Politics

அன்புள்ள அர்விந்த்!

திரு அர்விந்த் கெஜ்ரிவால் மீதான எனது நம்பிக்கையை ஒரு திறந்த மடல் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறேன். இந்தக் கடிதம் 4tamilmedia.com தளத்தில் வெளியாகியிருக்கிறது.

kejriwal

வளமான இந்தியாவை உருவாக்க…!

வணக்கம்.

உங்களை மிகவும் கவனமாகக் கவனித்து வரும் பலகோடி இந்தியர்களில் நானும் ஒருவள். அரசியல் அதிகம் தெரியாத எனக்கு உங்களின் வரவு ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. உங்கள் வரவினால் இந்திய அரசியல் நிச்சயம் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கை. புதிதாகப் பிறக்கும் குழந்தை எப்படி ஒரு குடும்பத்திற்கு ஆனந்தம், நம்பிக்கை கொடுக்குமோ அதுபோல இந்திய அரசியலில் புதிதாக பிறந்திருக்கும் குழந்தையான ஆம் ஆத்மி கட்சி பல கோடி இந்தியர்களுக்கு ஆனந்தத்தையும், புதிதான நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.

 

டெல்லி முதலமைச்சர் ஆவதற்கு முன்பே, திரு அண்ணா ஹசாரேயுடன் தலைமையில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அன்றே நீங்கள் அடையாளம் காணப்பட்டு விட்டீர்கள், என் போன்ற சாமான்ய இந்தியர்களால். உங்களது நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் தெளிவான பேச்சும், என்ன செய்ய வேண்டும் என்பதில் இருந்த உறுதியும்,  எங்களது நம்பிக்கையை அதிகப்படுத்தியது. இளைய தலைமுறையைச் சேர்ந்த வசீகரமான தலைவராக நீங்கள் இருப்பீர்கள் என்று மனதில் உறுதி பிறந்தது.

 

60 வருடங்கள் நாட்டை ஆண்டவர்களைப் பார்த்து பார்த்து, அரசியல் தலைவர்கள் என்றால் வயதானவர்கள், சொல்லியதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டு இருப்பார்கள் என்ற எங்கள் எண்ணத்தை உங்கள் ‘இளம் தலைமுறையை சேர்ந்தவர்’ என்கிற அடையாளம் உடைத்தது. இத்தனை நாட்கள் சாமான்ய இந்தியன் உங்களைப் போன்ற ஒருவருக்காகத் தான் காத்திருந்தான் என்பது போல தோன்றியது.

 

உன் நண்பனைக் காட்டு; உன்னைப்பற்றிக் கூறுகிறேன் என்பார்கள். அதேபோல ஆரம்பத்தில் உங்களுடன் கூட திரு அண்ணா ஹசாரே, காவல்துறை அதிகாரி கிரண் பேடி, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, திரு பிரஷாந்த் பூஷன் ஆகியவர்கள் இருந்தனர். இவர்களுடனான உங்களது  நட்பில் உங்கள் மேலிருந்த எங்கள் நம்பிக்கை வானளவு உயர்ந்தது.

 

யார் நீங்கள், இவ்வளவு நாட்கள் எங்கிருந்தீர்கள் என்று ஆராய முற்பட்டேன். அப்போது எனக்குக் கிடைத்தது நீங்கள் எழுதிய ஸ்வராஜ் என்கிற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘தன்னாட்சி’ என்கிற புத்தகம்.

