ஒரு இல்லத்தரசியின் பார்வையில் : டாலர் நகரம்

Doller nagaram2

ரயில் பிரயாணத்தில் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தடங்கலில்லாமல் நேரம் கிடைக்கும். நடுநடுவில் எழுந்து போய் வீட்டுவேலை செய்ய வேண்டாம். சமையல் வேலை இருக்காது என்பது கூடுதல் மகிழ்ச்சி. இந்த மாதிரி பயணங்களில் படிப்பதற்கென்றே சில புத்தகங்களை தனியாக எடுத்து வைப்பேன்.

இந்தமுறை எனக்கு படிக்கக் கிடைத்த புத்தகம்: டாலர் நகரம். பதிவர்களுக்கு மிகவும் பழக்கமான,தான் நினைத்ததை பட்டவர்த்தனமாகச் சொல்லும் திருப்பூர் தேவியர் இல்லம் என்ற தளத்தின் சொந்தக்காரர் திரு ஜோதிஜியின் புத்தகம். இவரது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் இருந்து கொண்டே இருந்தது.

திருப்பூர் நகரத்தின் பெயரைத் தவிர எனக்கு அந்த ஊரைப் பற்றி  தெரிந்த ஒரு விஷயம் அங்கு உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டாவது விஷயம் திருப்பூர் குமரன். இந்த நகரத்திற்கு டாலர் நகரம் என்ற பெயர் என்பதும் எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்த பின்பே தெரிய வந்தது. இதனால் இந்தப் புத்தகத்தைப் பற்றிய எந்தவிதமான முன்கூட்டிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகள்  இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன்.

நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னலாடை நகர், பனியன் நகரம் என்ற பலபெயர்கள் கொண்ட திருப்பூருக்கு நாலுமுழ வேஷ்டி அணிந்து  ஒரு கையில் துணிக்கடை மஞ்சள் பையுடன் வரும்  ஜோதிஜி நம்மையும் இன்னொரு கையால் பிடித்து இந்தப் புத்தகத்தினுள் – இல்லை டாலர் நகரத்தினுள் அழைத்துக் கொண்டு செல்லுகிறார்.

ஒன்றுமே தெரியாமல், கிடைத்த முதல் வேலையில் சேர்ந்து, தொடர்ந்து பல வேலைகளுக்கு மாறி ஒவ்வொரு வேலையிலும்  தனக்கு ஏற்பட்ட பலவிதமான அனுபவங்களையும் அதில் தான் பட்ட வலிகளையும், தோல்விகளையும் எழுதும் ஆசிரியர், பலமுறை ‘நான் தோற்றுக் கொண்டே இருந்தேன்’ என்று குறிப்பிட்டாலும், அந்தத் தோல்விகளிலும், வலிகளிலும் இருந்து பல பாடங்களைக் கற்று, தனது வாழ்க்கை குறிக்கோளை அடைய மேற்கொண்ட தனது பயணத்தின் கூடவே  இந்த நகரத்தின் வளர்ச்சியையும், இதனை நம்பி வரும் மக்களின் மனநிலையும்  கூறுகிறார்.

எல்லாத் தொழில் நகரங்களுக்கும் உண்டான சாபக்கேடுகள் இங்கேயும் இருக்கின்றன. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காமல் போவது, நம்பிக்கை துரோகம், ஆணும் பெண்ணும் சேர்ந்து தொழில் செய்யும்போது ஏற்படும் பாலியல் வரம்பு மீறல்கள், தங்களுக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு முதலாளிகளை சுரண்டும் இடைத் தரகர்கள்  என்று ஜோதிஜியின் எழுத்துக்கள் மூலம் திருப்பூரின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். ஒரு நகரத்தின் வாழ்வு தாழ்வு, அங்கு வாழும் மனிதர்களின் மனநிலையைப் பொறுத்து அமையும். திருப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்த நகரம் நம்மைக் காப்பாற்றும் என்று நம்பிகையுடன் வருபவர்கள், தங்களை இங்கு நிலை நிறுத்திக் கொள்ள எடுக்கும் முடிவுகள், அவற்றின்  விளைவாக அவர்கள் வாழ்வில் ஏற்படும் அல்லல்கள் என்று அடுக்கடுக்காக நிகழ்வுகளின் பிடியில் நம்மை சிக்க வைக்கிறார் ஆசிரியர். பின்னலாடைத் தொழிலாளர்களின் – உழைப்பு, உழைப்பு, இன்னும் கடின உழைப்பு என்பதை மட்டுமே அறிந்த அவர்களின் – வாழ்க்கைப்பயணம்  இந்த நகரத்தின் வளர்ச்சியுடன் எப்படிப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்று வாசிக்கும்போது அதிர்ச்சி, வியப்பு, சோகம் என்று மனதில் பலவிதமான உணர்வுகள். சிலர் மட்டுமே இந்தப் பின்னலிலிருந்து வெளிவந்து முன்னேறுகிறார்கள். சிலர் இந்த மாயவலையில் காணாமலேயே போகிறார்கள்.

