சினேகிதி

மாறி வரும் புது யுக திருமணங்கள்


multitasking woman

திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் ‘சினேகிதி’ செப்டம்பர், 2013 இதழில் வெளியான என்னுடைய கட்டுரை 

எனது வகுப்புகளில் மாணவர்களை மிகவும் குஷிப்படுத்தும் விஷயம் விவாதங்கள். அதுவும் காதல் கல்யாணமா? பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணமா? எது சிறந்தது என்ற விஷயத்தை கொடுத்துவிட்டால் போதும். வகுப்பே களை கட்டிவிடும். எத்தனை பேசினாலும் சுவாரசியம் குறையாத விஷயமாயிற்றே!

காதல் திருமணங்களுக்குத் தான் வோட்டு நிறைய விழும். ஒருமுறை இந்த விவாதத்தில்  காதல் திருமணங்களே சிறந்தவை என்று பேசிய மாணவரை  யாராலும் அசைக்கவே முடியவில்லை.

பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணங்களே என்ற பிரிவில் பேசிய மாணவ மாணவியர்கள் அவரை நோக்கி கேள்விக் கணைகளை வீச அவர் அசராது பதில் சொன்னார்.

‘உங்கள் வீட்டில் அப்பா அம்மா சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?’

‘நாங்கள் எங்கள் காதலில் காட்டும் தீவிரம் அவர்களை சம்மதிக்க வைக்கும்’

‘உங்கள் காதலியின் வீட்டாரை எப்படி சம்மதிக்க வைப்பீர்கள்?’

‘பெண் வீட்டில் முக்கியமாக என்ன எதிர்பார்ப்பார்கள் வரப்போகும் மாப்பிள்ளையிடம்? பெண்ணின் அப்பா மாப்பிளைக்கு நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம் இருக்கிறதா என்று பார்ப்பார். அம்மா  நல்ல குடும்பமா என்று பார்ப்பார். பெண்ணிற்கு அழகு! இவை எல்லாமே என்னிடம் இருக்கின்றன. அவர்கள் சம்மதம் கிடைத்துவிடும்’.

‘பெண் வீட்டில் பெற்றோர்கள் அவளை பயமுத்துகிறார்கள்:’ நீ எங்கள் பேச்சைக் கேட்கவில்லையானால் உன்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுவோம்’ என்று. என்ன செய்வீர்கள்?

‘சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல். நான் நேராக பெண்ணின் பெற்றோர்களிடம் போய் ‘உங்கள் சம்மதத்துடன் நாங்களிருவரும் கல்யாணம் செய்துகொள்ள ஆசைபடுகிறோம். ஓடிபோய் திருமணம் செய்துகொண்டால் இரண்டு குடும்பங்களுக்கும் அவமானம்’ என்று புரிய வைத்து சம்மதம் வாங்கிவிடுவேன்’.

‘ஒருவேளை இருவரின் பெற்றோர்களும் சம்மதிக்கவில்லை என்றால்?’

‘நிச்சயம் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம். நாங்கள் குடும்பம் நடத்தும் அழகைப் பார்த்து அவர்களாகவே சிறிது காலத்திற்குப் பிறகு மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்.’

‘உன் காதலுக்காக உயிரைக் கொடுப்பாயா?’

‘நிச்சயம் மாட்டேன். நான் வாழப் பிறந்தவன். காதலுக்காக உயிரைக் கொடுப்பது முட்டாள்தனம். எங்கள் காதலையும் வாழவைத்து நாங்களும் வாழுவோம். நாங்கள் வாழ்ந்தால்தானே எங்கள் காதலும் வாழும்?’

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நான் வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டேன். வகுப்பு முடிந்த பின் அந்த மாணவனைக் கூப்பிட்டு வேடிக்கையாகக் கேட்டேன்:’யாரந்த அதிருஷ்டசாலி பெண்?’

