சினேகிதி

மாறிவரும் புது யுகத் திருமணங்கள் – 2

போன பதிவின் தொடர்ச்சி 
பெண்களின் எதிர்பார்ப்புகள் தொடர்கின்றன

 • பழங்காலத்து வழக்கம் என்று சொல்லி எங்கள் குடும்பங்களை மரியாதைக் குறைவாக நடத்தக் கூடாது.

முக்கால்வாசி கணவன்மார்கள் வீட்டின் சொத்துக்கள் பற்றியோ, அல்லது புதிதாக ஒரு சொத்து வாங்கும்போதோ மனைவிகளை கலந்தாலோசிப்பது இல்லை. இதை ஒரு பெரிய ரகசியமாக பூட்டிப் பூட்டி வைக்கிறார்கள். எந்த ஒரு விஷயமானாலும் மனைவியின் யோசனைகளை காது கொடுத்துக் கேட்க வேண்டியது அவசியம். வீடு என்றால் அது கணவன், மனைவி இருவரும் சேர்ந்ததுதான்.

 • வீட்டிற்கு ஒரு நல்லது செய்யும்போது மனைவியை கட்டாயம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

வெளி உலகில் ஆணும் பெண்ணும் பலவிதமான மன அழுத்தங்களுக்கும், போட்டிகளுக்கும் ஆளாகிறார்கள். அதனால் இருவருமாகச் சேர்ந்து தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும். நான் ரொம்ப பிசி என்று சொல்லி எந்த ஒரு ஆணும் குடும்பப் பொறுப்புகளிலிருந்து நழுவக் கூடாது. குழந்தைகளின் தினசரி வளர்ப்புகளிலும் தந்தையின் பங்கு அத்தியாவசியம்.

 • அம்மாவின் கவனிப்பு குழந்தைக்கு எத்தனை தேவையோ, அதே அளவு அப்பாவின் கவனிப்பும் தேவை.

அன்பு என்பது மகளிர் தினத்தன்று மட்டுமோ, பிறந்த நாளின் போது மட்டுமோ காண்பித்துவிட்டு மறந்துவிடக் கூடிய ஒன்றல்ல. எப்போதும், எந்நாளும் கணவன் மனைவியரிடையே அன்பு நிலவ வேண்டும். ஒரு நல்ல குடும்ப உறவு வளர, மேன்மை பட குறையில்லாத அன்பு தேவை.

இப்போது ஆண்களிடம் கேட்டேன். உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

‘இப்போது சொன்னவற்றையெல்லாம் அப்படியே திருப்பிப் போடுங்கள். எங்கள் அம்மாவையும், சகோதரிகளையும் இழிவாகப் பேசக் கூடாது. இன்று வந்தவர்களுக்காக எங்களால் பிறந்ததிலிருந்து இருக்கும் உறவுகளை மறக்கவோ துறக்கவோ முடியாது. வெளிஉலகில், அலுவலகத்தில் எத்தனையோ பேர்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகும் இவர்களால் ஏன் எங்கள் அம்மாக்களையும் சகோதரிகளையும் பொறுத்துப் போக முடியவில்லை?’

இந்தக் கேள்வி நியாயம் என்றே படுகிறது எனக்கு.

கடைசியாக கேட்டேன்:

திருமணம் என்பது பிணைக்கும் பந்தமா? அல்லது கட்டுப்படுத்தும் கால்கட்டா?

‘நான் ஒரு கதை சொல்லுகிறேன்’ என்று எழுந்தாள் ஒரு பெண்.