தன்னுடன் படித்த, தமிழில் கூட ததிங்கிணத்தோம் போட்ட ஆறுமுகம் இன்று ஒரு நிறுவன முதலாளியாக இருப்பதையும், வகுப்பில் முதல் மதிப்பெண்கள் எடுத்த இருவர் வாழ்க்கை பயணத்தில் பின்தங்கி இருப்பதையும் குறிப்பிட்டு  அனுபவக் கல்வியில் தேர்ந்தவர்களுக்கே வாழ்க்கை என்னும் பாடத்தை கற்றதாக கூறுகிறார். இது படிக்கும் அத்தனை பேருக்கும் பாடம் தான்.

‘திருப்பூரில் வருடா வருடம் எகிறிக் கொண்டிருக்கும் மில்லியன், பில்லியன் அந்நியச்செலாவணி வரைபட குறியீடு அத்தனையுமே பலருக்கும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மட்டுமே தந்த வெற்றியாகும். திருப்பூரில் எல்லோருமே மெத்தப் படித்தவர்கள் அல்ல. எந்த நிர்வாக மேலாண்மைக் கல்லூரிகளிலும் படித்தவர்களும் அல்ல. தொடர்ச்சியான உழைப்பு. சாத்தியமான திட்டங்கள். உறக்கம் மறந்த செயற்பாடுகள், தொழிலுக்காகவே தங்களை அர்பணித்த வாழ்க்கை.’

அனுபவக் கல்வியில் செல்வந்தர் ஆனபின் பணம் தந்த மிதப்பில் தான் செய்த தவறுகளுக்காக அதே ஆறுமுகம் இப்போது கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருப்பதையும் ‘டாலர் நகர’த்தில் படிக்கலாம். இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோரும் ‘கருணா என்னும் கூலி’ என்ற  அத்தியாயத்தைப் கட்டாயம் படிக்க வேண்டும். ஆறுமுகங்கள் மட்டுமில்லை திருப்பூரில், கருணாகரன்களும் உண்டு என்று புரியும்.

மனத்தை கசக்கும் ஒரு அத்தியாயம் : காமம் கடத்த ஆட்கள் தேவை.

ஆர்வத்துடன் படித்த அத்தியாயம்:ஆங்கிலக்கல்வியும் அரைலூசு பெற்றோர்களும். என் தொழில் சம்மந்தப்பட்ட விஷயமாயிற்றே!

‘நூல் என்பது ஆடையாக மாறுவதற்குள் எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒரு உலகம். ஒவ்வொரு துறைக்குள்ளும் நூற்றுக்கணக்கான துறைகள். தினந்தோறும் ஆயிரம் ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு முயற்சிப்பவர்கள் முதல், கோடிகளை வைத்துக் கொண்டு துரத்தும் நபர்கள் வரைக்கும் இந்தத் தொழிலில் உண்டு’ (அத்தியாயம் – நம்பி கை வை)

அத்தனை துறைகளையும் பல நுணக்கமான விஷயங்களை இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார் ஆசிரியர். ‘விதவிதமான பல வண்ண ஆடைகளின் வடிவமைப்பில் துணியாக உருமாறும் நேரமென்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போலவே இருக்கும்’. நமக்கும் இந்த அனுபவம் ஏற்படுகிறது என்றால் அது ஜோதிஜியின் எழுத்துக்களின் வீரியம் தான்.

ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் குழந்தைகளும் கூட இந்த டாலர் நகரத்தை நம்பி வருகிறார்கள். குடும்பம் முழுவதற்கும் இங்கு வேலை கிடைக்கும். ஆனால் வாழ்க்கை?

வருகின்ற அரசுகளும் தங்கள் சுய லாபத்திற்காகவே இந்த நகரைப் பயன்படுத்திக் கொண்டு,உழைக்கும் மனிதர்களுக்கு ஒன்றும் செய்து கொடுக்காமல் சும்மா இருப்பதையும் சாடுகிறார் ஆசிரியர். ‘கடந்த இரண்டு வருடங்களாக திருப்பூரில் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கும் சிறிய ஏற்றுமதி நிறுவனங்களிடம் ‘உங்களுக்கு என்னப்பா பிரச்சனை?’ என்று தமிழ் நாட்டில் வந்து கேட்ட அமைச்சர் எவரெவர்? ஆட்சிகள் மாறியது. ஆனால் காட்சிகள் எதுவுமே மாறவில்லை.

‘திருப்பூருக்குள்  இரண்டு உலகம் உண்டு ஒன்று உள்நாட்டு தயாரிப்புகளான ஜட்டி,பனியன்கள். இன்னோன்று ஏற்றுமதி சார்ந்த ஆடை ரகங்கள். இரண்டுக்குமே நூல் என்பது முக்கிய மூலப் பொருள். அரசாங்கத்தின் பல கொள்கைகள் பல்லாயிரக்கணக்கான பஞ்சாலைகளை மூட வைத்தன’.

‘இலவச செல்போன் கொடுக்கத் திட்டம் தீட்டும் மத்திய அரசாங்கம் உழைக்கத் தயாரா இருக்கின்றோம் என்று சொல்லும் திருப்பூருக்கு எதிர்காலத்தில் என்ன திட்டம் தீட்டி இந்த ஊர் மக்களைக் காப்பாற்றப் போகிறார்களோ?’

இந்தக் கேள்வியுடன் புத்தகத்தை முடித்திருக்கிறார் ஜோதிஜி.

திருப்பூர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இந்தப் புத்தகம் பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. நான் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் ஒரு தொழிலாளியின் இரவு பகல் பாராத கடின உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பை நம்பி தனது ஊரை விட்டு வரும் அவரையும், அவரை சார்ந்த  மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பரிவோடு  நினைக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.

இந்த முகம் தெரியாத மனிதர்களுக்காக ‘இவர்களுக்கு ஒரு விடியல் சீக்கிரம் வரட்டும்’ என்று இறைவனிடம் பிரார்த்திப்பதை தவிர எனக்கு வேறொன்றும் செய்யத் தெரியவில்லை.

இனி புடவைக் கடையில் போய் இந்தப் புடவை நன்றாக இல்லை என்று சொல்வேனா?

இந்தப் புத்தகத்தில் குறைகள் இல்லையா? புத்தகமே திருப்பூர் என்ற டாலர் நகரத்தின் குறைகளையும் நிறைகளையும் சொன்னாலும், குறைகளே மிகுந்திருப்பது போல ஒரு தோற்றத்தை நம்முள் ஏற்படுத்துகிறது. நான் வேறு என்ன குறை சொல்ல முடியும்?

அட்டவணை போட்டிருக்கலாம். புத்தகத்தைப் பற்றிய என் எண்ணங்களை எழுதத் தொடங்கிய போதுதான் இந்தக் குறையை உணர்ந்தேன்.

இதைத் தவிர்த்துப் பார்த்தால், திரு ஜோதிஜி நிச்சயம் ஒரு வரலாறு படைத்திருக்கிறார். திருப்பூர் தொழிலாளிகளின் உழைப்பை விட இந்தப் புத்தகம் எழுத கடினமாக உழைத்திருக்கும் அவருக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

நான் இதுவரை புத்தக விமரிசனம் எழுதியதில்லை. முக்கியமாக திரு ஜோதிஜி அவர்களின் எழுத்துக்களை விமரிசிக்கும் தகுதி எனக்கில்லை. இந்தப் புத்தகத்தைப் படித்து என் மனதில் ஏற்பட்ட தாக்கங்களை இங்கு எழுதியிருக்கிறேன். இவை என் எண்ணங்கள் அவ்வளவுதான்.