 

இந்த புத்தகத்தின் மூலம் உங்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். 1989 ஆம் ஆண்டு ஐஐடி கரக்பூரில் இயந்திரவியலில் பட்டம் பெற்றவர்; சிறிது காலம் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரிந்து 1992 இல் இந்திய வருவாய்த்துறையில் இணை ஆணையராக இருந்தவர்; பரிவர்த்தன் என்ற அமைப்பை உருவாக்க நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு தில்லியில் சேரிகளில் வாழும் மக்களுக்கு நிறைய சேவை செய்தவர்; தகவல் அறியும் சட்டத்துக்காக பெரு முயற்சிக்காக ராமோன் மாக்சேசே விருது பெற்றவர்; இவை மட்டுமல்ல; இந்த புத்தகம் எழுதுவதற்காக பலவிடங்களுக்கு பயணம் செய்து, சோதனை முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறீர்கள். இதனால் உங்கள் மேல் நான் கொண்டிருந்த மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இன்னொரு விஷயமும் என்னை வியக்க வைத்தது. இந்த புத்தகத்தை எல்லோரும் வாங்கும் விலையில் விற்க வேண்டும் என்பதற்காக ராயல்டி கூட வேண்டாம் என்று நீங்கள் பதிப்பகத்தாரிடம் சொல்லியிருப்பது.

 

இந்தப்புத்தகத்தில் நீங்கள் சொல்லியிருப்பவை எல்லாமே நடைமுறையில் சாத்தியம் என்பது புரிந்தபின் இத்தனை வருடங்கள் வீணாகிவிட்டனவே என்று வருத்தப்பட்டோம். ஆனால் தாமதமானாலும் உங்கள் வருகை சரியான சமயத்தில் தான் நடந்திருக்கிறது என்று புரிந்தது.

 

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் எங்கள் நம்பிக்கைகள் இன்னும் வளர்ந்தன. இனி இந்தியாவுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பினோம். சாமான்ய மக்களின் கட்சி என்ற பெயரை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டோம். எங்கள் குரலாக நீங்கள் பேசுவீர்கள் என்று மேலும் மேலும் நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டோம்.

 

கட்சியை வளர்க்க சில வருடங்கள் ஆகும்; பிறகுதான் நீங்கள் தேர்தலில் நிற்பீர்கள் என்ற எதிர்பார்ப்பை முறியடித்துவிட்டு அதிரடியாக டெல்லி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றீர்கள்.

 

அரசியல் என்பது ஒரு சாக்கடை; யாரும் அதில் இறங்கி சுத்தம் செய்ய விரும்புவதில்லை என்கிற சொல்லை கையில் துடைப்பத்துடன் வந்து பொய்யாக்கிக் காட்ட முயன்றது எங்களிடைய பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் சாக்கடையை துப்புரவு செய்ய வந்த துப்புரவாளர் நீங்கள் என்று நினைத்தோம். அதுமட்டுமல்ல; பொதுவாழ்வில் நேர்மை, நாணயம் என்ற நல்ல செய்தி தாங்கி வந்திருப்பவர் நீங்கள் என்று இந்தியாவே உங்களைக் கொண்டாடியது.

 

காங்கிரஸ், பாஜகா இரண்டு கட்சியை விட்டால் வேறு வழியில்லை என்றிருந்தஎங்களுக்கு உங்கள் வரவு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. இந்திய அரசியலில் நிச்சயம் மாறுதல் கொண்டுவருவீர்கள் என்று நினைத்தோம்.  உங்களை முதலில் இந்தக்கட்சிகள் பலத்த எதிரியாக  எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் உங்களது அதிரடி வெற்றி எல்லோரையும் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வைத்துவிட்டது.

 

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்தவுடன் ஏதோ காரணத்தினால் அண்ணா உங்களிடமிருந்து விலகினார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் உங்களுடன் கூட இருந்த உங்கள் நண்பர்கள் ஒவ்வொருவராக விலக ஆரம்பித்தனர். இது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், நீங்கள் யாரைப்பற்றியும் எதுவும் கூறவில்லை. நாங்களும் உங்கள் மேல் இருந்த நம்பிக்கையில் இவற்றை அதிகம் பொருட்படுத்தவில்லை.

