சீனுவிடம் ஒரு மன்னிப்பு; ஒரு நன்றி!

செப்டம்பர் ஒன்றாம் தேதி கோயம்பேடுவில் உறவினரின் திருமணம். அன்றுதான் சென்னையில் பதிவர் சந்திப்பும். ரயிலிலேயே திருமதி ருக்மிணி சேஷசாயியை சந்தித்துப் பேசினேன்; பேசினோம்; பேசினோம்; பேசிக் கொண்டே இருக்கையில் சென்னை வந்தே விட்டது! இத்தனை சீக்கிரம் சென்னை வந்ததேயில்லை!

திருமணம் முடிந்து சந்திப்புக்குப் போகமுடியுமா என்று கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. என் உறவினரிடம் (திரும்ப கல்யாண மண்டபத்திற்கே வருவதாக) சொல்லிவிட்டு கிளம்பும் போதே மதியம் ஒன்றரை மணி. ஆட்டோவில் ஏறி கமலா தியேட்டர் என்று சொல்லியதும் அவர் 120/-  என்றார். ஓ! பக்கம்தான் போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன். கமலா  தியேட்டரின் எதிர்பக்கத்தில் வந்துவிட்டேன்.

அங்கிருந்து திரு சீனுவிற்கு தொலைபேசினேன். கொஞ்சம் முன்னால் வாருங்கள் என்றார். வந்தவுடன் பதிவர் திருவிழா பேனர் கண்ணில் பட்டது. ‘கொஞ்சம் முன்னால் போய் ‘U’ திருப்பம் திரும்புங்கள் என்றேன் ஆட்டோ டிரைவரிடம். அமர்க்களமாக இருந்த பேனர்களைப் பார்த்து டிரைவர் ‘என்ன விசேஷம்?’ என்றார். வாய்ப்பு கிடைத்தால் விடுவேனா? அந்த ஒரு ‘U’ திருப்பத்திற்குள் எவ்வளவு சொல்ல முடியுமோ சொல்லிவிட்டேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ‘ஓ! நீங்கள் எழுத்தாளரா?’ என்றார். ‘வலை…’ என்று ஆரம்பிப்பதற்குள் சீனு வாசலுக்கு வந்துவிட்டார். நானும் ஆட்டோவிலிருந்து இறங்கினேன். ‘சுத்தி வந்ததற்கு இன்னும் பத்து ரூவா போட்டுக் கொடுங்கள்’ என்றார் ஆ. டி. கொடுத்துவிட்டு உள்ளே போனேன்.

தம்பதி சமேதராக திரு வெங்கட் வரவேற்றார். திருமதி ஆதி, ரோஷ்ணி குட்டி ஆகியோருடன் பேசியவாறே உள்ளே வந்தேன். திரு ரூபக் ராம் வந்து ஒரு புன்னகையைத் தந்தார். திரு மின்னல் பால கணேஷ் தனது மின்னல் புன்னகையுடன் ‘வாங்கம்மா, சாப்பிட்டீங்களா?’ என்றார். திரு சித்தூர் முருகேசன் வந்து தனது புத்தகத்தைக் கொடுத்துவிட்டு சட்டென்று மறைந்துவிட்டார். திரு ஆர்.எஸ். சரவணன் வந்து ‘உள்ளே வாங்கம்மா’ என்று அரங்கினுள் அழைத்துப் போனார். வெளியிலேயே திரு இராமானுசம், திரு பழனி கந்தாசாமி ஆகியோர் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம் குசலம் விசாரித்துவிட்டு, பேசிக் கொண்டிருக்கையில் திரு கோவை ஆவி வந்து ஒரு sweet ஸ்மைல் கொடுத்தார். திருமதி ராஜி (காணாமல் போன கனவுகள்) வந்து வரவேற்றார்.