ஜோதிஜியின் வலைத்தளம்

புத்தகம் வாங்க கீழ்கண்ட வங்கி முகவரிக்கு ரூபாய் 190/- அனுப்பவும்.

வங்கி விபரம்  

SRM JOTHI GANESAN
KOTAK MAHINDRA BANK
TIRUPUR
ACCOUNT (S/B) NO. 0 4 9 1 0 1 1 0 0 1 2 7 6 4
IFC CODE NO.     KKBK0000492   

 

Dollar_Nagaram

27 thoughts on “ஒரு இல்லத்தரசியின் பார்வையில் : டாலர் நகரம்

    1. வாருங்கள் தனபாலன்!
      உடனடியாக வந்து வாசித்து பின்னூட்டம் தந்ததற்கு நன்றி!

  1. ஜோதிஜி திருப்பூர் அவர்கள் உங்களது நூல் விமர்சனத்தை தனது பதிவில் பதிந்துள்ளார். அங்கே நான் அளித்த கருத்துரை

    தி.தமிழ் இளங்கோAugust 25, 2013 at 5:30 PM
    // திருப்பூர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு இந்தப் புத்தகம் பல விஷயங்களை உணர்த்தியிருக்கிறது. நான் உடுத்தும் ஒவ்வொரு ஆடையின் பின்னாலும் ஒரு தொழிலாளியின் இரவு பகல் பாராத கடின உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பை நம்பி தனது ஊரை விட்டு வரும் அவரையும், அவரை சார்ந்த மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பரிவோடு நினைக்க வைக்கிறது இந்தப் புத்தகம். //

    சகோதரி ரஞ்சனி நாராயணனின் எழுத்துக்களைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. நகைச்சுவையோடு சுருங்கச் சொல்லி விளங்க வைப்பார். நீங்கள் எழுதிய “டாலர் நகரம்” பற்றிய அவரது நூல் விமர்சனம் பல டாலர்கள் மதிப்பு உடையது.

    அவரது இந்த விமர்சனம் உள்ள தளத்தின் இணைப்பினைத் தரவும். //

    1. வாருங்கள் இளங்கோ!
      அங்கும் உங்கள் கருத்துரைகளைப் படித்தேன். என் எழுத்துக்களை படித்து இத்தனை உயர்ந்த கருத்து சொல்லியதற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நன்றி!

  2. இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்கிற ஆசை தோன்றுகிறது… 🙂

    1. வாருங்கள் விஜயன்!
      கட்டாயம் வாசியுங்கள். ஒரு பரந்த உலகம் கண் முன் விரியும்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  3. மிக நன்றி. நன்றாக எழுதியுள்ளீர்கள். ஆயினும் சிறிது நீண்டு விட்டதோ என்று தோன்றியது. விமரிசனம் எனும் போது முழுவதும் நம்மால் எழுத முடியாது. சுருக்கமான அறிமுகம் தானே! குறை எண்ணக் கூடாது. என் கருத்து மட்டுமே!.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    1. வாருங்கள் வேதா!
      நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி. எனக்கே தோன்றியது நீளம் அதிகமோ என்று. நான் எழுதும் முதல் புத்தக விமரிசனம் இது. அதனால் கூட இப்படி ஆகியிருக்கலாம். நீங்கள் சொல்வதை நிச்சயம் குறை என்று எண்ண மாட்டேன். எழுதுவதில் நான் கற்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. அதனால் இதையும் ஒரு சிறந்த அறிவுரையாகவே எடுத்துக் கொள்வேன்.
      இத்தனை எழுதியும் நான் சில முக்கிய பகுதிகளைச் சொல்லாமல் விட்டுவிட்டேனோ என்று தோன்றுகிறது. நீங்கள் சொல்வது போல முழுவதும் எழுத முடியாது விமரிசனத்தில்.

      வருகைக்கும், மனதில் பட்டதை பக்குவமாகச் சொன்னதற்கும் நன்றி சகோதரி!

  4. பயணத்தில் வாசித்தாலும் நன்றாக ஆழ்ந்த வாசிப்பின் அடையாளம் தெரிகிறது.

    என்னை ஏக்கம் கொள்ளவைக்கும் விமரிசனம் ரஞ்ஜனி !

