நிம்மதி சூழ்க!

 

நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க

சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க

நீரில் மிதந்திடும் கண்களும் காய்க

நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

 

ஜனனமும் பூமியில் புதியது இல்லை

மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை

இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை

இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

 

பாசம் உலாவிய கண்களும் எங்கே?

பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?

தேசம் அளாவிய கால்களும் எங்கே?

தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே?

 

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக

மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க

எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக

எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

 

பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை

இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை

நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை

மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

 

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை

தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை

நதி மழை போன்றதே விதியென்று கண்டும்

மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன!

 

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்

மரணத்தினால் சில சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்

விதை ஒன்று வீழ்ந்திட செடி வந்து சேரும்

 

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்

யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்

நித்திரை போவது நியதி என்றாலும்

யாத்திரை என்பது தொடர் கதையாகும்

 

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்

சூரிய கீற்றோளி தோன்றிடும் போதும்

மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்

மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

 

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க்க!

தூயவர் கண்ணொளி சூரியர் சேர்க!

பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!

போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

கவிஞர் வைரமுத்து 

 

மரணம் என்பது என்ன? 

17 thoughts on “நிம்மதி சூழ்க!

 1. இந்த பாடல் திருப்பூர் மின்மயானத்திற்க்காக எழுதியது இன்று பல ஊர்களிலும்
  மின்மயானத் தில் ஒளிபரப்பும் போது அனைவரும் மனமுருகி
  அஞ்சலி செலுத்துகிறார்கள் .எத்தனை பெரிய மனிதர்களும் ஒரு கணத்தில் பற்றி
  எரிவதை பார்க்கும் போது என்ன சம்பாதித்து என்ன எத்தனை உறவு இருந்தென்ன என்று
  மனம் தடுமாறுவது நிஜம் ….

 2. அருமை ரஞ்சனி அம்மா. நிலையாமையை எவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார்.வைரமுத்து! அவர் நாத்திகர் என்பதை நம்ப முடியவில்லை. லிங்காஷ்டகத்தின் மெட்டில் பாடியவரின் குரலில்தான் எவ்வளவு இனிமை .
  கவிதை எழுதிய பின் மேட்டமைக்கப் பட்டதா? அல்லது மெட்டுக்காக எழுதியதா? விவரங்கள் தெரிந்தால் நன்றாக இருக்கும். எப்படி இருப்பினும் வைரமுத்துவின் சிறப்பான படைப்புகளில் ஒன்றாக கொள்ளலாம்

 3. தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்

  சூரிய கீற்றோளி தோன்றிடும் போதும்

  மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்

  மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

  வைரமுத்துவின் வைர வரிகள்..!

 4. அருமையான பகிர்வு. சமீபத்தில் அவர் தந்தை காலமானபோது ஏற்பட்ட உணர்வைப் பற்றிக் கூடச் சொல்லியிருந்தார். இதற்கு என்று மைக்செட் காரர்கள் பாடல் போடும்போது பழைய பாடல்கள் மட்டுமே இருந்தன என்றும் இவர் அந்த மாதிரிப் பாடல்கள் ஒன்றும் அதுவரை எழுதியிருக்கவில்லை என்றும் உணர்ந்ததாகச் சொல்லியிருந்த நினைவு.

 5. இந்தப் பாடலை இப்போதுதான் கேட்கிறேன்.கேட்டபிறகு எதுவும் பேசத் தோணவில்லை,அமைதிதான்.

  வீடியோவைக் ‘க்ளிக்’காமல் பாடலைத்தான் முதலில் படித்தேன்.நீங்கள் எழுதியது வித்தியாசமாக இருக்கிறது என்றே நினைத்தேன்.கடைசியில்தான் வைரமுத்துவுடையது எனத் தெரிந்தது.யார் எழுதினால் என்ன, உண்மை இதுதானே.

 6. எனது மனதை ஊடுருவிய பாடல்! பாடலை பலரும் படிக்க பகிர்ந்தமைக்கு நன்றி! நானும் இந்த பாடலோடு சென்ற ஞாயிறு மறைந்த எங்கள் வீட்டு ஜாக்கியின் நினைவுகளோடு ஒரு பதிவினை எழுதியுள்ளேன்.

 7. உண்மையை ஜீரணிப்பது கொஞ்சமல்ல நிறையவே கஷ்டம் என்பது இந்தப் பாட்டைக் கேட்டதும் தோன்றுகிறது பாட்டைக்கேட்ட பின் கொஞ்ச நேரம் மனது ரொம்ப வெறுமையாக இருந்தது என்பது தான் உண்மை நல்ல பதிவு

 8. நீங்க தான் எழுதினீங்கனு நினைச்சேன். நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி.

 9. உலகத்தின் ஜனன மரணத்தை எவ்வளவு எளிமையாகப் புரியும்படி எழுதிய கவிதை. மிகுதி என்ன இருக்கிறது?
  ஒருகாலத்தில் எழுத்து படிப்பறிவில்லாத சற்று முதிய பெண்கள், உறவினர்களின் பிரிவின் ஸமயம் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம்
  கவிதைபோலப் பாடி ஒப்பாரி வைப்பார்கள்.
  அர்த்தமுள்ளதாக இருக்கும். மனதை உருக்கும்.
  சில வகுப்பினரிடையே பணக்கார முதியவர்களின் இறப்பின் போது, ஒப்பாரி வைக்கக் கூட பணம் கொடுத்து பெண்களை கூட்டி வருவார்கள். இதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது.
  இது கவிஞரின் பாட்டு. மேலான முறையில் மனதில்ப் பதியும்படி எழுதியிருக்கிறார்.
  தத்துவங்கள் மனதில் பதிகிறது. உண்மை உறைக்கிறது. காயமே இது பொய்யடா, காற்றடைத்தப் பையடா. ஞாபகம் வருகிரது.
  கவிதை மன்னன் கவிதை. உங்கள் பதிவில் வெளியிட்டு இன்னும் பலருக்குப் படிக்க உதவி செய்ததற்கு நன்றி. அன்புடன்

 10. தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
  சூரிய கீற்றோளி தோன்றிடும் போதும்
  மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
  மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்//
  இந்த வரிகளை படிக்கும் போது இறைவனிடம் சென்ற என் நெருங்கிய சொந்தங்கள் தென்றலாய் வந்து என் தலையை வருடி செல்வது போன்ற உணர்வு.
  அருமையான கவிதை பகிர்வு.
  நன்றி.

 11. நிலையாமையை இதைவிட சிறப்பாக கூற முடியுமா என்பது தெரியவில்லை. வைரமுத்துவின் வைர வரிகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s