அடுத்து சேட்டைக்காரன் வந்தார். அவருக்கு புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக் கூறினேன். திரு சங்கவி வந்து அறிமுகம் செய்து கொண்டார். எல்லோருடைய புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன். திரு விஜயன் துரை வந்தார். இவரை போன பதிவர் சந்திப்பிலேயே பார்த்திருந்தேன். ‘என்ன விஜயன்! ரொம்பவும் இளைத்து விட்டீர்களே?’ என்றேன். கூட இருந்த பால கணேஷ் ‘நீங்க வேற! அவன் எப்பவும் இப்படித்தாம்மா’ என்றார். ச்சே! என்னைப் பார்த்து யாரும் இப்படிச் சொல்ல மாட்டார்களா? என்று நினைத்துக் கொண்டேன். என்னைப் பார்த்து வேறுவிதமாக சொல்வார்கள்! (அம்மா வந்தாங்கன்னாலே சபை நிறைஞ்சுடும்’)

திரு பாலகணேஷிடம் கேட்டேன்: ’சேட்டைக்காரருக்கு உடல்நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டேனே, இப்போது எப்படி இருக்கிறார்?’ என்று. ‘உண்மைதாம்மா, மனதாலும் உடலாலும் ரொம்பவும் நொந்து போயிருந்தார். அவருக்கு வேண்டிய அளவு ஆறுதல் சொல்லி எழுப்பி உட்கார வைத்திருக்கிறேன்’, என்றார். இப்படி ஒரு நண்பர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!

உள்ளே போனேன். கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்த திரு மயிலனை நலமா என்று விசாரித்தேன். அவருக்குப் பக்கத்தில் திருமதி அமுதா கிருஷ்ணா உட்கார்ந்திருந்தார். அவருடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். திருமதி ஆதி வெங்கட் வந்து பக்கத்தில் அமர்ந்தார். அவருடன் கொஞ்சம் அரட்டை. ரோஷ்ணி குட்டி, அம்மா, அப்பாவைக் கொண்டு நல்ல உயரம் – இப்பவே. ‘புகைப்படத்தில் பார்ப்பதைவிட உங்கள் கணவர் மிகவும் இளமையாக இருக்கிறார்’ என்றேன் ஆதியிடம். ‘நீங்களும் புகைப்படத்தில் பார்ப்பதைவிட வேறு மாதிரிதான் இருக்கிறீர்கள் என்றார் ஆதி.

திரு மோகனுக்கும் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்தேன்.

நிகழ்ச்சிகள் தொடங்கின. திரு மயிலன் தன் கவிதையை வாசித்தார். வழக்கம்போல நல்ல வரவேற்பு அவரது கவிதைக்கு. கவிதையிலேயே குழந்தையின் வரவை எதிர்பார்த்திருப்பதையும் சொன்னார். சென்றமுறை தனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்தவர் ஆயிற்றே! திரு ஆர்.எஸ். சரவணன், திரு தேவாதிராஜன் தங்கள் கவிதைகளைப் படித்தனர்.

திரு ரமணி, திரு முரளிதரன், திரு கவியாழி  வந்து நலம் விசாரித்தார்கள். முரளிதரனுக்கு தன் காதல் கடிதத்திற்கு பரிசு வந்தது பற்றிய எல்லையில்லா சந்தோஷம். திரு மதுமதி ‘நல்லா இருக்கீங்களா?’ என்றார். அவரிடம் திருமதி வல்லி வந்திருக்கிறாரா என்று கேட்டேன். உடல்நலம் காரணமாக வரவில்லை என்றார். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. திருமதி எழில், திருமதி சசிகலா, திருமதி அகிலா புகழ்  வந்து பேசினார்கள். பரவாயில்லை, இந்தமுறை நிறையபேர்கள் என்னைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சந்தோஷமாக இருந்தது.

காலையிலேயே திருமதி ருக்மிணி வந்துவிட்டு காலில் ஏற்பட்டிருந்த வலி காரணமாக நான் வருவதற்குள் கிளம்பிப் போய்விட்டார்.