‘மகளின் திருமணத்தின் போது அவள் அம்மா அவளிடமும், தனது மருமகனிடமும் இரண்டு வங்கி பாஸ் புத்தகங்களைக்  கொடுத்துவிட்டு சொன்னார்:

‘உங்கள் இருவர் பேரிலும் நான் வங்கிக் கணக்கு ஆரம்பித்திருக்கிறேன். இன்று நீங்கள் இருவரும் இணையும் மகிழ்ச்சியான தருணம் என்பதற்காக ஒரு சிறிய தொகையையும் போட்டிருக்கிறேன். எப்போதெல்லாம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான, மறக்க முடியாத தருணங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் ஒரு தொகையை இருவரும் உங்கள்  கணக்கில் போடுங்கள். எதற்காக, எந்த இன்பமான தருணத்தில் போட்டீர்கள் என்று ஒரு சிறிய நாட்குறிப்பில் எழுதி வாருங்கள்.’

அம்மா சொன்னது போலவே இருவரும் சின்ன சின்ன சந்தோஷங்களிலிருந்து பெரிய பெரிய மகிழ்ச்சியான தருணங்களுக்கும் வங்கியில் பணம் போட ஆரம்பித்தனர். வருடங்கள் பல சென்றன. கணவன் மனைவியரிடையே சின்ன பூசல்கள். கொஞ்சம் கொஞ்சமாக இவை பூதாகாரமாக உருவெடுத்து, இருவரும் பிரிய முடிவு செய்தனர்.

பெண் தன் அம்மாவிடம் தங்களது விவாகரத்து குறித்து சொன்னாள். அம்மா சொன்னார்: ‘சரி, இருவரும் பிரிவதற்கு முன் வங்கி கணக்கில் எத்தனை சேர்ந்துள்ளது என்று பாருங்கள். இருவரும் பிரிவதற்குமுன் அதை செலவழித்து விடலாம்’.

மகள் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வந்தாள். தான் எழுதி வைத்திருக்கும் நாட்குறிப்பையும் பார்த்தாள். அசுவாரசியமாகப் படிக்க ஆரம்பித்தவள் கண்களில் நீர்!

எனது வாழ்க்கையில் எத்தனை எத்தனை இன்பமான தருணங்கள் வந்து போயிருக்கிறது. அதையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது மணமுறிவு வரை வந்துவிட்டேனே’ என்று மனம் வருந்தினாள். எப்படியாவது தனது மண வாழ்க்கையை சரி செய்து விட வேண்டும் என்று கணவனிடம் தனது பாஸ் புத்தகத்தை கொடுத்து நடந்ததைக் கூறினாள்.

அடுத்த நாள் கணவன் அந்த  பாஸ் புத்தகத்தை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டு ‘இதில் புதிதாக ஒரு தொகையை போட்டிருக்கிறேன். நாம் இருவரும் இத்தனை வருடங்கள் ஒன்றாக வாழ்ந்ததைக் கொண்டாடவும், இனிமேலும் சேர்ந்து இருக்கப் போவதைக் கொண்டாடவும் என்று இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்’ என்றான்.

இதைப் பார்த்த அம்மா கூறினார்: வாழ்க்கை என்பது தவறுகளை திருத்தி கொள்ள; உறவுகளை முறித்துக் கொள்ள அல்ல’

வகுப்பிலிருந்த அனைவரும், நான் உட்பட கைத்தட்டினோம். நீங்களும் தானே?

Advertisements

32 thoughts on “மாறிவரும் புது யுகத் திருமணங்கள் – 2

  1. வாருங்கள் வேதா!
   இந்த இரண்டு பகுதிகளும் ‘சினேகிதி’ இதழில் வெளியானவை. ரொம்பவும் நீளமானதாக இருந்ததால் இரண்டு பகுதிகளாகப் போட்டிருக்கிறேன்.

   சீரணிப்பது என்றால் படிப்பது என்று பொருளா?

   வருகைக்கும், என் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பதற்கும் நன்றி!