அந்த மாணவர் அடக்க முடியாமல் சிரித்துவிட்டு, ’மேடம், இதெல்லாம் ஒரு விவாதத்திற்காக நான் பேசியது. என் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன். என் பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை. அவர்களை கடைசிவரை நான் பார்த்துக் கொள்ளவேண்டும். அதனால் என் திருமணம் அவர்கள் நிச்சயிக்கும் பெண்ணுடன்தான். காதல் கல்யாணம் என்பதெல்லாம் பேசுவதற்கு படிப்பதற்கு நன்றாக இருக்கும். நம் நிலைமையை நாம்தான் புரிந்து கொண்டு நம் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டும்’ என்றார்.

நான் இப்போது மறுபடியும் வியப்பின் எல்லையில்! அடுத்தடுத்த வகுப்புகளில் பல மாணவ மாணவியரிடம் பேசியதில் எல்லோருமே பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தை, அல்லது பெற்றோர்களின் சம்மதத்துடனேயே தங்கள் திருமணத்தை செய்து கொள்ள விரும்பினர் என்று தெரிந்தது. பெற்றோர்களின் சம்மதம் என்பது தங்களுக்கு பாதுகாப்பு என்று பலரும் சொன்னார்கள்.

உடனேயே எனக்கு இன்னொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. மாணவர்களிடமே கேட்டேன்:

‘நீங்கள் உங்கள் திருமணத்தில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?’

அவர்கள் சொன்னதை உங்களுக்கும் சொல்லுகிறேன்.

பெண்கள்:

முன்னைப்போல் கணவன்மார்களே தங்களையும் தங்கள் குழந்தையையும் கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்றோ, அவனது மறைவுக்குப் பின்னும் அவனது சொத்துக்கள் மூலம் பாதுகாப்பு வேண்டும் என்றோ பெண்கள் நினைப்பதில்லை. பெண்களும்  படிக்கிறார்கள்; வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். பணத்தை கையாளத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆணுக்குப் பெண் சமம்.

இப்படி இருக்கும்போது திருமணம் என்கிற பந்தம் அவர்களை எந்த அளவு கட்டுப்படுத்தும்; அல்லது எந்த அளவு பாதுகாப்புக் கொடுக்கும்?

பெண்களுக்கும், அம்மாக்களுக்கும் எல்லையில்லாத பொறுமை இருக்கிறது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை செலுத்த அவர்களால் முடியும். இதற்கு பதிலாக அவர்கள் எதிர்பார்ப்பது மரியாதை, அங்கீகாரம், தூய அன்பு இவைதான். ஒவ்வொரு தடவையும் அவர்களே எல்லாவற்றிற்கும் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. பெற்றோர்கள் கூட ‘கொஞ்சம் விட்டுக் கொடும்மா, பொறுத்துப் போம்மா’ என்கிறார்கள். திருமண முறிவு என்பது ஆணை விட பெண்ணை அதிகம் பாதிக்கும் என்பதால் இந்த மாதிரி எதிர்பார்ப்புகளை ஒரு பெண் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

 • ‘எங்களுக்கு வேண்டியது சம உரிமை, தடங்கல் இல்லாத அன்பு’

‘கணவன், குழந்தைகள் எங்களை சர்வ சாதாரணமாக நினைக்கிறார்கள். நாங்கள் செய்யும் செயலுக்கு ஒரு நன்றி, ஒரு பாராட்டு  கூட வராது. ஆனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நாங்கள் பாராட்டி, புகழ்ந்து உச்சி முகர்ந்து கொண்டாட வேண்டும். இது எந்த விதத்தில் சரி? அவர்கள் எங்களை நேசிப்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். பரிசுகள் கொடுக்க வேண்டும்’

 • எங்களுக்கு வேண்டியது வெளிப்படையான பாராட்டு, வெளிப்படையாக காட்டும் அன்பு’.