திரு மதுமதி அவர்கள் இயக்கத்தில் 90 டிகிரி குறும்படம் காண்பிக்கப்பட்டது. நடித்த சிறுமி நன்றாகவே தன் பாத்திரத்தை செய்திருந்த போதிலும் ஏழ்மை அந்தப் பெண்ணின் முகத்தில் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

புத்தக வெளியீடுகள் ஒவ்வொன்றாக நடந்தன. திரு சங்கவியிடம் மட்டுமே அவரது புத்தகத்தில் கையெழுத்து வாங்க முடிந்தது. திரு தனபாலன் வந்தார். என்னைப்பார்த்து, ‘அட! நீங்க வரலைன்னு’ நினைச்சேன்’ என்றார். ‘உங்கள் நிகழ்ச்சி எப்போது’ என்றேன். ‘கான்சல் ஆயிடுச்சு’ என்றார். திரு ஜோதிஜியுடன் கொஞ்சம் அதிக நேரம் பேச முடிந்தது. எனக்கும் திருமதி அமுதாவிற்கும் ஐஸ்க்ரீம் வாங்கி வந்தார். கிட்டத்தட்ட மில்க் ஷேக் போல இருந்தது. சென்னையின் வெயிலுக்கு ஐஸ்க்ரீம் அப்படித்தான் இருக்கும்! திரு ஜோதிஜி மூலம் பலாபட்டறை பாலா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. உண்மை தமிழன் அறிமுகம் ஆனார்.

கடைசி நிகழ்ச்சியாக திரு கோவை ஆவி பதிவர் சந்திப்பிற்காக தான் எழுதி இசையமைத்த பாடலை கோரஸ் உடன் பாடினார். அகிலா என் முகத்தைப் பார்த்துவிட்டு ‘டீ சாப்பிடுகிறீர்களா?’ என்று கேட்டுவிட்டு உடனே போய் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்.  தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. சீனு வந்து என்னிடம் ‘ஒரு ஐந்து நிமிடங்கள் இருங்கள்’ என்றார். பட்டிக்காட்டான் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரைப்பார்த்து ‘ஸ்கூல் பையனா?’ என்றேன். ‘இல்லையம்மா, பட்டிக்காட்டான்’ என்றார். ஸ்கூல் பையனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி பார்த்து அவரது எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தேன்.

சீனு அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எதோ எழுதிக் கொண்டிருந்தார். என்னிடமும் ஒரு gift கூப்பனைக் கொடுத்து, ‘இங்கேயே புத்தகங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார். ஐநூறு ரூபாய்க்கான கூப்பன். சற்று தூக்கிவாரிப் போட்டது. ‘வேண்டாம் சீனு! ரொம்பவும் அதிகம் என்றேன்’ ‘இல்லையம்மா, வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று வற்புறுத்திக் கொடுத்தார்.

திரு கி. ராஜநாராயணனின் கதைகள் (2), திரு ஜெயமோகன் (வெண்கடல்) திரு இரா. எட்வின் (அவனுக்கு அப்போது மனு என்று பெயர்) ஆகிய புத்தகங்களை வாங்கி, அதில் திரு சீனு கொடுத்த பரிசு என்றும் எழுதி வைத்துக் கொண்டேன். நன்றி சீனு!

திரு முரளிதரன், திருமதி சசிகலா, திருமதி ரேவதி சதீஷ் செல்லதுரை, கண்மணி சார்பில் திரு ராம் (சிவகாசிக்காரன்) ஆகியோர் என்னிடமிருந்து பரிசுக் கூப்பன்களைப் பெற்றுக் கொண்டார்கள். என்னை வியக்க வைத்தவர் திருமதி ரேவதி! எந்த வகுப்பில் படிக்கிறாய் என்று கேட்கலாம்! அப்படி ஒரு சின்ன உருவம்! உற்சாகமாகப் பேசினார்.

எல்லோரையும் பார்த்த சந்தோஷத்தில் மறுபடி ஆட்டோ! கல்யாண மண்டபத்திற்கு வந்தபோது ‘உங்களுக்காகத்தான் நலங்கிற்கு காத்திருக்கிறோம் என்றார்கள். உடலில் இருந்த அசதியையும் மீறி ஒரு உற்சாகம் மனதில் ஏற்பட்டது. எல்லா நிகழ்ச்சிகளிலும் பரிபூரணமாகக் கலந்து கொண்டு மகிழ்ந்தது இன்னும் பல காலத்திற்கு நினைவில் இருக்கும்.