 1. வணக்கம்
  அம்மா

  வாழ்க்கை என்பது தவறுகளை திருத்தி கொள்ள; உறவுகளை முறித்துக் கொள்ள அல்ல’
  இதைவிட வேறு வரிகள் தேவையா……….
  அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. சின்ன சின்ன விஷங்களுக்கெல்லாம் சண்டைப் போட்டு திருமணங்களையே முறித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படியொரு பதிவு அவசியம்தான் உறவுகளை வளர்த்துக்கொள்ளத்தான் திருமணங்கள் என்பது புரிய வேண்டும் இரண்டு பக்கத்தவர்களும் அறிந்து கொண்டு புரிந்துகொண்டு அரவணைத்துச் சென்றால்தான் எந்த உறவுமே செழிக்கும் நல்ல பதிவு பாராட்டுக்கள்

 3. கதையை ஆங்கிலத்தில் படிச்சிருக்கேன். ஃபார்வர்ட் மடலாகக் கூட வந்தது. :)))) பொதுவாக விட்டுக் கொடுத்துப் போவது என்பது இருபக்கமும் இருந்தால் நல்லது. இதைக் கணவனும், மனைவியும் மட்டுமே மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல் பேசித்தீர்த்துக்கொள்ளும்படியாக இருக்கவும் வேண்டும். :)))

  1. வாருங்கள் கீதா!
   இந்தக் கதை டெக்கன் ஹெரால்ட் பேப்பரில் வந்தது. // மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல் பேசித் தீர்த்துக் கொள்ளணும்// நானும் உங்கள் கட்சிதான்!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 4. //வாழ்க்கை என்பது தவறுகளை திருத்தி கொள்ள; உறவுகளை முறித்துக் கொள்ள அல்ல’//

  அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

 5. “இந்தக் கேள்வி நியாயம் என்றே படுகிறது எனக்கு”_________நல்ல கேள்வி.ஆனால் இரண்டு பக்கமும் இந்தக் கேளிவியை எழுப்பவேண்டும்.

  கதை ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும் சொன்ன விதம் & மீண்டும் கேட்க வைத்த‌தற்கு நிச்சயம் கைதட்டல் உண்டு.

 6. திருமணம் என்பது முறிவதற்கு அல்ல. ஆனால் இந்த 2013லும் வீட்டிற்கு வந்த மருமகளை கேவலமாக நடத்துவது இன்னும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

  ///அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகும் இவர்களால் ஏன் எங்கள் அம்மாக்களையும் சகோதரிகளையும் பொறுத்துப் போக முடியவில்லை///

  வீட்டிற்கு புதிதாக வந்த பெண்ணிடம் கணவரின் அம்மாக்களும், சகோதரிகளும், நிறைய வேண்டாம், கொஞ்சமே ,கொஞ்சம் அட்ஜஸ்ட் செய் து கொள்கிறார்களா ? என்று கேட்டு சொல்லுங்கள். நான் எல்லா மாமியார், நாத்தனாரையும் இங்கு குறிப்பிடவில்லை.
  நிறைய பெண்கள் இந்த மாதிரி அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் கேள்விப் படுவது தான்.

  நீங்கள் எழுதிய கதைக்கு பலத்த கைதட்டல் கொடுகிறேன்.
  ஆனாலும் இந்தப் பிரச்சினை என் மனதை அரித்துக் கொண்டேயிருக்கும் ஒரு விஷயம்.

  உங்கள் பதிவு பிரமாதம் .
  சிநேகிதியில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்!

  1. வாருங்கள் ராஜி!
   //வீட்டுக்கு வரும் பெண்ணிடம் பிள்ளையின் அம்மா, அக்கா, தங்கைகள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்கிறார்களா?//
   திருமணம் என்பது இரண்டு பக்கமும் விட்டுக் கொடுத்தல், அனுசரித்துப் போவது இருக்க வேண்டும். எல்லோருமே சிந்திக்க வேண்டும். சும்மா பெண்களை மட்டும் சொல்லக் கூடாது.

   ஆனால் பெண் குழந்தைகளை முதலிலிருந்தே இன்னொரு வீட்டிற்குப் போகப் போகிறாய் என்று மனதளவில் தயார் செய்துவிடுகிறோம். ஆனால் ஆண்களை?
   பேசுவதற்கு நிறைய இருக்கிறது ராஜி. முடிவில்லாத ஒரு விஷயம் இது.
   வருகைக்கும் ஆரோக்கியமான கருத்துக்களுக்கும் நன்றி!