    நான் எப்போ???? வரிசையில் நிற்கிறேன்!

    1. வாருங்கள் துளசி!
      என்ன எழுதுவது என்று தெரியவில்லை. உங்கள் எழுத்துக்களை அநியாயத்திற்கு ரசிக்கும் ரசிகை நான். உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றையும் ரசித்துப் படிப்பவள். அதனாலேயே முதலிலிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன். கூடிய விரைவில் உங்கள் புத்தகங்களையும் வாங்கிப் படிக்கிறேன். இப்படிப்பட்ட நட்பு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
      நன்றி துளசி!

  5. முதல்லே ஒரு விஷயம். புத்தகம் படிக்கனு நினைச்சுட்டா, மதிய ஓய்வு நேரமே எனக்கு உகந்தது. ரயில் பயணத்தில் வெளியே தெரியும் காட்சிகளைப் பார்ப்பதில் பொழுது ஓடி விடும். :))) குழந்தை மாதிரி இன்னமும் ஜன்னலோர சீட்டுக்குப் பறப்பேன். வித விதமான பறவைகளும், மக்களும், ஊருக்கு ஊர் மாறும் மண்ணின் நிறமும் பார்க்கப் பார்க்க அலுக்காது. புத்தகங்கள் இருக்கும் பெட்டியில். ஆனால் அதிக நேரம் படிப்பதில்லை. வீட்டில் என்றால் உட்கார்ந்து படிக்கலாம். :))))

    ஜோதிஜி என்பவரின் பின்னூட்டங்களைப் பலரின் பதிவுகளில் பார்த்திருக்கேன். அவரோட பதிவுக்குப் போனதில்லை. புத்தகம் வெளி வந்திருக்கும் விஷயமும் தெரியாது. பல விஷயங்களில் மிகவும் பின் தங்கி இருக்கிறேன் போல! :))) இந்தப் புத்தகம் கிடைத்தால் படிக்கிறேன். விமரிசனம் நன்கு உணர்ந்து அனுபவித்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

    1. வாருங்கள் கீதா!
      அடடா! ஒற்றுமை போச்சே!
      எனக்கும் ஜன்னலோர சீட் தான் எப்பவுமே – லோயர் பர்த் வேண்டுமே!
      இந்தமுறை 24 மணி நேரப்பயணம். பாதி தூரம் வரை நாங்கள் மட்டுமே. இந்தப்
      பயணத்திற்கு என்றே இந்தப் புத்தகத்தை வைத்திருந்தேன்.

      திரு ஜோதிஜியின் பதிவுகளை படித்துப்பாருங்கள். காரசாரமாக இருக்கும். அதே சமயம் ஒரு சமூக அக்கறையும் அதில் இருக்கும். நிச்சயமாக இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.

      வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி!

  6. நான் அவர் பதிவுலகம் சென்றதில்லை.அவர் புத்தகம் படித்ததில்லை. உங்கள் விமரிசனம் இது இரண்டையும் செய்ய வைத்து விடும் என்று நினைக்கிறேன். உடனே அவர் வழிப் பக்கம் சென்று விடுவேன். டாலர் நகரம் கண்டிப்பாக வாங்கி படிப்பேன்.

    1. வாருங்கள் ராஜி!
      நிச்சயம் இரண்டையும் உடனே செய்து விடுங்கள்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  7. இது முதல் புத்தக விமர்சனம் போலவே இல்லை அம்மா!! வழக்கம் போல் முத்திரை பதித்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் 🙂

    1. வாருங்கள் மஹா!
      இனி திரு ஜோதிஜியின் படைப்புகளையும் படிக்க ஆரம்பியுங்கள்.
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  8. excellent review. We come across very few reviews which create a wish to read or access the reviewed creation. Yours is one of the same. Though it is lengthy, i think you have given most of the extract of the book which makes us satisfied.
    have never read the posts by Jothiji, but would definitely like to do. what is the name of the blog.
    Also is the soft copy of that book available on line.
    Regds