இத்தனை தாமதமாக சீனுவிற்கு நன்றி கூறுவதற்கு அவரிடம் மன்னிப்பு!

பி.கு.: திரு சைபர் சிம்மன், திரு அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்களையும் சந்தித்தேன். இடுகையில் குறிப்பிட மறந்துவிட்டதற்கு மன்னிக்கவும்.

நான் மறந்தவர்கள் லிஸ்டில் திரு சுரேஷ் (தளிர்) உம் ஒருவர். நான் எழுதும் குழந்தை வளர்ப்பு பற்றிய பதிவுகளைப் படித்து உற்சாக பின்னூட்டம் போடுபவர் இவர்.

திரு தமிழ்வாசி பிரகாஷ், திரு ஆரூர் மூனா செந்தில் திரு தேவாதிராஜன் – இவர்களையும் குறிப்பிட மறந்துவிட்டேன். எல்லோரும் மன்னிக்கவும்.

46 thoughts on “சீனுவிடம் ஒரு மன்னிப்பு; ஒரு நன்றி!

  1. வாருங்கள் ஸ்ரீராம்!
   நீங்கள் ஏன் வரவில்லை? (சண்டை இல்லை, சமாதானமாகக் கேட்கிறேன்!) உள்ளூரில் இருந்துகொண்டு இப்படிச் செய்யலாமா?
   திரு கௌதமனையும் பார்க்க முடியவில்லை – நான் தாமதமாகப் போனதால்.
   முதல்வராக இங்கே வந்ததற்கும், கருத்துரைக்கும் நன்றி!

 1. பாத்தீங்களா? அமுதா கூட நான் கொடுத்த ஐஸ்கீரம் பற்றி எழுதவில்லை. நீங்களாவது எனக்கு பெருமை சேர்த்தீங்களே? எனக்கெல்லாம் திரு என்ற வார்த்தை தேவையா?

  1. வாருங்கள் ஜோதிஜி!
   அந்த சூட்டிற்கு அந்த ஐஸ்க்ரீம் எவ்வளவு இதமாக இருந்தது தெரியுமா? திரு என்பது சபையில் மரியாதை சேர்க்க.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. அட! சீனுவும் உங்களுடன் சேர்ந்துட்டாரா? பதிவில் மரியாதை கொடுக்க வேண்டும் இல்லையா? அதனால் தான். மனதளவில் இருக்கும் நெருக்கம் என்றைக்கும் மறக்காது, ஜோதிஜி, சீனு!

 2. எல்லா நிகழ்ச்சிகளிலும் பரிபூரணமாகக் கலந்து கொண்டு மகிழ்ந்தது இன்னும் பல காலத்திற்கு நினைவில் இருக்கும்.

  நிறைவான நினைவுகப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  1. வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
   வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!

 3. //பேசினேன்; பேசினோம்; பேசினோம்; பேசிக் கொண்டே இருக்கையில் சென்னை வந்தே விட்டது! இத்தனை சீக்கிரம் சென்னை வந்ததேயில்லை!//

  இது…… ரொம்பப்பிடிச்சது:-))))

  லேட்டாலும் அருமையான கவரேஜ்.

  பதிவர் மாநாட்டைப்பற்றி வந்தவைகளையெல்லாம் திரும்பத்திரும்ப பார்க்கிறேன் படிக்கிறேன்., தொலைதூரத்தில் இருந்து:(

  1. வாருங்கள் துளசி!
   நான் இருந்தது C2 கோச்; திருமதி ருக்மிணி இருந்தது C10 கோச்; ‘எங்கே அம்மாவைக் காணோம்; போய் கூட்டிண்டு வா’ என்று என்னவர் மகனை அனுப்பும் வரை பேசிக்கொண்டே இருந்தோம்!
   அடுத்தமுறை நீங்கள் வரும்போது வைத்துக் கொள்ளலாம்.
   எத்தனை முறை நினைத்தாலும் பதிவர் மாநாட்டு நினைவுகள் இனிக்கின்றன.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 4. முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பதிவுகள் நிறைய படித்து விட்டேன். ஆனால் கருத்து எதுவும் எழுத விடாமல் என் உடல் நலம் சற்றே மக்கர் செய்தது. அப்படியும் இரண்டொருவருக்கு பதிலெழுத ஆரம்பித்தேன்..அதற்கு மேல் முடியவில்லை..

