Uncategorized

வந்தார் விவேகானந்தர்!

vivekanandar - firstbook

எத்தனை நாட்களாய் இந்த நாளுக்காய் தவமிருந்திருப்பேன்! காத்திருத்தல் என்பதன் உண்மையான பொருள் தெரிந்தது என்று சொல்லலாம்.

எந்த மொழியில் எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் அவற்றை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாட்களாக உண்டு. யாரைப் பிடிப்பது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை. திரு சொக்கன் அவர்களைக் கேட்டேன். அவர் திரு ஜவர்லால்-ஐக் கை காட்டினார். போனவருடம் திரு ஜவர்லால் மொழிபெயர்ப்பு செய்திருந்த கெஜ்ரிவால் எழுதிய தன்னாட்சி புத்தகம் வாங்கியிருந்தேன். அவரிடம் கேட்கலாம் என்று அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். கிழக்குப்பதிப்பகத்தை அணுகலாம் என்று சொன்னார். கிழக்குப்பதிப்பகத்திற்கு தொலைபேசினேன். அகப்பட்டார் திரு மருதன்.

மொழிபெயர்ப்பு பற்றி கேட்டவுடன் ஏதாவது புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்ய ஆசைப்படுகிறீர்களா என்று கேட்டார். நான் சொன்ன இரண்டு புத்தகங்களுக்கும் ‘ஊஹூம்’ சொல்லிவிட்டார். ‘நீங்கள் ப்ளாகில் எழுதிய (சில) வற்றை அனுப்புங்கள்’ என்றார். பிறகு ‘எங்களது ‘ஆழம்’ பத்திரிகையில் எழுதுங்கள். பிறகு பார்க்கலாம்’ என்றார். முதலில் எழுதியது பெண்கள் தினம் பற்றியது. அவர் சொன்னது மார்ச் 6 ஆம் தேதி. மார்ச் 8 பெண்கள் தினம். அவசரமா எழுதி அனுப்பினேன் உடனே வேண்டும் போலிருக்கிறது என்று. ஆழம் ஒரு மாதப் பத்திரிகை; நான் எழுதுவது அடுத்த மாதம் வரும் என்பது தெரியாமல்! எப்படியெல்லாம் கற்றுக்கொள்ளுகிறேன்! அடுத்தாற்போல ஒன்பில்லியன் ரைஸ் என்பது பற்றி எழுதச்சொன்னார். இந்த முறை முதலிலேயே காலக்கெடு பற்றிக் கேட்டுக்கொண்டுவிட்டேன்.

நிதானமாக எல்லாத் தகவல்களையும் சேகரித்து எழுதினேன். நன்றாக இருக்கிறது என்றார். அப்பாடா! பிறகு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாய்ப்புக் கொடுத்தார். இந்தமாதம் வரை எழுதி இருக்கிறேன். சென்ற செப்டம்பர் மாதம் ‘சென்னை வருகிறேன். உங்களை சந்திக்க முடியுமா?’ என்று கேட்டபோது ‘நிச்சயம் வாருங்கள்’ என்றார். செப்டம்பர் 10 ஆம் தேதி சந்தித்தேன். நன்றி சொல்லப் போனவளுக்கு  இந்த புத்தகம் எழுதும் வாய்ப்புக் கொடுத்தார்.   இராமகிருஷ்ணமடத்திலிருந்து சுவாமிஜியின் வரலாற்றுப் புத்தகங்கள் இரண்டு வாங்கிக்கொண்டு பத்து தலைப்புகள் கொடுத்து ஒரு முன்னோட்டம் எழுதி அனுப்பினேன். அப்போதே சொன்னார்: ‘உங்களுக்கு அதிக நேரம் இல்லை; நவம்பர் இறுதிக்குள் முடித்து அனுப்பவேண்டும்’ என்றார். நான் எழுதிய முன்னோட்டத்தைப் படித்து பச்சை விளக்கு காட்டியபோது அக்டோபர் வந்துவிட்டது. நவராத்திரி ஆரம்பம்.

