நான் மதிக்கும் பதிவர்

eezham

நான்கு மாதங்களுக்கு முன் விவேகானந்தர் பற்றி எழுத வேண்டும் என்ற வாய்ப்பு கிடைத்தவுடன், குழந்தைகள் பரீட்சைக்குப் படிப்பது போல விவேகானந்தரைப் பற்றி இரவு பகலாகப் படித்தது இன்று மறுபடி நினைவில் ஓடியது.

 

ஒரு புத்தகம் எழுதவே இத்தனை கடுமையாக உழைக்க வேண்டும் என்றால் ஒரு புத்தகம் அச்சுவடிவில், மூன்று மின்னூல்கள் என்றால் எத்தனை உழைப்பு! நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. அதுவும் எடுத்துக் கொண்ட விஷயங்கள் எல்லாமே கனமானவை; அப்பழுக்கில்லாத கவனம் தேவைப்படுபவை. கம்பிமேல் நடப்பது போல எழுத வேண்டிய விஷயங்கள்.

 

என்னதான் வலைப்பதிவில் எழுதியவை என்று வைத்துக்கொண்டால் கூட எத்தனை புத்தகங்களைப் படித்திருக்க வேண்டும், எத்தனை விஷயங்களை மறக்காமல், அவை நடந்த காலங்களை நினைவில் வைத்துக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக மணி கோர்ப்பது போலக் கோர்த்திருக்க வேண்டும்!

 

ஒரு நிறுவனத்தில் பெரிய பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு இத்தனை எழுத வேண்டும் என்றால் நிச்சயம் கடின உழைப்பாளியாகத் தான் இருக்க வேண்டும், இல்லையா?

 

நான் யாரைப் பற்றி எழுதுகிறேன் என்று இதற்குள் புரிந்திருக்கும். உங்கள் ஊகம் சரிதான். திரு ஜோதிஜி அவர்களை பற்றித்தான் சொல்லுகிறேன். என் வலைதளத்தை அவரது வலைச்சர வாரத்தில் அறிமுகப்படுத்தியதும்தான் இவரது எழுத்துக்களை அதிகமாகப் படிக்க ஆரம்பித்தேன். பல பதிவுகளைப் படித்துவிட்டு, பின்னூட்டம் எதுவும் போடாமல் வந்துவிடுவேன். ஏனெனில் இவரது பதிவுகளை ஒருமுறை படித்துவிட்டு கருத்து சொல்வது மிகவும் கடினமான விஷயம். மனதில் இவர் சொல்லும் விஷயங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். மறுபடி படிக்கவேண்டும். நீண்ட நீண்ட வாக்கியங்கள் நம்மை கொஞ்சம் தடுமாற வைக்கும். என்ன சொல்ல வருகிறார் என்று திரும்பவும் படிக்க வேண்டும். நுனிப்புல் மேய்வது என்பது இங்கு நடக்கமுடியாத ஒன்று.

 வெள்ளை அடிமைகள்

டாலர் நகரம் என்ற இவரது முதல் புத்தகத்தை வாங்கினேன். நான் முதல் முறையாக புத்தக மதிப்புரை எழுதியது இவரது இந்தப் புத்தகத்திற்குத்தான். அதற்குப்பின் இரண்டாவது பதிவர் திருவிழாவில் நேரில் சந்தித்தேன். நீண்ட நாட்கள் நட்பில் இருந்தவர்கள்போல இருவரும் பேசிக்கொண்டோம்.

 

நான் புத்தகம் எழுதிக் கொண்டிருந்தபோது இவர் கூறிய வார்த்தைகள் மறக்க முடியாதவை: ‘நீங்க இப்போ முதல் திரைப்பட இயக்குனர் போல. படத்தை நல்லபடியாக எடுத்து திரையிடுவது ஒன்றே அவரது குறியாக இருக்கும். அதுபோல உங்கள் கவனம் முழுவதும் எழுதுவதில் மட்டும் இருக்கட்டும்’ என்றார். கடைசி அத்தியாயம் எழுத தடுமாறிக்கொண்டிருந்தபோதும் இவரது வார்த்தைகள் மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்தன. தனது பதிவில் எனது புத்தகம் பற்றிய தகவலும், எனது எழுத்து பற்றியும் எழுதியிருந்தார் ரொம்பவும் உயர்வாக – தகுதி இருக்கிறதா எனக்கு?

 

எப்படி நன்றி சொல்வது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது இவரிடமிருந்து ஒரு உதவி கேட்டு மின்னஞ்சல். ‘கனடாவிலிருந்து ஒரு ரசிகர் ஆங்கிலத்தில் டாலர் நகரம் பற்றி எழுதியிருக்கிறார். நேரமின்மை காரணமாக என்னால் அதை தமிழில் எழுத முடியவில்லை. உங்களால் முடியுமா?’ என்று. கரும்பு தின்னக் கூலியா? எனது நன்றியைத் தெரிவிக்க இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்குமா? உடனே – இல்லையில்லை – ஒருவாரம் கழித்து எழுதி கொடுத்தேன்.