 

தொலைக்காட்சிகள் உங்களின் நேர்முக பேட்டிகளை மாறி மாறி ஒளிபரப்பின. கேள்விக் கணைகளால் உங்களைத் துளைத்தனர் ஒவ்வொருவரும். உங்களை எப்படியாவது மண்டி போடச் செய்துவிட வேண்டும் என்பதே அவர்களது குறியாக இருந்தது. நீங்கள் துளிக்கூட அசரவில்லை. முகத்தில் இருந்த புன்னகை மாறவில்லை. கீழே குனிந்துகொண்டோ, சூனியத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே பதில் கூறவில்லை. கேள்வி கேட்பவரின் கண்களைப் பார்த்து நேராக பதில் அளித்தீர்கள். எல்லாவிதமான கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் இருந்தது. அதுவே எங்களை வியக்க வைத்து, உங்கள் மேலிருந்த மரியாதை அதிகரித்தது.

 

பொதுவாக ‘பழுத்த மரம்தான் கல்லடி படும்’ என்பார்கள். ஆனால் உங்கள் விஷயத்தில் பழுப்பதற்கு முன்னாலேயே கல்லடிக்க காத்திருந்தார்கள். ஒருவேளை எங்கே பழுத்துவிடுவீர்களோ என்று பயந்து கல்லடித்து உங்களை வீழ்த்தப் பார்த்தார்களோ?

 

நீங்கள் டெல்லியில் உங்கள் பலத்தை நிரூபித்தது எங்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஒருவிதத்தில் சற்று கலக்கமாகவும் இருந்தது; காரணம் கூட்டணி அரசு அமைக்கும் நிலை வந்திருந்தது உங்கள் வெற்றியால். கோடிக்கணக்கான பணம் செலவழித்து நடக்கும் தேர்தலில் நிலையான அரசு வேண்டும் என்றுதான் மக்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் கூட்டணி அரசு தான் தில்லியில் அமைந்தது. அதுவும் எனக்கு சற்று குழப்பமாக இருந்தது நீங்கள் ஊழல் என்று குற்றம் சாட்டிய காங்கிரசுடனேயே கூட்டணி வைக்கிறீர்களே என்று.

 

இன்று உங்களின் ஒவ்வொரு செயலையும் கூர்ந்து பார்த்து விமரிசனம் செய்யும் ஊடகங்கள் இதேபோல ஒவ்வொரு அரசியல்வாதியையும் செய்திருந்தால் நாடு இவ்வளவு சீரழிந்திருக்காதே என்று தோன்றுகிறது. உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா என்று  இதுவரை எந்த அரசியல்வாதியையும் ஊடகங்கள் கேட்டதில்லை. ஆனால் உங்களைக் கேட்கிறார்கள்.

 

 

டெல்லி அரசு நிர்வாகத்தை கவனித்து அதை சரி செய்து, இந்தியாவிற்கே வழி காட்டியாக நீங்கள் இருந்தால் போதுமே, ஏன் அனாவசியமாக போலீசுக்கு எதிராக தர்ணா செய்தீர்கள்? ஊழல் அரசியல்வாதிகள் என்று ஒரு பட்டியல் படித்தீர்கள், தேவைதானா இது? உங்கள் கட்சிக்கு ஆதரவு கொடுத்த சிலர் உங்களிடமிருந்து விலகினார்கள். இதுவும் உங்களை வீழ்த்திவிடுமோ? என்றெல்லாம் உள்ளத்தில் பல பல கேள்விகள். ஆனால் அரசியலில் எதிரிகள் ஆடும் ஆட்டத்திற்கு நீங்களும் எதிராட்டம் ஆடத்தானே வேண்டும்?