  மீண்டும் நேற்று தான் முழுமையாக வலைப் பக்கம் வந்திருக்கிறேன். உங்கள் பதிவுகள் கருத்திட கொஞ்சம் டைம் எடுத்துக் கொள்கிறேன். ஓகேயா?

  உங்கள் பதிவர் மாநாடு கவரேஜ் வீடியோ கவரேஜ் போல் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். மிகவும் அழகாய் பல பதிவர்கள் பெயருடன் என்ன உரையாடிக் கொண்டிருந்தீர்கள் முதற்கொண்டு எழுதி என் காதுகளில் புகை வரவழைத்து விட்டீர்கள்.
  அருமையான கவரேஜ்.

  1. வாருங்கள் ராஜி!
   நிதானமாகப் படியுங்கள். அடுத்த ஆண்டு இருவருமாகச் செல்வோம், சரியா? உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
   வருகைக்கும் காதுகளில் புகை வரப் படித்ததற்கும் 🙂 நன்றி

   1. மன்னிப்பெல்லாம் வேண்டாம் ராஜி. எனக்கும் பல சமயங்களில் இப்படி ஆகும்.

 5. //ஸ்கூல் பையனைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி பார்த்து அவரது எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தேன்.//

  அங்கு தெரிவித்ததை விட இங்கு பதிவில் சொல்லியிருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அம்மா… நன்றி…

  1. வாருங்கள் ஸ்கூல் பையன்!
   எனக்கும் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 6. வந்திட்டேன்ன்ன்.ஆனாலும் பதிவுகள் முழுவதையும் படிக்க தாமதமாகும்.

  ம், என்னென்னமோ சொல்றீங்க, ஆனா நல்லா ஜாலியா இருந்துட்டு வந்திருக்கீங்கன்னு புரியுது.இவ்வளவு பெயர்களையும் நினைவில் வைத்து எழுதுவதென்பது….சென்ற வருடம் படங்களுடன் பதிவு போட்டிருந்தீங்க. இப்போ காணோமே!

  1. வாருங்கள் சித்ரா!
   இந்த வருடம் என்னிடம் கேமரா இல்லை. அதனால் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை.
   தொடர்ந்து வெளியூர் பயணங்கள், கல்யாண வேலைகள், அலைச்சல் என்றிருந்தாலும் சக பதிவர்களைப் பார்த்தவுடன் ஒரு புத்துணர்ச்சி வந்தது நிஜம்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 7. அத்தனை விசயங்களையும் அப்படியே மறக்காமல் வைத்துள்ளீர்கள்… உங்கள் நியாபக சக்தி வியக்கிறேன்.. எதற்கம்மா மன்னிபெல்லாம்…

  பல சிரமங்களுக்கு மத்தியிலும் நீங்கள் வருகை தந்ததே எங்களுக்கு மிகப் பெரிய உற்சாகம்.. விழா முடியும் வரை மிகப் பொறுமையாக இருந்தது மற்றும் உங்கள் கையால் பரிசுகள் வழங்கியது என்பக்கு மிகவும் மகிழ்ச்சி

  1. வாருங்கள் சீனு!
   நீங்கள் கொடுத்த பரிசுக் கூப்பனில் புத்தகங்களை வாங்கியபோது எத்தனை சந்தோஷமாக இருந்தது, தெரியுமா? எதிர்பாராமல் எனக்குப் பிடித்த புத்தகங்க அங்கு கிடைத்தன. திரு சதீஷ் செல்லத்துரை தான் எனக்கு கி.ரா. அவர்களின் புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். திரு செல்வின், திரு பிரபாகரன் அவர்களையும் குறிப்பிட மறந்து விட்டேன். அவர்களிடம் என் சந்தோஷத்தை சொல்லுங்கள்.
   இத்தனை சந்தோஷங்களைக் கொடுத்த பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த உங்களுக்கு இத்தனை தாமதமாக நன்றி சொல்லுகிறேனே, அந்த தாமதத்திற்கு தான் இந்த மன்னிப்பு.
   நன்றி, நன்றி, நன்றி!