 

வல்லமை இதழில் இவரது புத்தகத்திற்கு நான் எழுதிய மதிப்புரை மூன்றாவது பரிசு பெற்றது. அதையும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

 

சிலவிஷயங்களை எழுத நான் தயங்குவேன். ‘யாருக்காகவும் பயப்படாதீர்கள். தைரியமாக எழுதுங்கள்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இவரது சொற்படி எழுத ஆரம்பிக்க வேண்டும்.

 

மின்னூல்கள் என்ற ஒரு கருத்தை இவர் முன்வைத்து அதை செய்தும் காண்பித்திருக்கிறார். இதோ மூன்றாவது மின்னூல் வெளியாகி இருக்கிறது. ஈழம் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை தரவிறக்கம் செய்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதற்குள் இன்னும் இரண்டு புத்தகங்கள்.

thamizhar desam

 

கூடிய சீக்கிரம் படித்துவிடுகிறேன், ஜோதிஜி. என்னைப் பற்றிய உங்கள் நல்ல எண்ணங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!

 

மேலும் மேலும் பல சிறப்புகள் உங்களை தேடி வர வாழ்த்துகள்!

 

 

 

17 thoughts on “நான் மதிக்கும் பதிவர்

 1. ஜோதிஜியைப் பற்றிய நட்புப் பொறாமை வளர்ந்து கொண்டே இருக்கிறது. சாத்தியங்களின் எல்லைகளைக் காணாதடிக்கும் வல்லமை கொண்டவர். அவசியம் படிக்கிறேன்.

 2. வணக்கம்
  அம்மா

  கற்றோருக்கு செல்லும்மிடமெல்லாம் சிறப்புத்தான் அம்மா.அதைப்போலதான்
  தங்களுக்கு கிடைத்த வாய்ப்பும்…..

  ஜோதிஜி பற்றி தங்களின் பார்வையில் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்….மேலும் வளர எனது வாழ்த்துக்கள் ….

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

 3. வழக்கமாக நூல்களைப் படிக்கும் போது பிடித்த வரிகளை அடிக் கோடிட்டு வைப்பேன்… படித்து விட்டு உறவினர்களிடம் கொடுத்து விடுவேன்…

  இவர் நூலுக்கு பென்சிலை பலமுறை சீவினேன்…!

  நல்ல விமர்சனம் அம்மா… நன்றி…

  ஜோதிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

 4. எழுத்துலகம் மற்றும் தமிழ் இணையம் அறிமுகமாகி ஐந்து வருடங்கள் இன்னும் சில மாதங்களில் முடியப்பபோகின்றது. எழுதத் தொடங்கிய சில வாரங்களில் திருமதி துளசி கோபால் எனக்கு அறிமுகமானார். அப்போது முதல் இன்று வரையிலும் எத்தனையோ பெண் பதிவர்கள் இணையத்தில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். ஆனால் எல்லோருக்குமே ஒரு தயக்கம் இருப்பதையும் கவனித்தேன் வந்துள்ளேன். இதற்கு மேலாக ஒரு வட்டத்தை விட்டு வெளியே வராத தன்மையும், தன்னால் என்ன செய்யமுடியும் என்று யோசிக்காத அவர்களின் வளர்ச்சியற்ற நிலையையும் பார்த்துள்ளேன். ஆனால் துளசி கோபால் அனைத்தையும் மெதுமெதுவாக உடைத்தவர். தன்னால் என்ன முடியும்? தன் அளவு என்ன? என்பதையும் தாண்டி அவர் அனைவருக்கும் தேவைப்படுகின்ற புத்தகங்கள் முதல் ஆன்மீகம் சார்ந்த பலவற்றையும், ஊர்ப்பயண கட்டுரைகள் வரைக்கும் அனைத்னையும் வலைபதிவில் ஆவணமாக்கியவர். இதற்கு மேலாக புதிய பதிவர்கள் பழைய பதிவர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் ஊக்குவிக்கும் தன்மை, ஓட்டரசியல், பின்னூட்ட அரசியல், குழு அரசியல் போன்ற எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் பொதுத்தன்மையோடு கடந்த பத்தாண்டுகளாக இணையத்தில் புழங்கி வருபவர்.