 

இன்றைய நிலவரப்படி ஜன்லோக்பால் கொண்டுவரப்பட வேண்டும்; இல்லையென்றால் பதவி விலகுவேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். என்ன ஆகுமோ தெரியாது. ஆனால் ஒன்று நீங்கள் முன் வைத்த காலை பின் வாங்க மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

 

அரசியலில் ஒரு கட்சி ஆரம்பித்து நடத்துவது என்பது எத்தனை கடினம் என்று எங்களுக்குத் தெரியும். அரசு இயந்திரத்தில் பதவி கிடைக்காத காரணத்தால் மட்டும் தாய்கட்சியிலிருந்து விலகி வேறு கட்சி ஆரம்பிக்கும் பலரையும் பார்த்துவிட்டோம். தொண்டர்கள் செய்யும் அக்கிரமங்களை தட்டிக் கேட்காத தலைவர்களையும் பார்த்துவிட்டோம். இப்போது நடக்கும் நிகழ்ச்சிகள் உங்களை வீழ்த்தலாம். ஆனால் ஆம் ஆத்மி கட்சியை அடியோடு அழிக்க முடியாது. என்னைபோல பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்.

 

மற்ற கட்சிகளிடம் இல்லாத கை சுத்தம் உங்களிடம் இருக்கிறது. அதை இந்திய மக்கள் புரிந்துகொள்ள நேரம் ஆகலாம். வரும் தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஆதரவு நிறைய இருக்கும் என்று தோன்றினாலும், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இழுபறிநிலை பாராளுமன்றத் தேர்தலில் ஏற்படக்கூடாது என்று விரும்புகிறேன். மத்தியில் நிச்சயம் ஒரு நிலையான அரசு தேவை. கூட்டணி அரசியல் உங்களுக்கும் தெரிந்திருக்கும். இப்போதே அதை அனுபவித்துக்கொண்டு தானே இருக்கிறீர்கள்!

 

பல கோடி இந்தியர்களின் சார்பில் நான் சொல்ல விரும்புவது இதுதான்:

 

2014 தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் 2019 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று நாட்டை ஆளும் பொறுப்பு உங்களுக்குக் கிடைக்கட்டும். இந்த ஐந்து வருடங்களை நாடு முழுதும் விழிப்புணர்வு கொண்டுவர பயன்படுத்திக் கொள்ளுங்கள். கட்சியைப் பலப்படுத்துங்கள். இதுவரை எந்தக் கட்சிக்கும் இந்த அளவு வரவேற்பு இருந்ததில்லை. என்னைப்போன்ற பல கோடி இந்தியர்கள் ‘உங்களால் முடியும்’ என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.

 

தன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க (உங்கள் புத்தக தலைப்பு) என்பது உங்கள் தேர்தல் கோஷமாக இருக்கட்டும். நாங்களும் உங்கள் கைகளை பலப்படுத்த தயாராக இருக்கிறோம்.

 

இப்படிக்கு

அன்புடன்

பல கோடி இந்தியர்களின் பிரதிநிதி

Advertisements

8 thoughts on “அன்புள்ள அர்விந்த்!

 1. நன்றாக எழுதி உள்ளீர்கள் அம்மா… பாராட்டுக்கள்… (சற்று முன் முக நூலிலும் இணைப்பை பார்த்தேன்) நம்பிக்கையை காப்பாற்றினால் சரி…

 2. பாராட்டுக்கள் ரஞ்சனி பகிர்வு மிக அருமை நம்பிக்கையில்தான் உலகம் சுழன்றுகொண்டுள்ளது நாமும் நம்புவோம் நல்லதே நடக்கும் என்று நமது நம்பிக்கை வீண் போகாமல் இருந்தால் சரி