வீட்டைப் பார்த்துக் கொள்வது, வீட்டு வேலைகள் செய்வது, குழந்தைகளை கவனிப்பது, விருந்தாளிகளை அவர்கள் மனம் நோகாமல் உபசரிப்பது என்று எல்லாமே பெண்களின் பொறுப்பு. ஆணுக்கு இந்தப் பொறுப்புகள் இல்லையா? மனைவி இதையெல்லாம் முகம் சுளிக்காமல் செய்தால் கணவனுக்கு புகழ்! இது எந்த விதத்தில் நியாயம்? இல்லத்தரசி என்கிற வார்த்தை வழக்கொழிந்து விட்டது என்பதை ஆண்கள், அவர்கள் குடும்பத்தவர்கள் உணர வேண்டும். பெண்களும் இப்போது நாள் முழுவதும் உழைக்கிறார்கள். வீடு, வீடு விட்டால் அலுவலகம் என்று.

 • வளர்ந்த குழந்தைகளும், கணவனும் வீட்டுப் பொறுப்புகளில் பங்கு கொள்ள வேண்டும்.

மனைவியின் வீட்டவர்களை கீழாகப் பார்ப்பது இந்திய குடும்பங்களில் வெகு சகஜம். ஆண் வீட்டவர்களுக்கு பெண் வீட்டவர்கள் எந்த விதத்தில் குறைந்தவர்கள்? பெண் என்ன செடியில் பூக்கிறாளா? அல்லது காசு கொடுத்து வாங்கி வருகிறார்களா? அவர்களையும் பத்து மாதம் சுமந்து தான் பெறுகிறார்கள். படிக்க வைக்கிறார்கள். நம் நாட்டில் சில மாநிலங்களில் கணவன் வீட்டவர்கள் மனைவி வீட்டில் எதுவும் சாப்பிடக் கூட மாட்டார்கள். திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் இணைவதில்லை; இரு குடும்பங்கள் இணையும் சந்தோஷ நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அடுத்த பதிவில் மீதியைப் படிக்க  இங்கே சொடுக்கவும்.

Advertisements

25 thoughts on “மாறி வரும் புது யுக திருமணங்கள்

 1. //திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் இணைவதில்லை; இரு குடும்பங்கள் இணையும் சந்தோஷ நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.//

  அனைவரையும் சிந்திக்க வைக்கும் அழகான அருமையான கட்டுரை. எழுதியவருக்குப்பாராட்டுக்கள். பதிவாகத்தந்த தங்களுக்கு நன்றிகள்.

 2. இந்தப் பதிவை எல்லோரும் குறிப்பாக இளைஞர்கள் படித்தால் தேவலை. அவர்கள் தான் செய்வதாக சொல்வது ஒன்று ஆனால் செய்வது ஒன்று என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

  இளைய சமுதாயத்திற்கு ஏற்ற பதிவு.
  வாழ்த்துக்கள்….தொடருங்கள்….

 3. இந்த விஷயத்தில் மட்டுமில்லை, எல்லா விதத்திலும் இன்றைய இளைய தலைமுறை விவரமாகத்தான் இருக்கிறார்கள். பையனின் வாதத்தையும், பிற்பாடு சொன்ன தன்னுடைய நிலைப்பாட்டையும் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.

  1. வாருங்கள் ஸ்ரீராம்!
   நானும் கூட அசந்துதான் விட்டேன் ஸ்ரீராம். சமீபத்தில் இந்த மாணவரை சந்தித்தேன். தனது மனைவியை அறிமுகப்படுத்தி ‘அம்மாவின் செலக்ஷன்’ என்றார்!

   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

 4. காதல் கத்திரிக்காய் எல்லாம் பேசுவதற்கு நன்றாக இருக்கும் அளவுக்கு நடைமுறைக்கு ஒத்து வராது! இதை தெளிவாக புரிந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு என் வாழ்த்துக்கள்!! இதை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் அம்மா!