கிடைத்த நேரத்தில் எல்லாம் புத்தகமும் பென்சிலும் கையுமாக விவேகானந்தரை மெல்ல மெல்ல உள் வாங்க ஆரம்பித்தேன். என்னவென்று சொல்ல? படிக்கப்படிக்க சொல்ல முடியாத உணர்ச்சிகள். என்ன மனிதர்! எதற்காக இத்தனை கஷ்டப்பட வேண்டும்? கடவுளை தேடி அலைந்து கடைசியில் மனிதனில் மனிதத்தைக் கண்டு அதுவே தெய்வம் என்கிறாரே! எல்லா மனிதர்களின் மேலும் எல்லையில்லா கருணை. துறவறம் என்பது உன் சொந்த முக்தி மட்டுமல்ல; சக மனிதனிடம் கருணை வை என்கிறாரே! துறவு என்று சொல்லி கதவை சாத்திக் கொள்ளாதே; வெளியே வா. சமுதாயத்திற்கு சேவை செய் என்கிறாரே! துறவறத்திற்கு ஒரு புது அர்த்தம் கொடுத்து, மனித சக்தியின் மேல் நம்பிக்கை வைக்கச்சொல்லி, கீதை படிக்கும் நேரத்தில் கால்பந்து விளையாடு, உடல் வலிமை உள்ளவலிமையைப் பெருக்கும் என்கிறாரே!

அதைவிட ஆச்சரியம் இன்னொன்று: இந்தியாவிற்கே இந்தியாவை காட்டிக் கொடுத்தாரே, அது! இந்தியா என்றால் வறுமையும், பஞ்சமும், பெண் குழந்தைகளைக் கொல்லுவதும், பெண்கள் கொடுமைக்கு உள்ளாவதும் மட்டுமே என்று நினைத்திருந்த மேலைநாடுகளின் எண்ணத்தை மாற்றி, ஆன்மீகச் செல்வம் செழிக்கும் நாடு இந்தியா என்ற கருத்தை நிலைநாட்ட தன்னந்தனியாக மேலைநாடுகளுக்குச் சென்றாரே, அவருடன் கூடப் போனது யார்? எந்த இந்து சமய அமைப்பின் சார்பில் அவர் மேலைநாடுகளுக்குச் சென்றார்? சர்வமத மகாசபையில் எல்லோரும் முன்கூட்டியே தயார் செய்துகொண்டு வந்து பேசியபோது, முன்தயாரிப்பு எதுவும் இல்லாமல், ‘அமெரிக்க சகோதர சகோதரிகளே’ என்று பேச ஆரம்பித்து அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்தாரே, அவரை வழி நடத்திய அற்புத ஆற்றல் எது? 150 ஆண்டுகளுக்குப் பின்னும் நாம் அவரை தெய்வத் திருமகனாக நினைக்கக் காரணம் என்ன? அவருடனேயே, அவர் வாழ்ந்த காலத்திலேயே இருப்பது போல இரவும் பகலும் அவர் சிந்தனையே!

நவராத்திரி ஆயிற்று தீபாவளி; தொடர்ந்து கார்த்திகை! நவம்பர் இறுதிக்குள் முடிக்க முடியுமா? கடைசி அத்தியாயத்தை எப்படி முடிப்பது என்று ஒரு குழப்பம். நெருங்கிய நண்பர் – பதிவர் வழிகாட்டினார். நான் நினைத்ததும் அவர் சொன்னதும் சரியாக இருந்தது. சுவாமிஜி அன்று கொடுத்த உத்வேகம் எனக்குள்ளும் புகுந்து புத்தகத்தை முடித்து அனுப்பியும் விட்டேன். நம்பமாட்டீர்கள், அனுப்பிய அன்று உறக்கமே வரவில்லை!

இதோ இப்போது புத்தக வடிவில் வந்தே விட்டார் விவேகானந்தர்! இந்த சந்தோஷச் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக மிக சந்தோஷமடைகிறேன். திரு மருதனுக்கும், கிழக்குப் பதிப்பகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சென்னை புத்தகக்கண்காட்சியில் கிழக்குப்பதிப்பகம் ஸ்டாலில் கிடைக்கும் இந்த புத்தகம்.

Advertisements

55 thoughts on “வந்தார் விவேகானந்தர்!

 1. நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் வீரத்துறவி விவேகானந்தர் பற்றிய மொழிபெயர்ப்பு ஆக்கம் சிறப்பாக வெளியிட்டதற்கு வாழ்த்துகள்..
  பாராட்டுக்கள்..!

  1. வாங்க இராஜராஜேஸ்வரி!
   இது மொழிபெயர்ப்பு அல்ல; அவரது வாழ்க்கை வரலாறு.
   வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

 2. எண்ணி எண்ணி வியக்கவைக்கும் விவேகானந்தரின் வாழ்க்கையை புத்தக வடிவில் கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்!