    1. வாருங்கள் ஷீலா!
      தேவியர் இல்லம் என்ற தளம். திரு ஜோதிஜியின் வலைத்தள இணைப்பு இந்தப் பதிவின் கீழேயே இருக்கிறது பாருங்கள். திருப்பூரைப் பற்றி நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறார்.
      soft copy இல்லை. புத்தகம் எப்படி தருவிப்பது என்ற விவரம் கொடுக்கிறேன். அதிக விலை இல்லை. 190 ரூபாய் மட்டுமே.
      வங்கி விபரம்
      SRM JOTHI GANESAN
      KOTAK MAHINDRA BANK
      TIRUPUR
      ACCOUNT (S/B) NO. 0 4 9 1 0 1 1 0 0 1 2 7 6 4
      IFC CODE NO. KKBK0000492

      இரண்டு நாட்களில் புத்தகம் வந்துவிடும். நிச்சயம் வாங்கிப் படியுங்கள்.

      வருகைக்கும், எனது விமர்சனத்தைப் பாராட்டியதற்கும் நன்றி!

  9. ஜோதிஜியின் புத்தக அறிமுகத்துக்கு நன்றி. லிஸ்டில் சேர்த்த புத்தகம். அடுத்த பயணத்தில் வாங்கி அவரை நேரில் சந்தித்து ஆடோகி வாங்கவேண்டும்.

    அருமையாக எழுதக்கூடியவர். உங்கள் பதிவு புத்தகம் படிக்க அவசரப்படுத்துகிறது. நன்றி.

    1. வாருங்கள் அப்பாதுரை!
      எங்கே உங்களைக் காணுமே என்று நினைத்தேன்.
      எனக்கு அவரே ஆடோகி போட்டு அனுப்பிவிட்டார்.
      நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
      வருகைக்கும், எனது கண்ணோட்டத்தைப் படித்ததற்கும் நன்றி!

  10. பயணத்தின்போது ஒரு செகண்ட்கூட இப்ப‌டி அப்படி கண்ணை எடுக்காமல் வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் வருவேன்.

    பெயரளவில் டாலர் நகரமாக இருக்கும் திருப்பூரின் பின்னால் உள்ள வலிகளை உங்கள் புத்தக விமரிசனம் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. புத்தக ஆசிரியர் திரு ஜோதிஜி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    1. வாருங்கள் சித்ரா!
      நானும் அப்படித்தான் இருந்தேன் ஒரு காலத்தில். அப்போதே ஜன்னலோரம் கிடைக்காது. கிடைத்த சிறிது நேரத்தில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு வருவேன். இப்போதெல்லாம் புத்தகம் தான்.

      அவரது தளத்திலுள்ள பதிவுகளைப் படியுங்கள். திருப்பூர் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  11. ‘துரை இங்கிலீசெல்லாம் பேசுது’ மாதிரி, எங்க ரஞ்சனி பாட்டி இப்ப எக்னாமிக்ஸ் எல்லாம் படிக்குது!

    விமர்சிக்கத் தகுதியில்லை என்று சொல்லாதீர். நாங்கள் எதிர்பார்ப்பது உங்களின் எண்ணங்கள்தான். தாராளமாக எழுதுங்கள். இதுவும் நல்ல அறிமுகம்தான். தொடரட்டும்.

    – அசின் சார், கழுகுமலை.

    1. வாருங்கள் அசின் ஸார்!
      நல்லா சொன்னீக! பாட்டீன்னு!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  12. புத்தகத்தை படித்த உங்கள் உணர்வுகள் இன்னொருவர் அப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டுவதாக இருக்கிறது.

    நானும் படித்துவிட்டு என் கருத்துக்களைக் கூற விருப்பம்….

    உங்களின் நூலகத்து நூல்களை எங்களுக்கும் கொஞ்சமாய் அறிமுகம் செய்யுங்களேன்.

    இனியும் தொடரட்டுமே இந்த இனிய பணி!

    1. வாருங்கள் தமிழ்!
      இதுவே என் முதல் முயற்சி. நிச்சயம் நான் படிக்கும் புத்தகங்களை அறிமுகம் செய்கிறேன். சமீபத்தில் நிறைய புத்தகங்கள் வாங்கினேன். ஒவ்வொன்றாக படித்துவிட்டு எழுதுகிறேன்.
      வருகைக்கும், ஊக்கமளிக்கும் கருத்துரைக்கும் நன்றி!

Leave a reply to ranjani135 Cancel reply