 8. உங்களை பதிவர் சந்திப்பில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சிம்மா…. வெங்கட் என்றே நீங்கள் அழைக்கலாம்….. திரு போட்டால் ஏதோ அந்நியப்படுத்துவது போல தெரிகிறது! 🙂

  உங்களுடன் நிறைய நேரம் பேச முடியவில்லை. மாலை சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிவிட்ட படியால், நிறைய பேருடன் பேச முடியாது போனது….

  1. வாருங்கள் வெங்கட்!
   இந்த ‘திரு’ சபை மரியாதைக்காகத்தான். மனதில் நெருக்கம் இருக்கிறது. அதுதானே முக்கியம்?
   யாருடனுமே அதிகம் பேச முடியவில்லை. அடுத்தமுறை முதல் நாளே வந்து பேசித் தீர்த்துக்கலாம்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 9. உங்கள் பதிவைப் படித்த பிறகு நானும் வந்து கலந்துகொள்ளாமல் போய்விட்டேனே என்று ஏக்கமாக உள்ளது ரஞ்சனி நன்றாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் பதிவர் மானாட்ட்டை படம் பிடித்து காட்டிவிட்டீர்கள் நன்றி

  1. வாருங்கள் விஜயா!
   அடுத்த வருடம் எல்லோரும் போகலாம், கவலைப்படாதீர்கள்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 10. நீங்கள் தாமதமாக வர நேர்ந்ததையும்
  விழா நிகழ்வுகளை கவனிக்க
  நீங்கள் கொண்டிருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்டு
  வெறுமனே அறிமுகம் மட்டும் செய்து கொண்டு
  நகர்ந்துவிட்டேன்.அடுத்த சந்திப்பில் சந்திப்போம்
  நிகழ்வினை அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
  வாழ்த்துக்கள்

  1. வாருங்கள் ரமணி!
   மேடையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது பேசுவதற்கு எனக்கும் தயக்கமாக இருந்தது. நீங்கள் என்னிடம் வந்து பேசியது எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 11. தாமதமாக பதிவிட்டாலும் அருமையாக இருந்தது உங்கள் பதிவர் சந்திப்பு அனுபவம்.

  1. வாருங்கள் ஸாதிகா!
   எங்கே இந்த முறை உங்களைக் காணவில்லையே! போனமுறை உங்களையும் குட்டிசுவர்க்கம் ஆமினாவையும் சந்தித்தது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 12. தங்களை நேரில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி 🙂

  //என்னை வியக்க வைத்தவர் திருமதி ரேவதி! எந்த வகுப்பில் படிக்கிறாய் என்று கேட்கலாம்! அப்படி ஒரு சின்ன உருவம்! உற்சாகமாகப் பேசினார்.// மிகவும் பாசத்துடன் பழகிய தம்பதிகள். ஆறு வயது சிறுவனின் தாய் என்றே நம்ப முடியவில்லை.

  //கிட்டத்தட்ட மில்க் ஷேக் போல இருந்தது. சென்னையின் வெயிலுக்கு ஐஸ்க்ரீம் அப்படித்தான் இருக்கும்!// ஆறு ஆண்டுகள் சென்னையில் எனக்கு நிறைவு பெறுகிறது, இன்னும் நான் அந்தக் குளிர் காலத்தைக் கண்டதில்லை.

