லை –  நான் மதத்தையோ, மதச் சடங்குகளையோ நம்பாதவன் என்பதால்.

 

நான் இப்போதைக்கு நல்ல ஆரோக்கியத்தில் இருந்தாலும் அதிக நாட்கள் என்னிடம் இல்லை என்று தெரியும். மரணத்தின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள என்னை தயார் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. மரணம் என்பது எனது பாவ புண்ணியங்களுக்கு தீர்ப்பு சொல்லும் நாள் என்பதையும், சுவர்க்கம் நரகம் இவற்றிலும் நம்பிக்கை இல்லை. மறுபிறவியிலும் நம்பிக்கை இல்லை. அதனால் மரணம் என் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியாக இருக்கவேண்டும்.  மரணமடைந்தவர்களைக் கூட நீ விடுவதில்லையா என்று என்னை விமரிசிக்கிறார்கள் சிலர். மரணம் ஒருவனைத் தூய்மைப்படுத்துவதில்லை. ஒருவர் ஊழல்வாதியாக இருந்தால் மரணத்திற்குப் பின்னும் அவரை நான் விடுவதில்லை; சாடுகிறேன்.

 

மரணம் என்பதன் இறுதிநிலையை ஏற்றுக்கொள்ளுகிறேன். மரணத்திற்குப் பின் நமக்கு என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருவர் அமைதியாக மரணத்தைத் தழுவ நாம் உதவ வேண்டும். தான் வாழ்ந்த வாழ்க்கை, இந்த உலகம் இரண்டிலும் சமாதானம் அடைந்தவனாக முழுமை அடைந்தவனாக மரணத்தை தழுவ வேண்டும்.

 

எல்லாவற்றையும் விட மரணவேளையில் வருத்தங்களோ, மனக்குறைகளோ இல்லாதவனாக ஒருவன் இருக்க வேண்டும். பாரசீகக் கவிஞன் இக்பால் சொன்னது போல: ‘உண்மையான மனிதனின் அறிகுறி என்ன என்று என்னைக் கேட்டால் – மரணம் வரும்போது அவனது இதழில் புன்னகை இருக்க வேண்டும்!’

 

தமிழ் மொழியாக்கம், கட்டுரை ஆக்கம்: ரஞ்சனி நாராயணன் 

 

சரியாத்தான் சொன்னாரு குஷ்!

 

நிம்மதி சூழ்க 

17 thoughts on “மரணம் என்பது என்ன?

 1. வணக்கம் அம்மா
  சிறப்பானதொரு கட்டுரை. யாரும் நினைத்தாலே அச்சம் கொள்ளும் மரணத்தை மிக எளிதாக கையாளும் மனிதர்களின் மனபோக்கு பலரின் அச்சத்தைப் போக்கும் என்று நம்புகிறேன். நன்றீங்க அம்மா..

 2. மரணம் என்பது ஒரு நிகழ்வு தானே… திருப்தியான மரணம் அடைபவர்கள் மிகச் சிலரே… எந்தவொரு எதிர்ப்பாராத சூழ்நிலையும் எதிர்க் கொண்டு சமாளித்து விட்டால்… மனம் பக்குவப்பட்டு விட்டால்… மரணம் கூட சுகமே…

  அருமையான கட்டுரை அம்மா…

  4tamilmedia.com – தளத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்…

  நன்றி…

 3. வயதானவர்களின் யதார்த்த எண்ணங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது.கட்டுரை.
  எனக்கு ஸென்ட் பர்ஸென்ட் இப்படிப்பட்ட எண்ணங்கள்தான் அலை
  மோதிக்கொண்டிருக்கிறது. அதிகம் சொல்லத் தேவையில்லை. குஷ்வந்த்ஸிங் ஆத்மா
  சான்தி அடையட்டும். அன்புடன்

 4. ஒவ்வொரு நாளும் மரணத்தை ஒவ்வொரு வடிவில் பார்க்கிறோம். ஆனாலும் நமக்கு மரண பயம் தனி மனிதனாக தளர்ந்துபோகும் சமயம்தான் உண்டாகிறது. மரணம் பற்றி எழுத்தாளர் குஷ்வந்த் சிங் எழுதிய சிந்தனைக் கட்டுரையை தமிழில் பகிர்ந்தமைக்கு நன்றி! தங்களது தமிழாக்கம் குஷ்வந்த் சிங் தமிழிலேயே எழுதிய கட்டுரை போல சிறப்பாக இருந்தது.

 5. எல்லோரும் எழுத யோசிக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி திரு. குஷ்வந்த் சிங் அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் எஹ்த்டணி நிதர்சன உண்மைகளை வெளியிட்டிருக்கிறார். அதை மொழியாக்கம் செய்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ரஞ்சனி.

 6. மனதைத் தைரியப்படுத்தும் கட்டுரை.மரணத்தின் போதும் இதழில் புன்னகையுடன்
  இருப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.அருமையான சிந்தனை.பகிர்வுக்குப்
  பாராட்டுகள்.

 7. You have verily brought out the inner core of what Kushwant Singh thought and wrote possibly a decade or even more than that. A good translation indeed.
  “Death is nothing but deprivation of senses and there is nothing terrible in not living” wrote Somerset Maugm as he wrote his own biography.
  While most of us disappear on death, a few start living after death. A man who knew how to laugh at himself, Kushwant Singh knew and taught his friends around how to live at peace with oneself and still enjoy life.

  subbu thatha.
  http://www.subbuthatha.blogspot.com

  1. பார்த்தேன், தனபாலன். சசி அவர்களின் பதிவிலும் பதில் சொல்லிவிட்டு வந்தேன். தகவலுக்கு நன்றி!

 8. தங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.
  “மரணத்தை ஒருவன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று. அவர் தியானத்தை அறிவுறுத்தினார். மரணத்தைப் பற்றி நான் பயப்படவில்லை. அது என்னை பயமுறுத்துவதும் இல்லை. மரணம் தவிர்க்கமுடியாதது. மரணத்தைப் பற்றி நான் அதிகமாக நினைத்தாலும் அதை நினைத்து நினைத்து மாய்வதில்லை. மரணத்திற்கு நான் என்னைத் தயார் செய்துகொள்ளுகிறேன்.” என்ற தலாய்லாமா அவர்களின் வழிகாட்டல் பயனுள்ளது.

 9. மரணத்தை பற்றி மிக அருமையான புரிதல்! சிறப்பாக சொல்லியிருக்கிறார்! சிறப்பாக மொழிபெயர்த்து தந்தமைக்கு மிக்க நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s