 3. மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.மேலும் மேலும் தொடர்ந்து பல நூல்கள் எழுத இதுவே ஒரு முன்னோடியாக அமையட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.

  எப்பவோ என்னிடம் மட்டும் இரகசியமாக இதைப்பற்றிச் சொன்னீர்கள். வெற்றிக்கனியை எட்டிப்பிடித்து விட்டதாக இன்று காலையில் எனக்கு முதல் தகவல் கொடுத்திருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. வெற்றி மேல் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.

  அன்புடன் VGK

 4. மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்து. பாராட்டுக்கள்.மேலும் தொடர்ந்து பல நூல்கள் எழுத நல்வாழ்த்து பகிர்வுக்கு நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

 5. நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சிங்க. நீங்கள் விரும்பியது நடந்தேவிட்டது, அதன் பின்னால் உள்ள உழைப்பும் புரிகிறது. மேலும்மேலும் பல புத்தகங்களுக்கு ஆசிரியராக வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

  1. வாங்க சித்ரா!
   ஆமாம் எனது கனவு நிறைவேறி விட்டது. ஆனால் புது புது கனவுகள் காண ஆரம்பித்துவிட்டேனே! உங்கள் அருமையான வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

 6. அருமை அம்மா!! அருமையான துவக்கம்! நேற்று உங்களுடன் அளவளாவியதில் மிக்க மகிழ்ச்சி.. புத்தகம் பல பிரதிகள் விற்று சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை..

  1. வாங்க ஆவி!
   எனக்கும் உங்களுடன் பேசியதில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் புத்தகமும் வெற்றி பெறட்டும்.
   வருகைக்கும் உற்சாகமான கருத்துரைக்கும் நன்றி!

  1. வாங்க ஸ்கூல்பையன்!
   உங்கள் செய்தி இனிக்கிறது! படித்துவிட்டு விமரிசனமும் எழுதுங்கள்.
   வாழ்த்துக்களுக்கு நன்றி!

 7. விவேகானந்தரின் ஆத்ம ரசிகனில்லை நான். எனினும் அவரது சிந்தனைகள் பல பிடிக்கும்.

  புத்தகமாக நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தாக வேண்டும். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  1. வாங்க துரை!
   விவேகானந்தரே என்னை யாருக்கும் பிடிக்க வேண்டாம். என் சிந்தனைகள் தாக்கத்தை ஏற்படுத்தினால் போதும் என்றுதான் சொல்லுகிறார்.
   இப்போது படியுங்கள் ரசிகனாகிவிடுவீர்கள்!
   பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

 8. எனக்கு மிக ஸந்தோஷம். புத்தகத்தின் அட்டையும்,ரஞ்ஜனி நாராயணன் என்ற பெயரும் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. .உன்னுடைய நடை,பொருள் பொதிந்த ,அர்த்தமுள்ள வாழ்க்கை வரலாறு எவ்வளவு தீவிரமாக படிக்க இயலும் என்பது எனக்குத் தெரியும்.. உன் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். வாழ்த்துகள். அன்புடன்

 9. நீண்ட நாட்களின் உழைப்பு புத்தகமாக வெளி வந்தது பற்றி மிகவும் சந்தோஷம் ரஞ்சனி இன்று விவேகானந்தரின் பிறந்த நாள் மிகவும் மகிழ்ச்சி பாராட்டுக்கள் இது போல் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்

 10. இந்த எழுத்து நடை மிக சிறப்பாக உள்ளது. வரிகளில் உள்ள மறைபொருள் கண்டு மனதிற்குள் புன்னகை. இன்று தான் உங்கள் உண்மையான பிறந்ததினம். வாழ்த்துகள்.

 11. மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா! எவ்வளவு அயராத உழைப்பாளி நீங்கள்..உங்களை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது! எந்த ஒரு பதிவர் தளத்திலும் உங்கள் பின்னூட்டம் இல்லாமல் இருந்ததில்லை. எல்லோரையும் உங்களால் முடிந்த வரை ஊக்குவிக்கிறீர்கள்.. உங்களிடம் நான் கற்று கொண்டது ஏராளம்.. இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும். அன்று ‘யாரு சார் இவரு’ பதிவு பார்த்தே வியந்து போனேன்! உங்கள் புத்தகம் கண்டிப்பாக மிக அழகாக வெளி வந்திருக்கும் அதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.. என்றாவது ஒரு நாள் படித்து பார்த்து விட்டு என் கருத்துக்களை நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன் அம்மா 🙂

  1. வாங்க மஹா!
   நடுவில் சற்று உடல்நலம் சரியில்லாததால் உடனே பதிலளிக்க முடியவில்லை.
   படித்து விட்டு நிச்சயம் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
   நன்றி!