 5. நானும் இந்தக் கட்டுரையைப் படித்தேன் நல்ல அறிவுரை இளைய சமுதாயம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அருமையான பதிவு ரஞ்சனி பாராட்டுக்கள்

 6. இந்தக் காலத்துக்கு ஏற்ற பதிவு. பலஆண்களும் இன்றைய சூழலுக்கு ஏற்ப மாறியே வருகின்றனர். தொலைக்காட்சி விளம்பரங்களில் கூட வேலைக்குச் சென்று வரும் மனைவிக்காகச் சமைத்து வைக்கும் கணவனைத் தான் காட்டி வருகின்றனர். :))))

 7. அந்த நாளிலிருந்து இன்றுவரை மாப்பிள்ளைகள் மாறவில்லை.(என் அம்மா மாதிரியே வேண்டும் & இன்னும் ஒருபடி மேலே போய் என் பாட்டி மாதிரியே வேண்டும்,செம காமெடி).

  ஆனால் பெண் மாற நினைக்கிறாள்.கட்டாயம் மாற வேண்டும்.எவ்ளோஓஓ நாளைக்குத்தான் இப்படியே இருப்பது?ஒருநாளைக்கு சலிப்பு வந்துவிடும்.

  முன்புபோல் இப்போது ஆண்கள் இல்லை என்றே சொல்லலாம்.ஏகத்துக்கும் மாறியாச்சு.இந்தத் தோழமை பிடிக்கிறது.

  நல்ல‌ பதிவு.

 8. ரஞ்ஜனி நான் மிகவும் தாமதமாகத்தான் இந்தப்பதிவை பார்க்கிறேன். என்ன அனுபவம் வேண்டும். எல்லாம் என்னிடம் இருக்கிறது. என்னுடைய பிள்ளைகள் இரண்டுபேர் காலேஜ் படிக்கும்போது டிபேட்டில் காதல்திருமணம், பெரியோர்கள் நிச்சயித்த திருமணம், அதில் இருவருமே பங்கு. பெரியவனே சின்னவனுக்கும் பேசுவதற்கு குறிப்புகள் கொடுத்து,கடைசியில்,பெரியோர்கள் நிச்சயித்த திருமணம் சின்னவனுக்கு
  பரிசு. கடைசியில் எல்லோருக்குமே காதல் கலியாணத்தை, பெரியோர்கள் நிச்சயித்த
  திருமணமாக மாற்றி அவர்களின் கலியாணத்தை நடத்தினோம் என்று சொன்னால்,அதுவும்,ஸ்டேட்விட்டு ஸ்டேட் எல்லாம், பிற்காலத்தில்தான்
  இதெல்லாம் ஒரு 25 வருஶ அனுபவம்,
  எல்லாவற்றையும் அசைபோட வைத்துவிட்டது உன் கட்டுரை.
  பிள்ளை மாமியார் வீட்டுக்கு போக வேண்டாம். மருமகள் வந்துதானே
  ஆகவேண்டும்.
  எவ்வளவு ஸரிகட்டிப் போனாலும் மாமியார் என்ற பெயர் ஸர்க்கஸ்ஸில்
  ஆகாயத்தில் ஸைக்கிள் விடும் வேலைக்கு ஒப்பானதுதான்.
  நான் அதிலெல்லாம் தேறி இப்போது ஸைக்கிள் விடுபவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
  அழகாக எழுதியுள்ளாய். நான் மனதில் வந்தவைகளை எழுதியிருக்கிறேன்.
  அன்புடன்.

  1. வாருங்கள் காமாக்ஷிமா!
   உங்கள் அனுபவங்கள் எல்லாமே தனி தான்!
   காதல் கல்யாணத்தை பெற்றோர் நிச்சயித்த கல்யாணமாக மாற்றி…. என்ன ஒரு அழகான சொற்றொடர்!
   ‘எவ்வளவு சரிக்கட்டிப் போனாலும் மாமியார் என்ற பெயர் சர்க்கஸில் ஆகாயத்தில் சைக்கிள் விடும் வேலைக்கு ஒப்பானதுதான்’ – நூற்றுக்கு நூறு உண்மை!

 9. “திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் இணைவதில்லை;
  இரு குடும்பங்கள் இணையும் சந்தோஷ நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.”

  ஆம் உண்மைதான்.
  அழகிய ஆக்கம்.
  பயனுள்ள தகவல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s