 5. என்னுடைய பார்வையில் அவரைத் தவிர்த்து நீங்க இரண்டாவது கண்மணியாக இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கீங்க. இன்னமும் நீங்க பல தயக்கதோடு இருப்பது தான் உங்கள் பலவீனமாக உள்ளது. தமிழ் ஆங்கிலம் கன்னடம் மூன்று மொழியிலும் உச்சத்தைத் தொடும் அளவிற்கு உங்களிடம் உள்ள அசாத்திய திறமைகளை நான் அறிவேன். உங்கள் தொடர்பும் அன்பும் மரியாதையும் என்னைப் போன்ற அவசரகுடுக்கைகளுக்கு மிகப் பெரிய பலம்.
  என்னைப் போன்ற நெருக்கடியான தொழில் சார்ந்த நிலையிலும் தொடர்ந்து எழுதுவதே மிகப் பெரிய ஆச்சரியம் என்ற போதிலும் உங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்பும், அறிவை கடன் தரும் தன்மைக்கும் என்றென்றும் கடமைப் பட்டுள்ளேன்.

  இந்த வருடத்திற்குள் காலத்தால் மறக்க முடியாத, எவரும் மறைக்க முடியாத புத்தகம் தர, வர, என்னுடைய மனமார்ந்த பாராட்டுரைகள்.

 6. பாராட்டவும் ஒரு மனசு வேணும். இருவருக்கும் அது உள்ளது. வாழ்த்துக்கள்.

  உங்கள் தளத்தில் பதிவுகளின் வரவு மிகவும் குறைத்து விட்டது என்பது, மிக பெரும் வருத்தமாக உள்ளது, மாமி. முன்னப் போல எழுதுங்க ! 🙂

 7. ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டு வளரும் நட்பும் பாராட்டுக்குரியது.
  நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகங்கள் படிகிறேன் ரஞ்சனி.

 8. வணக்கம் அம்மா
  நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் தளம் வருகிறேன். ஜோதிஜி பற்றிய தங்கள் எண்ணங்கள் அனைத்தும் உண்மை தான். அவரது பதிவை நானும் படித்து விட்டு வந்து விடுவதுண்டு. ஆழமான எழுத்து. கடின உழைப்பாளியின் படைப்புகள் அனைத்தும் வியக்க வைக்கிறது. அவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் எனது அன்பான பாராட்டுகளும் நன்றிகளும்.
  ——–
  அவரது ஈழம் வந்தார்கள் வென்றார்கள் மின்னூலை முடிந்தால் எனக்கு அனுப்புங்கள் அம்மா. pandi29k@gmail.com

 9. அருமையான நட்பு தொடர்ந்து வளரப் பிரார்த்தனைகள். வாழ்த்துகள். மேலும் பற்பல மின்னூல்களும், அச்சுப் புத்தகங்களும் வெளிவரவும் பிரார்த்தனைகள்.

 10. பொதுவாகவே மற்றப் பதிவுகளுக்குச் செல்லும் நேரம் மிகக் குறைவு என்பதால் ஜோதிஜி அவர்களைக் குறித்து அதிகம் அறிந்திலேன். என்றாலும் இவர் மற்றப் பதிவுகளில் போடும் பின்னூட்டம் மூலம் ஓரளவு அறிந்திருந்தாலும் உங்கள் மூலமே இவரின் சிறப்புகள் தெரிய வந்தது. அதோடு உங்கள் மொழிப் புலமை பற்றி இவர் அறிந்திருப்பதும் கண்டு உங்கள் தன்னடக்கத்தில் வியந்து போகிறேன்.

 11. அமெரிக்காவில் வெளிவரும் தென்றல் மாத இதழில் ‘வலையுலகின் வளைக்கரங்கள்’ என்ற தலைப்பில் உங்களின் வலைத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் !

 12. ரஞ்சனி அம்மா! ஜோதிஜி அவர்களைப் பற்றி சரியாக சொல்லி இருக்கிறீர்கள். அவரது நுணுக்கமான பதிவுகளைக் கண்டு ஆச்சர்யம் அடைந்ததுண்டு.பதிவர் சந்திப்பில் அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.அத்துணை பாராட்டுக்களுக்கும் பொருத்தமானவர்.நீங்கள் சொல்வது போல அவரது பதிவுகளை மேலோட்டமாக படித்து கருத்திடுவது எளிதல்ல

 13. ஜோதிஜி அவர்கள் பற்றி உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். உங்களது நட்பு தொடரட்டும். இருவரின் நூல்களும் தொடர்ந்து வெளிவரட்டும். பாராட்டுகள். வாழ்த்துகள்,.

 14. நூலறிமுகங்கள்
  சிறப்பாக அமைந்திருக்கிறது…
  ஒரு பெண் படும்
  மகப்பேற்று வலி போன்றதே
  படைப்பாளி ஒருவர்
  நூலொன்றை வெளியிடும் போதும்
  சந்திக்கின்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s