  1. வாருங்கள் ரூபக்!
   எனக்கும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
   எங்கள் ஊருக்கு வாருங்கள். நிஜமான ஐஸ்க்ரீம் வாங்கித் தருகிறேன்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  1. வாருங்கள் தனபாலன்!
   எனக்கும் உங்களைப் பார்த்ததில் சந்தோஷம்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 13. அருமையாக பதிவர் திருவிழாவைத் தொகுத்துள்ளீர்கள்…எல்லோரிடமும் நிறைய பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன்.. ஆனால் பல்வேறு வேலைப்பளுவினிடையே வந்தமையால் , முதன் முறை அறிமுகம் என்பதாலும் முழுமையாகச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை…உங்களிடம் பேசியது மிக்க மகிழ்ச்சி மேடம்…

  1. வாருங்கள் எழில்!
   எல்லோருக்குமே எல்லோரிடமும் இன்னும் பேசவில்லையே என்றே இருந்தது. நீங்கள் விழாக்குழுவில் இருந்தவர் ஆயிற்றே! மிகச் சிறப்பாக வழங்கினீர்கள். பாராட்டுக்கள்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 14. ”..எல்லா நிகழ்ச்சிகளிலும் பரிபூரணமாகக் கலந்து கொண்டு மகிழ்ந்தது இன்னும் பல காலத்திற்கு நினைவில் இருக்கும்…”
  கொடுத்து வைத்தவர் . நான் டென்மார்க்கிலிருந்து பெருமூச்சுத் தான் விட முடியும். இதை வாசித்தது. எல்லோரையும் பார்த்தது போல மிக மகிழ்ச்சி.
  மிக்க நன்றி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  1. வாருங்கள் வேதா!
   அடுத்தமுறை நீங்கள் எப்போது வருகிறீர்கள் என்று சொல்லுங்கள், ஒரு பதிவர் சந்திப்பை வைத்துக் கொள்ளலாம்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

  1. வாருங்கள் பட்டு!
   அடுத்தமுறை நீங்களும் வந்துவிடுங்கள். எல்லோரும் கூடி இருந்து மகிழலாம்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

 15. என்னையெல்லாம் நியாபகம் வைத்திருப்பிர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.எனது கடிதத்தில் உங்களின் பின்னூட்டத்தை படித்ததில் இருந்து உங்களை சந்திப்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தேன்.விரைவில் எனது கணவர் தளத்தில் ஒரு பதிவிட முடிவு செய்துள்ளேன்.

  1. வாருங்கள் ரேவதி!
   யாரோ ஒரு சின்ன பொண்ணு என்று நினைத்திருந்த வேளையில் காதல் கடிதம் எழுதி பரிசு வாங்கியவர் என்று சொன்னதும் அசந்து போய்விட்டேன். உங்களை எப்படி மறப்பது? கோபல்ல கிராமம் முதல் புத்தகம், அதன் தொடர்ச்சி கோபல்ல கிராமத்து மக்கள் என்று எனக்கு சொல்லி புத்தகம் வாங்க வைத்தவர் உங்கள் துணைவர் அல்லவா?
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
   பதிவு உலகில் நுழைவதற்கு வாழ்த்துக்கள். விரைவில் உங்களுக்கென்று ஒரு வலைதளம் ஆரம்பித்துக் கொடுக்கச் சொல்லுங்கள். எழுதி தூள் கிளப்புங்கள்!

  1. நீங்கள் வாங்கிய புத்தகங்களில் என் கையெழுத்து வாங்கிப் போனீர்களே, அதற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும், ரேவதி!

 16. வணக்கம் அம்மா …
  அன்று உங்களை சந்தித்தேன் ஆனால் பேசத்தான் நேரம் கிடைக்கவில்லை …
  அடுத்த பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்து பேசும் ஆவலோடு ….

  1. வாருங்கள் அரசன்!
   உண்மைதான். நீங்கள் ரொம்பவும் பிசியாக இருந்தீர்கள். எத்தனை வேலைகளோ என்று நினைத்துக் கொண்டேன். பதிவில் உங்களைக் குறிப்பிட மறந்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்.
   நிச்சயம் அடுத்த சந்திப்பில் பேசுவோம்.
   நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 17. தங்களை சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சிம்மா. புகைப்படத்தில் இருப்பதை விட நேரில் இன்னும் அழகாக இருக்கிறீர்கள் என்று தான் சொன்னேன்…..:)

  தாங்கள் சொன்னதை நானும் என்னவரிடம் தெரிவித்தேன். முகத்தில் என்ன ஒரு பெருமிதம்…..:))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s