 3. நான் உங்கள் கருத்திலிருந்து சற்றே மாறுபடுகிறேன் ரஞ்சனி.
  ஆரம்பிக்கும் போது நிறைய நம்பிக்கையை மக்களிடம் வளர்த்தார் . ஆனால் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின்னர், அந்த நம்பிக்கைகளைக் காபாற்றத் தவறி விட்டார் என்றே தோன்றுகிறது. தர்ணா செய்தது, அதுவும் குடியரசு தினத்தைப் பற்றிய அவருடைய கருத்து எளிதில் ஜீரணம் செய்ய முடியாத ஒன்று. அவர் மட்டுமே உதாரணப் புருஷர் என்கிற பிம்பத்தை உருவாக்க முயன்றால் அதில் அவர் தோற்றுப் போவது உறுதி. சட்டத்தின் பார்வையில் அவர் அமைச்சர்களும் அடக்கம் என்பதை யார் அவருக்குத் தெளிவு படுத்துவார்கள் .. அவர் ஆலோசகர் ஒருவர், காஷ்மீர் பற்றிக் கூறியுள்ள கருத்து சர்ச்சைக்குரியது. மேலும் அவருடைய அமைச்சர் ஒருவர் தென்னிந்திய நர்ஸ்களைப் பற்றிக் கூறியுள்ள கருத்து ஊடகங்களில் பெரும் விவாதத்திற்குள்ளானது. அவர் கட்சிக்கு வந்திருக்கும் வெளிநாட்டு நன்கொடைகளைப் பற்றிய கருத்துக்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

  மற்ற கட்சிகளில் இந்த மாதிரி சங்கடங்கள் இல்லையா என்ன? என்று கேட்கலாம். ஏன் அவர் செய்வதை மட்டுமே குற்றம் கண்டுபிடிக்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? அவர் தன்னை அப்பழுக்கற்ற மனிதர் என்று சொல்லிக் கொண்டதோடு மற்றவர்களை நோக்கி சுட்டு விரல் நீட்டுகிறார். மற்ற நான்கு விரல்களும் அவரைப பார்த்துக் கொண்டிருப்பதை மறந்து விட்டார் போலும்.

  இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே! தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

 4. வணக்கம்
  அம்மா.

  எல்லாம் நல்லபடியாக நடந்தால் நல்லவைதான் நடக்கும்… அரசியல் என்பது ஒரு நிகழ்தகவு போன்றது…எதிர்வு கூற முடியாது அனுகூலமும் உண்டு
  பிரதி கூலமும் உண்டு…. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 5. ராஜலக்ஷ்மியும் என் கருத்தையே கொண்டிருக்கிறார். இவர் வேலையில் இருந்தபோதும் ஒழுங்காக இல்லை என்றே சொல்கின்றனர். விடுப்பில் படிக்கவென வேலையிலிருந்து சென்றவர் பின்னர் விடுப்பு முடிந்து சில நாட்களில் வேலையை விட்டார். விடுப்போடு கூடிய சம்பளத்தைத் திரும்பக் கட்ட வேண்டும் என துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தப்போ இவர் நடந்து கொண்டவிதம் சரியாக இல்லை என்பதோடு மேலும் மேலும் அழுத்தம் வரவே பிரதமர் பெயரில் செக் எழுதிக் கொடுத்தார். தனக்குத் தனி வீடு வேண்டாம், பெரிய வீடு வேண்டாம்னு வெளியே சொல்லிட்டு நாலு படுக்கை அறை கொண்ட பெரிய பங்களாவுக்கு விண்ணப்பித்திருந்தார். எல்லாவற்றையும் விட மோசமான ஒன்று நடுத்தெருவில் சட்டசபையை நடத்தி அதன் கண்ணியம், கட்டுக்கோப்பைக் குலைத்தது. தேசத்தின் முக்கியநாளான குடியரசு தினத்தை நடத்த விடாமல் தடுப்பேன் என்றது. இப்போப் பாருங்க ஜன்லோக்பாலுக்காக அமர்க்களம் பண்ணிட்டு இருக்கார். ஒழுங்கா ஒரு நாள் ஒரு ஃபைலைப் பார்த்து முடிச்சிருப்பாரா? சந்தேகமே! விளம்பரப் பிரியர் என்பது புரிகிறது. இவரைத் தூக்கிவிட்ட மீடியாக்காரங்களுக்குத் தான் இப்போ என்ன செய்யறதுனு புரியலை! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s