 7. இப்போது ஒரே ஒரு பெண், ஒரே ஒரு பிள்ளை என்றாகி விட்டது. ஆகவே இன்றைய இளைய தலைமுறைக்கு வேண்டுமானால் நாத்தனார், மைத்துனர் உறவு குறித்துத் தெரியாமல் இருக்கலாம். சென்ற பத்து வருடங்களுக்கு முன்னர் வரை உள்ள தலைமுறைக்குக் குறைந்த பக்ஷம் நாத்தனார் னு ஒருத்தரும், அல்லது மைத்துனர்னு ஒருத்தரும் இருந்திருப்பாங்க. அவங்க தங்கள் வீட்டிற்கு வரும் புதுப்பெண்ணை வந்த உடனேயே கிண்டல் என்ற பெயரில் கேவலப்படுத்துவது நடக்கத் தான் செய்கிறது. அது 2013 ஆக இருந்தாலும் சரி. முன் காலமாக இருந்தாலும் சரி. பெரும்பாலான பெண்கள் தங்கள் அண்ணன் அல்லது தம்பி கல்யாணம் ஆனால் அந்த அண்ணனிடமும், தம்பியிடமும் தங்களுக்குத் தான் முதல் உரிமை என்பது போல் நினைப்பது மட்டுமில்லாமல் நடக்கவும் செய்கின்றனர்.

  எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி அவங்க அண்ணனுக்குக் கல்யாணம் ஆகப் போகிறது என நிச்சயம் செய்த உடனேயே அழுதாராம். அவர் அழுகையைக் கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லையாம். இது அந்தப் பெண்ணின் தாய்/ அண்ணன் மேல் கொண்ட அதீத பாசத்தின் வெளிப்பாடு எனச் சப்பைக்கட்டு கட்டுகிறார். அதோடு அந்தப் பெண் பிறந்த வீட்டுக்குவந்தால் அவள் அண்ணனுக்குத் தேவையானதை எல்லாம் அவள் தான் செய்யணும் என்று எழுதப் படாத விதி.

  மின்சாரம் போயிடுச்சு போல. யு.பி.எஸ். கத்துது, வரேன் அப்புறமா.

 8. இன்றைய தலைமுறையினர் திருமணம் குறித்து தெளிவாக இருப்பது உங்கள் பதிவில் புரிகிறது…இன்று இருக்கும் ஒரு பிள்ளை,பெண் கலாச்சாரத்தில் பெற்றவர்கள் பிள்ளைகளை விட்டு ஒதுங்கி இருக்க முன்னமேயே பழகிக் கொண்டால் எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் போய்விடும் என்பது என் கருத்து

  1. வாருங்கள் எழில்!
   ஒரு பிள்ளை, ஒரு பெண் என்று இருக்கும்போது எப்படி ஒதுங்கி இருக்கமுடியும்? சரி அப்படியே நாம் ஒதுங்கி விடலாம் என்றாலும் – ‘பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்தால், கைகழுவி விட்டார்கள்’ என்று பேசுகிறார்கள். என்ன செய்வது?

   ஆண்கள் பெண்கள் இருவருமே நிறைய மனதளவில் மாற வேண்டும்.நம்பிக்கை வைப்போம்.

   வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி!

 9. சற்றே தாமதமாகத்தான் உங்கள் கட்டுரையைப் படித்தேன். அருமையான அலசல். திருமணங்கள் மாறிக்கொண்டுதான் வருகின்றன. ஆனால் அதன் அடித்தளம் மாறுவதில்லை; மாறவேண்டியதுமில்லை என்பது தெளிவு.

  1. வாருங்கள் செல்லப்பா!
   திருமணங்களின் அடித்தளம் மாற வேண்டியதில்ல என்ற உங்கள் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்.
   நீங்கள் என் வலைத்தளத்திற்கு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s