 12. வணக்கம் அம்மா
  மிக அருமையான பணி. தங்களுக்கு வாழ்த்து கூற வயதில்லை வணங்குகிறேன். தங்கள் முயற்சி வெற்றியடைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி. தொடருங்கள் அம்மா.
  ———-
  தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது அன்பான உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

  1. வாங்க பாண்டியன்!
   உடல்நலகுறைவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
   உங்களிப்போன்றவர்களின் அன்பான கருத்துக்கள் எனக்கு மிகவும் உற்சாகம் கொடுக்கின்றன. தொடரும் உங்கள் வருகைக்கு மனமார்ந்த நன்றி!

 13. சாதனை செய்ததற்கு மன‌ம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ரஞ்சனி நாராயணன்!

  நம் எழுத்து ஒரு சிறுகதையாகவோ, அல்லது தொகுப்பாகவோ உருவாவதற்குள் தூக்கம், பசியின்றி ஆர்வமும் ஆயிரம் சிந்தனைகளும் நிறைந்த ஒரு தவமாய் ஒரு பிரசவ வலியாய் மனம் அனுபவிப்பதை நான் உண‌ர்ந்திருக்கிறேன். அதே உணர்வுகளில் நீங்களும் மூழ்கி இன்று மனம் நிறைந்து விட்டீர்கள்!எழுத்துக்குழந்தை என்ப்து ஒரு பொக்கிஷம் மாதிரி! இனி நிறைய பொக்கிஷங்கள் உங்கள் உணர்வுகளில் உண்டாகி வான்புகழ் பெறட்டும்!!

  1. வாங்க மனோ!
   மிக மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துக்களை! மறுபடி மறுபடி உங்கள் கருத்துக்களை படித்துக் கொண்டே இருந்தேன். இன்னொரு எழுத்தாளரால் மட்டுமே இது போன்ற உணர்வுகளை அழகான சொற்களால் வெளிப்படுத்த முடியும்.
   அந்த ஒன்றரை மாதங்கள் நான் பட்ட இன்ப துன்பங்களை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
   இரவு பகல் பாராமல் இந்தப் புத்தகத்தை உருவாக்கி, அதை அனுப்பிய அன்று இரவு என்னால் தூங்கவே முடியவில்லை! அதுவும் விவேகானந்தரை பற்றி எழுதுவது என்பது சுலபமானதாக இருக்கவில்லை. அதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேரும் அளவிற்கு ஆகிவிட்டது!

   உங்களது வாழ்த்துக்களால் மனம் நிரம்பி வழிகிறது, மனோ!
   மனமார்ந்த உணர்வுபூர்வமான வாழ்த்துக்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை.
   இன்னொருமுறை நன்றி, மனோ!

  1. வாங்க வெங்கட்!
   நீங்கள் என் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. புத்தகத்தைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். உடல்நலகுறைவால் இந்தத் தாமதமான பதில்.

 14. உங்கள் எழுத்தில் எல்லா வகையான வாசகர்களையும் ரசிக்க வைக்கக்கூடிய ஜனரஞ்சகத்தன்மை இருக்கிறது. நிச்சயம் நீங்கள் பெரிய உயரத்திற்கு போவீர்கள். முதல் புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்!

 15. வாழ்த்துகள்.

  உடனடியாக மறுமொழி இட இயலவில்லை. பொறுத்தருள்க.
  உங்களின் முயற்சி வியக்க வைக்கிறது. எழுதிய வேகம் அதைவிட ஆச்சர்யம்.

  புத்தகம் குறித்த தகவல்களை (விலை) குறிப்பிடவும்.

  புத்தகத்தில் முன்னுரை எழுதியிருப்பின் அதை இங்கேயும் வெளியிடலாமே?

  நன்றி.

 16. 2014 தொடங்கியதில் இருந்து 20 நாட்கள் வலைப பக்கம் வர முடியவில்லை.அதனால் இந்த தகவல் அறிய வாய்ப்பில்லாமல் போனது. நிச்சயம் வாங்கி விடுவேன்.
  நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் ரஞ்சனி அம்மா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s